Posts filed under ‘இனிப்பு வகைகள்’
பொரி உருண்டை
சுத்தம் செய்த அவல் பொரியோ அல்லது நெல் பொரியோ எது
கிடைக்கிரதோ ஒரு 3 டம்ளர் அளவில் செய்யலாம் வாருங்கள்.
வேண்டிய சாமான்கள்.—–பொடித்த வெல்லம்—1 டம்ளர்
சுக்குப் பொடி—அரை டீஸ்பூன்
மிளகுப் பொடி—கால் டீஸ்பூன்
ஏலப்பொடி—கால் டீஸ்பூன்
சிறிய பல்போல நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்–3டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை, வறுத்த வேர்க் கடலை சிறிது
நெய்—-சிறிது
செய்முறை. —-நெய்யில் தேங்காய்த் துண்டுகளை சிவக்க
வறுத்து வைத்துக் கொள்ளவும்.
சற்று கொள்ளளவு பெரிதாகவுள்ள பாத்திரத்தில் வெல்லப்பொடி
நன்றாக மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நிதான தீயில் வைத்து
பாகாகக் காய்ச்சவும்.
பாகில் பொடிகளைச் சேர்க்கவும். முதிர் பாகாக வரும் போது
பொரியையும், தேங்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எண்ணெய் தடவிய தட்டில் கொட்டிக் கொண்டு கையில்
அரிசி மாவை லேசாக தடவிக்கொண்டு வேண்டிய சைஸில்
உருண்டைகளாக உருட்டவும்.
விருப்பமுள்ளவர்கள், பொட்டுக் கடலையையும், வறுத்த
வேர்க் கடலையையும் பொரியுடன் சேர்க்கலாம்.
பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.
காய்ந்தபாகில் ஒரு துளி, சிறிது ஜலத்தில் விட்டுப் பார்த்தால்
கரையாமல் கெட்டியாக உருட்டி எடுக்கும் பதத்தில் பாகு வரும்.
திருக்கார்த்திகைக்கு விசேஷமான பொரி உருண்டை.
சாதாரணமாக எப்போதும் கிடைக்கும் முட்டைப்பொரி[அதாவது அரிசிப் பொரி]
இதிலும் தயாரிக்கலாம். அளவு எல்லாம் பொரி 3 பங்கு, வெல்லம் 1 பங்கு கணக்குதான்.
பொரி யைக் கடையில் வாங்குவதால் சில சமயம் நமுத்துப் போக
வாய்ப்புள்ளது. அதனால் பொரியை சற்று சூடு படுத்தி உபயோகிப்பது
நல்லது. மைக்ரோவேவில் ஒரு நிமிஷம் வைத்தெடுத்தாலே போதும்.
புத்துருக்குநெய் மைசூர் பாகு
வெண்ணெய் புதியதாகக் காய்ச்சி அந்த நெய்யில் மைசூர்பாகு
தயாரித்தால் அந்த ருசியே அலாதிதான்
அம்மாதிரி செய்யும் முறையைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
கால் கிலோ உப்பு சேர்க்காத வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்
ஒரு கப்பிற்கு அதிகமாகவே நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்
நெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் கடலை மாவை முன்னதாகவே ஒரு ஸ்பூன் நெய் கலந்து
மைக்ரோ வேவில் ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு 2, 3, நிமிஷம்
வைத்தெடுக்கவும்.
அல்லது வாணலியிலிட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையைப்
போட்டு சர்க்கரை அமிழ ஜலம் விட்டு நிதான தீயில் நன்றாகக்
கிளறவும்.
கூடவே மற்றொரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கிக்
கொண்டே இருக்கவும்.
சர்க்கரை கரைந்து கொதித்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும் போது
மாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.
நல்ல சூடான நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது அடிபிடிக்காது
கிளறவும்.
நெய் விடவிட கலவை நெய்யுடன் சேர்ந்து கொதித்து இறுகி
பாத்திரத்தை விட்டு விலகி நுறைத்து மேலே வர ஆரம்பிக்கும்
நன்றாகக் கிளறி , தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய
தட்டு அல்லது ட்ரேயில் கலவையைக் கொட்டி , தட்டை
இரண்டு கையினால் பிடித்து சமனாக பரவும்படி அசைக்கவும்.
சற்று ஆறியபின் கத்தியினால் வில்லைகளாகக் கீறி
எடுத்து வைக்கவும்.
கைவிடாது கிளறுவது அவசியம்.
நெய்யை சூடாக சேர்த்து கிளறவும்.
1 பங்கு கடலைமாவு, 2பங்கு சர்க்கரை, 2பங்குநெய்
சாமான்கள் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது.
நல்ல பதமாக செய்தெடுத்தால் வாயில் போட்டால் மணத்துடன்
கரையும்.
பூந்தி லட்டு
வேண்டியவைகள் புதியதாக அரைத்த கடலை மாவு—2கப் சர்க்கரை—இரண்டரைகப் நெய்—–1டேபிள்ஸ்பூன் முந்திரிப் பருப்பு—–10 விருப்பம் போல் லவங்கம்—–6 திராட்சை—–15 ஏலக்காய்—–6 பொடித்துக் கொள்ளவும் பூந்தி பொரிக்க —–வேண்டிய எண்ணெய் கேஸரி பவுடர்—-ஒரு துளி குங்குமப்பூ—சில இதழ்கள் பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு செய்முறை சர்க்கரையை அமிழ ஒருகப் ஜலம் சேர்த்து அகன்ற பாத்திரத்தில் நிதானமான தீயில் வைக்கவும். பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் அழுக்கு ஓரமாக ஒதுங்கும். கரண்டியால் அதை எடுத்து விடவும். […]
Continue Reading ஒக்ரோபர் 27, 2010 at 12:31 பிப 5 பின்னூட்டங்கள்
அவல் புட்டு
இதுவும் சுலபமாகச் செய்யலாம்.
வேண்டியவைகள்——கெட்டி அவல்—–1 கப்
பொடித்த பாகு வெல்லம்—–முக்கால் கப்
தேங்காய்த் துருவல்—–5 டேபிள்ஸ்பூன்
நெய்—–1டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்—-4 பொடித்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ அல்லது கேஸரி பவுடர்—-ஒரு துளி
துவரம்பருப்பு——-4, 5 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு——விருப்பத்திற்கு தக்கபடி
செய்முறை——வெறும் வாணலியில் மிதமான சூட்டில் அவலை சிவக்க
வறுத்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
லேசாக கை பொருக்கும் வென்னீரில் சிறிது தெளித்து பொடித்த அவலைப்
பிசறி ஊற வைக்கவும். பிடித்தால் பிடிக்கவும் விட்டால் உதிரும்படியும்
இருக்க வேண்டும்.
துவரம் பருப்பை நெத்து பதத்தில் [முக்கால் வேக்காடு] வேகவிட்டு
பருப்பைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ,சற்றே வருத்த தேங்காய், ஏலப்பொடி, பருப்பு
இவைகளை பொடித்த அவலுடன் கலக்கவும்.
வெல்லம் நினைய, ஜலம் சேர்த்து நல்ல முதிர்ந்த பாகாகக்
காயவைக்கவும்
ஒரு தாம்பாளத்தில் அவலைக் கொட்டி , பாகை அதன் மேல்
கொட்டிக் கலக்கவும்.
முந்திரியை வறுத்துச் சேர்த்து நெய்யுடன் கலக்கவும்.
ஆறின பிறகு உபயோகிக்கவும்.
துவரம் பருப்பிற்கு பதில் பயத்தம் பருப்பையும் வறுத்து
முக்கால் பதம் வேகவிட்டுப் பிழிந்தும் சேர்க்கலாம்.
ஷீலா நீ கேட்டதை எழுதிவிட்டேன்.
வெல்லச்சீடை
வேண்டிய சாமான்கள்
சிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு—-1கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு—-3 டீஸ்பூன்
வெல்லத்தூள்—–அரை கப். [பாகு வெல்லமாக]
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்—-2டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—-அரை டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி——சிறிது
நெய்—2 டீஸ்பூன். சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்
செய்முறை——ஒரு கப் ஜலத்தில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க
விடவும்.
தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி
சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி
சுத்தமான துணியில் பரப்பிப் போடவும்.
15,நிமிஷங்கழித்து சீடைகளை காயும் எணெணெயில்
சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
அவல் கேஸரி
வேண்டியவைகள்
- அழுத்தமான கெட்டி அவல்—1கப்
- சர்க்கரை—-1கப்
- நெய்—கால்கப்
- பால்—அரைகப்
- ஏலப்பொடி,முந்திரி, திராட்சை (விருப்பத்திற்கிணங்க)
- கேஸரி பவுடர் ஒரு துளி
செய்முறை——அவலை நெய்விட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்து
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
பாலுடன் அரைகப் ஜலம் சேர்த்து கொதிக்க விடவும்.
தீயைக் குறைத்து அவலைக் கொட்டிக் கிளறவும்.
அவல் வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்.
துளி பாலில் கலரைக் கரைத்துவிடவும்..
கெட்டியாகும்வரைக் கிளறி நெய்யைச் சேர்க்கவும்.
ஏலப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
மெல்லிய அவலாக இருந்தால் தண்ணீரைக் குறைக்கவும்.
இனிப்பு, நெய் இரண்டும் வேண்டிய அளவு அதிகரிக்கவும்.
குஙு்குமப்பூ சேர்த்தால் கலர் வேண்டாம்.
மனோகர பருப்புத் தேங்காய்
அநேகமாக எல்லா சுப விசேஷ விழாக்களுக்கும் முக்கியமான அங்கமாகக்
கருதப் படுவது இந்த இனிப்புப் பண்டம். ஜோடியாக இரட்டைக் கூம்பு
வடிவத்தில் பலவித இனிப்புக்களை உள்ளடக்கி மங்களகரமாக பூவுடனும்
பொட்டுடனும் உடன் வெற்றிலை பாக்கு மஞ்சளுடன் பழங்கள் சூழ
ப்ரத்யேகமான தட்டில் அழகுடன் வைப்பார்கள். தாய்வீட்டு வரிசைப்
பொருளில் முன்னிலைப் படுத்தப்படும் இனிப்பு இது. இதற்குத் தனி
மரியாதையும், கவனிப்பும் உண்டு இதன் பலவிதத்தின் ஒரு
விதத்தைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்——-பருப்புத் தேங்காய்க் கூடு
தேன் குழல் மாவில் இதைச் செய்யலாம். கடலை மாவுடன்
அரிசிமாவு கலந்து தேன்குழல் மாதிரியே பிழிந்தும் செய்யலாம்.
உப்பு,எள் முதலானது போடாமல் செய்ய வேண்டும்.
முதலில் பணியாரக் கூட்டை சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்து
நெய்யை நன்றாகத் தடவி வைக்க வேண்டும்.
கூட்டின் கூம்புப் பகுதியில் மெல்லியதாகக் கிழித்த பேப்பரைச்
சுருட்டி அடைக்க வேண்டும். அரை அங்குலப் பகுதி அடைத்தால்
போதும்.
கூட்டின் கொள் அளவை அளந்து கொள்ளவும்.
வாய்க் குறுகலான சொம்பிலோ, கூஜாவிலோ கூட்டைத் திருப்பி
கூர்முனை கீழாக வரும்படியும், அகன்ற பாகம் மேலே வரும்படியும்
சரியாக வைக்கவும்.இரண்டு செய்வதற்காக
கூட்டின் அளவைப் போல் இரண்டு பங்கு ஒடித்த தேன்குழல்
செய்து கொள்ளவும்.
அதாவது 6பங்கு்அரிசியும், 1 பங்குஉளுத்தம் பருப்பும் கலந்து அறைத்தமாவில் செய்தது.
அல்லது 2 பங்கு கடலைமாவும், 1 பங்கு அரிசி மாவும் சேர்த்து
தேன் குழல் அச்சில் செய்தது.
ஒடித்த தேன் குழலின் நான்கின் ஒரு பாகம் பாகு வெல்லம்
வேண்டும்.
வாஸனைக்கு ஏலக்காய்ப் பொடி.
செய்முறை——அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தூளைப் போட்டுக்
குறைந்த அளவில் சிறிது ஜலம் சேர்த்து் நிதான தீயில் வைத்து
இலைக் கரண்டியால் கிளறிவிட்டு பாகைக் காய்ச்சவும்.
பாகு சற்றுக் குறுகி வரும்போது துளி பாகைத் தண்ணீரில்
விட்டால் கெட்டியாக உறைவதை தொட்டுப் பார்த்து உணர
முடியும்.
இந்தப் பதத்தில் ஏலப்பொடியுடன் உடைத்து வைத்திருப்பதைக்
கொட்டிக் கிளறி அடுப்பைஅணைத்து விடவும்.
கூட்டில் சிறிதளவு கலவையைப் போட்டு மத்தாலோ கரண்டியாலோ
அழுத்தம் கொடுத்து தட்டித் தட்டி மேற்கொண்டு போட்டு, கூட்டை
நிரப்பி, சமனாக தட்டையாக கெட்டிப் படுத்தவும்.
உதாரணத்திர்கு ஒரு டம்ளர் பிழிந்த முருக்கு இதற்கு கால்
டம்ளர் வெல்லம் போதும்.
அதே டம்ளரிலேயே நெய் தடவி பாகில் போட்ட முறுக்கை
அடைத்து செய்து பார்க்கவும்.
அளவு சரியாக வரும். உதாரணத்திற்கு முறுக்கு என்றுஎழுதுகிறேன்.
கூட்டிலிருந்து எடுப்பதற்கு சற்று கூட்டை லேசாக சூடு படுத்தித்
ஒரு மணையின் மீது தட்டினால் கழன்று வந்து விடும்.
கலவை ஜாஸ்தியாகயிருந்தால் மிகுதியை உருண்டைகளாக
செய்து கொள்ளலாம்.
வறுத்த வேர்க்கடலை, பொட்டுக் கடலை, பொரி இப்படி பல
பொருள்களில் தயாரிக்கலாம். உருண்டைகளுக்கு பாகு நல்ல
கம்பிப் பதம். பருப்பு தேங்காய்க்கு பாகு சற்று முற்றிய பதம்.
தேங்காய் பர்பி. மைசூர் பாகு,ரவை, பிஸ்கெட்,மிட்டாய் என
எல்லாக் கலவைகளிலும் செய்யலாம்.ஒவ்வொரு கூடாக
இரண்டு முறை செய்து ஜோடி செய்யவும்.
குறிப்பாக, என்னுடைய நேயம்மிக்க சிநேகிதி லலிதா அவர்களின்
பெண் ஷீலா விரும்பிக் கேட்டதற்கிணங்க இதை சினேகிதியின்
ஞாபகார்த்தமாக மனதிற் கொண்டு எழுதியிருக்கிறேன்.
இதை எங்கள் பக்கம் பணியாரம் என்று சொல்லுவோம்..
முந்திரிப் பருப்பு பணியாரம் விசேஷமானது.
காரடை—வெல்லம்.
வேண்டியவைகள்
பச்சரிசி——-ஒருகப்–
பொடித்த வெல்லம்——முக்கால் கப்
ஏலக்காய்—3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும்.
காராமணி——2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது—–3 டேபிள் ஸ்பூன்
நெய்——–3டீஸ்பூன்
செய்முறை
அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல்
உலர்த்தலாகக் காய வைக்கவும்.
கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று
சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின்
அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப்
பொடித்துக் கொள்ளவும்.
காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில்
வறுத்து வென்னீர்விட்டு ஹாட்கேஸில் ஊறவைத்து
வைக்கவும்.
தேங்காய்த் துண்டுகளை நெய்யில் லேசாக வறுத்துக்
கொள்ளவும்.
வெல்லத்தை அரைகப் ஜலம் விட்டுக் கரைத்து சூடாக்கி
இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் மொத்தமாக வெல்லக்
கரைசலுடன் சேர்த்து ஒன்றறை கப் ஜலம், அளந்து வைத்து,
ஒரு துளி உப்பு, தேங்காய்த் துண் டுகள், ஊறிய வடிக்கட்டிய
காராமணி , ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தீயை நிதானமாக்கி கொதிக்கும் ஜலத்தில் பொடித்த ரவையைக்
கொட்டிக் கிளறவும்.
மாவு வெந்துத் தண்ணீரை இழுத்துக் கொண்டு கெட்டியாக
சேர்ந்து வரும் போது இறக்கி வைத்து சற்று நேரம் மூடி
வைக்கவும்.
தட்டில் மாவை ஆற வைத்து, அளவாக மாவைப் பிரித்துக் கொண்டு
பெரிய வடைபோல பொத்தலிட்டு அடைகளைத் தயாரிக்கவும்.
சிறிது ஜலமோ, எண்ணெய்யோ கையில் தொட்டுக் கொண்டால்
கையில் ஒட்டாது.
இட்டிலி ஸ்டாண்டில் எண்ணெய் தடவி பரவலாக வைத்து
இட்டிலி செய்வது போல நீராவியில் வேக வைக்கவும்.
குக்கரில் 12 நிமிஷத்திற்கு, அதிகமாகவே வைத்து எடுக்கவும்.
வெண்ணெயுடன் நிவேதனம் செய்ய காரடை தயார்.
மாவு கிளறும்போது கொதிக்கும் ஜலத்தில் சிறிது,
முன்னதாகவே தனியாக எடுத்து வைத்து விட்டால்
தண்ணீர் அதிகமாவதைத் தடுக்கலாம். புது அரிசியாக
இருந்தால் தண்ணீர் அதிகம் இழுக்காது. பழய அரிசியாக
இருந்தால் சாதத்திற்கு வைக்குமளவிற்கு ஜலம்
தேவையாக இருக்கும்.
பாஸுமதி அரிசிக்கு இந்தக் கணக்கு ஸரியாக வரும்.
பொன்னி போன்ற தமிழ்நாட்டு பழய அரிசிக்கு கூடுதலாக
தண்ணீர் தேவைப் படுகிறது.
வெந்த அடையுடன் வெண்ணெய் சேர்த்து வைத்து
நிவேதனம் செய்து சரடு கழுத்தில் கட்டிக்கொண்டு
அதையே பலகாரமாக உட்கொள்வது வழக்கம்.
இந்த நோன்பிற்கே காரடையான் நோன்பு என்று
சொல்வது வழக்கம். ஸத்யவான் ஸாவித்திரி
விரதவிசேஷ இனிப்பு இது.
அரிசி மாவு புட்டு-rice puttu
புட்டு செய்வதற்கு அரிசியை ஊறவைத்து களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த மாவில்தான் செய்ய வேண்டும். அதிக அளவு மாவு செய்து வறுத்து வைத்துக் கொண்டால் பட்சணங்கள் செய்ய சவுகரியமாக இருக்கும். சாதாரணமாக பட்சணங்களுக்கு வெறும் வாணலியில் அரைத்த மாவைக் கோலம்போட இழை வரும் அளவிற்கு வறுத்தால் போதும்.
புட்டு செய்ய மாவைச் சற்று சிவக்க வறுக்க வேண்டும்.
வேண்டிய சாமான்கள்—-ஒரு கப் வறுத்து பின் சலித்த அரிசி மாவு . ஒருகப-,வெல்லத்தூள்,——-ஒரு துளி உப்பு, கால்டீஸ்பூன்மஞ்சள்பொடி.
ஏலக்காய் 6,—முந்திரிப் பருப்பு 8,—–நெய் 2டேபிள் ஸ்பூன்.
தேங்காய்த் துருவல் 3டேபிள் ஸ்பூன்
செய்முறை—–மாவுடன் உப்பு, மஞ்சள்பொடி கலக்கவும். சூடான தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசிரவும் மாவு உதிர் உதிராகவே இருக்க வேண்டும். மாவைச் சேர்த்துக் கையில் பிடித்தால் பிடிக்கவும் விட்டால் உதிரும்படியாகவும் இருக்கும் பதத்தில் இருக்க, ஜலத்தை(4அல்லது5 டீஸ்பூன்) கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசிறவும்.
பிசிறிய மாவை சற்று பெரிய கண் உள்ள சல்லடையில் சலித்து கட்டிகளை நீக்கி சரியாக உதிர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்.
பிழிந்தெடுத்த ஒரு ஈரத் துணியில் பரவலாக மாவைக்கொட்டி , கட்டிவைத்து, இட்டிலி வேகவைப்பது போல குக்கரில், நீராவியில்தட்டின் மேல்வைத்து 12 நிமிஷங்கள் ஸ்டீம் செய்யவும்.
ஸ்டீம் அடங்கினவுடன் தாம்பாளத்தில் கொட்டி உதிர்த்து ஆற விடவும்.
முந்திரியை வறுத்து பொடித்துக் கொள்ளவும் ஏலக்காயையும் பொடித்து வெந்த மாவுடன் சேர்க்கவும்.தேங்காயையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பாத்திரத்தில் சிறிது ஜலம் சேர்த்து வெல்லத்தை அடுப்பில் வைத்து
பாகாகக் காய்ச்சவும். பாகு கெட்டியாக ஆரம்பிக்கும் சமயம் பாகை,உதிர்த்தமாவில் கொட்டி நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புட்டு தயார். முக்கால்பாகம் வெந்த பருப்பைக்கூட நன்றாகப் பிழிந்து அரை கரண்டி்யளவிற்கு புட்டில் சேர்ப்பதுண்டு.
ரவை லட்டு. ravai laddu
வேண்டியவை——ரவை ஒருகப், சர்க்கரை ஒன்றேகால் கப்
ஏலக்காய் 6, முந்திரி பாதாம்பருப்புகள்8, நல்ல நெய்கால்கப்பிற்கும் சிறிது அதிகம்.
செய்முறை——ரவையை வெறும் வாணலியில் இட்டு சிவக்க, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறினவுடன் மிக்ஸியில் போட்டு மெல்லிய மாவாக அரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையையும் தனியாக ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
முந்திரி பாதாமையும் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
ஒரு தாம்பாளத்தில் அரைகப் ரவைகலவையைப் போட்டு சின்ன வாணலியில் நான்கு ஸ்பூன் நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவின் மேல் கொட்டி ஒரு ஸ்பூனால் கலக்கவும். நெய்சூட்டில் சர்க்கரை சற்று இளகி உருண்டை பிடிக்க வரும். சற்று சூட்டுடனே உள்ளங்கையில் மாவை வைத்து விரல்களால் அழுத்தி சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும்.
இதே முறையில் மிகுதிக் கலவையையும் சூடான நெய் விட்டு லட்டுகளாகப் பிடிக்கவும். வாயில் போட்டால் லட்டுகள் கரையும்.



