Archive for மே, 2012
புடலங்காய்க் கறி.
இதுவும் சுலபமான தயாரிப்புதான். நல்ல பிஞ்சு காயாக இருந்தால் ,
கறி, கூட்டு,பச்சடி என பலவிதங்களில் தயார் செய்யலாம்.
பத்தியச் சாப்பாட்டில் கூட புடலங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
துவையல்,வறுவல்,மோர்க்குழம்பு என விதவிதமாகத் தயார்
செய்யலாம்.
முதலில் கறி செய்வோம்.
வேண்டியவைகள்.
புடலங்காய்—அறை கிலோ
பயத்தம் பருப்பு—-கால் கப்.
தேங்காய்த் துருவல்—-கால்கப்
மிளகாய்—-காரம் வேண்டிய அளவிற்கு
இஞ்சி—-வாஸனைக்காக சிறிது
ருசிக்கு—உப்பு
மஞ்சள்ப் பொடி—சிறிது
தாளித்துக் கொட்ட –எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு—சிறிதளவு
செய்முறை
புடலங்காயை அலம்பி நறுக்கி, விதைகளிருந்தால் அகற்றிவிட்டு
பொடியாக நறுக்கவும். பிஞ்சு காயானால் அப்படியே
கூட நறுக்கலாம்.
பயத்தம் பருப்பைக் களைந்து தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
பருப்பையும், நறுக்கின காயையும் ஒன்று சேர்த்து உப்பு,
மஞ்சள்ப்பொடியைக் கலந்து கையினால் அழுத்தமாகப் பிசறி
ஊற வைக்கவும்.
அழுத்திப் பிசறுவதால் பருப்பு காய் விடும் தண்ணீரிலேயே
நன்றாக ஊறும். சற்று ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுத்தம்
பருப்பைத் தாளித்துக் கொட்டி இஞ்சி, பச்சை மிளகாயை
வதக்கி, காய்,பருப்புக் கலவையைக் கொட்டி வதக்கவும்.
நிதான தீயில் மூடிவைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து
காயை வதக்கவும்.
ஸிம்மில் வைத்தால் கூட ஸரியாக இருக்கும்.
காய்பருப்பு வதங்கியதும் தேங்காய்த் துருவலைச்
சேர்த்துக் கிளறி வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
பத்தியச் சாப்பாட்டில் தேங்காய் போடுவதில்லை.
ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம்.
மிளகாய் ஸவுகரியம்போல காய்ந்ததோ, பச்சையோ
சேர்க்கலாம். பருப்பு,தேங்காயும் கூட்டிக் குரைக்கலாம்.
அரைக்கீரை மசியல்.
இந்தக்கீரையும் ருசியானதுதான்.பார்ப்போம்.
வேண்டியவைகள்
அரைக்கீரை—ஒருகட்டு
கீரையை ஆய்ந்து அலசி ப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—2
நறுக்கிய வெங்காயம்—சிறிது
பூண்டு இதழ்—-4
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—1 டீஸ்பூன்
பயத்தம் பருப்பு—-2 பிடித்தபிடி
எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்
செய்முறை.
பருப்பைச் சற்று வறுத்துக் களைந்து கீரையையும் வடிக்கட்டிச்
சேர்த்து திட்டமான தண்ணீருடன் ப்ரஷர் குக்கரில் வேக
வைத்து இறக்கவும்.
2 விஸிலே போதுமானது.
உளுத்தம் பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெயில் வறுத்து
நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய்,பூண்டு, வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.
சீரகம் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்புடன் கூடிய கீரையை நன்றாக மசிக்கவும்.
அறைத்த விழுதைக் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்க
விடவும். மசியலாக பதத்தில் இறக்கவும்.
கடுகு தாளித்துக் கொட்டவும்.
தேங்காயும் வேண்டுமானால் அறைக்கும் போது சேர்க்கவும்.
அரைத்துவிட்ட மாங்காய் ஸாம்பார்.
இந்த ஸாம்பாரும்அதிகம் புளிப்பில்லாத மாங்காயில் செய்தால்
மிகவும் நன்றாக இருக்கும். ஒட்டு மாங்காயான கிளி மூக்கு மாங்காயில் செய்ததுதான் இந்த ஸாம்பாரும்.
காயை நறுக்கி வாயில் போட்டுப் பார்த்தால் புளிப்பைப் பற்றி
எவ்வளவு என்று தானாகவே தெறிந்து போகும்.
அதற்கேற்றார்போல் உப்புக் காரம் சேர்க்கலாம். ஸரி
இப்போது நாம் ஒரு திட்டமான மாங்காய்க்குண்டானதைப்
பார்ப்போம்.
வேண்டியவைகள்
மாங்காய்—-திட்டமான சைஸில்—-ஒன்று
துவரம் பருப்பு—அரைகப்
மிளகாய் வற்றல்—5அல்லது 6
பச்சை மிளகாய்—1
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
தனியா—-1 டேபிள்ஸ்பூன்.
மிளகு—7,8 மணிகள்
அரிசி—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—கால்கப்
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், பெருங்காயம்.
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறிவேப்பிலை.
விருப்பப் பட்டால் பாதி கேப்ஸிகம்
ருசிக்கு—-உப்பு
செய்முறை.
துவரம் பருப்பைக் களைந்து திட்டமாக தண்ணீர் விட்டு மஞ்சள்பொடி
சேர்த்து ப்ரஷர்குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் மிளகாய் ,தனியா, அரிசி, மிளகை வறுத்து
,அதனுடன் தேங்காயையும் வதக்கி இறக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் சிறிது ஜலம் தெளித்து அறைத்து
எடுக்கவும்.
மாங்காயைக் கொட்டை நீக்கி துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
கேப்ஸிகம், பச்சைமிளகாயு், மாங்காயுடன் வேண்டிய உப்பு சேர்த்து
குழம்பு வைக்கும்பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மாங்காய் வெந்தவுடன் அறைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி
விடவும்.
வெந்த பருப்பைக் கரைத்துச் சேர்த்து பின்னும் நன்றாக கொதிக்கவிட்டு
இறக்கவும்.
நல்லண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
நான் வெங்காயம் போடுவதில்லை.
வேண்டியவர்கள் ஸாம்பார் வெங்காயத்தைச் சேர்த்துக்
கொண்டு செய்யவும்.
ருசிகள் பலவிதம். அதிலே இது ஒருவிதம்.
தடித்த தோல் உள்ள மாங்காயாக இருந்தால் தோலைச் சீவி
விட்டுச் சேர்க்கவும். உப்பு, புளிப்பு, காரத்திற்கு தகுந்தபடி
ஸாம்பாரை கெட்டியாகவோ, சிறிது நெகிழ்வாகவோ
தயாரிக்கவும். மாங்காய் ஸீஸன். செய்து பார்க்கலாமே.
பன்னா. மாங்காஜூஸ்
ஒரு மாங்காய் உபயோகிக்காமல் இருந்தது. அதையும்
உபயோகிக்கலாம் என்ன செய்யலாம்? மாங்காய் ஜூஸ்
ஸுமன் செய்வது ஞாபகத்திற்கு வந்தது. செய்தாச்சு.
குடித்தும் ஆச்சு. பகிர்ந்து கொள்வதுதானே என் பழக்கம்.
இதையும் பாருங்கள். பருகுங்கள்.
வேண்டியவைகள்
அதே புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காய்—ஒன்று
வேறு வகையானாலும் அதிகம் புளிப்பில்லாத மாங்காயானாலும்ஸரி.
சர்க்கரை—-4 டீஸ்பூன்.வேண்டிய அளவு அதிகறிக்கவும்.
ஏலக்காய்–1 பொடிக்கவும்.
காலா நமக்கென்று சொல்லும் உப்பு அரை டீஸ்பூன்.
இஞ்சி வாஸனைக்குத் துளி
புதினா—4 இலைகள்
செய்முறை
மாங்காயை அப்படியே முழுதாக குக்கரில் வேகவைத்து
எடுக்கவும்.
பருப்பு வேகவைக்கும் போது மேலே ஒரு பாத்திரத்தில்
துளி தண்ணீருடன் மாங்காயை வைத்தாலும் ப்ரஷரில்
நன்றாக வெந்து விடும்.
ஆறினவுடன் மாங்காயின் தோலையும் கொட்டையையும்
எடுத்து விடவும்.
இப்போது மாங்காயின் உட்பகுதியை கரண்டியினாலோ,
க்ரஷ்ஷரினாலோ நன்றாக மசிக்கவும்.
2 கப் குளுமையான தண்ணீர் விட்டுக் கறைத்து பெறிய
கண்உடைய சல்லடையிலோ, வடிக்கட்டியிலோ வடிக்கட்டவும்.
சர்க்கரை, காலாநமக்,ஏலக்காய் ஒன்று சேர்த்துக் கலக்கவும்.
இஞ்சித் துருவலில் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துப் பிழிந்து
கலக்கவும்.
ருசி பார்க்கவும்.
புளிப்புக்கு ஏற்ற ஜலம் சேர்க்கவும். இனிப்பும் அப்படியே.
புதினா இலையைச் சற்று கசக்கினாற்போல தயாரான ஜூஸைக்
கண்ணாடித் டம்ளரில்விட்டு மேலே அலங்கரித்துக் கொடுக்கவும்.
எடுத்து விட்டு குடிக்கட்டும்.ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும்.
இங்கே புதினா முடிந்து விட்டது. போடாவிட்டால் கூட ருசியாக
இருந்தது.
செய்து தான்பாருங்களேன்.
பச்சை கொத்தமல்லிப்பொடி
கொத்தமல்லித் தழை வாங்கியது அளவுக்கு அதிகமாக மிகுந்து
விடும் போல இருந்தது. காரம் அதிகமில்லாமல் பொடியாகச்
செய்து உபயோகிக்கலாம் என்று செய்தது. சாதத்திலேயே
நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்போல அமைந்து விட்டது.
வேண்டியவைகள்
நிறைய மிகுந்த கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து
நிழலில் ஃபேன் அடியில் ஒரு துணியில் பறத்தி மூடி காற்றாட
உலர்த்தவும். ஈரம் இல்லாதிருக்க வேண்டும்.
உளுத்தம் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
குண்டு மிளகாய்—-12,அல்லது இன்னும் சில
ருசிக்கு உப்பு
துளி சர்க்கரை
பெருங்காயப்பொடி–சிறிது
புளி—-ஒரு நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—-2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பருப்புகள்,மிளகாய்
பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் வெறும் வாணலியில் , பிய்த்துப்போட்டு
லேசாக வேண்டுமானால் வறுத்துக் கொள்ளலாம்.
பருப்புகள்,மிளகாய்,உப்பு, பெருங்காயம்,சர்க்கரை
சேர்த்து மிக்ஸியில் ரவை மாதிறி கரகரப்பாகப் பொடித்து
எடுக்கவும்.
கொத்தமல்லி இலையையும் புளியையும் சேர்த்து மிக்ஸியில்
தண்ணீர் சேர்க்காமல் 4 சுற்று சுற்றினால் பேஸ்ட் பதத்தில்
இலைகள் மசியும்.
முதலில் செய்த வைத்த பொடியைச் சேர்த்து 2 சுற்று சுற்றி
எடுக்கவும்.
தயாராகும் போது சற்று சேர்ந்தாற்போல இருந்தாலும் நாழியாக
ஆக உதிர்ந்தாற்போல ஆகும்.
எல்லாவற்றுடனும் எண்ணெய் சேர்த்துச் சாப்பிட,மோர் சாதத்துடன்
தொட்டுக்கொள்ள ஏற்றது.
அதிகம் ஸாமான்கள் சேர்த்துத் தயாரித்து நாட்பட உபயோகிக்க
ஃப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
ருசிக்கேற்ப காரம் அதிகரிக்கவும்.
இதுவும் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
நாம் செய்வதிலேயே சில வித்தியாஸங்கள் அவ்வப்போது
ஏற்படுகிறது.