Archive for ஜூன் 1, 2012
என்ன சமையல்?
ஸிம்பிலாக சமைக்கிறேன் என்று பிரதீஷா செய்த சமையலை
நீங்களும் தான் ருசியுங்களேன். அஸ்ஸாம் டாலும் சென்னை
ரஸமும் பொதுவான கறிகளும்கலந்து ருசியுங்களேன்.
ஒரு டால். பயத்தம்பருப்பும், மசூர் டாலும் கலந்து வேகவைத்து
பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி, பூண்டு,
தக்காளியை நன்றாக வதக்கிச் சேர்த்து உப்பு, மஞ்சளுடன்
சேர்த்துக் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்தது.
மஸாலா போடலை. துளி சீரகப்பொடி போட்டது.
உருளைக் கிழங்கை மெல்லியதாக நறுக்கி 1ஸ்பூன்
எண்ணெயுடன் 5 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்து எடுத்து
வாணலியில் எண்ணெயில் கடுகைத் தாளித்து, உப்பு,காரம்
மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கியது.
அடுத்து நிறைய தக்காளியை மைக்ரோவேவில் வேகவைத்து
எடுத்து துளி புளி சேர்த்து கறைத்து சாறு எடுத்து, ரஸப்பொடி,உப்பு,
பூண்டு விழுதுடன் நிதான தீயில் நன்றாகக் கொதித்துக்
குறைந்தவுடன், துவரம்பருப்பு வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி
ஒது கொதி வந்தவுடன் இறக்கி, நெய்யில் கடுகு, பெருங்காயம்
பொரித்துக் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கியது.
கமகம ரஸம்.
வீட்டில் தோய்த்த புளிப்பில்லாத தயிர்.
கொஞ்சம் ஊறுகாய்.
வதக்கிய வெண்டைக்காய் கறி.
நடுவில் குட்டி காப்ஸிகம் பஜ்ஜி அதுவும் சுடச்சுட
பாக்கலாமா, கேட்கலாமா, ருசிக்கலாமா
பஜ்ஜியைச் செய்யலாம்.
வேண்டிய அளவு–
-கடலைமாவு,துளி அரிசி மாவு
ருசிக்கு வேண்டிய உப்பு,மிளகாய்ப்பொடி
துளி ஸோடா உப்பு
துளி பெருங்காயப்பொடி
கொத்தமல்லி இலை கொஞ்சம்
கேப்ஸிகம் வேண்டியஅளவு.
செய்முறை
மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
முழுதாகவும் போடலாம்.
உப்பு, ஸோடா, பெருங்காயம், மிளகாய்ப்பொடி யாவற்றையும்
மாவுடன் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.
சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து இட்டிலி மாவு பதத்தில்
நன்றாகக் கறைத்துக் கொள்ளவும்.கொத்தமல்லியையும்
சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கி வைத்திருப்பதை
மாவில் அமிழும்படி தோய்த்து பஜ்ஜிகளாகப் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டாமல் சட்டுவத்தால் பிரித்து விட்டு,
சிவந்து வரும்போது திருப்பிவிட்டு மறுபுறமும் சிவந்ததும்
எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்தெடுத்து உபயோகப் படுத்தவும்.
எண்ணெய் திட்டமான சூட்டில் இருக்கவும்.
புகையும்படி அதிக சூடு வேண்டாம்.
என்ன சமையல் என்கிற தலைப்பு. சமையல் சொல்லிவிட்டேன்.
குக்கரில் சாதம் ரெடி. அப்பளாமும் பொரித்தாகிறது.
எல்லாரும் வந்து சாப்பிடலாம்.
மேஜையிலும் வைத்தாகிவிட்டது.