தயிர் வடை.
வேண்டியவைகள்
உளுத்தம் பருப்பு——1 கப்
துவரம் பருப்பு—-கால்கப்
புளிப்பில்லாத கெட்டித் தயிர்——-3 கப்
வடை பொறித்தெடுக்க வேண்டிய எண்ணெய்
பச்சைமிளகாய்—–7
இஞ்சி——ஒரு அங்குலத் துண்டு
வேண்டிய உப்பு
சீரகம்—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–1 கப்
பெருங்காயம்—-அரை டீஸ்பூன
கடுகு——1 டீஸ்பூன்
துருவிய கேரட்——அரைகப்
இலையாகக் கிள்ளிய கொத்தமல்லி—-கால்கப்
சின்ன சைஸ் தக்காளிப் பழம்—-3. பிரிஜ்ஜில் வைத்தெடுத்து ஸ்லைஸ் செய்யவும்.
செய்முறை
பருப்புகளைக் களைந்து 2, 3, மணிநேரம் ஊற வைத்து வடிக்கட்டி மிக்ஸியிலோ,
கிரைண்டரிலோ தண்ணீர் விடாமல் கெட்டியாக நன்றாக அரைக்கவும்
அரைஸ்பூன் உப்பு,பெருங்காயம் ஒரு மிளகாய் அரைக்கும் போது போட்டால் போதும்.
தேங்காயையும், மீதி மிளகாய்,சீரகத்தை அரைடீஸ்பூன் ஊறின அரிசியுடன்
இஞ்சி சேர்த்து மிக்ஸியிலிட்டு பூப்போல மென்மையாக அரைத்தெடுக்கவும்.
தயிரைக் கடைந்து , அறைத்த தேங்காய்க் கலவையைக் கலந்து
திட்டமாக உப்பு சேர்த்து பிரிஜ்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அரைத்த மாவை
அதிகம் ஊற விடாமல் திட்டமான வடைகளாகத் தட்டி
வேகவைத்து எடுக்கவும்
கையில் ஜலத்தைத் தொட்டு இலையிலோ, பாலிதீன் கவரின் மேலோ
வடையைத் தயாரிக்கலாம்.
ஒவ்வொரு முறையும் எடுக்கும் வடைகளை ,வெது வெதுப்பான,
தண்ணீரில் 2 நிமிஷம் போட்டு சற்றே பிழிந்தாற்போல அகலமான
தாம்பாளத்தில் வைக்கவும். தண்ணீரை அடிக்கடி மாற்றவும்.
பூரா வடைகள் தயாரானவுடன் தயிரை வெளியிலெடுத்து தாளிக்கவும்.
|ஒவ்வொரு வடையாக த் தயிரில் நன்றாகமுக்கி எடுத்துவேறொரு
குழிவான தாம்பாளத்தில் இடைவெளி விட்டுப் வடைகளைப் பரத்தி
வைக்கவும். மேலாகத் தயிர்க் கலவையை லேசாக விடவும்.
ஒவ்வொரு வடையின் மீதும் சிறிது கேரட் துருவல், அதன்
மீது மெல்லிய தக்காளி ஸ்லைஸ், மேலாகத் பச்சைக் கொத்தமல்லித்
தழை என கலர்க் கலராக அலங்கரிக்கவும்.
மிகுதியுள்ளத் தயிரை கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு வைத்து
வேண்டியவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
மாவைத் தண்ணீர் அதிகம் சேர்க்காது அறைக்க வேண்டும்.
காரம் அதிகம் வேண்டுமாயின் சேர்த்துக் கொள்ளவும்
சின்ன ப்ளேட்டில் வடையை வைத்து தயிர்க் கலவையைச்
சேர்த்துக் கொடுக்கவும்.
அதிகம் தயிர் வேண்டுமானால் கலந்து கொள்ளவும்.
தயிர் வடை ரெடி.
மசித்த உருளைக் கிழங்கு.
இதென்ன பிரமாதமான சமையல் குறிப்பா? என்றுதான் தோன்றும்.
அப்படியே மசித்து நாம் உபயோகிக்கிரோமா? எனக்குத் தோன்றியது.
எழுதலாம் என்று. அவ்வளவுதான்
வேண்டியவைகள்.
4 ,அல்லது 5 உருளைக் கிழங்குகள்
மிளகுப்பொடி—–அரை டீஸ்பூன்
ருசிக்கு–உப்பு
வெண்ணெய்—2 அல்லது 3 டீஸ்பூன்
கால் டீஸ்பூன்—-மஞ்சள் பொடி.
செய்முறை——உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்து
தோல் உறித்து சூடாக இருக்கும் போதே நன்றாக மசிக்கவும்.
இதற்குக் கூட கரண்டி இருக்கிரது.
மசித்த கிழங்கில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகுப்பொடி வெண்ணெய்
சேர்த்துப் பிசையவும். ஒரு ஸ்பூன் பால்கூட சேர்க்கலாம்.
இதுவும் ஒரு நல்ல ருசிதான். மாஷ் பொடேடோ.
வாழைக்காய்ப் பொடி.
வேண்டியவைகள்
முற்றிய வாழைக்காய்——2
கடலைப் பருப்பு—-2டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
தனியா–1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல்—-3
எண்ணெய்—1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி—-அரை டீஸ்பூன்
புளி—நெல்லிக்காயளவு
ருசிக்கு—–உப்பு
செய்முறை——-வாழைக்காயை லேசாக எண்ணெய் தடவி
தீயில் ,எல்லா பாகமும் படும்படி திருப்பிச்,சுடவும்
மைக்ரோ வேவில் வைத்தும் சுடலாம்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பருப்புவகைகளையும்,
மிளகாயையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
சுட்ட வாழைக் காயின் தோலை உறித்தெடுக்கவும்.
ஆறிய பருப்பு மிளகாயை மிக்ஸியிலிட்டு நறநற என்ற,
ரவை போன்ற பதத்தில் பொடிக்கவும்.புளியைப் பிரித்துப்போட்டு
ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
பொடியை எடுத்துவிட்டு வாழைக்காயை
உதிர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஒருமுறை
சுழலவிட்டு அரைத்த பொடியையும் சேர்த்துக் கலந்து எடுக்கவும்.
வாழைக்காய்ப் பொடி தயார்.
சாதத்தில் கலந்தும், சாப்பிடலாம். மோர்க் குழம்பு, பச்சடி வகைகள்
இதற்குத் தகுந்த ஜோடியாகும்.
காரம் வகைகள் அவரவர்கள் ருசிக்குத் தக்கவாறு கூட்டிக்
குறைக்கலாம்.
தாளகம்
இது ஒரு கலந்த ருசிக் குழம்பு
வேண்டியவைகள்.—–பூசணி, பறங்கி, சௌசௌ முதலான
காய்களிலும், சேப்பங் கிழங்கு, வெள்ளிக் கிழங்கு முதலான
கிழங்கு வகைகளிலும், சேர்த்தும், தனித்தும் விருப்பம்
போலச் செய்யலாம்.
பச்சைப் பட்டாணி, மொச்சைப்பருப்பு சேர்க்கலாம்.
காயைத் தோல் நீக்கிச் சற்றுப் பெரிய துண்டங்களாக
நறுக்கிக் கொள்ளவும்
கிழங்குகளானால் வேக வைத்துத் தோல் உறித்துக்
கொள்ளவும், கால் கிலோ அளவிற்குஇருக்கலாம்
புளி—-1 எலுமிச்சை அளவு. ஊற வைக்கவும்.
கறி வேப்பிலை—-உறுவியது-அரைகப் அளவு
உளுத்தம் பருப்பு—-ஒன்றறை டீஸ்பூன்
அரிசி—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்–4
வெல்லம்—-1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–1 மூடி துருவியது
தாளிக்க—எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்.
சிறிது மஞ்சள் பொடி. ருசிக்கு உப்பு
செய்முறை—-காய்களைக் கலந்து செய்வதானால் மொத்தமாக
கால் கிலோவிற்கு அதிகமாகவே இருக்கட்டும். காய்களைச்
சிறிது வேகவிட்டு ,வேக வைத்த கிழங்குத் துண்டங்களையும்
சேர்த்து, புளியைக் மூன்று கப் அளவிற்கு ஜலம் சேர்த்துக்
கரைத்துச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள், வெல்லம் போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும்
முதலிலேயே வெறும் வாணலியில் தனித் தனியாக
உளுத்தம் பருப்பு, மிளகாய் ,அரிசியை சிவக்க வறுத்துக்
கொள்ளவும்.
தேங்காய், கறிவேப்பிலையையும்சற்று வறுத்து யாவற்றையும்
ஆறின பின் மிக்ஸியிலிட்டு நன்றாக, திட்டமாக ஜலம்
விட்டு அரைக்கவும்.
இவ்வாறு அறைத்த விழுதைக் கரைத்து, புளி வாஸனை
போகக் கொதித்த கலவையில் கொட்டி ஒரு கொதி விட்டு
இறக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.
புளிப்பு, இனிப்பு, காரம் கலந்த ஒரு தனிச் சுவை.
பருப்புப் பொடி, பொரித்த துவையல் சாதங்களுக்கு ஏற்ற
ஒரு சக ஜோடி. மிகவும் சுலபமாகச் செய்ய முடியும்.
பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.
தக்காளிப்பழ கொத்ஸு.
வேண்டியவைகள்
பொடியாக நறுக்கிய தக்காளிப்பழம்–4 கப்
நறுக்கிய சாம்பார் வெங்காயம்—1கப்
பச்சை மிளகாய்—-2 நறுக்கிக் கொள்ளவும்….
ரஸப்பொடி அல்லது கறிப் பொடி—1 டீஸ்பூன்
தாளிக்க—-எண்ணெய் —-3 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைப் பருப்பு ஒவ்வொரு டீஸ்பூன்
ஒரு கோலியளவு—புளி
ருசிக்கு உப்பு , துளி வெல்லம்
ஒரு டீஸ்பூன்—அரிசி மாவு.
செய்முறை—–புளியை ஊற வைத்து ஒரு கப் ஜலத்தில்
கரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி
கடுகு, பருப்பு வகைகளைத் தாளித்து வெங்காயம், பச்சை-
-மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம்
வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி புளித்
தண்ணீரைச் சேர்க்கவும். உப்பு, வெல்லம், பொடி சேர்த்து
கொதிக்க விடவும். நன்றாக வெந்தவுடன் அரிசி மாவில்
ஒரு கரண்டி ஜலம் சேர்த்துக் கரைத்து விடவும்.கொத்ஸு
கெட்டியாக இருந்தால் கொதிக்கும் போதே, மாவு கரைத்து
விடுவதற்கு முன்பே வேண்டிய அளவு தண்ணீர் சேர்க்கவும்.
கத்தரிக்காய், பரங்கிக்காய், கேரட் ,இஞ்சிமுதலானதும் சிறியதாக
நறுக்கி வதக்கும் போது சேர்க்கலாம். காரம் புளிப்பு முதலானது
அதிகம் செய்யும்படியிருக்கும். பொங்கல், இட்லியுடன் ஜோடி
சேரும்.கொத்ஸு தயார்.கறிவேப்பிலை மறக்காமல் சேர்க்கவும்.
தனியாப் பொடி, மிளகாய்ப் பொடி, ரஸப் பொடிக்குப் பதிலாகவும்
சேர்க்கலாம்.
பாகற்காய் வறுவல்.
வேண்டியவைகள்-
-4 அல்லது5 பாகற்காய்களை நறுக்கி விதைகளை நீக்கி
மெல்லியத் துண்டங்களாகச் செய்துகொள்ளவும்.
.அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துப் பிசறி ஊற விடவும்.
மற்றும்
மஞ்சள் பொடி– அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி—1 டீஸ்பூன்
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கடலைமாவு—கால்கப்
அரிசி மாவு —1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி—-1 டேபிள் ஸ்பூன்
உப்பு—ருசிக்கு
பெருங்காயப் பொடி—-அரை டீஸ்பூன்
மாவில் கலக்க—1 ஸ்பூன் நெய்
வறுவல் வறுப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை
பாகற்காயை கசக்கினாற் போல ஒட்டப் பிழிந்து எடுக்கவும்.
சிறிது உப்பு, காரம், நெய் புளிப்பு,இனிப்பு யாவற்றையும்,
கலந்து மேலாக மாவுகளைத் தூவி உதிர் உதிராகப்
பிசறவும்.
எண்ணெயைக் காயவைத்து உதிர்த்த மாதிரி தளர்களைப்
போட்டு முறுகலாக வறுத்தெடுத்து உபயோகிக்கவும்.
அரிசி மாவிற்குப் பதில் ஓட்ஸ் கலந்தும் உபயோகிக்கலாம்.
காற்று புகாதபடி டப்பாக்களில் வைத்து 4 அல்லது5 நாட்கள்
கூட வைத்து உபயோகிக்கலாம். பிசறலில் தண்ணீர் சேர்க்கக்
கூடாது.
மாங்காய்த் தொக்கு.
வேண்டியவைகள்
.சற்று புளிப்பான மாங்காயைத் தோல் சீவித் துருவிய
மாங்காய்த் துருவல்—-4கப்
மிளகாய்ப் பொடி—-5 டீஸ்பூன்
வறுத்தரைத்த வெந்தயப் பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்—-7 டேபிள் ஸ்பூன்-
-வற்றல் மிளகாய் 2 —-கடுகு 1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
நான்ஸ்டிக் பேன் அல்லது அலுமினிய வாணலியில்எண்ணெயைக்
காய வைத்து கடுகு தாளித்து, மிளகாயை சிவக்க வறுத்துக்
கொண்டு மாங்காய்த் துருவலைச் சேர்த்து நிதான தீயில் வதக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி சேர்த்து சுருள வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து மாங்காய்சுருண்டு வரும் போது காரப்பொடி
வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி உடனே
இறக்கவும். ஆறியவுடன் பாட்டிலில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.
இதுவும் எல்லாவற்றிற்கும் உறு துணையாக இருக்கும்.
அதிகம் போலத் தோன்றினால் பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
மாங்காயின் புளிப்பிற்கு தக்கவாறு உப்பு காரம் கூட்டிக் குறைக்கவும்.
மிளகாய்த் தொக்கு.
வேண்டியவைகள்
பச்சை மிளகாய்—–100 கிராம்
புளி—-ஒரு எலுமிச்சையளவு
எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்
கடுகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
உப்பு—-தேவையான அளவு
வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து
வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்
கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.
மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.
ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட
தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச்
சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்
கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,
உபயோகிக்கவும் .சாப்பாடு டிபன் வகைகளுடன் உற்ற
ஜோடியாக இருக்கும்.
பத்திய தோசை.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி——ஒன்றறை கப்
வெந்தயம்—–2 டீஸ்பூன்
துவரம்பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு–அரைகப்
தாளிக்க—-கடுகு, மிளகு அரை டீஸ்பூன்
சீரகம், பெருங்காயம்—-சிறிதளவு.
ருசிக்கு உப்பு
தோசை செய்ய நல்லெண்ணெய்
செய்முறை————–அரிசி ,பருப்புகள், வெந்தயத்தை நன்றாகக்
களைந்து தண்ணீரில் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு குறைந்த
அளவு ஜலம் சேர்த்து நன்றாக அறைத்து உப்பு சேர்த்து எடுக்கவும்.
மாலையில் அரைத்தால் காலையில் செய்ய சரியாக இருக்கும்.
புளித்து விடும் எனறு தோன்றினால் பாதி மாவை பிரிஜ்ஜில்
வைத்தெடுத்து கலந்து உபயோகிக்கலாம்.
கடுகைத் தாளித்து, மிளகு சீரகத்தைத் தட்டிப் போட்டு சற்று
கெட்டியாகவே மாவை உபயோகிக்கலாம்.
குழிவான தோசைக் கல்லிலோ, நான் ஸ்டிக் பேனிலோ
எண்ணெய் தடவி தோசையைக் கனமாகப் பரப்பி சுற்றிலும்
எண்ணெய் விட்டு மிதமான தீயில் திட்டமான மூடி ஒன்றினால்
மூடி வேக விடவும்.
2 நிமிஷ இடை வெளியில் மூடியைத் திறக்கவும். தோசை அடி
சிவந்து வெந்திருக்கும். சற்று நிதானித்து தோசையைத் திருப்பிப்
போட்டு துளி எண்ணெய் விட்டு முருகலான பதத்தில் எடுக்கவும்.
மிளகாய்ப்பொடி, சட்னிகளுடன் ருசியாக இருக்கும்.
எண்ணெய் குறைவாக விட்டால் பத்திய தோசைதான்.
மெல்லியதாகவும் வார்க்கலாம்.
இனிப்பு கார பஜ்ஜி.
புளிப்பு கார பஜ்ஜி என்று கூடச் சொல்லலாம். செய்து ருசித்தால்தான்
அபிப்பிராயம் சொல்ல முடியும் இல்லையா.
வேண்டியவைகள்—–மைதா, கடலைமாவு, அரிசி மாவு எல்லாமாகக்
கலந்து 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை—-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் —-1 பொடித்துக் கொள்ளவும்.
பெரு்ஞ் சீரகம்—அரை டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—முக்கால் டீஸ்பூன்
ருசிக்குச் சற்று குறைவாகவே உப்பு
மாவில் கலக்க—2 டீஸ்பூன் நெய்
பொரிப்பதற்கு எண்ணெய்
தோய்த்துப் போட உபயோகிக்கத் தக்கவைகள்
பழுத்தும், பழுக்காததுமான தக்காளிக் காய், ஆப்பிள், பீட்ரூட், கேரட்
பறங்கிக் காய், வெங்காயம், வெள்ளிக் கிழங்கு.
செய்முறை——மாவுடன் உப்பு, காரம், இனிப்பு, நெய்,ஏலம், சீரகம்,
எல்லாவற்றையும் கலந்து திட்டமாக ஜலம் சேர்த்து இட்டிலி
மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிடித்தமானவற்றை மெல்லிய வில்லைகளாக நறுக்கி மாவில்
தோய்த்து , வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பதமான
சூட்டில் பொரித்து எடுக்கவும். வயதானவர்கள், சின்னவர்கள்
விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு ருசி மாறுதலுக்கு உகந்தது.
இனிப்பு கூட்டிக் குறைக்கலாம்.ருசித்துப் பாருங்கள்.
