Archive for ஏப்ரல் 19, 2011
ஜெவ்வரிசி வடாம்
இதுவும் தயாரிப்பது எளிதானதுதான். நல்ல வெயிலில் காயவைத்துத் தயாரித்தால்
வருஷத்திற்கு அதிகமாகவே வைத்து அவ்வப்போது உபயோகிக்கலாம்.
வெய்யில் உள்ள போது அதிகம் தயாரிக்க வேண்டும்.
ஸௌகரியம்போல காட்போர்டுகளின் மீதோ பெரிய அட்டைகளின் மீதோ
பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி வடாம் இட ட்ரேக்கள் தயார் செய்து கொள்ளவும்.
வேண்டியவைகள்
ஜெவ்வரிசி—-2கப்
பச்சைமிளகாய்—-5
எலுமிச்சம்பழம்—-1
தேவைக்கு—உப்பு
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
செய்முறை.
ஜெவ்வரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சுத்தம் செய்து
மேலும் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை
வடிக்கட்டவும்.
பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலப் பாத்திரத்தில் 5 கப் தண்ணீரைக் கொதிக்க
வைக்கவும். வடிக்கட்டிய ஜெவ்வரிசியைச் சேர்த்துக் கிளரவும்.
தீயை ஸிம்மில் வைத்து பொங்கி வழியாமலும், பாத்திரத்தின்
அடியில் பிடிக்காமலும் அடிக்கடி கரண்டியினால் கிளறிக்
கொடுக்கவும்.
ஜெவ்வரிசி வெந்ததும் அரைத்த மிளகாய், உப்பு சேர்த்துக் கிளறி
இறக்கவும். எலுமிச்சை ரஸத்தைச் சேர்த்துக் கிளறி தட்டினால்
மூடி வைக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
சற்று நேரம் கழித்து கிளறியதை வேறு பாத்திரத்தில் எடுத்து
ஆறிய பதத்தில் கையினாலோ, ஸ்பூனினாலோ வடாங்களாக
இடவும்.
பாலிதீன் பேப்பரை ஈரத்துணியினால் துடைத்துவிட்டு , கையையும்
ஈரப் படுத்திக் கொண்டு கையினாலும் சிறிது இடம் விட்டு, விட்டு
வடாத்தைத் தயாரிக்கலாம்.
வடாக்கூழ் ஆறிவிட்டால் கெட்டியாகிவிடும். ஸ்பூனினால் இட
சிறிது மோரோ, ஜலமோ வேண்டியபோது சேர்க்கலாம்.
நல்ல வெய்யிலில் வைத்து, மறுநாளும் வைத்து எடுத்து வடாங்களைத்
திருப்பிப் போட்டுக் காயவைக்கவும்.கையால் பிறித்தெடுக்க முடியும்.
நன்றாகக் காயவைக்க வேண்டும்.
ஜெவ்வரிசி பாயஸம் மாதிரி இது சற்று கெட்டியாக வேகவைத்தபதம்.
அவ்வளவுதான்.
ஒருஸ்பூன் ஓமம், அல்லது சீரகம் சேர்த்தும் செய்யலாம்.
அரைத்த தக்காளி, தயிர், முதலானதும் புளிப்பிற்காக எலுமிச்சைக்குப்
பதிலாக சேர்த்துச் செய்தால் நிறம், மணம், ருசி மாறுதலாகவும்
நன்றாகவும் இருக்கும்.
நல்ல வெய்யில் அவசியம். ஈரப்பதம் துளிகூட இல்லாமல்
காயவைத்தெடுத்து பத்திரப் படுத்தவும்.
எண்ணெயில் பொறித்தெடுத்தால் சீறிக்கொண்டு பொரியும்.
இந்தியாவில் வெய்யில் ஸீஸன் இது .
வெளிநாட்டு வெய்யிலைக் கூட விடமாட்டேன்நான்.
வெதர் ரிபோர்ட் ஒத்தாசை செய்யும் எனக்கு.
வெங்காயம் அரைத்துப் போட்டும் வடாத்தைச் செய்யலாம்.
சமயத்தில் எண்ணெயில் பொரித்து சாப்பாட்டுடன் , அதுவும்
ரஸம் சாதத்துடன் சாப்பிட ஒப்பற்ற தோழன் இது
.திறந்த வெளி மாடி டெரஸுகளானால் வடாம் சீக்கிரம் காயும்.
நூலைக்கொண்டு பெறிய வலைமாதிரி வடாத்தைச் சுற்றி
கட்டி விடுவோம். காக்கைகள் பயந்துகொண்டு வராது. வடாத்துக்கு
காவல் என்று வேலை செய்யாது புத்தகம் படிக்க சான்ஸ்
கிடைக்கும். வடாம் ஸீஸனின் மலரும் நினைவுகள் ஏராளம்.
படங்கள் சுமாராகத் தோன்றினாலும் வடாங்கள் ரொம்பவும்
ருசியாகவும், அருமையாகவும் இருக்கு. மும்பை அபார்ட்மென்ட்
வெயிலின் வடாம் இது. சுருங்கச் சொன்னால் ஜெவ்வரிசியைக்
கூழாகக் கிளறி, உப்பு,காரம், புளிப்பு சேர்த்துத் தயிர் சாதம் மாதிரி
ஆறவைத்து , கையினால் பாலிதீன் பேப்பர்கள் மீது வடாம்களாக
இட்டு வெயிலில் 2, 3, நாட்கள் காயவைத்து நன்றாக உலர்ந்த
வடாங்களைப் பத்திரப் படுத்த வேண்டும். அவ்வளவுதான்.