Posts filed under ‘இனிப்பு வகைகள்’
அரிசியில் கீர்.
களைந்த அரிசியை சிறிது நெய்யில் வறுத்து, பாலில் வேகவைத்து மசித்து
சர்க்கரை, வாஸனை திரவியங்கள் சேர்த்துப் பொங்கல் மாதிரி செய்யும் இனிப்பு இது.
Continue Reading ஜூலை 23, 2012 at 7:11 முப 14 பின்னூட்டங்கள்
இடு போளி கோதுமைமாவில்.
பூரணத்தைக் கிளறி, மாவைப்பிசைந்து. ஸ்டஃப் பரோட்டா
முறையில் செய்யும் இனிப்புதானிது. ரொட்டி செய்பவர்களுக்கு மிகவும் ஸுலபமாக வரும்.
Continue Reading ஜூலை 9, 2012 at 11:07 முப 12 பின்னூட்டங்கள்
பாதாம்ஹல்வா
வேண்டியவைகள்.
பாதாம் பருப்பு—–1 கப் நிறைய. கோபுரம்போல
பால்—–~ஒரு கப்
சர்க்கரை—-ஒன்றறை கப்
நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
குங்குமப்பூ—-சில இதழ்கள். 1ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.
ஏலப்பொடி—சிறிது
வேண்டுமானால் அலங்கரிக்க முந்திரிப்பருப்பு
செய்முறை.
இரண்டு 3கப் கொதிக்கும் தண்ணீரை விட்டு, ஒரு 10நிமிஷம்
பாதாம் பருப்பை ஊற வைக்கவும். ஊறிய
பருப்பைப் பிதுக்கினால் தோல் சுலபமாக உறிக்க வரும்.
தோலை உறிக்கவும்.
உறித்த பருப்பை நன்றாக அலம்பி மிக்ஸியில் போட்டு
வேண்டிய அளவு பால் விட்டு நன்றாகவும், நறநறப்பாகவும்
அறைத்துக் கொள்ளவும்.
கெட்டியான துவையல் பதம்ஸரியாக இருக்கும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும், அறைத்த
விழுதையும் சேர்த்துக் கலந்து நிதான தீயில் வைத்துக்
கிளறவும்.
சர்க்கரை சேர்த்ததினால் கலவை இளகி பின் கொதிக்க
ஆரம்பிக்கும்.
ஒரு ஸ்பூன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூவைச்
சேர்க்கவும்.
கை விடாது கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கொதித்துப்
பின் இறுக ஆரம்பிக்கும்.
இறுக ஆரம்பித்த பிறகு சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக்
கிளறவும்.
பொருமையாகக் கிளறவும். கலவை கெட்டியான பதத்தில்
வரும் போது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
திரட்டிப்பால் மாதிரி திரண்டு வரும் பதம் ஸரியாக
இருக்கும்
முந்திரியினால் அலங்கரிக்கவும்.
குங்குமப்பூ சேர்ப்பதால் இளம் மஞ்சளில் கலரும் அழகாக
வரும்.
சுவைக்கத் திகட்டாத நல்ல இனிப்பு.
ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாக சிறிது இடைவெளி விட்டு
நெய்யைச் சேர்க்கவும்.
பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக சுருட்டி வைத்தாலும்
கொடுப்பதற்கு ஸரியாக இருக்கும்.
நெய் கணக்கைவிட அதிகம் கூட இழுக்கும்.
காரடை. உப்பு
பச்சரிசி–1கப்
தேங்காய்த் துருவல்—அரைகப்
பச்சைமிளகாய்—2
இஞ்சி—சிறியதாக நறுக்கியது—2டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு
ஊறிய காராமணி—-2டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—வாஸனைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.
தாளித்துக் கொட்ட—எண்ணெய் சிறிதளவு
செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம்
ஊறவைத்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியின் மீது
உலர்த்தவும்.
கலகலஎன்று உலர்ந்த அரிசியை நிதானதீயில் வாணலியை
வைத்து சற்று சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
ஆறியபின் வறுத்த அரிசியை ரவையாக மிக்ஸியில்
பொடிக்கவும்.
காராமணியை வெறும் வாணலியில் சற்று முன்னதாகவே
வறுத்து ஹாட்கேஸில் வென்னீர் விட்டு ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,உ.பருப்பு
தாளித்து இஞ்சி, பச்சைமிளகாயை வதக்கி ரவையின் அளவைப்
போல இரண்டு பங்கு தண்ணீரைச் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, தேங்காய்த் துருவல்,கறிவேப்பிலை சேர்த்து
தண்ணீரைக் கொதிக்க விடவும்.
ஊறின காராமணி, பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
கொதிக்கும் நீரில் ரவையச் சேர்த்துக் கிளறவும்.
தீயை மட்டுப் படுத்தவும்.
பந்துபோல வெந்து சேர்ந்து வரும்போது கிளறி மூடி இறக்கி
வைக்கவும்.
சற்று நன்றாக ஆறியபின் மாவைப் பிறித்து ஸமமாக உருட்டி
கனமான வடைகளின் உருவத்தில் , ஒரு பாலிதீன் கவர் மீது
எண்ணெயோ ஜலமோ தொட்டுத் தடவி
தட்டி எடுத்து, நீராவியில் 15 நிமிஷங்கள் வேகவைத்து
எடுக்கவும்.
இட்லி ஸ்டீம் செய்வது போலவேதான்.
உப்பு அடை தயார். தேங்காய் மணத்துடன் உப்பு காரத்துடன்
கூடிய மெத்தென்ற காரடை தயார்.
எது இஷ்டமோ அதை கூடச் சாப்பிடலாம்.
2010 மார்ச் 11 காரடை இனிப்பு எழுதினேன். இன்று
2012 மார்ச் 14 சென்னையினின்றும் காரடை உப்பு எழுதுகிறேன்.
பெண் செய்தாள். இன்று காரடையான் நோன்பு. இதை
எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அடையைச்
சொல்கிறேன். அரிசி ஊறவைத்து உலர்த்தி வறுத்துச் செய்வதால்
அடை மிருதுவாக மெத்தென்று வருகிறது. உடன் வெண்ணெய்,
வேறு இன்று சாப்பிடுவதால் எல்லாமே ஸாஃப்ட்தான்.
அவல்ப் பாயஸம்.
புது வருஷ ஆரம்பத்தில் ஏதாவது பாயஸத்தோட சமையல்
குறிப்புகளைத் தொடருவோம் என்று தோன்றியது.
நினைத்தால் எழுதிடலாம். திடீரெனப் பண்ணியதையே
எழுதலாமென எழுதுகிறேன்.
டிஸம்பர் 8 ஆம் தேதி காட்மாண்டு stஜேவியர்ஸ் காலேஜ்
பிரிஸ்பல் , ஃபாதர் பாம்பே வருகிறார். அப்பாவைப் பார்க்க
நேராக ஏர்போர்டிலிருந்து வீட்டுக்கே வருவார் என மத்யானம்
ஒரு மணிக்கு பெறிய பிள்ளையின் போன் வருகிரது.
4 மணிக்கு அவர் வருகிறார். நாட்டுப் பெண் ஊரிலில்லை.
சட்டுனு ஒரு சட்னியை அரைத்து, உருளைக்கிழங்கு கறி செய்து
மஸால் தோசைக்கு ரெடி. ஸாம்பார் ஆல் ரெடியாயிருக்கு.
ஒரு பாயஸம் அதான் அவில்ப் பாயஸம் வைத்தேன்.
அவர் ஒரு தமிழ்ப் ஃபாதர் .ஃபாதர் அந்தோனிஸாமி.
ரஸித்து சாப்பிட்டுவிட்டு ,சொல்லுகிறேனைப் பாராட்டிவிட்டும்
போனார். எதற்கு சொல்கிறேனென்றால் வயதானவர்களுக்கு
ப்ளான் சற்று முதலில் போட்டால் நிறையவே செய்யலாம்.
அதுஸரி. விஷயத்துக்கு வருவோம்.
பாயஸத்துக்கு வேண்டியவைகள்.
ஒரு பிடிச்ச பிடி அவல்
ஒரு 2 கப் பால்
ஒரு துளி நெய்
அரைகப்புக்கு சர்க்கரை
துளி ஏலக்காய்ப்பொடி
வகைக்கு 5,6 முந்திரி பாதாம் அப்படியே மிக்ஸியில் பொடித்தது.
செய்முறை
பட்டும் படாமலும் நெய்விட்டுப் பிசறி அவலை ஒரு நிமிஷம்
மைக்ரோவேவில் அதன் பாத்திரத்தில் வைத்து எடுத்தேன்.
பாலைக் காய்ச்சி எடுத்து பாதியை எடுத்து வைத்துவிட்டு
அதில் அவலை மிதமான தீயில் வேக வைத்தேன்.
பாதாம் முந்திரிப் பொடியைச் சேர்த்துக் கிளறி சக்கரையைச்
சேர்த்து சற்றுக் கிளறி பாலைச் சேர்த்து ஒரு கொதி விட்டு
இறக்கி ஏலப்பொடி சேர்த்தேன். அவ்வளவுதான்.
அப்படியே வாணலியோடு ஒரு போட்டோவும்.
அவசரக்காரியம் தானே?
வெண்ணெய் போட்ட தோசையும். அவல் பாயஸமும்
தமிழ்ப் பேச்சும் ரொம்ப நாளாச்சு. வீட்டுக்கு போனால்தான்
கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார். ஃபாதர் எனக்கு
நன்றி சொன்னார். அவருக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கும் ஞாபகம் வந்தது. எழுதினேன் அவ்வளவுதான்.
என் பெறிய பிள்ளை காட்மாண்டு ஸென்ட் ஜேவியர்ஸ்ஸில்
தான் வேலை செய்கிறார்.
பால்ப்போளி
கார்த்திகைப் பண்டிகை வருகிரதே ஏதாவது எழுதுவோம்
என்று தோன்றியது. ஸரி, பால்ப்போளி இன்று செய்து
ப்லாகிலும் போடலாமென்று நினைத்தேன். செய்து
முடித்து எழுதவும் ஆரம்பித்தாகி விட்டது.
நீங்களும் செய்து பாருங்களேன். வேண்டியஸாமான்களை
பார்ப்போமா.
வேண்டியவைகள்
மைதா–1கப்
மெல்லிய பேணிரவை—அரைகப்
பொரிப்பதற்கு வேண்டிய—எண்ணெய்
பால்—அரைலிட்டர்
சக்கரை—ஒன்றரைகப்
ஏலக்காய்–3
முந்திரிப் பருப்பு—10
பாதாம் பருப்பு—10
ஒரு சிட்டிகை—உப்பு
குங்குமப்பூ—துளி.
அரிசிமாவு—அரைகப். பூரி தோய்த்து இட
செய்முறை
பாதாம்,முந்திரி, பருப்புகளை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்
பின்னும் கொஞ்சநேரம் ஓடவிட்டு ஒரே முறையில்
பொடியாக பொடித்துக் கொள்ளவும்.
ரவையையும், முடிந்தவரை தனியாகப் பொடித்துக்
கொள்ளவும்.
மைதா, பொடித்த ரவை இரண்டையும் கலந்து துளி உப்பு
சேர்த்து, தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு கலவையை
கெட்டியாகப் பிசையவும்.
நன்றாகப் பிசைந்த மாவை மூடி வைத்து அரைமணி நேரம் ஊர
விடவும்.
பாலை நன்றாக சற்று சுண்டக் காய்ச்சவும்.
ஊறிய மாவை அழுத்தித் திரட்டி சிறு உருண்டைகளாகப்
பிறித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் அரிசிமாவு தோய்த்து
வட்டமான பூரிகளாக இட்டு நடுநடுவே போர்க்கினால் குத்தி
வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில்
கரகர பதத்தில் பூரிகளைப் பொறித்தெடுக்கவும்.
அகண்ட வாணலியிலோ, நான்ஸ்டிக் பாத்திரத்திலோ
சக்கரையைப் போட்டு சிறிது ஜலம் விட்டு , சக்கரை
கரையும்படிக் கிளறி , அடுப்பில் வைத்து ஸிரப்பாகச் செய்து
கொள்ளவும்.
குங்குமப்பூகரைசல்,பொடித்தபொடி இவைகளைக் கலந்து
காய்ச்சிய பாலையும் விட்டு சக்கரை ஸிரப்பில் கலந்து 2,3
நிமிஷங்கள் கொதிக்க வைத்து தீயை அணைத்து விடவும்.
பூரிகளை ஒன்றிரண்டாக பால்க்கலவையில் ஊறவைத்து,
இரண்டொரு நிமிஷங்களில்மடித்தமாதிரிஅரைவட்டஷேப்பில்
தாம்பாளத்தில் எடுத்து வைக்கவும்.
இப்படியே எல்லாப் பூரிகளையும், ஒன்றன்பின் ஒன்றாக ஊற
வைத்து எடுத்து பிறித்து அடுக்கவும்.
பால்க் கலவை ஆறாமலிருக்க தீயை ஸிம்மில் வைத்தால்
சூடான பாலில் பூரிகள் சீக்கிரம் ஊறும்.
தட்டில் அடுக்கின பூரிகள்தான் போளிகள்.
பால்க் கலவையை அடுக்கின போளிகள் மீது சிறிது விட்டால்
நன்றாக ஊறும்.
உடனேயும் சாப்பிடலாம்.
இரண்டொரு மணி நேரம் கழித்து ப்ளேட்டில் போளியும்,
மிகுந்திருந்தால் பால்க் கலவையையும் சேர்த்துக்
கொடுக்கலாம்.
விருப்பமான எஸன்ஸுகளும் பாலில் கலக்கலாம்.
பூரி மெல்லியதாக இடுவதற்கு அரிசி மாவில் பிரட்டி இடுவது
சுலபமாக இருக்கும்.
அதிக இனிப்பு வேண்டுமானால் சக்கரை, பால் அதிகரிக்கவும்.
பால்ப் போளி ரெடி.
திட்டமான அளவில் 15, 16, க்கு மேலே வரும்.
கொழுக்கட்டை .
சிறிய அளவில் கொழுக்கட்டை தயாரிப்பதற்கு வேண்டியவைகளைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்
பூரணம் தயாரிக்க –தேங்காய்த்துருவல்–6டேபிள்ஸ்பூன்
வெல்லப்பொடி—–5 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய்ப்பொடி—-சிறிது
மேல் மாவிற்கு—பச்சரிசி மாவு–அரைகப்
நல்லெண்ணெய்—-1 டீஸ்பூன்
உப்பு—-ஒரு சிட்டிகை .
செய்முறை
அரிசி மாவு களைந்து உலர்த்தி அரைத்த மாவானால் மிகவும்
நல்லது.
நான்ஸ்டிக் பேனில் தேங்காய்த் துருவலுடன் வெல்லப்
பொடியைச் சேர்த்து, துளி ஜலம் தெளித்து நிதான தீயில்
வைத்துக் கிளறவும்.
-கையில் ஒட்டாது சேர்ந்து வரும் போது இறக்கி ஏலப்பொடி
சேர்த்துக் கலக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக் பேனில் ஒரு கப் தண்ணீரை
உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தீயைக் குறைத்து அரிசி மாவைச் சேர்த்துக் கிளறவும்
.பந்துபோல் மாவு வெந்து சேர்ந்து வரும்போது தீயை
அணைத்துவிட்டு, தட்டினால் மூடி வைக்கவும்.
மாவு சிறிது ஆறியதும் எடுத்து கையில் சிறிது எண்ணெயைத்
தடவிக் கொண்டு, தாம்பாளத்தில் நன்றாகத் தேய்த்துப்
பிசைந்து ஒரு ஈரத்துணியினில்சுற்றி மூடி வைக்கவும்.
மாவைச் சிறிய உருண்டைகளாகச் செய்து சிறிய சிறிய
கிண்ணங்கள் போல சொப்புகளாகச் செய்து , அதில்
சின்ன அளவுபூரணத்தை வைத்து மடக்கி , விளிம்புகளை
அழுத்தி மூடவும்.
கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்புகளைச்
செய்யவும். உடனுக்குடன் பூரணத்தை வைத்து, வேண்டிய
ஷேப்புகளில் மூடவும்.
செய்த கொழுக்கட்டைகளை நல்ல நீராவியில் 6,7,
நிமிஷங்கள் ஸ்டீம் செய்து எடுக்கவும். இட்லி வேக வைக்கும்
முறைதான்.
கொழுக்கட்டைகள் தயார்.
நான் கடையில் வாங்கிய மாவில் செய்தேன்.
.கொழுக்கட்டைகள்.
பருப்புப் பாயஸம்
இது ஒரு சின்ன அளவில் நினைக்கும்போது வைக்கும் பாயஸம்
ஆடி வெள்ளிக் கிழமையன்று செய்தது.
இதன் குறிப்பையும் பார்க்கலாமா. நினைத்துக் கொண்டால்
நிவேதனத்திற்குச் செய்ய உபயோகமாக இருக்கும்.
வேண்டிய ஸாமான்கள்
கடலைப் பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—-1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி—1 டேபிள்ஸ்பூன். இவை மூன்றையும் வெறும்
வாணலியில் நன்றாக வாஸனை வரும்படி சற்று சிவப்பாக
வறுத்துக் கொள்ளவும்.
சக்கரை— 5,அல்லது 6 டேபிள்ஸ்பூன். இனிப்புக்குத் தக்கபடி
பால்— 1 டம்ளர்
ஏலப்பொடி—-வாஸனைக்கு சிறிது
பாதாம் பருப்புத் தூள்–2 டீஸ்பூன்.
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை–விருப்பத்திற்கு.
செய்முறை–
வறுத்த அரிசி, பருப்புக்களை நன்றாகத் தண்ணீர் விட்டுக்
களைந்து, திட்டமாகத் தண்ணீர் விட்டுப் ப்ரஷர் குக்கரில்
2 விஸில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
பருப்பை லேசாக மசித்து சக்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு
பாதாம் தூளையும், பாலையும் சேர்க்கவும்.
ஓரிரண்டு கொதிவிட்டு இறக்கி முந்திரி திராட்சையைச்
.சேர்த்து ஏலப் பொடிபோட்டு கலக்கி உபயோகப் படுத்தவும்.
பாலிற்கு பதில் சிறிது தேங்காயை அறைத்தும் செய்யலாம்.
குங்குமப்பூ சேர்த்தால் கலரும் கூடும்.மணமும் கூடும்.
வெல்லம் சேர்த்து செய்வதுதான் அதிகம். வேண்டிய அளவு
இனிப்பு கூட்டவும்
சக்கரைப் பொங்கல்
பொங்கல்ப் பண்டிகை அடுத்து வருவதால் பொங்கல் செய்யும்
முறையையும் பார்ப்போமா.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப். பாஸ்மதி
பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு
பாகுவெல்லம்—பொடித்தது—2 கப்
நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்–5 பொடித்துக் கொள்ளவும்
முந்திரி, திராட்சை–விருப்பத்திற்கு
குங்குமப்பூ–சில இதழ்கள்
ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை வாஸனைக்கு
தேன்—2 ஸ்பூன் ருசிக்கு
பால்—-அரைகப்
செய்முறை——.வாணலியைச் சூடாக்கி அரிசி, பருப்பை தனித்தனியே
வாஸனை வரும்படி சற்றுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பை, இரண்டு மூன்று முறை ஜலம் விட்டுக் களைந்து
இறுத்து , இரண்டரைகப் ஜலமும் அரைகப் பாலையும் சேர்த்து
குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
ப்ரஷர் அடங்கியவுடன் குழிவான கரண்டியினால் வெந்தவற்றை
நன்றாக மசித்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பொடி அமிழ ஜலம் சேர்த்துக்-
-கிளறி, கெட்டியான பாகாக் காய்ச்சி மசித்த அரிசி, பருப்பில்
சேர்த்து, நிதான தீயில் ஒன்று சேரக் கிளரவும்.
கலவை ஒன்று சேர்ந்து சற்று இறுகும் பதத்தில் இறக்கவும்.
பாகு காயும் போதே ஏலக்காய், குங்குமப்பூ,ஜாதிக்காய்ப்பொடி
இவைகளைச் சேர்த்து விடலாம்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு தேனையும்,
நெய்யையும் சேர்த்துக் கலக்கவும்.
நெய் வேண்டிய அளவு சேர்க்கலாம். ஜாதிக்காய், தேன் முதலானது
கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஒரு முறை.
அடுத்து வெங்கலப் பானையில் பாலும் ஜலமுமாகக் கொதிக்க
வைத்து வறுத்த அரிசி, பருப்பை சுத்தம் செய்து வேக வைத்து
மசித்து , வெல்லம் சேர்த்துக் கிளறி, மற்ற சாமான்களையும்சேர்த்து
நன்றாக இருகும்வரை கிளறி நெய்விட்டு இறக்குவதும் ஒரு முறைதான்.
கடலைப் பருப்பு சிறிது பருப்பு வறுக்கும் போது சேர்ப்பதும் உண்டு.
பாகு வைத்து சேர்க்கும் பொங்கலில் அடி பிடித்துவிடுமோ என்ற அச்சம்
குறைவு.
அரிசி சாதம் செய்ய வைக்கும் அளவிற்குச் சற்று கூடுதலாகவே
ஜலம் பொங்கலுக்கு வைக்கவும்.
பாஸ்மதி அரிசியைவிட பொன்னி போன்ற அரிசி வகைக்கு ஒரு
பங்கு அரிசிக்கு, மூன்று பங்கு ஜலம் தேவையாக இருக்கிறது.
அரிசி ரகத்தை மனதிற்கொண்டு , ஜலம் சேர்க்கவும்.
இனிப்பும் விருப்பத்திற்கிணங்க கூட்டி, குறைக்கலாம்.
பொங்கல் பானைக்கு அலங்காரம் செய்வதுபோல குக்கருக்கும்
மஞ்சள் கட்டி குங்கும அலங்காரம் செய்து,
ஹாட் ப்ளேட்டானாலும், காஸ் அடுப்பானாலும் அதற்கும்
கோலம் போட்டு பொங்கலைக் கொண்டாடுவதுதான்
இப்பொழுது வழக்கமாக உள்ளது.
எது சௌகரியமோ அதன்படி இனிப்பான பொங்கலைச் செய்வோம்
வெல்லம் நிறத்தின்படிதான் பொங்கலின் கலரும் அமையும்.
திருவாதிரைக் களி.
திருவாதிரை ஒருவாக் களிதின்னாதவா நரகக்குழி
இப்படி ஒரு வசனம் சொல்வார்கள் பழைய காலத்தில்.
நாம் களியை செய்து பார்த்து விடலாம்.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்
துவரம் பருப்பு—2டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
வெல்லப்பொடி—-ஒன்றறைக் கப்
நெய்—2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல்—அரைகப்
முந்திரி திராட்சை—-விருப்பம்போல்
ஏலப்பொடி—-சிறிது
இருந்தால்—ஒருஸ்பூன் தேன்
செய்முறை.——அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்து
மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்புக்களையும் வறுத்து ரவைபதத்தில் பொடிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் இரண்டரைகப் ஜலத்தைநன்றாகக்
கொதிக்க விடவும். சிறிது நெய் சேர்க்கவும்.
தீயை நிதானப்படுத்தி கொதிக்கும் ஜலத்தில் உடைத்த ரவை,பருப்புக் கலவையைக்
கொட்டிக் கிளறவும். ஒரு துளி உப்பு சேர்க்கலாம்.
உப்புமா வேக வைப்பதுபோல் தட்டினால் மூடி நன்றாக வேக
வைக்கவும்.
வெல்லத்தை அமிழ ஜலம் விட்டுக் கரைத்து ஒரு கொதிவிட்டு
வடிக்கட்டி அதைப் பாகாகக் காய்ச்சவும்.
காய்ச்சிய பாகை வெந்த அரிசி ரவைக் கலவையில் கொட்டி
கலவை கெட்டியாகச் சேரும்வரைக் கிளறவும்.
நெய்யில், முந்திரி, திராட்சையை வறுத்து, தேங்காயைச்
சேர்த்துப் பிரட்டி கலவையில் சேர்க்கவும்.
ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
களி ரெடி. பருப்பு உடைத்து சேர்ப்பதற்கு பதில்
முக்கால் பதம் வேக வைத்த பருப்பைக் கொஞ்சம்
பிழிந்தும் சேர்க்கலாம். நான் தற்போது டில்லி
வந்திருப்பதால் படம் எடுத்துப் போட சௌகரியப்
படவில்லை.
கொதிக்கும் ஜலத்திலே யே வெல்லத்தைப் போட்டு
கொதிக்கவிட்டு, ரவைக் கலவையைச் சேர்த்து,வேகவைத்துச்
செய்வதும் உண்டு.
நல்ல கலரான பாகு வெல்லமாக இருந்தால் களியும் நல்ல
நிறமாக வரும்.
விருப்பப்படி நெய் விடவும்.
























