Archive for ஜூன், 2011
மட்ரி.
இது ஒரு வடஇந்திய வகை மைதாமாவின் தயாரிப்பு.
பார்க்கப்போனால் நம்முடைய தட்டை மாதிரிதான். பருப்புகள்
போடுவதில்லை. சற்று வித்தியாஸமான ருசி. கரகரப்பாகச்
செய்கிறார்கள். சிறிதளவு வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள்.
இது மேத்தி மட்ரி. அவசரத்திற்கு ஊறுகாயுடன்காலைடிபனில்கூட
மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான் கற்றுக்கொண்டேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்.
மைதாமாவு—-2 கப்
ஓமம்—2 டீஸ்பூன்
மாவுடன் சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
மட்ரி பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்
செய்முறை.
ஓமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாவைக் கொட்டி ஓமம், திட்டமான உப்பு
சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
மாவில் சிறிது சிறிதாக மேலே குறிப்பிட்ட 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், 1ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
புட்டுமாவுபோல , மாவைக் கையிலெடுத்துப் பிடித்தால் பிடிபட
வேண்டும்.
உதிர்த்தால்தான் உதிர வேண்டும். இம்மாதிரி பக்குவமாக கலக்கவும்.
செய்து பார்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக ஜலத்தைத் தெளித்து மிகவும்
கெட்டியான மாவாக நன்றாகப் பிசைந்து கொள்ளவும்..
அழுத்தமாகப் பிசைந்த மாவைத் திரட்டி பாதி மாவைச் சிறிய
உருண்டைகளாக உருட்டி அப்பளக் குழவியினால் சிறிய கனமான
வட்டங்களாகச் செய்து கொள்ளவும்.
போர்க்கினால் வில்லைகளின் மேல் குத்தி துளைகளிடவும்.
மீதிமாவைக் கனமான அப்பளாமாக இட்டு போர்க்கினால் குத்தி
கத்தியினால் துக்கடாக்களாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஜாஸ்தி புகையவிடாமல்
நிதானமான சூட்டில் இவைகளைக் கொஞ்சம், கொஞ்சமாகப்போட்டு
கிளறிவிட்டு பொறித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில்ஆறவிடவும்.
கரகரப்பான மட்ரி தயார்.
மாவு அழுத்தி இடும்படியான கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைய
வேண்டும். இது நன்றாக ஞாபகம் வைக்க வேண்டும்.
பெரிய அளவில் சற்றுப் பெரியதாகச் செய்து வைத்துக்கொண்டு
டிபனில் ஒரு அயிட்டமாக உபயோகிப்பார்களென நினைக்கிறேன்.
இதையே ஒருகப் மைதாவுடன் 1 டேபிள்ஸ்பூன் கடலைமாவு,துளி
மிளகாய்ப்பொடி, 1டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெந்தயக்கீரை,
எண்ணெயும்,நெய்யுமாக 2டேபிள்ஸ்பூன், உப்பு,ஜீரகப்பொடி சேர்த்து
ஸாதா மட்ரி செய்யும் முறையிலேயே மேதி மட்ரியும் செய்யலாம்.
.
பாலக்கீரை மசியல்
இதுவும் ஸாதாரண கீரை மசியல் போல்தான். கொஞ்சம்
வித்தியாஸம் தாளித்துக் கொட்டுவதில் தான்.
வேண்டியவைகள்
பாலக் கீரை—-400 கிராம்வரை. முன்னே பின்னே இருந்தாலும்
பரவாயில்லை. நன்றாக நறுக்கி அலம்பி நீரை வடிக்கவும்.
உறித்த பூண்டு—5 அல்லது 6 இதழ்கள்.பொடியாக நறுக்கவும்.
மிளகாய்ப் பொடி—காரத்திற்கேற்ப கால் டீஸ்பூனிற்கு அதிகம்
தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—அரைடீஸ்பூன்
தாளித்துக் கொட்ட—2 டீஸ்பூன் நெய்
சீரகம்–அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம்–1
ருசிக்கு–உப்பு
சோளமாவு—-ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை—அடி கனமான வாணலியில் நெய்யைச் சூடாக்கி
சீரகத்தை வறுத்து, பொடியாக நறுக்கிய பூண்டை வதக்கி,
சிறிதளவு
நறுக்கிய கீரையும்,பொடிகளையும் போட்டுப் பிரட்டிப் பின்பு
எல்லா கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கால் டம்ளர் ஜலம் சேர்த்து ருசிக்கு உப்பு, ஒரு சிட்டிகை
சர்க்கரை, நறுக்கிய தக்காளித் துண்டுகள் சேர்த்து நன்றாக
மூடிவைத்து நிதான தீயில் வேகவைத்து மசிக்கவும்.சோள
மாவைக் கெட்டியாக கரைத்துவிட்டு இரண்டு கொதி விட்டு
மசித்து இறக்கவும்.
இந்த மாதிரி என் போபால் சம்பந்தி செய்த கீரை மசியலிது.
சாதாரணமாக கீரையை நன்றாக வேகவைத்து மிளகாய்,
சீரகம், சிறிது தேங்காய், துளி அரிசியை மிக்ஸியில்
அரைத்துசேர்த்து மசித்து, கடுகு உளுத்தம் பருப்பை நெய்யில்
தாளித்துக் கொட்டிஉப்புப் போட்டாலும் கீரை ருசிதான்.
இதேமாதிரி வெங்காயம், பச்சைமிளகாய் பூண்டையும்
வதக்கிச் சேர்த்தும், அரைத்துவிட்டும் செய்யலாம்.
நாம் கீரை சேர்ந்தாற்போல இருக்க துளி அரிசிமாவு கரைத்து
விடுவோம்.
பாலக்கிற்கு சிறிது தக்காளி சேர்த்தால் ருசி கூடும்.
பெருங்காயம் அதுவும் வேண்டியவர்கள் சேர்க்கலாம்.
கீரை குறைவாக இருந்தால் வேகவைத்த பயத்தம் பருப்பு,
அல்லது துவரம் பருப்பு சிறிது சேர்த்தும் மசிக்கலாம்.
பருப்பு சேர்த்து மசிக்கும் போது ஒரு பச்சை மிளகாயை
காரத்திற்காக சேர்த்து மசிக்கலாம்.
பீன்ஸ் கறி
நல்ல இளசான பீன்ஸாக இருந்தால் மிகவும் நல்லது.
காம்பையும், நாரையும் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கிக்
கொள்ளவும்.
வேண்டியவைகள்.
பீன்ஸ்—-கால்கிலோ
பச்சைமிளகாய்—2
இஞ்சி—ஒரு சிறு துண்டு
தேங்காய்த் துருவல்–அரைகப்.விருப்பத்திற்கிணங்க
ருசிக்கு—-உப்பு
மஞ்சள்பொடி—அரைடீஸ்பூன்
தாளித்துக் கொட்ட—4 டீஸ்பூன் எண்ணெய்
கடுகு—1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2, 3 டீஸ்பூன்
சக்கரை—1 துளி
செய்முறை
பொடியாக நறுக்கிய பீன்ஸை தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.
துளி,சக்கரையும், 2டீஸ்பூன் எண்ணெயும் சேர்த்துக் கலந்து
மைக்ரோவேவில் ஹைபவரில் ,7 நிமிஷங்கள்
வேகவைத்து எடுக்கவும். அல்லது
அடிகனமான பாத்திரத்தில் நறுக்கிய பீன்ஸைப் போட்டு சிறிது
ஜலம் சேர்த்து, நிதான தீயில் மூடி வேக வைத்துக்
வடித்துக் கொள்ளவும்.
கலர் பச்சென்றிருக்கவே துளி சக்கரை சேர்ப்பது.
வாணலியில்எண்ணெயைக்காயவைத்கடுகு,உளுத்தம்பருப்பைத்
தாளித்துக் கொட்டி, நறுக்கிய இஞ்சிபச்சைமிளகாயைச்சேர்த்து
வதக்கவும்.
வெந்தபீன்ஸ்,உப்பு, மஞ்சள் சேர்த்துப் பின்னும்வதக்கி
தேங்காய்த் துருவலும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி
உபயோகிக்கவும்.
நம்முடைய தினப்படி சமையலில் இது ஒரு தினுஸு.
மற்றும் பீன்ஸை சற்று நீளமாக நறுக்கி எண்ணெயில் வதக்கி
மஞ்சள்,மிளகாய்,தனியா, சீரக, மாங்காய், உப்புப் பொடிகள்
திட்டமாக சேர்த்து ,துளி ஜலமும் தெளித்து வதக்கி இறக்கியும்
ரொட்டி வகைகளுடன் உபயோகிக்கலாம்.
பருப்புசிலியும் எல்லோரும் செய்வதொன்று.
பீன்ஸை பெறிய துண்டுகளாக நறுக்கி இட்டிலி தட்டுகளிலோ
அல்லது வேறு வகைகளிலோ 15நிமிஷத்திற்கதிகம்ஸ்டீம்செய்து
வெண்ணெயில் உப்பு, மிளகுப்பொடி சேர்த்து வதக்கினாலும்
ருசியோருசிதான்.
பொடியாக நறுக்கிய உருளைத் துண்டுகளுடனும் பீன்ஸை
சேர்த்து வதக்கி உப்பு காரம் சேர்த்தால் அதுவும் ஒரு ருசிதான்.
இப்படியே எழுதிக்கொண்டே போகலாம்.
பட்டர் பீன்ஸ் நாரில்லாமல் நன்றாக இருக்கும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவைகளையும் வேண்டியவர்கள்
உபயோகிக்கலாம். கறிப்பொடி சேர்த்து வதக்கவும் செய்யலாம்.
குர்ஜர் கறி
வேண்டியவைகள்.
குர்ஜர்—திட்டமானசைஸில்—4
மிளகாய்ப்பொடி—அரைடீஸ்பூன்
தனியாப்பொடி—1 டீஸ்பூன்
சீரகப்பொடி–அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—துளி
வேர்க்கடலை–2 டேபிள்ஸ்பூன். வெறும் வாணலியில் வறுத்துப்
பொடிக்கவும்.
தாளிக்க எண்ணெய் —-4,5 டீஸ்பூன்
கடுகு—1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
துளி இஞ்சித் துருவல்
செய்முறை
குர்ஜரைத் தோல்சீவி சற்றுப் பெறிய துண்டங்களாகநறுக்கிக்
கொள்ளவும். அலம்பி நன்றாக வடிக்கட்டிக் கொள்ளவும்.
அடிகனமான வாணலியிலோ அல்லது நான்ஸ்டிக் பேனிலோ
எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பைத்
தாளித்து, தீயைக் குறைத்து நறுக்கிய தளரில் ஒரு பிடியைச்
சேர்க்கவும். வேர்க் கடலைப் பொடியைத் தவிர மற்றவைகளைச்
சேர்த்துச் சிறிது வதக்கவும்.
பூரா தளர்களையும் சேர்த்து உப்பு இஞ்சி சேர்த்துக் கிளறி
மூடிவைத்து 5 நிமிஷங்கள் வேகவிடவும்.
சற்று நீர் விட்டுக் கொள்ளும். திறந்து வைத்து வதக்கவும்.
வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து வதக்கினால் தண்ணீரை
ஓரளவு இழுத்துக் கொள்ளும்.
பாத்திர சூட்டிலே இருந்தால் ஸரியாக இருக்கும்.
வதக்கியகாயை இறக்கி, மல்லித்தழை தூவி உபயோகிக்கவும்.
ரொட்டி வகைகளுடனும். ஸாதாரண சாப்பாட்டுடனும் ஒத்துப்
போகும். கறி சேர்ந்தாற்போல இருக்கும்.
வேண்டுமானால் சிறிது ஆம் சூரும் சேர்க்கலாம்.
இந்தக் காயை,பஜ்ஜி போடும் போதும் உபயேகிக்க முடியும்.
ஸேலட்டிலும், இது பங்கு பெறுகிறது.