Archive for ஏப்ரல், 2011
பன்னீர் துக்கடா
மிகவும் சுலபமாக தயாரிக்கலாம் இதை.
வேண்டியவைகள்.
பன்னீர்—-200கிராம்
ஸாம்பார் வெங்காயம்—உறித்தது 5 அல்லது 6
தக்காளி—-சின்னதாக 1
பச்சை மிளகாய்—-சின்னதாக ஒன்று
பச்சைக் கொத்தமல்லி இலை—–அரைகப்
பன்னீர் பொறிக்க வேண்டிய— எண்ணெய்
ருசிக்கு –உப்பு
செய்முறை—-பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
வெங்காயம்,மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உப்பு சேர்த்து மிக்ஸியில்
ஜலம் விடாமல் பேஸ்ட்டாக அறைத்துக் கொள்ளவும்.
அடுத்து நான் ஸ்டிக் பேனில் , நிதான தீயில் பரவலாக சிறிது எண்ணெய்
விட்டு சூடாக்கி பனீர் துக்கடாக்களைப் பரப்பவும்.
ஒரு புறம் சிவந்ததும் நிதானமாக மறுபுறம் திருப்பிப் போட்டு சற்று
சிவக்கவைத்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்
நீக்கவும். ஒரு பாத்திரத்தில்தயாரான துண்டங்களின் மேல்
வேண்டிய அளவிற்கு அறைத்த பேஸ்ட்டைப் பிசறி தட்டுகளில்
அலங்கரித்து வைக்கவும்.
பேஸ்ட் மிகுதியானால் தயிரில் கலந்தால் பச்சடியாகிவிடும்.
பன்னீர் பிடித்தவர்களுக்கு துக்கடா ருசியான ஒன்று.
கடாரங்காய் ஊறுகாய்
இதுவும் நாட்பட இருக்கும் ருசியான ஊறுகாய்தான்.
ஹிந்தியில் இதை கல்கல்என்று சொல்லுவார்கள். பழுத்த கடாரங்காயில்
ஊறுகாய் தயாரித்தல், கலந்த சாதம் தயாரித்தல் என எல்லாம் ருசியாக
இருக்கும்.
வேண்டியவைகள்—-
கடாரங்காய்—–3
வறுத்துப் பொடிக்க சாமான்கள்
கடுகு—-2 டேபிள் ஸ்பூன்
சீரகம்—-2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்—2 டீஸ்பூன்
பொடிகள்
பெருங்காயப்பொடி—-2 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி—-1டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி—4 டேபிள்ஸ்பூன்
உப்புப் பொடி—–3டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய்—முக்கால் கப்
கடாரங்காய் என்று சொல்லுகிறோமே தவிர இதுவும் பழுத்து மஞ்சள்-
-நிறம் வந்த பிறகுதான் ஊறுகாய் போடுகிறோம்.
அவசரத்திற்கு ஊறுகாய் போடுவதானால்காயைமுழுவதாகஎண்ணெயில்
வதக்கி, பிறகு நறுக்கி உப்பு காரம் சேர்த்து உபயோகிப்பதும் உண்டு.
நாம் நிதான முறையிலேயே செய்வோம்.
செய்முறை—-2 காய்களைச் சுருளாக நறுக்கி சிறிய துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
சிறிது உப்பைக்கலந்துகசக்கினாற்போலதுண்டுகளைக் கலந்துவைத்தால்
,விதைகளைச் சுலபமாக நீக்க முடியும். விதைகளை நீக்கவும்.
ஒரு கடாரங்காயை இரண்டாக நறுக்கி அதன் ரஸத்தைப் பிழிந்து
நறுக்கிய துண்டுகளுடன் கலக்கவும்.
பாட்டிலிலோ, சுத்தமான ஜாடியிலோ மிகுதி உப்பைக் கலந்து 2அல்லது3
நாட்கள் நன்றாக ஊறவிடவும்.
ஊறின துண்டங்களை , பாட்டிலின் வாயில் ஒரு மெல்லிய துணியைக்
கட்டி வெய்யிலில் 2 நாட்கள் வைத்து எடுக்கவும்.
வெந்தயத்தைச் சிவப்பாக வறுத்து பொடிக்கவும்.
கடுகு, சீரகத்தைச் சூடு ஏறும்படி வறுக்கவும்.
யாவற்றையும் பொடிக்கவும்.
அடுத்து எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவிடவும்.
பொடி வகைகள்,யாவற்றையும் சேர்த்துக் கிளறி ஊறின கடாரங்காய்த்-
-துண்டுகளையும் சேர்த்துக் கலந்து பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.
ஊறஊற ருசியாக இருக்கும்.
கை படாமலும், மரக் கரண்டியினால் கிளறி விட்டும், அழுத்தமாக
மூடி வைத்தும் உபயோகிக்கவும்.
காயின் சைஸைப் பொறுத்து , உப்பு காரம் , ருசி பார்த்து கூட்டிக்
குறைக்கவும். எண்ணெய் அளவும் கூட்டவும்.
டில்லியில் போட்ட ஊறுகாய். படம் எடுக்க மறந்து போனேன்.
ஜெவ்வரிசி வடாம்
இதுவும் தயாரிப்பது எளிதானதுதான். நல்ல வெயிலில் காயவைத்துத் தயாரித்தால்
வருஷத்திற்கு அதிகமாகவே வைத்து அவ்வப்போது உபயோகிக்கலாம்.
வெய்யில் உள்ள போது அதிகம் தயாரிக்க வேண்டும்.
ஸௌகரியம்போல காட்போர்டுகளின் மீதோ பெரிய அட்டைகளின் மீதோ
பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி வடாம் இட ட்ரேக்கள் தயார் செய்து கொள்ளவும்.
வேண்டியவைகள்
ஜெவ்வரிசி—-2கப்
பச்சைமிளகாய்—-5
எலுமிச்சம்பழம்—-1
தேவைக்கு—உப்பு
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
செய்முறை.
ஜெவ்வரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சுத்தம் செய்து
மேலும் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை
வடிக்கட்டவும்.
பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலப் பாத்திரத்தில் 5 கப் தண்ணீரைக் கொதிக்க
வைக்கவும். வடிக்கட்டிய ஜெவ்வரிசியைச் சேர்த்துக் கிளரவும்.
தீயை ஸிம்மில் வைத்து பொங்கி வழியாமலும், பாத்திரத்தின்
அடியில் பிடிக்காமலும் அடிக்கடி கரண்டியினால் கிளறிக்
கொடுக்கவும்.
ஜெவ்வரிசி வெந்ததும் அரைத்த மிளகாய், உப்பு சேர்த்துக் கிளறி
இறக்கவும். எலுமிச்சை ரஸத்தைச் சேர்த்துக் கிளறி தட்டினால்
மூடி வைக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
சற்று நேரம் கழித்து கிளறியதை வேறு பாத்திரத்தில் எடுத்து
ஆறிய பதத்தில் கையினாலோ, ஸ்பூனினாலோ வடாங்களாக
இடவும்.
பாலிதீன் பேப்பரை ஈரத்துணியினால் துடைத்துவிட்டு , கையையும்
ஈரப் படுத்திக் கொண்டு கையினாலும் சிறிது இடம் விட்டு, விட்டு
வடாத்தைத் தயாரிக்கலாம்.
வடாக்கூழ் ஆறிவிட்டால் கெட்டியாகிவிடும். ஸ்பூனினால் இட
சிறிது மோரோ, ஜலமோ வேண்டியபோது சேர்க்கலாம்.
நல்ல வெய்யிலில் வைத்து, மறுநாளும் வைத்து எடுத்து வடாங்களைத்
திருப்பிப் போட்டுக் காயவைக்கவும்.கையால் பிறித்தெடுக்க முடியும்.
நன்றாகக் காயவைக்க வேண்டும்.
ஜெவ்வரிசி பாயஸம் மாதிரி இது சற்று கெட்டியாக வேகவைத்தபதம்.
அவ்வளவுதான்.
ஒருஸ்பூன் ஓமம், அல்லது சீரகம் சேர்த்தும் செய்யலாம்.
அரைத்த தக்காளி, தயிர், முதலானதும் புளிப்பிற்காக எலுமிச்சைக்குப்
பதிலாக சேர்த்துச் செய்தால் நிறம், மணம், ருசி மாறுதலாகவும்
நன்றாகவும் இருக்கும்.
நல்ல வெய்யில் அவசியம். ஈரப்பதம் துளிகூட இல்லாமல்
காயவைத்தெடுத்து பத்திரப் படுத்தவும்.
எண்ணெயில் பொறித்தெடுத்தால் சீறிக்கொண்டு பொரியும்.
இந்தியாவில் வெய்யில் ஸீஸன் இது .
வெளிநாட்டு வெய்யிலைக் கூட விடமாட்டேன்நான்.
வெதர் ரிபோர்ட் ஒத்தாசை செய்யும் எனக்கு.
வெங்காயம் அரைத்துப் போட்டும் வடாத்தைச் செய்யலாம்.
சமயத்தில் எண்ணெயில் பொரித்து சாப்பாட்டுடன் , அதுவும்
ரஸம் சாதத்துடன் சாப்பிட ஒப்பற்ற தோழன் இது
.திறந்த வெளி மாடி டெரஸுகளானால் வடாம் சீக்கிரம் காயும்.
நூலைக்கொண்டு பெறிய வலைமாதிரி வடாத்தைச் சுற்றி
கட்டி விடுவோம். காக்கைகள் பயந்துகொண்டு வராது. வடாத்துக்கு
காவல் என்று வேலை செய்யாது புத்தகம் படிக்க சான்ஸ்
கிடைக்கும். வடாம் ஸீஸனின் மலரும் நினைவுகள் ஏராளம்.
படங்கள் சுமாராகத் தோன்றினாலும் வடாங்கள் ரொம்பவும்
ருசியாகவும், அருமையாகவும் இருக்கு. மும்பை அபார்ட்மென்ட்
வெயிலின் வடாம் இது. சுருங்கச் சொன்னால் ஜெவ்வரிசியைக்
கூழாகக் கிளறி, உப்பு,காரம், புளிப்பு சேர்த்துத் தயிர் சாதம் மாதிரி
ஆறவைத்து , கையினால் பாலிதீன் பேப்பர்கள் மீது வடாம்களாக
இட்டு வெயிலில் 2, 3, நாட்கள் காயவைத்து நன்றாக உலர்ந்த
வடாங்களைப் பத்திரப் படுத்த வேண்டும். அவ்வளவுதான்.
முள்ளங்கிக்கறி,அதன் கீரையுடன்.
பிஞ்சு முள்ளங்கி அதன் கீரையுடன் தளதளவென்று இவ்விடம்
கிடைக்கிறது. முள்ளங்கி பெறிதாக இருந்தால்கீரைஅவ்வளவாக
தேறுவதுமில்லை. ருசியும் ஸரியில்லை. காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்.கட்டுசின்னதாகத்தானஇருந்தது.கண்டவரையில்
போதுமென கறி செய்தேன்.
எப்போதாவதுசான்ஸ்கிடைக்கும் போது ப்ளாகிற்காக ப்ளான்
செய்துவிடுகிறேன்.
ஒரு கட்டில் சின்னதாக நாலோ ஐந்தோ இருந்தது.
வேண்டியவைகள்—-பச்சைமிளகாய்—1
கடுகு, உளுத்தம்பருப்பு—தலா 1 டீஸ்பூன்
ஒரு பிடித்த பிடியளவு—–ப்ரோஸன் மட்டர்
துளி சீரகப்பொடி, இஞ்சித்துருவல் சிறிது.
எண்ணெய்—2, 3 டீஸ்பூன்
ருசிக்கு –உப்பு
செய்முறை—
முள்ளங்கிக் கீரையை காம்பு, நரம்புகள் நீக்கிப் பொடியாக
நறுக்கித் தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.
முள்ளங்கியையும் தோல் சீவி மெல்லிய வட்டங்களாக
நறுக்கி நீரில் அலசி வடிக்கட்டவும்.
நான் ஸ்டிக் பேனில் எண்ணெய்விட்டுக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு, உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து
மிளகாயைஇரண்டாகக்கிள்ளிப்போட்டுஇஞ்சியுடன்வதக்கவும்.
கீரையை உடன் சேர்த்து வதக்கவும். மட்டரைச் சேர்த்துக்
,கிளரி நிதான தீயில் தட்டினால் மூடி சில நிமிஷங்கள்
வைக்கவும்.
கீரை வதங்க ஆரம்பித்ததும் முள்ளங்கி வில்லைகளையும்
சேர்த்து உப்பு, சீரகப் பொடி சேர்க்கவும்.
நீர் வற்றி நன்றாக வதங்கும்வரை வதக்கி இறக்கி
உபயோகிக்கவும்.
சுயமாக தன் மணத்துடன் ருசியாக இருக்கும்.
தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.
வெங்காயம், பூண்டு, பயத்தம்பருப்பு முதலானவைகளும்
சேர்த்துச் செய்வதுண்டு. உடல் நலத்திற்குகந்த சாதாரண
ஸப்ஜி இது.
வாழ்த்துகள்
ஸக பதிவர்களுக்கும், மற்றும் எல்லா ஸகோதர,ஸகோதரிகளுக்கும்,
மற்றும் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன்
சொல்லுகிறேன், காமாட்சி.
காப்ஸிகம் க்ரேவி
இதுவும் சுலபமான ஒன்றுதான். ரொட்டியுடன் சாப்பிடநன்றாக
இருக்கும்.
வேண்டிய சாமான்கள்
திட்டமான சைஸில்—-3 உருளைக் கிழங்குகள்
காப்ஸிகம்—5
வெங்காயம்—பெரியதாக ஒன்று
அரைப்பதற்கு
தக்காளி—-1
வெங்காயம்—1
பூண்டு இதழ்கள்—5
சீரகம்—அரை டீஸ்பூன்
சின்ன துண்டு—இஞ்சி
பொடிகள்
மிளகாய்ப் பொடி—-1டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி–அரைடீஸ்பூன்
ருசிக்கு—-உப்பு
எண்ணெய்—–2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க–லவங்கம் 3
செய்முறை—–உருளைக்கிழங்கை வேகவைத்து உறித்து
துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவைகளை மிக்ஸியில்நன்றாகஅரைத்துக்
கொள்ளவும்.
காப்ஸிகத்தை திட்டமானதுண்டங்களாகச்செய்துகொள்ளவும்.
வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.
நான்ஸ்டிக்பேனிலஎண்ணெயைக்காயவைத்துவெங்காயத்துடன்
லவங்கம் சேர்த்து வதக்கி , அரைத்த விழுதைக்கொட்டி
சுருள வதக்கவும்.
கேப்ஸிகம் சேர்த்து சிறிது வதக்கி , வேகவைத்த கிழங்குத்
துண்டங்கள் ,உப்புகாரம், மஞ்சள்பொடி , ஒன்றரைகப்தண்ணீர்
முதலானவைகளைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
க்ரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்கவைத்துஇறக்கவும்.
காரத்திற்கு பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.
இதையும் விருப்பமான ரொட்டி, பூரி முதலானவற்றுடன்
ருசிக்கலாம்.
வேப்பிலைக் கட்டி.
பெயரைப் பார்த்து இது ஒரு கசப்பான பொருளாக இருக்கும்
என்றுமுடிவுக்கு வந்து விடவேண்டாம். வாய்க்கு,ருசியாகவும்,
ஆரோக்கியமுமான , தயிர் சாதத்துடன் ஊறுகாய் ஸ்தானத்தில்
உபயோகப்படுத்தப்படும் ஒரு எளிய தயாரிப்பு இது. பெரிய,
பெரிய, சாப்பாட்டுப் பந்திகளில்கூட வேப்பிலைக் கட்டி
விசாரிப்பு அலாதியானது. துளி தொட்டுண்டு பாருங்கோ இன்னும்
இன்னும் கொஞ்சம் சாப்பிடணும்னு தோணும், சொல்லிக்
கொண்டே போடுவார்கள். எங்கம்மாவும் இப்படி சொல்லி, பிறருக்கு
போடுவது அடிக்கடி ஞாபகம் வரும்போது எழுத வேண்டும்
என்று நினைப்பேன். இலைக்கு எங்கு போவது?
சமய வாய்ப்பாக சென்ற வாரம் 5, 6 நாட்களுக்கு சென்னையில்
என் பெண் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த செடி அவர்களின் தோட்டத்தின் ஒரு மூலையில் மரமாக
வளர்ந்து இருந்தது. நாரத்தையா, சாத்துக்குடியா என்ற யோசனை
தானாக வளர்ந்த செடியின் மீது தீர்ந்து, நாரத்தை என்று உறுதி
யானது. எனக்கு மிகவும் ஸந்தோஷம். ப்ளாகில் போட ஒரு
பழைய உருப்படி, தயாராகிவிட்டது வேப்பிலைக்கட்டி.
அன்றைக்கென்று என்னைப் பார்த்துப் போக வந்தவர்கள்
சாப்பிடும்போது ரஸித்து சாப்பிட்டுவிட்டு மிகுதியிருந்த
வேப்பிலைக்கட்டியை எடுத்தும் போனார்கள். முடிந்தவர்கள்,
கிடைக்கும் போது செய்யுங்கள். அல்லது இப்படியும் ஒன்று
செய்யலாம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். பாலக்காட்டு
பந்தி உபசரிப்பிலும் முதன்மையானது இது. ரெடிமேடாக
கிடைக்கவும் செய்கிறது. அம்பிகாஸ்டோர்களில்.
வேண்டியவைகள்.
நாரத்தை, அல்லது எலுமிச்சை இலைகள்—–அடைத்தமாதிரி 2 கப்
கறிவேப்பிலை—அரைகப்
மிளகாய் வற்றல்—-3
ஓமம், அல்லதுசீரகம் 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி— அரை டீஸ்பூன்
அழுத்தமாக உருட்டிய புளி—-ஒரு நெல்லிக்காயளவு
ருசிக்கு—-உப்பு
கடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது
செய்முறை.
நாரத்தை இலைகளைத் தண்ணீரில் அலசித் துடைத்து நல்ல
துணியில் போட்டு காற்றாடவிட்டு ஈரத்தைப் போக்கவும்.
வெற்றிலையை மடித்து காம்பிலிருந்து நுணிவரை நரம்பை
எடுப்பதுபோல் இந்த இலைகளிலும் அதே முறையில் இலைகளை
மடித்து, நடு நரம்பை நீக்கவும்.கறிவேப்பிலை அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்
சேர்த்து யாவற்றையும் மிக்ஸியிலிட்டு பொடிக்கவும்.
பொடித்தவுடன் இந்த இலைகள், புளி யாவற்றையும் சேர்த்து
மிக்ஸியை ஓடவிடவும். ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும். ஜலம் அறவே சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து ஊறுகாயிற்கு பதில் சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.
சிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு
ருசியைக் கொடுக்கும்.
நம்முடைய சித்திரை தமிழ் வருஷப் பிறப்பன்று ஒரேஒரு
வேப்பந் துளிரை இதனுடன் சேர்த்து, எமனுக்கு வேம்பாக
இருக்க வேண்டுமென ஆசீர்வதித்து சாப்பிடும்போது துளி
போடும் வழக்கத்தையும் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.
அதனால்தான் இது வேப்பிலைக் கட்டி என சொல்லப் படுகிறது
போலும். குட்டி குறிப்பு. விரிந்த எண்ணங்கள்.நான் சொல்வது
ஸரிதானே?
நாள்பட இருந்தால் ஈரம் உலர்ந்து சற்று பொடியாக உதிரும்.
நான் இதை பொடி வகைகளில்தான் சேர்த்திருக்கிறேன்.
மணத்தக்காளிக்கீரைக் கூட்டு. எளியமுறை.
மிகவும் சுலபமான மருத்துவ குணமுள்ள எளிய கூட்டு இது.
வேண்டியவைகள்
மணத்தக்காளிக் கீரை—-2கட்டு
தேங்காய்த்துருவல்—அரைகப்
பயத்தம்பருப்பு—–அரைகப்
மிளகாய்—2
சீரகம்–1 டீஸ்பூன்
உளுத்தம்பருபபு—2 டீஸ்பூன்
பூண்டு.உறித்த இதழ்கள்—3
நெய்—2 டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
சிறிது, கடுகு, பெருங்காயம்.
செய்முறை.
கீரையின் இலைகளை ஆய்ந்து நறுக்கி த் தண்ணீரில்
நன்றாக அலசி வடிக்கட்டவும்.
வெறும் வாணலியில் பயத்தம் பருப்பை சற்று சிவக்க வாஸனை
வரும்படியாக வறுத்துக் கொள்ளவும்.
துளி நெய்யில் மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு
பூண்டையும் சேர்த்து இறக்கவும்.
ஆறினவுடன் தேங்காய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக
அறைத்துக் கொள்ளவும்.
வறுத்த பருப்பை நன்றாகக் களைந்து ஒண்ணரைகப் ஜலமும்,
கீரையும் , மஞ்சள் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 2 விஸில் விட்டு
நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த கீரை, பருப்புடன் அரைத்த கலவை, வேண்டிய
உப்பு சேர்த்துக் கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
ஒரு தக்காளியையும் வதக்கி சேர்த்து அரைக்கலாம்.
வாய்ப்புண், வயிற்றுப் புண் முதலானவைகளை ஆற்றும்
குணமுள்ளது இக்கீரை. காய்களையும்.பச்சையாக சமைத்தும்
வற்றலாகச் செய்தும் உபயோகப் படுத்துதல் இன்றும் நடை
முறையில் உள்ளது. பத்தியச் சாப்பாடுகளில் மணத்தக்காளி
வற்றல் முதன்மையானது.