Posts filed under ‘டிபன் வகைகள்’
பருப்பரிசி உசிலி.
வேண்டியவைகள்.
அரிசி—-1 கப்
பயத்தம் பருப்பு—-ஒரு கப்பின் மூன்றிலொரு பாகம்
தேங்காய்த் துருவல்—-அரை கப்
எண்ணெயும், நெய்யுமாக—-2 டேபிள் ஸ்பூன்
கடுகு. உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, தலா 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—-கால் டீஸ்பூன்.
மிளகாய்—2
ருசிக்கு—உப்பு
இஞ்சித் துண்டுகள்—1 டீஸ்பூன்
கறிவேப்பிலை—-சிறிது.
செய்முறை——-அரிசி, பருப்பைத் தனித் தனியாக சிவக்க வறுக்கவும் தண்ணீர்விட்டுக் களைந்து நீரை இறுத்து வைக்கவும்.
ப்ரஷர் பேனிலோ, சின்ன குக்கரிலோ நெய் ,எண்ணெயைக்
காயவைத்து , கடுகு, மிளகாய்,பருப்புகள், பெருங்காயம் சேர்த்து
சிவக்க வறுத்து, தேங்காயைப் போட்டு ஒரு முறை பிரட்டி
இஞ்சி,கறிவேப்பிலையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்க விடவும்.
திட்டமான உப்புடன் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து குக்கரில்
ஒரு விஸில் வரும்வரை வைத்து, மேலும் ஸிம்மில் 4 நிமிஷம் வரை
வைத்து இறக்கவும்.
நீராவி அடங்கிய பின் கரண்டிக் காம்பினால் ஒரு கிளறு கிளறி
மூடி வைத்து இரண்டொரு நிமிஷம் கழித்து உபயோகிக்கவும்
சாதம் வைக்க அரிசிக்கு எந்தக் கணக்கில் ஜலம் வைப்போமோ
அந்தக் கணக்கு ஜலம் வைத்தால் போதும்.
பருப்பிற்காக வேண்டாம்.
உதிர் உதிராக உசிலி தயார்.
துவையல், கொத்ஸு, பச்சடிகளுடன் சாப்பிட முழு உணவாக
இருக்கும்.
பச்சைப் பட்டாணி , முந்திரிப் பருப்பு முதலானவை சேர்த்து
ருசியைக் கூட்டலாம்.
பத்திய தோசை.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி——ஒன்றறை கப்
வெந்தயம்—–2 டீஸ்பூன்
துவரம்பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு–அரைகப்
தாளிக்க—-கடுகு, மிளகு அரை டீஸ்பூன்
சீரகம், பெருங்காயம்—-சிறிதளவு.
ருசிக்கு உப்பு
தோசை செய்ய நல்லெண்ணெய்
செய்முறை————–அரிசி ,பருப்புகள், வெந்தயத்தை நன்றாகக்
களைந்து தண்ணீரில் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு குறைந்த
அளவு ஜலம் சேர்த்து நன்றாக அறைத்து உப்பு சேர்த்து எடுக்கவும்.
மாலையில் அரைத்தால் காலையில் செய்ய சரியாக இருக்கும்.
புளித்து விடும் எனறு தோன்றினால் பாதி மாவை பிரிஜ்ஜில்
வைத்தெடுத்து கலந்து உபயோகிக்கலாம்.
கடுகைத் தாளித்து, மிளகு சீரகத்தைத் தட்டிப் போட்டு சற்று
கெட்டியாகவே மாவை உபயோகிக்கலாம்.
குழிவான தோசைக் கல்லிலோ, நான் ஸ்டிக் பேனிலோ
எண்ணெய் தடவி தோசையைக் கனமாகப் பரப்பி சுற்றிலும்
எண்ணெய் விட்டு மிதமான தீயில் திட்டமான மூடி ஒன்றினால்
மூடி வேக விடவும்.
2 நிமிஷ இடை வெளியில் மூடியைத் திறக்கவும். தோசை அடி
சிவந்து வெந்திருக்கும். சற்று நிதானித்து தோசையைத் திருப்பிப்
போட்டு துளி எண்ணெய் விட்டு முருகலான பதத்தில் எடுக்கவும்.
மிளகாய்ப்பொடி, சட்னிகளுடன் ருசியாக இருக்கும்.
எண்ணெய் குறைவாக விட்டால் பத்திய தோசைதான்.
மெல்லியதாகவும் வார்க்கலாம்.
ரவை உப்புமா.
வேண்டியவைகள்
நல்ல பெரிய ரவை—–1 கப் சூடாக வறுத்துக் கொள்ளவும்.
காய் கறிகள் போட்டுச் செய்தால் ருசி கூடும்.
கேரட்—–1 நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம்—பெறியதான ஒன்றை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைப் பட்டாணி—கால்கப்
கோஸ்—-நறுக்கியது முக்கால் கப்
கேப்ஸிகத் துண்டுகள்—கால்கப்
பச்சை மிளகாய்—–2 நீளவாட்டில் நறுக்கவும்
இஞ்சித் துண்டுகள்—2 டீஸ்பூன்
கறிவேப்பிலை—சிறிது
தாளிக்க—எண்ணெய்—2 டேபிள் ஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
முந்திரி 5 அல்லது 6
எலுமிச்சம் பழம் ஒரு மூடி
ருசிக்கு் உப்பு
செய்முறை——வாணலியிலோ, நான் ஸ்டிக் பானிலோ
எண்ணெயைக் காய வைத்து, கடுகு, பருப்பு வகைகளைத்
தாளித்து, இஞ்சி,மிளகாய்,கறிவேப்பிலை வெங்காயத்தைச் சேர்த்து
வதக்கி, நறுக்கி அலம்பியுள்ள காய்களையும் சேர்த்து
வதக்கவும். 2 கப் ஜலம் சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பும், நெய்யும் சேர்க்கவும்.
தீயைக் குறைத்து கொதிக்கும் ஜலத்தில் ரவையைச்
சீராகக் கொட்டிக் கிளறவும். ரவை சேர்ந்தார்ப்போல
வெந்து வரும்போது மறுபடியும்ஒரு முறைக் கிளறி
தட்டினால் மூடி 2 நிமிஷம் வேக வைத்து இறக்கவும்.
எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து கலந்து பறிமாரவும்.
தாளிப்பில் சீரகம், பெருங்காயம் சேர்க்கலாம்.
காய்கள் போடாது வெங்காயம் சேர்த்தும், எலுமிச்சைக்குப்
பதில் தக்காளி சேர்த்தும் செய்யலாம்.
ரவையை மைக்ரோவேவ்விலும் வைத்து வறுத்துக்
கொள்ளலாம். சீக்கிரம் தயாரிக்க முடியும் டிபனிது.
வெண் பொங்கல்.
வேண்டியவைகள்
பச்சரிசி——1 கப்
பயத்தம் பருப்பு—அரைகப். பருப்பை சற்று சிவக்க வறுத்து
அரிசியைச் சேர்த்து ஒரு பிரட்டல் பிரட்டி இறக்கவும்.
நெய்—-கால்கப்
மிளகு–ஒன்றரை டீஸ்பூன்
ஜீரகம்—-1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—-சிறிது
தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி–1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
வாஸனைக்கு—கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி
கறி வேப்பிலை—-சிறிதளவு
மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
சாதம் சமைக்க அரிசிக்கு எந்த அளவில் ஜலம்வைப்போமோ
அந்தக் கணக்கில் ஜலத்தை எடுத்துக் கொண்டு வைக்கலாம்.
சில வகைகளுக்கு 3 பங்கு ஜலம். சில வகைகளுக்கு 2 பங்கு
அதனால் இப்படி எழுதுகிறேன்
வறுத்த அரிசி பருப்பைக் களைந்து 3 கப்பிற்கு அதிகமாகவே
தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி கலந்து குக்கரில் ஸப்ரேட்டரில்
வைத்து ,ஒரு விஸில் , அதிகமாகவே வரும்படிவைத்துக் குழைய
வேக விடவும்.
முந்திரியை வறுத்து ஒடித்துக் கொள்ளவும்.
நிதானமான தீயில் நெய்யைக் காய்ச்சி மிளகு ஜீரகத்தைப்
பொரித்து பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து
வேண்டிய உப்பு போட்டு வெந்த கலவையில் கொட்டிக்
கிளறவும். முந்திரி சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து
சுடச்சுட பறிமாரவும். பாஸுமதி அரிசியானால் 2 பங்கு
ஜலம்.
பொன்னி வகை பழய அரிசியானால் 3 பங்கு ஜலம். தவிர
பருப்பிற்கும் சேர்த்து நெகிழ தயாரிப்பதற்கு அதிகமாகவே
ஜலம் வைக்கவும்.
சட்னி, கொத்ஸு வகைகள் சேர்த்துச் சாப்பிட நன்றாக
இருக்கும்.
ராகி தோசை.
வேண்டியவை
அரைத்த கேழ்வரகு மாவு–2 கப்
உளுத்தம் பருப்பு——கால்கப்
வெந்தயம்—ஒரு டீஸ்பூன்
ருசிக்கு —உப்பு
தோசை செய்ய வேண்டிய எண்ணெய்
வேக வைத்து தோல் உறித்த—2 உருளைக் கிழங்கு
செய்முறை—-மாவை உப்பு சேர்த்துத் சற்றுத் தளரத் தண்ணீர் விட்டுப் பிசையவும்.
வெந்தயத்தையும், பருப்பையும் தண்ணீர் விட்டுக் களைந்து
3 மணிநேரம் ஊற வைத்து , மிக்ஸியில் அறைத்து, மாவுடன்
சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
5, 6 மணி நேரம் கழித்து வெந்த உருளைக் கிழங்கை
நன்றாக மசித்து மாவுடன் கலக்கி தோசைகளாக வார்த்துச்
சாப்பிடலாம். பிடித்தமான சட்னியோ கூட்டுகளோ இசைவாக
இருக்கும். அரிசி இல்லாத டிபன்.
வேண்டுமாயின் ஒரு கரண்டிமோர் மாவுடன் கலந்து
கொள்ளவும்.
புளி அவல்.
வேண்டியவைகள்——-அவல்—2 கப்
நெல்லிக்காயளவு– புளி.–கால்கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
மிளகாய் வற்றல்—-2,—அதிக காரம் வேண்டுமானால் பச்சைமிளகாய்1
தனியாப் பொடி—அரை டீஸ்பூன்
சீராப்பொடி–அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—கால் டீஸ்பூன்
உப்பு——ருசிக்கு ஏற்ப
நல்லெண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க—கடுகு, பெருங்காயப் பொடி,சிறிது
மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பும்,
வேர்க் கடலையும்
வாஸனைக்கு கறி வேப்பிலை
அரை டீஸ்பூன்—-வெல்லப்பொடி.
செய்முறை—-அவலைக் காய்கறி வடிக்கட்டியில் போட்டு
மேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டி வைத்துக்
கொள்ளவும்.
புளியைக் கறைத்துக் கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.
நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெயைக் காய வைத்து தாளிக்க ,வேண்டியவைகளைத் தாளித்து சீரக தனியா,கறிவேப்பிலை
மஞ்சளைச் சேர்த்துப் பிரட்டி புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.
உப்பு, வெல்லம் சேர்த்துக் கிளறி புளித்தண்ணீர் சுண்டும் வரை
நிதான தீயில் வைக்கவும்.
திக்கான பதம் வரும் போது ஊறின அவலைக் கொட்டி பதமாகச்
சூடு ஏறும் வறை கிளறி இறக்கவும் .
என்னுடைய வழக்கமான வார்த்தை பூண்டு, வெங்காயம்
வேண்டுபவர்கள் தாளிப்பின் போது சேர்த்துச் செய்யலாம்.
இதுவும் ருசியான டிபன்தான்.
புளிக்குப் பதில் தக்காளிப்பழ சாற்றைக் குறுக்கியும்
செய்ய முடியும்.
அடை.
வேண்டியவைகள்
அரிசி—-முக்கால் கப்
கடலைப் பருப்பு-கால்கப்பிற்கு சற்று அதிகம்
துவரம் பருப்பு–கால்கப்
உளுத்தம் பருப்பு—ஒருபிடி
வற்றல்மிளகாய்–இரண்டு
தேங்காய்த் துருவல்–5 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி–கால் டீஸ்பூன்
அடை செயவதற்கு வேண்டிய—–எண்ணெய்
பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது சிறிதளவு.
ருசிக்கு—-உப்பு
செய் முறை—–கரகரப்பாக அடை வேண்டுமானால் அதிக
நேரம் அரிசி பருப்பு வகைகளை ஊறப்போடாமல் 3 அல்லது4-
-மணி நேரம் களைந்து ஊறவைத்து அதிக ஜலம் விடாமல்,
உப்பு, காரம் சேர்த்து நறநறப்பாக அறைத்துக் கொள்ளவும்.
பெருங்காயம், தேங்காய்த் துருவல்,கொத்தமல்லி சேரத்துக்
கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான தோசைக்கல்லிலோ, நான் ஸ்டிக்தோசைக்-
-கல்லிலோ, திட்டமான சூட்டில் எண்ணெய் தடவி அடையை
தடித்த தோசை அளவில் பறத்தி வார்க்கவும். நடுவில்தோசை
திருப்பியால் ஒரு பொத்தலிட்டு அதிலும், சுற்றிலுமாக சற்று
தாராளமாக ஸ்பூனினால் எண்ணெயைவிட்டு அடையை
வேக விடவும். வெந்தபின் அடையைத்திருப்பிப் போட்டு
சிறிது எண்ணெயை சுற்றிலும் விட்டு நிதான தீயில்
கரகரப்பாக ஆகும்வரை வைத்து எடுக்கவும்.
இது சாதாரண அடை.
புழுங்கலரிசி, முழு உளுந்தை ஊற வைத்தரைத்தும்
உப்பு காரம் சேர்த்து அடை செய்யலாம்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி பெருஞ்சீரகம் இவைகளை
சேர்த்து அரைத்தும் செய்யலாம்.
முளைக்கீரை,பாலக், முருங்கைக் கீரை புதிநா சேர்த்தும்
செய்யலாம்.
கோஸ், கேரட், காலிப்லவர், பரங்கிக் காய் இவைகளைத்
துருவிச் சேர்த்தும் அடை வார்க்கலாம்.
சின்ன வெங்காயம், நறுக்கிச் சேர்த்தால் கூடுதல் ருசி.
பருப்புகள் மற்ற வகைகளையும் ஊற வைக்கும் போது
கலந்து செய்யலாம்..
தகுந்தாற்போல உப்பு காரமும் கூட்டிக் குறைத்துச்
சேர்க்கவும்.
நெய், தேங்காய் எண்ணெயும் சேர்த்து செய்தால் ருசி
கூடும்.
முள்ளங்கி, நூல்கோல்கூட விதி விலக்கில்லை.துருவிப்
பிழிந்து போடலாம். ஏதாவதுஒன்றிரண்டு தேர்வு செய்து
கலக்குங்கள். அடை மாவையும்தான். கலவையைப்
பொறுத்து அடையின் பெயர் சொல்லுங்கள்.எதற்கு
எது சேர்த்தால் சுவைகூடும். அது உங்கள் சாய்ஸ்.
பயத்தந் தோசை.
வேண்டியவைகள்
பச்சைப் பயறு—–ஒருகப்
அரிசி—கால்கப்
வெங்காயம் —–1 நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய்–சிறியதாக 2
வேக வைத்து தோ்ல் உரித்த உருளைக் கிழங்கு—-1
சீரகம்—அரை டீஸ்பூன்
நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி சிறிது
ருசிக்கு—உப்பு
தோசை செய்ய —-எண்ணெய் வேண்டிய அளவு.
செய்முறை—–அரிசி ,பயறு இரண்டையும் நன்றாகக் களைந்து
6 மணி நேரத்திற்குக் குறையாமல் தண்ணீரில் ஊறவைக்கவும்.
எண்ணெய் நீங்கலாக மற்றவைகளையும் சேர்த்து ஊற
வைத்திருப்பதை மிக்ஸியிலிட்டு அதிக த் தண்ணீர் விடாமல்
அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவைத் திட்டமாக ஜலம் விட்டு கரைத்துக்
கொள்ளவும்.
நான் ஸ்டிக் தோசைக்கல், அல்லது கனமான தோசைக்
கல்லிலோ பதமான சூட்டில் எண்ணெய் தடவி மெல்லிய
தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டுத்
திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
பிடித்தமான சட்னிகளுடன் சுடச்சுட சாப்பிட ருசியாக
இருக்கும்.
உருளைக் கிழங்கு அவல்.
வேண்டியவைகள்——–மெல்லிய அவல்—-2கப்
சிறிய அளவில் நறுக்கி, அலம்பிய உருளைக் கிழங்கு—அரை கப்
பச்சை மிளகாய் 2 —நறுக்கிக் கொள்ளவும்.
திட்டமான வெங்காயம் 1—பொடியாக நறுக்கவும்.
ஒரு துண்டு இஞ்சி—நறுக்கியது
பச்சைப் பட்டாணி—-2 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி நறுக்கியது—-கால் கப்
காரா பூந்தி அல்லது ஓமப்பொடி —ரெடி மேடாக 4 டேபிள் ஸ்பூன்
தாளித்துக் கொட்ட—–எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க –கடுகுசிறிது, உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு அரைடீஸ்பூன்.
ருசிக்கு—-உப்பு . துளி மஞ்சள் பொடி, எலுமிச்சைத் துண்டுகள்.
செய்முறை——அவலைக் காய்கறி வடிக்கட்டியில் போட்டு
மேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
உப்பு, மஞ்சள்பொடி கலந்து சிறிது ஊறவைக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக்காயவைத்து
கடுகு முதலானவைகளைத் தாளித்து, வெங்காயத்தை
வதக்கவும். இஞ்சி பச்சைமிளகாய், கிழங்குத் துண்டுகள்
சேர்த்து நிதான தீயில் வதக்கி ஒரு துளி உப்பு சேர்க்கவும்.
கிழங்கு வதங்கிய பின் ஊறிய அவலைச் சேர்த்து லேசாகக்
கிளறி நன்றாகச் சூடு ஏறிய பின் இறக்கி வைத்து சிறிது நேரம்
மூடி வைக்கவும்.
சுடச்சுட, ப்ளேட்டில் அவல்க் கலவையைப் போட்டுப்
பரத்தி மேலாக ஓமப்பொடியைப் போட்டு,
கொத்தமல்லியைத் தூவி ஒரு எலுமிச்சைத் துண்டுடன்
கொடுக்கவும். இது என்னுடைய போபால் மருமகளின்
ஆலு போஹா. தயாரிப்பதும் எளிது.
ருசியும் நன்றாக இருக்கும்.
மோர்க்களி.
வேண்டியவைகள்.
மிதமான புளிப்பு மோர்—இரண்டரைகப்
மெல்லியதாகச் சலித்த அரிசி மாவு—ஒரு கப்
எண்ணெய்——இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–ஒரு டீஸ்பூன்
மோர் மிளகாய்——மூன்று
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு–துளி பெருங்காயம்
சிறிது கறிவேப்பிலை.
செய்முறை——-மாவை உப்பு சேர்த்து மோரை விட்டு கரைத்துக்
கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து
மிளகாயை நன்றாக கிள்ளிப்போட்டு வறுத்துக் கொண்டு
கடுகு, பெருங்காயம்,உளுத்தம்பருப்பைச் சேர்த்துத் தாளித்து
கறி வேப்பிலையுடன் கரைத்து வைத்திருக்கும் மாவுக்-
-கலவையைச் சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக
வைத்து அடிக்கடி கிளறவும். மாவு வெந்து சுருண்டு
வரும் போது சற்று மூடி வைத்துப் பிறகு இறக்கவும்.
ஈரக் கையினால் மாவைத் தொட்டால் வெந்த மாவு
கையில் ஒட்டாது. உப்பு, புளிப்பு, காரத்துடன் களிப்பதத்தில்
சாப்பிட ருசியாக இருக்கும்.
சோளமாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவிலும் இதே மாதிரி
தயாரிக்கலாம். அவசரத்திற்கு, நினைத்தால் உடனே தயாரிக்க
முடியும். தாளிப்பில் வேர்க்கடலை, முந்திரி பருப்பும் போடலாம்.
