Archive for மார்ச், 2011
குழம்புக் கருவடாம்
நல்ல வெய்யில் காயும் போது இந்தமாதிரி வடாங்களைத்
தயாரித்து வைத்துக் கொள்வதுண்டு.
பருப்பு வகைகளில் தயாரிக்கும், இவ் வடாங்கள் கூட்டு,குழம்பு,
டால்கள், வத்தக்குழம்புகள், சாம்பார் என எல்லாவற்றுடனும்
எண்ணெயில் வறுத்துப் போட்டு செய்தால் மாறுதலுக்கு ஒரு
ருசி கிடைக்கும். இப்போதுதான் யாவுமே ரெடிமேடாக
.கிடைக்கிறது. அது வேறு விஷயம்.
இன்ட்ரஸ்ட் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாமே.
நான் ப்ளாகில் போடுவதற்காக இந்த பாம்பே வெய்யிலையும்
சற்று உபயோகிக்கலாமே என்று செய்தேன். கிழக்கு மேற்காக
அமைந்த டூப்ளே அபார்ட்மென்ட் இது. காலையில்
பக்கவாட்டு வெய்யிலும் 2மணிக்குமேலே மேற்கத்திய
வெயிலும் உதவி செய்தது. துணியாலே மூடிமூடி
காயவைத்து ரொம்பவே அக்கரையாக செய்திருக்கிரேன்.
வேண்டிய சாமான்கள்
உளுத்தம் பருப்பு—-1 கப்
மிளகாய் வற்றல்—-4
வாஸனைக்கு —ஒரு டீஸ்பூன் மிளகு சீரகம்
ஒருகப்—-துருவிய வெள்ளை பூசணிக்காய்
திட்டமாக உப்பு.
செய்முறை—-உளுத்தம் பருப்பை நன்றாகக் களைந்து
தண்ணீரில் 4மணி நேரம் ஊரவைத்து வடித்து மிளகாய்
சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அறைத்துக்
கொள்ளவும்.
பூசணித் துருவலை ஒட்டப் பிழிந்து சேர்க்கவும்.
உப்பு, மிளகு சீரகப்பொடியையும் கலக்கவும்.
அகலமான ட்ரேயின் மீது பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி
வடாம் இட ட்ரே தயாரிக்கவும்.
ட்ரேயைத்தண்ணீரால் துடைத்துவிட்டு கையை ஈரமாக்கிக்
கொண்டு அறைத்த மாவை சிறு பகோடாக்கள் மாதிரி
ஒன்றிற்கொன்று இடம் விட்டு உருட்டிவைத்து ட்ரேயை
வெய்யிலில் வைத்து காயவிடவும்.
நல்ல வெய்யிலில் காயவைத்து மறுநாள் திருப்பிப் போட்டு
கருவடாங்களைக் காயவைக்கவும்.
ஈரப்பதம் போய் நன்றாக மொறுமொறு என்று ஆகும் அளவிற்கு
வெய்யிலில் காயவைத்து காற்றுப் புகாத பாட்டில்களில்
சேமித்து வைக்கவும்.
வேண்டிய போது வறுத்து கூட்டு, குழம்புகளில் சேர்க்கலாம்.
நாட்டுப்புரத்து குறிப்புகளாக நினைத்துக் கொள்ளுங்கள்.
நான் வெங்காயத்தை சேர்த்து அரைத்து செய்திருக்கிறேன்
வெந்தயக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம்.
தனி பயத்தம் பருப்பிலும், காராமணி, தட்டைப் பயறு
சேர்த்தரைத்தும் கருவடாம் இதேமுறையில் தயாரிக்கலாம்.
தயாரிப்பது பெரிய காரியமில்லை. வெய்யிலில்
காயவைத்தெடுப்பதுதான் பெரிய காரியம்.
வட இந்தியர்கள் தயாரிப்பில் கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,
லவங்கம், என யாவும் முழுதாகவே சேர்த்தும் காரமாக
தயாரிக்கிரார்கள். தயாரிக்க முடிகிறதோ இல்லையோ எப்படி
எதில் தயாரிக்கிறார்கள் என்பதாவது அறியமுடிகிறது
அல்லவா.படம் ஒரு மாதிரிக்குதான்.
நெல்லிக்காய் ஊறுகாய்
இதற்கு நல்ல நெல்லிக்காய் அதுதான் தோப்பு நெல்லிக்காய்
என்றும் சொல்வார்களே அந்த வகைதான் தேவை.
அறி நெல்லிக்காய் என்றும் மற்றொரு வகை உண்டு. அது
ஜூஸ்,சட்னி , கலந்த சாதங்கள் செய்ய பயன்படும்.
நான் பெறியவகை நெல்லிக்காயில் ஊறுகாய் தயாரித்ததை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வேண்டியவைகள்
நெல்லிக்காய்—அரைகிலோ
நல்லெண்ணெய்—அரைகப்
மிளகாய்ப்பொடி—-5 டேபிள் ஸ்பூன்
வறுத்துப் பொடிக்கசாமான்கள்
1 டீஸ்பூன் வெந்தயம்
2 டீஸ்பூன் சீரகம்
3 டீஸ்பூன்—கடுகு
மற்றும் மஞ்சள்பொடி—-2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி–2 டீஸ்பூன்
உப்பு.—4 டேபிள்ஸ்பூன்
நல்ல வினிகர்—6 டேபிள்ஸ்பூன்
செய்முறை.——வெறும் வாணலியைச்சூடாக்கிவெந்தயத்தைச்
சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
கடுகு, சீரகத்தை வாஸனை வறும்படி வறுக்கவும்.
ஆறினபின் மிக்ஸியிலிட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
அலம்பித் துடைத்த நெல்லிக்காய்களை, வாணலியில் சிறிது
2 ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து , அதில் போட்டு லேசாக
வதக்கி இறக்கவும்.
காய்கள் ஆறியவுடன், பகுதி,பகுதியாக சிறுகத்தியின் உதவி
யுடன் இதழ்களாகப் பிறித்துக் கொட்டைகளை நீக்கவும்.
உப்பை, அரை கப் ஜலம் விட்டுக் காய்ச்சி சற்று சுண்டியதும்
இறக்கவும்..
அகன்ற ஜாடிக் கிண்ணத்தில் மிளகாய்ப்பொடி,வெந்தய,
கடுகுப் பொடிகள், சீரக,பெருங்காயப்பொடிகள், இவைகளுடன்,
நெல்லிக்காய்த் தளர்களைச் சேர்த்து மிகுதி எண்ணெயைக்
காய்ச்சி விடவும்.
உப்பு ஜலம், வினிகர் இவைகளையும் சேர்த்துக் கிளறவும்.
உப்பு ஸரி பார்த்துக் கிளறி சுத்தமான பாட்டிலில் எடுத்து
வைத்து, 2, 3 நாட்கள் ஊற விடவும்.
தினமும் சுத்தமான ஈரமில்லாத கரண்டியினால் கிளறவும்.
பிறகு பாட்டிலின் வாயில் மெல்லிய துணியினால் கட்டி
மூடி , நல்ல வெய்யிலில் 4, 5 நாட்கள் வைத்து எடுக்கவும்.
உப்பும், எண்ணெயும் சற்று அதிகமிருந்தால் ஊறுகாய்
கெட்டுப் போகாது.
காற்று புகாத அழுத்தமான மூடியினால் பாட்டிலை மூடி
உபயோகிக்கவும்.
சாதாரணமாக நெல்லிக்காய் சீக்கிரம் கெட்டுப் போகக்
கூடிய வஸ்து. ஆதலால் பிரிஜ்ஜில் வைத்து வேண்டிய
அளவு வெளியில் எடுத்து உபயோகித்தால் மிகவும் நல்லது.
நல்ல ருசியான ஊறுகாய்.உ ப்பு, காரம், எண்ணெய் ருசிக்குத்
தக்கபடி அதிகமாக்கலாம்.
பாலக் பன்னீர்
வேண்டியவைகள்
பாலக்கீரை—250 கிராம் வரை
அரைக்க சாமான்கள்
வெங்காயம்—-3
பூண்டு—3 இதழ்கள்
இஞ்சி—சிறியதுண்டு
நல்ல சைசில் தக்காளி—-1
பொடிகள்
மிளகாய்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்
ஜீராப்பொடி—-அரைடீஸ்பூன்
கரம் மஸாலா–கால்டீஸ்பூன்
மஞ்சள் பொடி—-சிறிது.
ருசிக்கு உப்பு
பன்னீர்—200 கிராம். திட்டமான துண்டுகளாக செய்து
கொள்ளவும்.
தாளிக்க, பன்னீர் பொரிக்க வேண்டிய எண்ணெய்
செய்முறை. கீரையைத் தண்ணீரில் அலசவும்.
கீரையை ஆய்ந்து, கொதிக்கும் தண்ணீரில் சற்று வேகவைத்து
தண்ணீரை வடிக்கட்டி தனியாக வைக்கவும். வெந்த
கீரையைக் குளிர்ந்த நீரைவிட்டு அலசி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்தவைகளை ஜலம் சேர்க்காமல்
மிக்ஸியிலிட்டு அரைத்தெடுக்கவும்.
கீரையையும் தனியாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான
சூட்டில், துண்டுகள் செய்யப் பட்ட பன்னீரை இலேசாக
வறுத்தெடுக்கவும். வேறொரு நான் ஸ்டிக் வாணலியில்ல்
சிறிது நெய்யும் எண்ணெயும் கலந்து சூடாக்கி அரைத்த
வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து நிதான தீயில்
வதக்கவும். நன்றாக வதங்கி சுருண்டு
எண்ணெய் பிரிந்து வரும் போது பொடிகளைச் சேர்த்துப்
பிரட்டி, அரைத்த பாலக் விழுதையும் சேர்த்துக் கிளறவும்.
வேண்டிய அளவிற்கு, கீரையை வேக வைத்து வடிக்கட்டிய
நீரைச் சேர்த்து கொதிக்க வைத்து பொரித்த பன்னீரைச்
சேர்த்து திட்டமாக உப்பைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு
இறக்கவும்.
கீரை நிறம் மாறாமலிருக்க உப்பைக் கடைசியில்
சேர்க்கிறோம்.
பன்னீரை வறுக்காமல் சேர்ப்பவர்களும் உண்டு.
எல்லாவற்றுடனும் சேர்த்துச் சாப்பிட பாலக் பன்னீர்
தயார்.
.கீரையை நறுக்கி மைக்ரோவேவில், 5, 6 நிமிஷங்கள்
வேகவைத்து , பிறகு அரைத்துச் சேர்த்துச் செய்வதும்
உண்டு
இந்த முறையிலும் கீரை பச்சென்று நிறம் மாராமல்
இருக்கும். பன்னீர் கூட்டிக் குரைக்கலாம்.
வெண்டைக்காய் ஸப்ஜி
நல்ல பிஞ்சு வெண்டைக்காயில் ஸப்ஜி செய்தால் ரொட்டிக்கு
மிகவும் ஏற்றதாக இருக்கும். வேண்டியவைகள்.
வெண்டைக்காய்—-கால்கிலோ
பெரிய வெங்காயம்—–2
பழுத்த தக்காளி –1
எண்ணெய்—2அல்லது 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி–சிறிது
மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்
உப்பு—ருசிக்கு
கடுகு—அரைடீஸ்பூன்
விருப்பப் பட்டால்—கரம் மஸாலா சிறிது
செய்முறை—–வெண்டைக்காயைத் தண்ணீரில் அலம்பித்
துடைத்து சுத்தமான துணியில் பரத்தி ஈரத்தைப் போக்கவும்.
காயைச் சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியையும் தனித்தனியாக பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காயுடன் ஒருஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து
மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு 4 நிமிஷம் ஹை பவரில்
மைக்ரோவேவ் செய்து எடுக்கவும்.
வாணலியோ,நான்ஸ்டிக் பேனோ எண்ணெயைக்
காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு வெங்காயத்தைச்
சேர்த்து வதக்கி தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
சுருள வதக்கி, உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்துக்
கிளறி , வெண்டைக்காயையும் சேர்த்து , ஸிம்மில் வைத்து
நன்றாக வதக்கவும்.
காய் வதங்கியதும் இறக்கி உபயோகிக்கவும்.
ரொட்டியுடன் சாப்பிட ஸப்ஜி தயார்.
வெண்டைக்காயுடன் துளி ஆம்சூரோ.அல்லது துளிபுளி
பேஸ்ட்டோ கலந்து மைக்ரோவேவ் செய்து தக்காளி
வெங்காயம் போடாமல் கடுகை தாளித்து எண்ணெயில்
வதக்கி உப்பு காரம் போட்டு உபயோகிக்கலாம்.
காயை 2 அங்குல நீளத்திற்கு மிகவும் மெல்லியதாக நறுக்கி
உப்பு காரம் பிசறி எண்ணெயில் நேரடியாக வறுவலாகவும்
வறுத்தெடுக்கலாம்.
இப்போது நான் செய்தது ஸப்ஜிதான். இப்படியே வீட்டில்
செய்தது போட்டிருக்கிறேன்.
புளி, ஆம்சூரெல்லாம் உபயோகிப்பது காயின்
கொழகொழப்பை நீக்குவதற்கே.
கரிப்பொடி தூவியும் செய்யலாம்.