Archive for ஜூன் 14, 2012
பீட்ரூட் ஜூஸ்
இதுவும் ரொம்பவே சுலபமானது. நான் கொஞ்சமா ஒரு பீட்ரூட்டில்
செய்து பார்த்தேன். மாதிரிக்கு துளித் துளி ருசி பார்த்ததிலேயே
அரைடம்ளர் காலியாகி விட்டது. பரவாயில்லை.
இன்னொரு தரம் செய்யமுயற்சிப்பதைவிட இருப்பதையே குடுத்தால் போதும்.
யார் குறை சொல்லப் போகிறார்கள் என்று தோன்றியது.
யாருக்கு வேண்டுமோ தயங்காமல் சொல்லுங்கள்.
செய்து அனுப்பி விட்டால் போகிறது.
நான் பீட்ரூட்டை வேகவைத்துச் செய்தேன். அதனால்
பச்சையான வாஸனை இல்லாமல் நன்றாக இருந்தது.
வேண்டியவைகள் அதிகம் ஒன்றுமில்லை
பீட்ரூட்—–ஒன்று
இஞ்சித் துருவல்—-சிறிது
எலுமிச்சை சாறு—-ருசிக்குத் தக்கபடி
சர்க்கரை—-4 டீஸ்பூன்
காலா நமக்—-அரை டீஸ்பூன்.
செய்முறை
பீட்ரூட்டைத் தோல் சீவித் துண்டங்களாக்கி வேக வைக்கவும்.
மைக்ரோவேவில் வேகவைத்தாலும் ஸரி.
இஞ்சித் துருவலைச் சேர்த்து ஆறினவுடன் மிக்ஸியில்
சிறிது தண்ணீருடன் நன்றாக அறைக்கவும்.
வேகவைத்த தண்ணீர் இருந்தாலும் அதையும் சேர்த்துக்
கறைத்து பெறிய கண் உள்ள வடிக்கட்டியினால் ஜூஸை
வடிக்கட்டவும்.
சர்க்கரை, எலுமிச்சை சாறு. காலாநமக் சேர்த்துக் கலக்கவும்.
டம்ளரில் நல்ல கலருடன் ஜூஸ் தயார்.
ஐஸ் துண்டுகள் சேர்த்துப் பருகினால் ஜில் என்று
ருசியாக இருக்கும்.