Archive for மார்ச், 2018
மஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA
எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேறாக இருந்தாலும், கொண்டாடும் ஸமயம் வேறாக இருந்தாலும் கதை, புராணங்கள் ஒத்துப் போகும்.
வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதில், ஆந்திர கர்னாடக மானிலங்கள் கொண்டாடும் யுகாதி என்ற அதே தினத்தில்தான் மராட்டியரும் GUDI PADWA குடி பட்வா என்று வருஷப்பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்
குதி என்ற பதத்திற்கு மராட்டியில் வெற்றிக் கம்பம் என்ற பொருளாம். ராவண வதத்திற்குப்பின், வனவாஸம் முடிந்து ஸீதையுடன் ராமர் அயோத்தி திரும்பிய அந்த நாளை, மக்கள் வெற்றிக்கம்பம் நாட்டிக் கொண்டாடியதாகவும், அதன் ஞாபகார்த்தமாகவே மராட்டிய மக்களும், தங்கள் இல்லந்தோறும் வெற்றிக் கம்பங்களை நட்டு, இவ்வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதாகவும் சொல்கிரார்கள். இந்நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஒரு நன்னாள்.
சத்ரபதி சிவாஜி மஹாராஷ்டிரத்தை ஜெயித்த நன்னாளாகவும் இதைக்கொண்டாடுகிரார்கள்.
ரங்கோலி அலங்கார மத்தியில்
வீட்டின் முன்பாக ஒரு மூங்கிலில் மாவிலை,புஷ்ப அலங்காரங்கள் செய்து, உச்சியில் செப்புக் கலசத்தைக் கவிழ்த்து ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கும்.
அதனடியில் வெற்றியின் ஞாபகார்த்தமாக காவிநிறத்துணி கட்டப்பட்டிருக்கும். மற்றும் அலங்காரங்களுடன் இருக்கும் அந்தக் கம்பமே வெற்றிக் கம்பம்.
அதற்கு வீட்டிலுள்ளவர்கள் பூஜை செய்கிறார்கள்.
வருஷப்பிறப்பன்று அதிகாலையிலேயே பெண்கள் நீராடி, அவர்கள் வழக்கப்படி ஒன்பது கெஜ சேலைகளை பின்கச்சம்போட்டு முறைப்படி அணிந்து மூக்கில் நத்து என்ற அணிகலனையும்,மற்றும் கழுத்து,கை என்று எல்லா அணிகலன்களையும் அணிகின்றனர்.
ஆண்கள் குர்தா,பைஜாமா ,தலைக்குக் குல்லா
போன்ற உடைகளையும் அணிகின்றனர். சிறுவர்,சிறுமிகளைப்பற்றி கேட்கவே வேண்டாம். வண்ணவண்ண உடைகள்தான்.
விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுகிறது யாவர் வீட்டிலும்.
ஸ்ரீகண்ட்,பூரண்போளி, மாங்காயில்தயாராகும் பன்னா இவைகள் முக்கியமானவை. விதவிதமான இனிப்புகள். வெற்றிக்கம்பத்திற்குப் பூஜை செய்கிரார்கள்.சிறுவர்,சிறுமிகள்,படிக்கும் வித்யார்த்திகள் ஸரஸ்வதி பூஜையும் இன்றே செய்கிரார்கள்.
உற்றார்,உறவினர்,நண்பர்கள் என யாவரும் கூடிக்களிக்கிரார்கள்.
புதிய வீட்டு கிரஹப்ரவேசம்,வாகனங்கள் புதியதாக வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் என இதைப்போன்ற முக்கிய பொருட்கள் வாங்கஉத்தமமான தினம்.
அன்று கசப்பான வேப்பிலையும் துவையல்போன்று சிறிது உண்பார்கள் என சொல்வது ஸுக துக்கங்களைக் கலந்து அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. யுகாதி,குடி பட்வாவை 18–3–2018 அன்று நாமும் கொண்டாடுவோம்.
படங்கள் உதவி இணையத்திற்கு நன்றி.