Archive for ஏப்ரல், 2012
பிடிகருணைக் கிழங்கு மசியல்.
வேண்டியவைகள்
துவரம் பருப்பு—-அரைகப்பிற்கு அதிகம்.
பிடிகரணை—கால் கிலோ
பச்சைமிளகாய்—-2 விருப்பம்போல நறுக்கவும்.
இஞ்சி-தோல்நீக்கிப் பொடியாக நறுக்கியது 1டேபிள்ஸ்பூன்
ஸாம்பார் வெங்காயம்,நறுக்கியது—-அரைகப்பிற்கு அதிகம்.
ரஸப்பொடி—2 டீஸ்பூன்அல்லது தனியா,மிளகாய், மிளகும்
பொடித்துப் போடலாம்.
மஞ்சள்பொடி—சிறிது
தாளித்துக்கொட்ட
கடுகு அரை டீஸ்பூன்,வெந்தயம்அரை டீஸ்பூன்,க.பருப்பு,உ.பருப்பு
வகைக்கு 1 டீஸ்பூன்,
பெருங்காயம்—சிறிது
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை விருப்பத்திற்கு
ருசிக்கு–உப்பு
எலுமிச்சம் பழம்—2
தக்காளியும் போடலாம்.
செய்முறை
பருப்பைக் களைந்து தண்ணீர், மஞ்சள்பொடி சேர்த்து ப்ரஷர்
குக்கரில் பருப்பை நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
கருணைக் கிழங்கை நன்றாக அலம்பிச் சற்றுப் பெறிய
துண்டங்களாக நறுக்கவும்.
சின்ன குக்கரில் கிழங்கு அமிழத் தண்ணீர் வைத்துத் துளி
புளியையும் அதில் உருட்டிப்போட்டு ப்ரஷர் குக்கரில்
நிதானத் தீயில் 3 விசில் வரும்வரை வைத்து வேகவிடவும்.
நீராவி போனவுடனே தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த
தண்ணீரைவிட்டுத் தோலை உறிக்கவும்.
நன்றாக வெந்த கிழங்கை ஆறியபின் மிக்ஸியில், வைப்பரில்
2, 3, சுற்று சுற்றி மசிக்கவும்
உருளைக்கிழங்கு மசிப்பது போல கரண்டியினாலும் மசிக்கலாம்.
குழம்புப் பாத்திரத்திலோ, வாணலியிலோ எண்ணெயைக் காய
வைத்து தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து, வெங்காயம்,
ப.மிளகாய்,இஞ்சியை நன்றாக வதக்கி, இரண்டு கப்பிற்கு அதிகமாகவே
தண்ணீரைச் சேர்த்து, உப்பு, ரஸப்பொடி போட்டு, கொதிக்க விடவும்.
வேகவைத்துள்ள பருப்பையும், மசித்த கிழங்கையும் கொதிக்கும்
கலவையுடன் சேர்த்து நிதான தீயில் அடிக்கடி கிளறிவிட்டு அடி
பிடிக்காமல் குழம்புப் பதத்தில் இறக்கி வைக்கவும்.
எளுமிச்சம் சாற்றைப் பிழிந்து சேர்த்து கொத்தமல்லி கறி
வேப்பிலையால் அழகைக் கூட்டவும்.
கெட்டியாகவோ, சற்று நீர்க்கவோ இருப்பதற்கு நீங்கள்
கொதிக்கும் போதே சேர்க்கும் தண்ணீரின் அளவைக் கூட்டிக்
குறைக்கவும்.
மசியல் ருசியாக இருக்கும். சாதத்துடன்,கலந்து சாப்பிடவும்,
மற்றவைகளுடன் தொட்டுக் கொள்ளவும் ஏற்றது.
கருணைக் கிழங்கு காரும் தன்மையுடையது.
புளியுடன் வேகவைப்பதாலும், பிறகு எலுமிச்சை சாறு
சேர்ப்பதாலும், காரும் தன்மை குறைந்து ருசியாக
இருக்கும்.
இந்தக்கிழங்கும் மருத்துவ சக்தி அதிகம் கொண்டது.
புதிய கிழங்கைவிட சற்று நாட்களான கிழங்கு நல்லது.
கிராமங்களில் நெல் புழுக்கும்போது அதில் வைத்துப்
புழுக்கி எடுத்து உபயோகிக்கும் வழக்கம் உண்டு.
காறல் இருக்காது.
பிரண்டைத் துவையல்.
பிரண்டை ஒரு மருத்துவ குணமுள்ள கொடிவகையைச் சேர்ந்த
தாவரம்.
மருத்துவத்தில் பலவகைகளில் உபயோகமாவதை சமையலிலும்
சில வழிகளில் சேர்த்துச் செய்வதுண்டு. சிரார்த்தம் செய்யும் போது
முக்கியமாக பிரண்டை சேர்த்துத் துவையல் செய்வது முக்கிய
வியஞ்ஜனமாகக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
பெண்களிருந்தால் கட்டாயம் பிரண்டைத் துவையல் சமையலில்
இடம் பெறும்.
வாய்வுத் தொந்திரவு ஏற்படாமல் விசேஷ சாப்பாட்டைச்
சீரணம் செய்யும் கருத்தில்தான் இப்பழக்கம் வழக்கத்தில்
இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதே போல உளுந்து அப்பளாம் தயாரிக்கும் போது பிரண்டையை
அரைத்து உப்புடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிக்கட்டி
ஆறினவுடன் உளுத்தமாவில் சேர்த்துப் பிசைந்து இடித்துத்தான்
அப்பளாம் தயாரிப்பது வழக்கம்.
எனக்கு சென்னையில் தொட்டியில் துளிர் விட்டிருந்த பிரண்டையைப்
பார்த்ததும், குறைந்த பட்சம் துவையலும், ப்ளாகும் மனஸில்
வந்து விட்டது.
இப்படி அப்படி பெண்ணைப் பண்ணச் சொல்லி சொல்லிப் படம்
எடுத்து வந்து விட்டேன்.
கொஞ்சம் கூடவே சில மாறுதலும் செய்து செய்தது.
என்ன ஒன்று ? செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும்
இப்படியும் ஒரு துவையல் செய்யலாம்.சொல்லுகிறேனையும்
நீங்கள் யாவரும் ஏதாவதொரு ஸமயத்தில்
நினைக்கலாம் என்ற ஒரு நப்பாசை. பதம் ஸரிதானே?
வேண்டியவைகள்.
வெள்ளை எள்-2-டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 ஸ்பூன்
குண்டு மிளகாய்-8. வேறு மிளகாய்
ஆனால் காரத்திற்குத் தக்கபடி
தோல் சீவிய நீண்ட அளவு 2இஞ்சி
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
புளி சின்ன எலுமிச்சையளவு.
பெருங்காயம்—சிறிது
உப்பு –ருசிக்கு . மிளகு—6 எண்ணிக்கையில்
தேங்காய்த் துருவல்–2 டேபிள்ஸ்பூன்
பிரண்டையை தண்ணீரில் அலம்பித் துடைக்கவும்.
இளம் பிரண்டை—4பாகங்கள். நடு கணுவை நீக்கி நறுக்கவும்.
இரண்டு பாகத்தையும் சேர்க்கும் இடம் கணுவு . கரும்புடைய
ஜாயின்ட் மாதிரி.
பிரண்டைக்கு நறுக்கிய பாகம் தொட்டால் சிறிது அறிக்கும்
தன்மை உண்டு.
நறுக்கியதைக் கரண்டியால் எடுக்கவும்.
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய
பிரண்டையை சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின்னர் நறுக்கிய இஞ்சியையும் வதக்கி எடுக்கவும்.
பருப்புகளையும்.மிளகாய், பெருங்காயத்தையும் சிவக்க வறுத்து
எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
புளி, மிளகாய், இஞ்சி, வதக்கிய பிரண்டை, தேங்காய்த் துருவல்
யாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மசிய
அறைக்கவும்.
மிகுதி வருத்த ஸாமான்கள் உப்பு சேர்த்து மேலும் சற்று
கரகர பதத்தில் கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.
துவையலில் காரல் ஒன்றும் இருக்காது. சாதத்தில் நெய்
சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பச்சைமோர், மோர்க்குழம்பு என தொட்டுக் கொண்டு
சாப்பிட ருசிதான்.
சிரார்த்த துவையலில். தேங்காயிராது. கறிவேப்பிலையும்
எள்ளுண்டையும் வைத்து பருப்புகள்,மிளகாய், புளி சேர்த்து
அரைப்பார்கள்.
அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.
எதுவோ எனக்குப் பிடித்தமானது. எழுத பிரண்டை கிடைத்தது.
அதுதான் விசேஷம்.
முதுமைக்கு மதிப்பு.
ஜெனிவாவினின்றும் என்னுடைய கடைசி மகன் எனக்கு அவ்விடம்
வந்த மலர் பொக்கேயின் போட்டோவுடன் அனுப்பிய செய்தி.
BIRTHDAY FLOWERS FROM MUNICIPAL CORPORATION FOR
AMMA ON TURNING 80. IMPOARTANT MAINLY BECAUSE OF
THE WORDS IN THE MESSAGE.
mahalingam .mahesh. unaids .org 18—4—2012
என்னுடைய மகனுடன் வசிக்கும்
எனக்குக் கிடைத்த பெறிய மதிப்பாக எனக்குத் தோன்றியதை
உங்களுடன் பகிர்வதில் எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி.
அன்புடன் சொல்லுகிறேன்.
அரட்டிகாய வேப்புடு.
அரட்டிகாய வேப்புடு புதுசா எதுவோ என்று பார்த்தால்
தெலுங்கில் வாழைக்காய் வறுவல் சில மாறுதல்களுடன்.
அவ்வளவுதான்.
நான் இங்கு வந்த ஸமயம் வாழைமரங்கள் குலைகள் முற்றி
ஒன்றன் பின் ஒன்றாக பழமாகவும், காயாகவும், தண்டாகவும்
உபயோகப் படுத்த வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.
வறுவல், கறி, தண்டில் கறி,கூட்டு,ஸாலட், என விதவிதமாக
செய்ய முடிந்தது. ஆட்கள் வேலை செய்ததால் நிறைய சாப்பாட்டுத்
தேவையும் இருந்தது. நிறைய செய்ததைச் சாப்பிடவும் ஆட்களிருந்தால்
குஷியோ குஷிதான்.
அதில் சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழை மரத்தின்
பட்டைகளைக்கூட இலை மாதிரி கிராமங்களில் சீவி உபயோகப்
படுத்துவார்கள்.
அம் மாதிரி ஒரு இலை தயாரித்தும் ஸந்தோஷப் பட்டேன்.
போட்ட இரண்டு குலைகளும் கல்பூர வல்லி என்ற நல்ல பழ
வகையைச் சேர்ந்தது.
நான் அதை வகைவகையாகச் செய து அதைப் பிடித்தும்
போட முயன்று இருக்கிறேன்.
வீட்டில் விளைந்தது என்றால் அலாதி ஸந்தோஷம்தானே?
அம்மாதிரி அந்தக்காயில் செய்த வேப்புடுவைப் பார்க்கலாம்.
முற்றிய எந்த வாழைக்காயிலும் இதைச் செய்யலாம்.
நான் இந்தக் கல்பூர வல்லி காயிலே செய்ததுதான் இது.
செய்த வகையைப் பார்ப்போமா?
~ஒன்றும் இவ்வளவு, அவ்வளவு என்று நான் குறிப்பிடவில்லை.
நல்ல முற்றிய வாழைக்காயைத் தோல்சீவித் தண்ணீரில் போடவும்.
வாழைக்காயைச் சற்றுப் பருமனாக ஒரு அங்குல அளவிற்குநீளமான
மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு சுத்தமான துணியில் பரப்பி
ஈரம் போக காற்றாட விடவும். எடுத்து துளி மஞ்சள்பொடி பிசறவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய காய்த்துண்டுகளை
கரகர பதத்தில் வறுத்து எடுக்கவும்.
வேறொரு வாணலியில் ஒருஸ்பூன் எண்ணெயில் சிறிது மெல்லியதாக
நறுக்கிய வெங்காயத்தை, முறுகலாக வதக்கவும்.
உப்பு மிளகாய்ப் பொடி வறுத்த வறுவலில் பிசறி வெங்காயத்துடன் சேர்த்து
முறுகலாகும் வரை வதக்கவும். இறக்கவும்.
பச்சைக் கறிவேப்பிலையும், ஒரு சின்ன மிளகாயும் வறுத்துச் சேர்த்து
அலங்கரிக்கவும். கடுகு, உ.பருப்பும் தாளிக்கலாம்.
டேபிளில் எல்லாப் பொருட்களுடனும் இதையும் அலங்காரமாகச் சுவைக்கக்
கொடுக்கலாம்.
தெலுங்குப் பெயரில் அரட்டிகாய வேப்புடு என்ற 5 நட்சத்திர ஹோட்டல்
சமையலும் இதுதான். அதான் வறுவல்தான்.
ஸாதாரண வறுவல் காயை மெல்லியதாக நறுக்கி வறுத்து உப்புக் காரம்
பிசறுவோம்.
என்னுடைய 231 ஆவது போஸ்ட் இது. நாளை 17—4–2012 எனக்கு 80 வயது
முடிகிறது. என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாக் அபிமானிகளுக்கு சிலவில்லாத
சென்னை வீட்டு தோட்டத்தின் வாழைப்பழங்களைக் காட்டி அளவில்லாத அன்புடன்
எங்கள் ஆசீர்வாதங்களைத் தெறிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
மும்பை.
மாங்காய்ப் பச்சடி
இங்கே மாங்காய் ஸீஸன். மாங்காய்ப் பச்சடி செய்து சாப்பிடலாம்.
ஒட்டு மாங்காய் அதிக புளிப்பு இருக்காது. அதைப் பார்த்ததும், ஸரி
இதையும் ருசித்து,புசித்து பிடித்து, போடுவோம் என்றுத் தோன்றியது.
செய்யலாமே
வேண்டியவைகள்.
கிளி மூக்கு மாங்காய்—-ஒன்று
வெல்லத்தூள்—1 கப்பைவிட கொஞ்சம் அதிகம்.
பச்சை மிளகாய்—2 காரமிளகாய்
முந்திரி—7 அல்லது 8 துண்டுகள்
ஏலக்காய்—1 பொடிக்கவும்
செய்முறை.
மாங்காயை அலம்பித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தோல் பருமனாக இருந்தால் தோலைச் சீவவும்.
இந்த வகை மாங்காயிற்கு அப்படியே போடலாம்.
பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு நான் மைக்ரோவேவில்தான்
10 நிமிஷங்கள் ஹைபவரில் வேகவைத்து எடுத்தேன்.
வெல்லப் பொடியை சிறிது ஜலம் விட்டுக் கறைத்து தீயில்
2அல்லது 3 கொதிவிட்டு இறக்கி வடிக்கட்டவும்.
வடிக்கட்டிய வெல்ல ஜலத்தைக் கொதிக்கவிட்டு அதில்
வெந்த மாங்காய், பச்சை மிளகாயைச் சேர்த்து நிதான தீயில்
சற்று கெட்டியாகும்வரை கொதிக்க வைத்து இறக்கி ஏலப்பொடி
சேர்க்கவும்.
முந்திரியை ஒடித்து பச்சையாகவோ, வறுத்தோ அலங்கரிக்கவும்.
துளி உப்பு சேர்க்கலாம்.
இனிமையும்,காரமுமான மாங்காய்ப் பச்சடி தயார்.
புளிப்பு மாங்காய்களிலும் தயாரிக்கலாம்.
புதுவருஷத்திலும் ,வேப்பம்பூ பச்சடியுடன் இந்தப் பச்சடியும்
செய்வதுண்டு. இதிலேயே துளி வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்து
சாஸ்திரத்திற்கு சேர்த்துவிட்டேன் என்று சொல்பவர்களும் உண்டு.
எது எப்படியோ புதுவருஷத்திற்கு மாங்காய்ப் பச்சடியை
சொல்லியிருக்கிறேன்.சித்திரைப் புத்தாண்டு நந்தன வருஷத்தை
இனிமையாக வரவேற்போம்.
எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் நந்தன வருஷத்து
சித்திரையை வரவேற்று வாழ்த்துகளைக் கூறும்
அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.
அகத்திக்கீரைப் பொடித்தூவல்
வேண்டியவைகள்
அகத்திக்கீரை—1 கட்டு
பயத்தம்பருப்பு—-2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல்—2டேபிள்ஸ்பூன்.
குண்டு மிளகாய் வற்றல்—-2
-அரைடீஸ்பூன் கடுகு
,உ.பருப்பு—-1டீஸ்பூன்
எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை—2 டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
மஞ்சள் பொடி—துளி
அகத்திக் கீரையை ஒவ்வொரு வரியாக உறுவினறுக்கினால்
நறுக்குவதற்கு சுலபமாக இருக்கும். மெல்லியதாக நறுக்கவும்
முடியும்.
சுமார் இரண்டரை கப் நறுக்கிய கீரையை நன்றாகத் தண்ணீரில்
அலசி வடியவிடவும்.
பாசிப்பருப்பை முன்னதாகவே கைபொறுக்கும் அளவிற்கு சூடாக்கி
தண்ணீரில் ஊரவைக்கவும்.
மைக்ரோவேவ் பாத்திரத்தில்,ஊறி வடியவைத்த பருப்பு, கீரை,துளி
சர்க்கரை சேர்த்துக் கலந்து ஹைபவரில் 6 நிமிஷங்கள் மைக்ரோவேவ்
செய்து எடுக்கவும்.
திரும்பவும் இரண்டு, இரண்டு நிமிஷங்கள் இரண்டுமுறை
வைத்தெடுத்து எடுக்கவும்.
வேண்டுமானால் சிறிது ஜலம் தெளிக்கலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,மிளகாய், உ.பருப்பு தாளித்து
கீரையை உப்பு சேர்த்து வதக்கவும்.
இறக்குமுன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இரக்கவும்.
கீரை ஒரிஜனலாக சிறிது கசப்புத்தன்மை உடையது.
குளிர் காலத்தில் டிஸம்பர் ஜனவரியில் கீரை பூவுடன் சேர்த்துக்
கிடைக்கும்.
கார்த்திமாதக் கீரை கணுவெல்லாம் இனிப்பு என்ற வசனம் உண்டு.
அவ்வளவு நன்றாக இருக்கும்.
மைக்ரோவேவில் செய்யாவிட்டால் கீரையை சிறிது ஜலத்தில்
வேகவிட்டு வடித்தும் செய்யலாம்.
ஒவ்வொரு ஏகாதசி யிலும் பட்டினி விரதமிருப்பவர்கள் மறுநாள்
துவாதசியன்று சமையலில் இந்தக் கீரை கட்டாயமாக இடம்
பெறும்.
உடல் நலத்திற்கு எப்போதாவது ஒருநாள் சாப்பிட்டாற் கூட
நன்மை தரும் கீரை வகைஇது.
பசுவிற்கு இந்தக் கீரையை வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது என்று
நம்பிக்கையும் உண்டு.
துவாதசி சமையலில் தொடர்ந்து சுண்டைக்காய் குழம்புக்கு அடுத்து
அகத்திக்கீரை பொடித்தூவல். படித்தோ, சமைத்தோ, ஞாபகம் வைத்தோ
இதையும் பாருங்கள்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சிறிது உப்பு சேர்த்த பருப்பு,நெய்,மோரோ,
தயிரோ இன்னும் எது வேண்டுமோ அதைக் கூட்டி ஏகாதசி பட்டினி
உபவாஸம் இல்லாவிட்டாலும், துவாதசி பாரணையைப் பற்றியாவது
உங்களுக்கு அறிமுகமாக்கியதில் எனக்கு ஒரு திருப்தி. ஸரிதானே?
பச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.
வெந்தயக் குழம்பைத்தான் நாங்கள் மெந்திக் குழம்பு என்று பேச்சு
வழக்கில் சொல்லுவோம்.
துவாதசி சமையலில் சுண்டைக்காயும் ஒரு முக்கியமான இடத்தை
வகிக்கிறது.
சென்னையில் சுண்டைக்காய் சுலபமாக கிடைத்ததால் குழம்பும்
செய்து, சுண்டைக்காய்ப் பருப்புசிலியும், ப்ளாகில் போட செய்தும்,
படமெடுத்தும் வைத்திருக்கிறேன். சுலப முறையை எழுதுகிறேன்.
பருப்புசிலியைப் பின்னாடி பார்ப்போம். பலாக்கொட்டையும் பழ
சீஸனானதால் கிடைத்ததைச் சேர்த்துப் போட்டு ச் செய்தேன்.
இப்போது குழம்பிற்கு வேண்டியதைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்
புளி ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தாளித்துக்கொட்ட—கடுகு—அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—-1
நல்லெண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
வெல்லம்—சிறிது
ருசிக்கு—உப்பு
ஸாம்பார்ப் பொடி—3 டீஸ்பூன்
அரிசிமாவு—ஒரு டீஸ்பூன்
முக்கியமான பச்சை சுண்டைக்காய்—கால்கப்
இருந்தால் பலாக்கொட்டை—7 அல்லது 8
கறிவேப்பிலை—சிறிது.
செய்முறை
புளியை 2 கப் ஜலம் விட்டுக் கறைத்துக் கொள்ளவும்.
பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி நன்றாக நசுக்கித்
தண்ணீரில் அலசவும்.
விதைகள் ஓரளவிற்கு வெளியேறும். வடிக் கட்டவும்.
பலாக் கொட்டையையும் மேல் தோல் நீக்கி உட் பருப்பைத்
துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு
வெந்தயம்,பருப்புகள்,பெருங்காயம்,மிளகாய் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, சுண்டைக்காயைச் சேர்த்து நிதான தீயில்
நன்றாக வதக்கவும்.
சுண்டைக்காய் வதங்கியதும், ஸாம்பார்ப் பொடியைச் சேர்த்துச்
சற்றுப் பிரட்டி புளி ஜலத்தைச் சேர்க்கவும்.பலாக் கொட்டையையும்
உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
துவாதசி சமையல் ஆனபடியால் பூண்டு, வெங்காயம்
சேர்ப்பதில்லை.
துளி வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
குழம்பு சற்று சுண்டி சுண்டைக்காய் வெந்தவுடன்
சற்று திக்காக இருப்பதற்காக அரிசி மாவைத் துளி
ஜலத்தில் கறைத்துக் கொட்டிக் கொதிக்கவைத்து இறக்கவும்.
முன்போ, பின்போ கறிவேப்பிலை சேர்க்கவும்.கமகம
குழம்பு தயார்.
சுண்டைக்காயும், பலாக்கொட்டையும் ஸரியான ஜோடி.
ஸாம்பார் பொடிக்குப் பதில்,தனியா,மிளகாய், மிளகுப் பொடி
சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சேர்த்து வறுத்து அறைத்தும்
செய்யலாம் சாதத்துடன். நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பருப்பு சாதத்துடன் துவாதசியன்று சூப்பர் காம்பினேஷன்.