கறிவேப்பிலைக் குழம்பு
இளசாக உருவிய கறிவேப்பிலை இலைகள்–2கப்
தோல் நீக்கி உறித்த பூண்டு இதழ்கள்—-கால்கப்
மிளகாய் வற்றல்——-3
மிளகு–2 டீஸ்பூன்
தனியா—-3 டீஸ்பூன்
சுக்கு—-ஒரு சிறிய துண்டு
ஓமம்–அரை டீஸ்பூன்
அரிசி–ஒரு டீஸ்பூன்
மேலே கொடுத்திருப்பவை யாவும் வறுப்பதற்கு.
தாளித்துக் கொட்ட—-கடுகு,,பெருங்காயம், வெந்தயம் 1டீஸ்பூன்
ஒவ்வொரு ஸ்பூன் கடலை உளுத்தம், பருப்புகள், வேர்க் கடலை,
தாளிக்க——நல்லெண்ணெய்–4 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு—1டீஸ்பூன் மஞ்சள்பொடி
புளி—1எலுமிச்சை அளவு, வெல்லத்தூள் 1ஸ்பூன்
செய்முறை–புளியை வெந்நீரில் ஊறவைத்து 2,3முறை தண்ணீர் விட்டு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்திருப்பவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து பூண்டு
கறிவேப்பிலையையும் வதக்கிச் சேர்த்து, ஆறியபின் சிறிது ஜலம் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,
பருப்புவகைகளைத் தாளித்து ,புளிக்கரைசலில் அரைத்த விழுதைக்
கொட்டிக் கரைத்து வேண்டிய அளவு ஜலம் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, மஞ்சள், வெல்லம் சேர்க்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்
ருசியானதும், உடம்பிற்கு ஆரோக்கியமானதுமான குழம்பு.
நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
ருசிக்கு சிறிது தேங்காயும் சேர்த்து அரைக்கலாம்.
பீன்ஸ் அவரை பருப்புசிலி
பீன்ஸ் அவரைக்காய் சேர்த்தோ, அல்லது தனியாகவோ கொத்தவரைக் காயிலோ பருப்புசிலி நன்றாக இருக்கும்.
வேணடியவைகள்—அரைகப் துவரம் பருப்பு
கால்கப்—-கடலைப் பருப்பு
வற்றல் மிளகாய்—-5 காரத்திற்கு வேண்டியளவு
ருசிக்கு –உப்பு
காய்—–நறுக்கியது [பொடியாக] கால்கிலோ
பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்
எண்ணெய்—4 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி–சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை——-பருப்புகளைக் களைந்து 2 மணிநேரம் தண்ணீரில்
ஊற வைத்து நீரை ஒட்ட வடிக்கட்டி,மிளகாய் பெருங்காயம்
சேர்த்து கரகர பக்குவத்தில் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
அரைத்த கலவையை, மைக்ரோவேவின் அகலமான தட்டில்
எண்ணெய் தடவி அடை போலப் பரப்பி வைத்து உயர்ந்த சூட்டில்
4நிமிஷங்கள் மைக்ரோ வேவ் செய்து எடுக்கவும்.
எடுத்து ஆற விடவும். ஆறின பின் சிறு துண்டங்களாகச் செய்து
மிக்ஸியில் போட்டு வைப்பரில் 4 சுற்று சுற்றினால், பருப்பு
உதிர் உதிராக புட்டுப் போல கிடைக்கும்.
நறுக்கிய காய் எதுவோ அதை சிறிது ஜலம் சேர்த்து நனறாக
வேக வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து வெந்த காயைக் கொட்டி
வதக்கி உதிர்த்த பருப்புக் கலவையையும் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் சற்று சிவக்க உதிர் உதிராகக் கிளறி இறக்கவும்
வதக்கும் போதே வேண்டிய உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.
கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
மைக்ரோவேவ் இல்லாது செய்வதானால் நிதானமான தீயில்
தோசைக்கல்லில் அடைமாதிரிதட்டி மூடி வேகவைத்து,
திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, ஆற வைத்து,
துண்டித்து மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொண்டு செய்யலாம்.
பருப்புக் கலவையில் தனியா, ஜீரகம், மஸாலா, புளி , இஞ்சி,
வெங்காயம் என நமக்குப் பிடித்தவற்றையும் சேர்த்து
அரைத்தும் செய்யலாம். ஜலம் விடாது அரைக்கவும்.
காப்ஸிகம், வாழைப்பூ, ஆத்திக் கீரை, வெந்தயக் கீரை.
காராமணிக்காய் என நமக்கு வேண்டியவற்றுடன் ஜோடி சேர்த்து
தயாரிக்கலாம்.
அரைத்த பருப்புக் கலவையை ஸ்டீம் செய்து உதிர்த்தும்,
நேரடியாகவே தாளிதத்தில் போட்டு உதிராக வறுத்தும்
செய்யலாம்.
திடீர் தோசை
எண்ணினால் உடனே செய்ய முடியும்.
வேண்டியவைகள் அரிசி மாவு—1 கப்
மைதா அல்லது கோதுமை மாவு—-1கப்
மோர்—அரை கப்பிற்கு அதிகம் விருப்பப்படி
ருசிக்கு உப்ப
பச்சைமிளகாய்-1 நீளமாகக் கீறிக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் –கால் கப்பிற்கு குறையாமல்
வேண்டிய அளவு—–எண்ணெய்
செய் முறை—-மாவுகளை மோர்,உப்பு ஜலம் சேர்த்து
தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வெங்காயத்தை லேசாக வதக்கி ஆற வைத்து
மாவுடன் கலக்கவும்.
நானஸ்டிக் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மிதமான
சூட்டில், தோசையை வார்க்கும் போதே பரவலாக மாவை
வீசிவிட்டு வார்க்கவும். .ஸாதா தோசையைப் போல் பரப்புவது
சரிவராது.
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு நன்றாக
வேகவைத்து எடுக்கவும்.
சற்று முறுகலாக எடுத்தால் கூடுதலான டேஸ்டுதான்.
மிகுந்த தோசைமாவு [அறைத்தது] போதாது போனால்
இம் முறையில் மாவுகளைச் சேர்த்தும் வார்க்கலாம்.
ஸாதா தோசையைவிட மாவு சற்று நீர்க்க இருக்கலாம்.
துணைக்கு எது வேண்டுமோ அதைச் சேர்த்துச் சாப்பிடுவது
உங்கள் விருப்பம்.
மாம்பழக் குழம்பு.
வேண்டியவைகள் ——துவரம் பருப்பு—1கப்
புளி—சின்ன எலுமிச்சை அளவு
ஸாம்பார் பொடி–3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
கடுகு–1டீஸ்பூன்
வெந்தயம்–அரைஸ்பூன்
வாஸனைக்கு–பெருங்காயம்
ருசிக்குஉப்பு
தாளிக்க எண்ணெய்—3டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
நாட்டு மாம்பழம்—5,6
செய்முறை—–பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து 4கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகச்
சாறெடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் புளி ஜலத்துடன் 5,6 சின்ன
மாம்பழங்களைச் சேர்த்து உப்பு, ஸாம்பார்ப் பொடி சேர்த்து
கொதிக்க விடவும்.
பழங்கள் சுருங்கி வெந்து குழம்பின் பச்சை வாஸனை போனபின்
வெந்த பருப்பைக் கலக்கிக் கொட்டி கொதிக்க விடவும்.
மிளகாய் கடுகு, வெந்தயம் பெருங்காயத்தை எண்ணெயில்
பொரித்துக் , கொட்டி 1டீஸ்பூன் அரிசி மாவைச் சிறிது ஜலத்தில்
கரைத்துவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
இது கிராமங்களில் கிடைக்கும் சாதாரணமான நாட்டு மாம்பழத்தில்
செய்வது வழக்கம். சாம்பார் ருசியாக இருக்கும். பழம் ருசியாக
இருக்காது.
கிளிமூக்கு மாம் பழத்தில் [ஒட்டு மாம்பழம்] செய்தால் புளியை
குறைத்து சேர்த்து பழத்தைத் துண்டுகளாக வெட்டிக் கலந்து
உப்புகாரம் சேர்த்து கொதிக்கவிட்டு ,வெந்த பருப்பைச் சேர்த்து
தாளித்துக் கொட்டலாம்.
1 டீஸ்பூன் தனியாவையும், சிறிது தேங்காயையும் வறுத்துஅறைத்து
சேர்த்தால் ருசி கூடும்.
சற்று புளிப்பும், இனிப்புமான குழம்பு இது.
மாம்பழ மணத்துடன் ருசியாக இருக்கும். கொத்தமல்லி
கறி வேப்பிலை சேர்த்து மணத்தை அதிகப் படுத்தலாம்.
காய்கறி ஸாகு
இதுவும் ஒருவிதக் காய்கறிக் கலவையின் கூட்டே.
சுலபமாகவும் செய்யலாம்.
வேண்டியவைகள்.
உருளைக் கிழங்கு ——2 தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
கேரட்—-2
பச்சைப் பட்டாணி—அரைகப்
பொடியாக நறுக்கிய—பீன்ஸ், கோஸ் தலாஅரைகப்
காப்ஸிகம்—-2 .துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நூல்கோல், காலிப்லவரும் சேர்க்கலாம்.
தாளிக்க நறுக்கிய வெங்காயம் ஒன்று
எண்ணெய்—1 ‘ டேபிள் ஸ்பூன்ஸ்பூன், கடுகு—அரைடீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு—-1 டீஸ்பூன் லவங்கப் பட்டை சிறிது
பெருங்காயப்பொடி–அரை டீஸ்பூன்
தேவைக்கு—-உப்பு.- மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
அரைப்பதற்கு—–3 பச்சை மிளகாய்
பொட்டுக் கடலை[உடைத்தது]—–2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய்— அரைகப்
மிளகு-அரை டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
தனியா–2 டீஸ்பூன்.
மேலே தூவ
நெய் சிறிது, முந்திரி 5, 6 .
பச்சைக் கொத்தமல்லி —சிறிது
செய்முறை—-நறுக்கிய காய்களை அலம்பி வடிக்கட்டவும்.
அரைக்கக் கொடுத்திருப்பவற்றை மிக்ஸியிலிட்டு சிறிது
ஜலம் சேர்த்து நனறாக அறைத்தெடுக்கவும்.
வாணலியி்ல் எண்ணெயில் கடுகு,பருப்பு,காயம் தாளித்து
வெங்காயத்தை நன்றாக வதக்கி காய்கறிகளையும் சேர்த்து
சிறிது வதக்கி திட்டமாக ஜலம் சேர்த்து வேக வைக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும். நிதான தீயில் காய்கள்
வெந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து
கொதிக்க வைத்து இறக்கி ,ஒடித்த முந்திரியை நெய்யில்
வறுத்துச் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி
உபயோகிக்கவும்.
தோசை, ரொட்டி,பூரி என எல்லாவற்றுடனும் சேர்த்து
சாப்பிடலாம்.
மற்ற காய்களும் சேர்க்கும் போது தக்காளியும் சேர்க்கலாம்.
பச்சை மாங்காய்த் துவையல்.
சுலபமாகத் தயாரிக்கலாம். கிரீன் சட்னி, ரெட்சட்னி, ஒயிட்
சட்னி வகையில் இது கிரீன்சட்னி.
வேண்டியவைகள்
திட்டமான மாங்காய்—1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய்—3 நறுக்கிக் கொள்ளவும்.
புதினா இலைகள்—–2 கப்
பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது 1கப்
வெங்காயம்—- 1
தேங்காய்த் துருவல்—-கால்கப்
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு—உப்பு
செய்முறை–குறிப்பிட்டிருக்கும் யாவற்றையும் மிக்ஸியில்
இட்டு ஜலம் விடாமல் கெட்டியாக அறைத்து எடுக்கவும்.
உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
ருசியான சட்னியை வேண்டிய அளவு தளர்த்திக்கொண்டு
போண்டா, பஜ்ஜி, பகோடாக்களுடனும், கெட்டியாக தோசை,
ரொட்டி, பூரி வகைகளுடனும் உண்ணலாம். பிரிஜ்ஜில் வைத்து
2—3 நாட்சள் உபயோகிக்கலாம். ஸாண்ட்விச்சிற்கும் ஏற்றது.
தக்காளித் தொக்கு
வேண்டியவைகள்
நல்ல கெட்டியான தக்காளிப் பழம்——-1 கிலோ
காய்ந்த புளி—1 பெரிய எலுமிச்சை அளவு
இஞ்சி—-100 கிராம்
பொடிக்க
வற்றல் மிளகாய்—-15
கடுகு——2டீஸ்பூன்
வெந்தயம்—-1டீஸ்பூன்
சீரகம்—-2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—3 டீஸ்பூன்
தாளிக்க [வதக்க]—-நல்லெண்ணெய் அரைகப்
ருசிக்கு—-உப்பு
செய்முறை —-அகன்ற ஸ்டீல் பாத்திரத்தில் சுத்தம் செய்த
தக்காளியைப் போட்டு, அதன்மேல் பழங்கள் அமிழும்படி
வேரொரு பாத்திரத்தில் கொதிக்க வைத்தத் தண்ணீரைவிட்டு
மூடி வைக்கவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில், சிவக்க வறுக்கவும.
கடுகு, சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுக்கவும்.
நிதான தீயில் அரை ஸ்பூன் உப்புப் பொடியுடன் மிளகாயையும்
கறுகாமல் வறுத்தெடுக்கவும்.
மிளகாயைத் தனியாகவும், கடுகு,வெந்தயம், சீரகத்தைத்
தனியாகவும். பொடித்துக் கொள்ளவும்.
தண்ணீர் ஆறியவுடன் நீரை வடித்துவிடவும்.
தக்காளியின் தோல் உறிக்க வரும். ஒவ்வொரு தக்காளியாக
எடுத்துத் தோலை உறிக்கவும்.
இஞ்சியைத் தோல் நீக்கிப் .பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, இஞ்சியுடன் புளியையும் பிய்த்துப் போட்டு மிக்ஸியில்
தண்ணீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.
அடி அகலமான நான் ஸ்டிக் வாணலியில் பாதி எண்ணெயைக்
காயவைத்துச் சிறிது கடுகைத் தாளித்து அறைத்த விழுதைக்
கொட்டிக் கிளறவும்.
குறைந்த தீயில் அடிக்கடி கிளறி மூடவும்.
மிகுதி எண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும் போது உப்பு,
மஞ்சள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்
சுருளக் கிளறி, கீழ் இறக்கி மிளகாய்,கடுகு சீரக வெந்தயப்
பொடிகளைச் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் போதாவிட்டால்
கிளறும் போதே சற்று அதிகம் சேர்க்கவும். ஆறியபின் பிரிஜ்ஜில்
வைத்து உபயோகிக்கவும். வெய்யில் காலம். எண்ணெய் பிறிந்து
வருமளவிற்கு கெட்டியாக பொருமையாகக் கிளறவும்.
காற்றுப் புகாத பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
ஜவ்வரிசி வடை
வேண்டியவைகள் ஜவ்வரிசி—–1கப் வேர்க்கடலை—முக்கால் கப் தயிர்—1கப் திட்டமான சைஸ்—-உருளைக் கிழங்கு 1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 நறுக்கிய கொத்தமல்லித் தழை கால்கப் மிளகுப் பொடி–அரை டீஸ்பூன் சீரகம்—அரை டீஸ்பூன் தேவைக்கு–உப்பு பொரிப்பதற்கு வேண்டிய- எண்ணெய் செய்முறை——ஜவ்வரிசியைக் களைந்து இறுத்து தயிரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வேர்க்கடலையை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஊறின ஜவ்வரிசியை அழுத்திப் பிழிந்தெடுக்கவும். வேர்க் கடலைத் தூள், […]
மாங்காய்ப் பிசறல்
இது மிகவும் சுலபமானது.
வேண்டியவைகள்.
புளிப்பில்லாத பிஞ்சு மாங்காய் 2
பச்சை மிளகாய் —சின்னதாக 1
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு—உப்பு
தாளித்துக் கொட்ட 1 டீஸ்பூன் எண்ணெய்
துளி கடுகு, பெருங்காயப் பொடி சிறிது
செய்முறை-—–மாங்காயை உள்ப் பருப்பு நீக்கி பொடிப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கி
மாங்காயுடன் உப்பு சேர்த்துக் கலக்கி , கடுகு, பெருங்காயத்தைத்
தாளித்துக் கொட்டி உபயோகிக்கவும்.
எல்லாச் சாப்பாட்டுடனும் உடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
ஒரு கேரட்டைச் சீவி பொடியாக நறுக்கியும் கலக்கலாம்.
நூல்கோல் புளிக்கூட்டு
வேண்டியவைகள்—-3திட்டமான நூல்கோல். தோல் நீக்கி ஒரே
மாதிரி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தனியா—-1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
வற்றல் மிளகாய்—3
மிளகு—1 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
தேங்காய்த் துருவல்—-அரைகப்
வேகவைக்கத் துவரம் பருப்பு—-முக்கால் கப்
தாளிக்க எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
புளி—1 சின்ன எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் 1
கடுகு, கறிவேப்பிலை, பச்சைக் கொத்தமல்லி
செய்முறை—-புளியை சுடு நீரில் ஊறவைத்து கறைத்துக்
கொள்ளவும். 2 கப் அளவிற்கு.
பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து திட்டமான
ஜலத்துடன் ப்ரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
தனியா,மிளகு,மிளகாய் பருப்புகளை எண்ணெயில் சிவக்க
வறுத்து எடுக்கவும்.
தேங்காயையும், லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்தவைகளை மிக்ஸியிலிட்டு சிறி்து தண்ணீர் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய
நூல்கோல் துண்டுகளை அலம்பிப் போட்டு வதக்கி
நறுக்கிய தக்காளியையும் சேர்த்து திட்டமாகத் தண்ணீர்
விட்டு வேக வைக்கவும். காய் வெந்ததும், புளித் தணணீர்,..
உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
புளி வாஸனை போனவுடன் வெந்த பருப்பு,அரைத்த
கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, கொத்த
மல்லி, கறிவேப்பிலை சேர்த்து உபயோகிக்கவும்.
வெள்ளைப் பூசணிக்காய், சௌசௌ, முதலானவைகளிலும்
செய்யலாம்.
வேண்டியவர்கள் சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும்
வதக்கி அரைக்கும் சாமான்களுடன் சேர்த்து அரைத்துக் கலந்தும்
உபயோகிக்கலாம்.
பருப்பு வேகும் போதே ஒருபிடி வேர்க்கடலை சேர்த்து
வேகவைத்தும் சேர்க்கலாம்.
கூட்டு என்பதால் ஜலம் எல்லாவற்றிலும் அளவாகச்
சேர்க்கவும்.
