Archive for மே 29, 2017
கல்யாண கணேசர்.

நமக்கெல்லாம் தெரிந்து பல கணேசர்கள் இருந்தாலும் கல்யாண கணேசரைப் பற்றி முதல் முதலாக இப்பொழுது தான் நான் படித்தேன்.
தமிழ் நாட்டைப் பொருத்த வரையில் கணேசர் கட்டை பிரம்மசாரிதான். அதே வடநாட்டில் அவரை விவாகமானவராகத்தான் சொல்லுவார்கள்.
ஸித்தி,புத்தி ஸமேத விக்னேசுவரர்தான்.
கைலாயகிரியில் பார்வதி பரமேசுவரருக்கு,தன் பிள்ளைகள் இருவருக்கும் விவாகம் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதாம்.
இதனையறிந்த கணேசரும்,முருகரும் , தாய்,தந்தையரிடம் போய் தனக்கே முதலில் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
பிள்ளைகளிருவரும் போட்டி இடுவதைப் பார்த்து,இதை நல்ல முறையில் தீர்க்கவேண்டுமென்று சிவன் விரும்பி இருக்கிறார்.
இந்த பூலோகத்தை யார் முதலில் பிரதக்ஷிணம் செய்து வருகிறீர்களோ, அவனுக்கு முதலில் விவாகம் என்று சொன்னார்.
முருகருக்கு ஏக குஷி. கணேஷசருக்கு இவ்வளவு சீக்கிரமாக உலகைச் சுற்றிவர முடியாது. நாம் வேகமாகப்போய் வந்து விடலாம் என்று மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உலகைச் சுற்றிவரப் போய்விட்டார்.!
கணேசருக்கோ தன்னால் உலகைச் சுற்றிவர முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு வினாடி யோசித்தார்.
மளமளவென்று நியமத்துடன் நீராடி,நியம நிஷ்டைகளைக் கடைப் பிடித்துத், தந்தைதாய் அருகிலே வந்தார். அவர்களைப் பார்த்து,
நீங்கள் இருவரும் இப்படி ஆஸனத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர்கள் முகத்தில் கேள்விக் குறி?
பூமியைச் சுற்றிவரக் கிளம்பவில்லையா? சீக்கிரம் கிளம்பு பணித்தனர் இருவரும்.
உங்கள் இருவரையும் ஒன்றாகப் பூஜிக்க விரும்புகிறேன்.
இருவரும் அமர்ந்தனர்
கணேசர் அவர்களிருவரையும் பூஜித்து, வணங்கி ஏழு முறை வலம் வந்து வணங்கினார்.
தந்தையே எனக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நான் சொன்னதை மறந்து விட்டாயா? சீக்கிரம் கிளம்பிப்போய் வலம் வா!
பார்வதிதேவியும் துரிதப் படுத்தினார்.
அம்மா நான் பூமி தேவியை வலம் வந்தாகி விட்டது.
என்ன சொல்கிராய் நீ!
ஆம் அம்மா. ஒரு முறையில்லை. ஏழு முறை வலம் வந்தாகி விட்டது. என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.
அதெப்படி?
திரும்பவும் வணங்கிவிட்டு,
தந்தையே வேதங்கள் கூறுவது இதுதானே?
தாய் தந்தயைரை பூஜித்து வணங்கினால், அவன் பூமிப் பிரதக்ஷிணம் செய்த பலனைப் பெறுவான் என்று கூறவில்லையா?
வீட்டிலிருக்கும் மாதா,பிதாவை வணங்கினால் ஒரு தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லவில்லையா?
அவர்களின் காலை அலம்பி அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் கங்கை நீருக்கொப்பாகும் என்றும் வேதங்கள் சொல்லியுள்ளது உங்களுக்குத் தெரியுமே!
தங்கள் திரு முகத்திலுண்டானதுதானே வேதம். தங்களுக்குத் தெரியாததா?
கணேசரின் சாதுர்யமான,அர்த்த பூர்வமான பதிலைக் கேட்டுஸந்தோஷத்தோடு கணேசரை அணைத்துக் கொண்டு, உன் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகின்றேன் .
நீ யாவற்றையும் ஸரியாகத்தான் சொல்லுகிராய். ஸத்யமான வார்த்தைகள்தான் இவைகள் என்றார் சிவன்.
யோசித்து இரண்டு பெண்களை நிச்சயித்தார். ஸித்தி,புத்தி என்ற இருவரும் சதுர்முகப் ப்ரம்மா விசுவ ரூபனின் புதல்விகள்.
தேவ,முனிவர்கள் யாவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.எப்பேர்ப்பட்ட கல்யாணம். வர்ணிக்க வார்த்தைகளில்லை. பிரம்மாவின் குமாரிகளாயிற்றே!
அழகான நகரையே நிர்மாணம் செய்து விவாஹம் நடந்திருக்கும்.
யாவரும் வந்து ஸந்தோஷமாக வாழ்த்த கணேசரின் விவாகம் ,கைலாயத்தில் கோலாகலமாக நடந்தது.

ஆக கணேசருக்கு விவாகம் நடந்த கதை எப்படி என்பதை சிவபுராணத்தில் இப்படி ஒருகதை படித்துத் தெரிந்து கொண்டேன்
. உலகை வலம்செய்து விட்டு வரும் முருகரை நாரதர் ஸந்தித்து, உன்னை உலகம் சுற்ற அனுப்பி விட்டு இங்கு கோலகலமாக கணேசருக்குக் கல்யாணம் நடத்திவிட்டார் உன் தகப்பனார் என்று கலகமூட்டினார். இது ஸரியில்லை. அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பாய்நீ? முருகருக்குக் கோபத்தைப் பல வழிகளிலும் தூண்டிவிட்டார் நாரதர்.
நம்மிடம் உண்மையைச் சொல்லி விட்டுப் பிறகு விவாகம் செய்திருக்கலாமே! இப்படி எண்ணங்கள் தோன்றியது. கைலாயத்தினுள் பிரவேசிக்கவே பிடிக்கவில்லை. கட்டியுள்ள நல்ல உடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு ஒரு கோவணத்தை மட்டிலும் தரித்துக் கொண்டு,தாய்தந்தையர் முன் சென்று கோபமாக ப் பேசலுற்றார்.
என்னை ஏமாற்றிவிட்டு கணேசருக்குக் கல்யாணம் முடித்து விட்டீர்கள். முதலில் அவருக்குத்தான் என்று சொல்லி இருக்கலாம். எனக்கு விவாகம் எதுவும் வேண்டியதில்லை. எந்த ஆடம்பரமும் தேவையில்லை
. நடந்த விஷயங்கள் எவ்வளவு சொன்னாலும் காதில் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாகக் கிிரவு்ஞ்ச மலைக்குச் சென்று அதன்மீது அமர்ந்து விட்டார். அவரைப்பார்க்க தாய் தந்தையரும் அவ்விடம் விஜயம் செய்கிரார்கள் என்று கதை போய்க்கொண்டு இருக்கிறது.
மாம்பழத்திற்காக மயிலேறி உலகத்தை சுற்றிலும் கிடைக்காமல் ஆண்டிவேடம் பூண்ட கதை யாவருக்கும் தெரியும்.
இப்படியும் பிள்ளையாரின் விவாகத்தோடும் பின்னிப் பிணைந்த கதை இது. நான் ரஸித்ததை எழுதியிருக்கிறேன். எவ்வளவோ பேருக்குத் தெரிந்த கதையாகவும் இருக்கலாம். பாருங்கள்.
பட உதவி—-இணையம்.
