வாழைத் தண்டு பிட்லை
ஜூன் 19, 2012 at 11:08 முப 13 பின்னூட்டங்கள்
அதிகம் நாரில்லாத அடிமரத்து வாழைத் தண்டு
வீட்டிலேயே கிடைத்ததால் பிட்லை செய்ய நன்றாக
இருந்தது.
தண்டின் மேலிருக்கும் பட்டைகளை நீக்கவும்.
வாழைத் தண்டை வறுவலுக்கு நறுக்குவது போல ஒரு
வில்லையை நறுக்கி, ஒரு விரலில் நாரை இழுத்துச் சுற்றிக்
கொண்டு, அடுத்தடுத்து வில்லைகளை நறுக்கி நாரை
நீக்கவும்.
வில்லைகளை நாலைந்தாக அடுக்கி மெல்லிய துண்டுகளாக
நறுக்கவும்.
2 டேபிள்ஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் நறுக்கிய துண்டுகளை
அவ்வப்போது போட்டு வைத்தால் தண்டு கறுக்காமல்
இருக்கும்.
வேண்டியவை
சுமாரான ஒரு துண்டு வாழைத் தண்டிற்கான பிட்லையைச்
செய்ய ஸாமான்கள்.
துவரம்பருப்பு—–அரைகப்
கொத்தமல்லி விதை—-1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—-5
கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-1 டீஸ்பூன்
மிளகு—-கால் டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—-அரைகப்
புளி—-ஒரு கோலியளவு
தக்காளி—-ஒன்று
எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன், தாளித்துக் கொட்ட கடுகு,
பெருங்காயம்.
மஞ்சள் பொடி சிறிது
ருசிக்கு—உப்பு
செய்முறை.
துவரம் பருப்போடு வேண்டுமானால் சிறிது கடலைப் பருப்பும்
சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தனியா,மிளகாய்,பருப்பு,,மிளகை துளி எண்ணெயில் வறுத்து
சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் வதக்கி,
தேங்காயையும், சேர்த்துப் பிரட்டி சீரகம் சேர்த்து ஆறியவுடன்
மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அறைத்து வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க
வைத்து, நறுக்கிய மோர்த் தண்ணீரில்போட்ட வாழைத்
தண்டை ஒட்டப் பிழிந்து போட்டு நன்றாக வேகவைக்கவும்.
புளியைக் கறைத்து விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து
கொதிக்கவிட்டு, அறைத்த கலவையையும் சேர்த்துக் கிளறி
ஒரு கொதி விட்டு, வெந்த பருப்பைச் சேர்க்கவும்.
கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு, பெருங்காயம் தாளித்துக்
கொட்டி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
கெட்டியாகவோ, சற்று தளரவோ செய்யவும்.
வாழைத் தண்டு உடம்பிற்கு நல்லது.
சுடசுட சாதத்துடன் சாப்பிட்டால் ருசிதான். உடன் சாப்பிட
இருக்கவே இருக்கிறது பொறித்த அப்பளாம், வடாம்.
இது சென்னையில் செய்தது. காரம் உங்கள் இஷ்டம் போல
கூட்டிக் குறைக்கலாம்.
Entry filed under: பிட்லை வகைகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 2:14 பிப இல் ஜூன் 19, 2012
எப்பவுமே வாழைத்தண்டு கறியமுது தான் செய்வேன். அடுத்த முறை பிட்லைதான். பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுவது போல இருக்கிறது. அருமையான செய்முறை.
2.
chollukireen | 11:29 முப இல் ஜூன் 20, 2012
வாவா, பிட்லை என்ன மோர்க்கூட்டும் போஸ்ட் பண்ணி விடுகிறேன்.சென்னையின் வீட்டுத்தோட்ட தண்டு. அடுத்தடுத்து செய்து, ட்ராப்டில் தூங்கிண்டிருந்தது. ஒரு ரவுண்ட் ப்ளாகில் சுற்றிவரட்டுமே என்று அனுப்பறேன்.நம்ம ஊர்க்காரர்களுக்கு இது புதுசில்லை. கருத்துக்கு நன்றி
அன்புடன்
3.
chitrasundar5 | 2:15 பிப இல் ஜூன் 19, 2012
காமாஷி அம்மா,
வாழைத்தண்டு பிட்லை நல்லாருக்கு.ஒரு சின்ன தண்டு அனுப்பிவிட்டிங்கன்னா செய்துடலாம்.இந்த வெயிலுக்கு நல்லாருக்கும்.நானும் இங்கு வந்த புதிதில் எல்லா கடைகளிலும் தேடுவேன்.கிடைக்காது என்றதும் சுத்தமா மறந்தாச்சு. கிடைத்தபோது சாப்பிடவில்லை. இல்லை யெனும்போது செய்து சாப்பிட ஆசை. என்றைக்காவது வாழைத்தண்டு செய்வதாக இருந்தால் உங்க ப்ளாக்கிற்குத்தான் வருவேன்.நல்ல பகிர்வு.நன்றி அம்மா.
4.
chollukireen | 11:09 முப இல் ஜூன் 20, 2012
சென்னையில் அக்கம்,பக்கம் எல்லோருக்கும், பழம்,தண்டு என்று பகிர்ந்து கொடுத்து செய்ததுதான்
இந்தக் குறிப்பும்….என்ன ப்ரமாதம். வாழைத் தண்டுதானே. அனுப்பிட்டா போறது.. வேறு ஏதாவது
காயைப் போட்டுகூட இம்மாதிறி செய்யலாம்னு
தோன்றுகிரது. அன்புடன்
5.
Mahi | 7:27 பிப இல் ஜூன் 19, 2012
வாழைத்தண்டு பிட்லை புதிதாக இருக்கிறதும்மா. எங்க வீட்டில் பொரியல் செய்வோம், அல்லது நறுக்கி தயிர்ப் பச்சடியாக செய்வோம். இப்படி செய்ததில்லை. பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு! 🙂
சித்ராக்கா, இண்டியன் ஸ்டோரில எப்பயாவது வாழைத்தண்டு இருக்குமே! நான் நறுக்க பயந்துகொண்டு 😉 வாங்கியதில்லை! [ஊரில் அரிவாள்மணையில் அம்மா நறுக்குவதைப் பார்த்திருக்கிறேன், நானா நறுக்கியதே இல்லை! ]
6.
chollukireen | 11:02 முப இல் ஜூன் 20, 2012
எதுவுமே ப்ரமாதமில்லை. அதிலும் வாழைத் தண்டு
ஆமாம்,கறிதான் முக்கால்வாசி பேர்கள் செய்வார்கள்.
நான் அடுத்து மோர்க்கூட்டும் எழுதிவிடுகிறேன். செய்யும்போது இதுவும் ஞாபகம் வந்தால் போதும்..
என்னுடைய குறிப்பு எப்பொழுதாவது ஞாபகம்
வந்தாலே போதும். அன்புடன்
7.
chitrasundar5 | 2:32 முப இல் ஜூன் 20, 2012
மகி,
உண்மையாவா!!!இங்கு நான் பார்த்ததேயில்லை. நறுக்குவதெல்லாம் பிடிக்கும்.ஆனால் சாப்பிடத்தான் மாட்டேன்.. நல்லது என எல்லோரும் சொல்வதால் இப்போது செய்ய வேண்டுமென ஆசை.
8.
chollukireen | 10:54 முப இல் ஜூன் 20, 2012
எனக்கும் அரிவாள் மணையில் தான் நன்றாக நறுக்க வரும். என்ன எப்போதாவது செய்தால் போகிறது. அன்புடன்
9.
gardenerat60 | 8:35 முப இல் ஜூலை 14, 2014
நல்ல அய்டியாமா! வீட்டில் மரம் காய்களை வெட்டி , நான்கு நாட்கள் ஆயிற்று. காய்களை அக்கம் பக்கம் பங்கிட்டாயிற்று.
தண்டை கட் பண்ணி மோரில் போட்டு வைத்தேன். மோர் கூட்டு செய்தேன். பாக்கி உள்ளதை, பிட்லை செய்யலாம். தேங்ஸ் மா!
10.
chollukireen | 8:52 முப இல் ஜூலை 14, 2014
இதேதான் சென்னையில் இப்போதும் வாழை மரம் வெட்டி, வினியோகம் செய்து, எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.
கற்பூர வள்ளி பழ வகை மரம்.
அப்படியே வறுவலும் நேராக எண்ணெயில் சீவிச் செய்ததில்நேந்திரங்காய்ப் போல னன்றாக வருகிறது.
காயை முழுதாக தோலுடன் வேக வைத்து உறித்து
துருவலாகத் துருவிக் கொண்டு என்ன வேண்டுமோ
செய்ய முடிந்தது.
நான் மும்பை வந்து விட்டேன். ஆஹா எவ்வளவு
ஸந்தோஷம் தெரியுமா உன்னைப் பார்த்ததற்கு. அன்புடன்
11.
chollukireen | 1:56 பிப இல் ஜூலை 14, 2014
வீட்டு வாழைத்தண்டு டேஸ்டியாகத்தான் இருக்கும்.
12.
Geetha Sambasivam | 11:36 முப இல் ஓகஸ்ட் 18, 2015
வாழைத்தண்டில் பிட்லை செய்தது இல்லை. முதல்முறையாகக் கேள்விப் படுகிறேன். மோர்க்கூட்டு, தேங்காய் போட்டுக் கறி, பொடிப்பொடியாக நறுக்கி எலுமிச்சம்பழம் பிழிந்தசாலட் என்று தான் பண்ணிப் பார்த்திருக்கேன். ஒரு முறை செய்து பார்க்கிறேன். இன்னொரு விஷயம்! பொதுவாகப் பிட்லை செய்யும் போது தக்காளி சேர்த்தது இல்லை. இங்கே தக்காளி சேர்க்கச் சொல்லி இருக்கீங்க. அது கட்டாயமா? அதோடு ஜீரகமும் சேர்த்து அரைப்பது இல்லை. மற்றவை எல்லாம் நீங்கள் சொன்னபடியே! 🙂
13.
chollukireen | 8:39 முப இல் ஓகஸ்ட் 19, 2015
எதுவுமே கட்டாயமில்லை. இருப்பதை வைத்துக்கொண்டெல்லாம் சமைப்பதில்லையா? ;` சொன்னால் தான் ஏதாவதொன்று இல்லாமலே ஒப்பேத்தி இருப்போம். இப்போது புத்தகம் பார்த்தால் எல்லா ஸாமான்களும் இருந்தால்தான் சமைப்பார்கள். தக்காளி இல்லாத வீடே கிடையாது. டாக்டர் புளி ஸரியில்லை என்றும் சொல்வார்கள். வருஷாந்திரத்திற்கு புளி ஸ்டாக் செய்து அதிலும் பழம்புளி பத்தியத்திற்கென்பார்கள். தக்காளி இஷ்ட தேவதைதான்.