புழுங்கலரிசி சேவை
மே 3, 2011 at 8:15 முப 22 பின்னூட்டங்கள்
சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம்
தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம்.
இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக்
கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம்,
தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.
இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது.
நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்
புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி—3கப். இட்டிலிக்கு உபயோகிக்கும் அ ரிசி
இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் — சேவை நாழி
அரிசியைக் களைந்து நன்றாக ஊறவைக்கவும்.
செய்முறை-
கிரைண்டரில் , ஊறிய அரிசியை ப் போட்டு அதிகம் ஜலம் விடாமல்
கெட்டியாகவும், நைஸாகவும் அரைத்தெடுக்கவும்.
இட்டிலி வார்ப்பது போல குழித்தட்டுகளில் எண்ணெய் தடவி மாவை
விட்டு ரெடி செய்யவும்.
சேவை நாழியில் உட்புறம் லேசாக எண்ணெய் தடவி வைக்கவும்.
குக்கரில் அளவாக தண்ணீர்விட்டு இட்டிலி ஸ்டேண்டை வைத்து,
வெயிட் போட்டு இரண்டு விஸில் வரும் வரை மிதமான தீயில்
இட்டிலிகளாக வார்க்கவும்.
சாதாரண இட்டிலி வார்க்க வெயிட் போட மாட்டோம்.
நீராவி அடங்கிய பின் இட்டிலிகளை ஒன்றன் பின் ஒன்றாக
எடுத்து அச்சில் போட்டு அழுத்தி சேவைகளாகப் பிழிந்து
எடுக்கவும். சூட்டுடன் பிழியவும்.
திருகு முறையிலும், ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்
சேவை நாழிகள் கிடைக்கின்றன.
ப்ளெய்ன் சேவை ரெடி.
இதனுடன் குருமா சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் சாதத்திற்கு தயாரிப்பது போல தாளிதம் செய்து
தேங்காயை வறுத்து சேர்க்கலாம். இது தேங்காய் சேவை.
எலுமிச்சை சாற்றில் தாளித்துக் கலக்கலாம். இது எலுமிச்சை
சேவை.
தயிரில் தாளித்து தயாரித்தால் தயிர் சேவை.
எள்ளில் தயாரித்தால் எள்ளு சேவை.
வெல்லப் பாகு சேர்த்து தயாரித்தால் வெல்ல சேவை.
மோர்க் குழம்பு, தேங்காய்ப் பாலுடனும், சாப்பிடும்
வழக்கம் உண்டு.
எல்லா காய் கறிகளுடனும், உப்பு சேர்த்து வதக்கி
ஸோயா ஸாஸ் கலந்தும் தயாரிக்கலாம்.
தக்காளியை உபயோகப் படுத்தலாம்.
குருமா தயாரித்து உடன் உபயோகிப்பதுதான் பிரபலமாக
உள்ளது.
நம்முடைய ரஸனைக்கு ஏற்றவாறு பலவிதங்கள்.
சுலபமாக மாவை அறைத்து முதல்நாளே பிரிஜ்ஜில்
வைத்துக் கொண்டு வேண்டும் போது தயாரித்து
உபயோகிக்கலாம்.
குருமா செய்முறை முன்பே இருக்கிறது.
சேவை படங்கள் சில.
எந்த விதமான ருசி வேண்டுமோ அந்த விதமான மேல் சாமான்கள்
கலவையைத் தயார் செய்து தக்கபடி ப்ளெயின் சேவையுடன்,
திட்டமாகக் கலந்தால் விருப்பமானது தயார்.
குருமா, தேங்காய்ப்பால், மோர்க்குழம்பு வகைகளை கிண்ணங்களில்
ஸ்பூனுடன் கொடுத்து ப்ளேட்டில் ப்ளெயின் சேவையைக் கொடுக்கவும்.
மற்ற வகைகளைக் கலந்த நிலையிலே சித்ரான்னங்கள் டைப்பில்
அழகாகக் கொடுக்கலாம்.
Entry filed under: டிபன் வகைகள்.
22 பின்னூட்டங்கள் Add your own
kamatchi.mahalingam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 2:43 பிப இல் மே 3, 2011
இது எங்க ஊர்ல சந்தகை-ன்னு சொல்லுவோம். சூப்பரா இருக்கு அம்மா!
நீங்க சொன்ன சைட் டிஷ்ல நாங்க வழக்கமா செய்வது தேங்காய்ப்பால் அல்லது லெமன்-தக்காளி சேர்த்து தாளிப்பது.
ஜெனிவா போய் சேர்ந்துட்டீங்களா? 🙂
2.
kamatchi.mahalingam | 4:02 பிப இல் மே 3, 2011
நன்றி மகி. மே முதல் தேதி ஜெனிவா வந்துவிட்டேன்.
சென்னையில் செய்து. ஜெனிவாவில் போஸ்ட் செய்திருக்கிரேன்.
சந்தகை என்ற பெயர் அழகாக இருக்கிறது..முன்பே தெறியாது போய்விட்டது. இந்தப் பெயரை அடுத்த ஸந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்தலாம் இல்லையா. வெஜிடபிள் சந்தகை. அழகாக ச் செய்யலாம்.
3.
டி.எஸ்.ஜெயந்தி | 11:33 முப இல் மே 5, 2011
காமாட்சி மாமி நலமா?
சென்னை வந்திருந்தீர்களா?
தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாமே.
எங்க மாமியார் வீட்டில் அவர்கள் தஞ்சையில் இருந்த போது இந்த மாதிரி சேவை நாழியில் 15 – 20 பேருக்கு (எங்க குடும்பம் ரொம்ப பெரிசு) சேவை செய்வார்கள்.
என்ன இருந்தாலும் இந்த சேவை நாழியில தயாரிச்ச சேவை மாதிரி ரெடிமேட் சேவையெல்லாம் மெத்துன்னு டேஸ்டா இருக்கவே இருக்காது.
உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நோய் நொடி இல்லாத உடலையும் கொடுக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி
அன்புடன்
ஜெயந்தி
4.
chollukireen | 4:15 பிப இல் மே 7, 2011
சென்னையில் 4,5 நாட்களே தங்கினபடியால் எங்குமே போகவோ, பார்க்கவோ முடியாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் போனிலாவது பேசியிருக்கலாம். இதைப்பற்றி ஒரு பதிவே போடலாம். இப்போது இப்படிதான் நினைக்கவேண்டியுள்ளது. மன்னிக்கவும்.
இந்த சேவையைப் பற்றியும் ஒரு பதிவு போடுமளவிற்கு
அனுபவங்கள் நீளும். உங்கள் அனுபவமும் அப்படித்தானிருக்கும். தொடர்ந்து இப்படியாவது என்னை சந்தித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. நானும் உங்கள் மலரும் நினைவுகளில் பங்கு கொள்கிறேன். தொடருவோம். மிக்க நன்றி.
5.
Praba | 12:51 பிப இல் மே 6, 2011
உங்கள் வலைதளத்திற்கு இன்று தான் பாக்கிறேன்.
என்னை போல் சமையல் தெரியாதவர்களுக்கும் தெளிவாக புரியும் படி எழுதி இருக்கீங்க
கண்டிப்பா நீங்க குடுத்து இருக்குற ரேசிபெஸ் செய்து பார்த்துட்டு எழுதுகிறேன் பாட்டிமா
இப்படிக்கு உங்கள்
பேத்தி
6.
chollukireen | 1:56 பிப இல் மே 7, 2011
ரொம்ப ஸந்தோஷம்மா. பெரியவங்க மனஸு குஷியாகும்படி கமென்ட் நன்றாக எழுதியிருக்கே. பழகப்,பழக எல்லாமே கைவந்த கலையாகிவிடும். பாட்டிக்கு இன்னொரு பேத்தி எழுதியுள்ளதைப் பார்த்தாயா. தொடர்ந்து எழுது . அன்புடன் பாட்டி
7.
Praba | 5:54 முப இல் மே 9, 2011
பாட்டிமா,
நானும் என் தங்கையும் வேலை நிமித்தமாக பெங்களூர் வீடு எடுத்து தங்கி உள்ளோம்.
இருவருமே கணினி துறையில் இருப்பதால் வார நாட்களில் சமைப்பது என்பது ஹிமாலய சாதனையாக உள்ளது .
எங்களை போல் தனியாக இருக்கும் பெண்களுக்கு ஈசி & சத்தான உணவு வகைகளை எழுதினால்
மிகவும் உதவியாக இருக்கும் ..
அன்புடன் உங்கள் பேத்தி
8.
chollukireen | 9:26 முப இல் மே 12, 2011
பெண்களா நீங்கள் தங்கியிருக்கும் வீட்டில் என்ன வசதிகள் இருக்கிறது.
உங்களிடம் என்ண சாமான்கள் அதாவது மைக்ரோவேவ். மிக்ஸி.காஸ் வகைகள் இருப்பதைப் பொருத்துதான் வேலைகளை சீக்கிரமாகவும்,சுலபமாகவும், முடிக்க முடியும். ஒரு ஈமெயில் அனுப்பு
தெறிந்ததைச் சொல்லுகிறேன்.. சமையல் சமைத்துத்தான் பழகணும்.
பிரமாதமில்லை..
9.
petunia | 8:57 பிப இல் செப்ரெம்பர் 19, 2014
Dear patti, Naan inda murayil idiyappam seidu paarthen. idu varai pala murai seiduvitten. miga nandraaga varugiradu. Ennidam ulla cookeril rice 4 whistle vaippen. idiyappathukku 3 whistle vaikkavendi ulladu. adu mattume naan inda recipe lendu matriyadu.
Thank you 🙂
10.
chollukireen | 11:32 முப இல் செப்ரெம்பர் 20, 2014
குக்கர்கள் வாங்கி அதிகம் உபயோகிமாகிவிடும்போது இப்படி விஸில்கள் அதற்கும் தேவையாக உள்ளது.
உன் பதில் பார்த்து மிக்க மகிழ்ச்சி. தமிழ் படிக்கத் தெரிந்த பெண்ணாக நீயாவது வந்திருக்கிராயே என்ற மகிழ்ச்சி
அதிகமாகிறது. இப்படி எப்பொழுதாகிலும் வந்துத் தலையைக் காட்டு. அன்புடன்
11.
Geetha Sambasivam | 7:52 முப இல் ஏப்ரல் 4, 2016
நானும் புழுங்கலரிசியில் சேவை செய்தாலும் கூடவே பச்சரிசியும் சேர்த்துப்பேன். சமீபத்தில் செய்து என்னோட பதிவில் படங்களோடு பதிவிட்டிருக்கேன். நீங்க வந்து பல நாட்கள் ஆகின்றபடியால் தெரிந்திருக்காது! 🙂 இம்முறையில் சேவை மிக நன்றாகவே வரும்.
12.
chollukireen | 11:41 முப இல் மார்ச் 28, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்று எதை மீள்ப் பதிவு செய்யலாமென்று யோசித்தேன். சேவை எழுதிப் பல வருஷங்கள் ஆகிறது.செய்து பாருங்கள் என்பதற்கு இது பரவாயில்லை.பாருங்கள். அன்புடன்
13.
ஸ்ரீராம் | 1:58 பிப இல் மார்ச் 28, 2022
திருகு முறையில் செய்யும் சேவையும் அம்மாவிடம் இருந்தது. அதற்கு முன் அமுக்கும் முளை செவி நாழியும் இருந்தது. அம்மா இட்லியை சூடாக எடுத்து உள்ளே இட்ட உடன் நான்தான் பிழிவேன். சுவாரஸ்யமான வேலை அப்போது அது எனக்கு. இப்போதெல்லாம் ரடிமேட் சேவை வந்து சுவாரஸ்யத்தையே கெடுக்கின்றன.
14.
நெல்லைத்தமிழன் | 10:31 முப இல் மார்ச் 29, 2022
சென்னையில் சேவை (ஒரு பர்டிகுலர் பிராண்ட், பல கடைகளில் கிடைக்கும். அவங்களே வெறும் சேவை 30 ரூ, தேங்காய், லெமென், புளி சேவை 35 ரூ என்றெல்லாம் பாக்கெட்டில் விற்றுக்கொண்டிருந்தார்கள். இப்போ 50 ரூபாய் ஆகியிருக்கும். அவங்களே மிபொடி தடவிய இட்லி, சப்பாத்தி, பிள்ளையார் கொழுக்கட்டை என்றெல்லாம் விற்பார்கள். அவங்க சேவை, கெட்டுப்போகக்கூடாது என்று நிறைய தேங்காய் எண்ணெய் கலந்திருப்பார்கள். வீட்டில் ஸேவை பண்ணுவது, ரொம்பவே நேரமெடுக்கும் வேலை.
சின்ன வயசுல டிபன் மேல் இருந்த சுவாரஸ்யம் இப்போ இல்லை. இப்போ எதுனாலும் உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது, ஆர்டர் செய்துவிட முடிகிறது.
15.
chollukireen | 11:48 முப இல் மார்ச் 30, 2022
எனக்கு தற்கால நிலை தெரியாது. உங்கள் பதில் ஸ்வாரஸ்யம் மிகுந்தது. மிக்க நன்றி. பல விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.அன்புடன்
16.
chollukireen | 11:25 முப இல் மார்ச் 30, 2022
உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான். அனுபவம் பேசுகிறது. மிகவும் நன்றி. அன்புடன்
17.
Geetha Sambasivam | 1:23 முப இல் மார்ச் 29, 2022
முன்னாலேயும் சொல்லி இருக்கேன். நானும் புழுங்கலரிசிச் சேவை தான் பண்ணுகிறேன். தேங்காய்ப் பால், குருமானு எல்லாம் தொட்டுக்கப் பண்ணுவதில்லை. தேங்காய்ச் சேவை, எலுமிச்சைச் சேவை, புளி சேவை/தயிர் சேவை என்று தான். வெல்லச் சேவையும் காய்கள் கலந்த சேவை, தக்காளிச் சேவை எல்லாம் குழந்தைகள் இருந்தால் பண்ணுவேன். இப்போ சேவை பண்ணியே வருஷங்கள் ஆகின்றன.
18.
chollukireen | 11:30 முப இல் மார்ச் 30, 2022
எங்காத்தில்,பின்பும் இப்படிதான் சேவைகள் உலா வந்தன. பின்நாளில்தான் குருமா முதலானது.இப்போதெல்லாம் ரெடிமேடிற்குத் தாவி விட்டனர்.நமக்குத் தெரிந்தது. பெண் இப்போதும் இப்படிதான் செய்கிறாள். நன்றி. அன்புடன்
19.
நெல்லைத்தமிழன் | 10:28 முப இல் மார்ச் 29, 2022
சேவை எனக்கு மிக மிகப் பிடித்த உணவு. நான் பஹ்ரைனில் 5 சேவை நாழிகள் வைத்திருந்தேன் (ஒருவேளை ஒன்று உடைந்துவிட்டால் என்றெல்லாம் நினைத்து). பிறகு 2016ல், அங்கேயே சேவை பாக்கெட் கிடைக்க ஆரம்பித்தது (நம்மூர் சேவை போல, கேரளா இடியாப்பம் அல்ல). அப்புறம் கிலோ சேவை 120 ரூபாய் விலையில் கிடைத்தது. நான் அதனை வாங்க ஆரம்பித்துவிட்டேன். பெங்களூரில் ஆரம்பத்தில் சேவை செய்துகொண்டிருந்தோம். பிறகு கிலோ சேவை 80 ரூ, பிறகு 90 ரூ என்று கிடைக்க ஆரம்பித்த பிறகு, கடந்த ஒரு வருடமாக வெளியில்தான் சேவை வாங்குகிறேன். வீட்டில் பண்ணச்சொல்வதில்லை (மாவு அரைப்பது, கிளறுவது, இட்லித் தட்டில் வேக வைப்பது வரை மனைவி வேலை, பிழிவது என் வேலை, பாத்திரம் அலம்புவது அவள் வேலை என்று சேவையில் வேலை அதிகம். எனக்கு மட்டும்தான் அது மிகவும் பிடித்தது என்பதால் இப்போ கடையில் வாங்குகிறேன்)
சேவையில் லெமென், வெறும்ன தாளித்தது, தேங்காய் சேவை இவைகள்தாம் எனக்குப் பிடிக்கும். புளிசேரி, பருப்புக் குழம்பு போன்றவையும் நன்றாக இருக்கும். நல்ல பதிவு… ஆசையைத் தூண்டும் பதிவு
20.
chollukireen | 11:43 முப இல் மார்ச் 30, 2022
தெரிந்த விஷயம்தான். ஆனால் கடையில் வாங்குகிறீர்கள். ருசியாகக் கிடைத்தால் ஸரிதான்.ஸ்வாரஸ்யமான பின்னூட்டம்.மிகவும் நன்றி அன்புடன்
21.
Jeyasree Devarajan | 3:56 பிப இல் மார்ச் 29, 2022
இதே போல்தான் நானும் செய்வேன். இட்லித் தட்டில் வைத்து குக்கரில் வைத்து வெயிட் போட மாட்டேன். பத்து நிமிடத்தில் வெந்து விடும். மற்றவை எல்லாம் நீங்கள் சொன்னது போல்தான்.
22.
chollukireen | 11:49 முப இல் மார்ச் 30, 2022
மிக்க நன்றி அன்புடன்