Archive for ஏப்ரல் 26, 2012
பிரண்டைத் துவையல்.
பிரண்டை ஒரு மருத்துவ குணமுள்ள கொடிவகையைச் சேர்ந்த
தாவரம்.
மருத்துவத்தில் பலவகைகளில் உபயோகமாவதை சமையலிலும்
சில வழிகளில் சேர்த்துச் செய்வதுண்டு. சிரார்த்தம் செய்யும் போது
முக்கியமாக பிரண்டை சேர்த்துத் துவையல் செய்வது முக்கிய
வியஞ்ஜனமாகக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
பெண்களிருந்தால் கட்டாயம் பிரண்டைத் துவையல் சமையலில்
இடம் பெறும்.
வாய்வுத் தொந்திரவு ஏற்படாமல் விசேஷ சாப்பாட்டைச்
சீரணம் செய்யும் கருத்தில்தான் இப்பழக்கம் வழக்கத்தில்
இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதே போல உளுந்து அப்பளாம் தயாரிக்கும் போது பிரண்டையை
அரைத்து உப்புடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிக்கட்டி
ஆறினவுடன் உளுத்தமாவில் சேர்த்துப் பிசைந்து இடித்துத்தான்
அப்பளாம் தயாரிப்பது வழக்கம்.
எனக்கு சென்னையில் தொட்டியில் துளிர் விட்டிருந்த பிரண்டையைப்
பார்த்ததும், குறைந்த பட்சம் துவையலும், ப்ளாகும் மனஸில்
வந்து விட்டது.
இப்படி அப்படி பெண்ணைப் பண்ணச் சொல்லி சொல்லிப் படம்
எடுத்து வந்து விட்டேன்.
கொஞ்சம் கூடவே சில மாறுதலும் செய்து செய்தது.
என்ன ஒன்று ? செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும்
இப்படியும் ஒரு துவையல் செய்யலாம்.சொல்லுகிறேனையும்
நீங்கள் யாவரும் ஏதாவதொரு ஸமயத்தில்
நினைக்கலாம் என்ற ஒரு நப்பாசை. பதம் ஸரிதானே?
வேண்டியவைகள்.
வெள்ளை எள்-2-டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 ஸ்பூன்
குண்டு மிளகாய்-8. வேறு மிளகாய்
ஆனால் காரத்திற்குத் தக்கபடி
தோல் சீவிய நீண்ட அளவு 2இஞ்சி
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
புளி சின்ன எலுமிச்சையளவு.
பெருங்காயம்—சிறிது
உப்பு –ருசிக்கு . மிளகு—6 எண்ணிக்கையில்
தேங்காய்த் துருவல்–2 டேபிள்ஸ்பூன்
பிரண்டையை தண்ணீரில் அலம்பித் துடைக்கவும்.
இளம் பிரண்டை—4பாகங்கள். நடு கணுவை நீக்கி நறுக்கவும்.
இரண்டு பாகத்தையும் சேர்க்கும் இடம் கணுவு . கரும்புடைய
ஜாயின்ட் மாதிரி.
பிரண்டைக்கு நறுக்கிய பாகம் தொட்டால் சிறிது அறிக்கும்
தன்மை உண்டு.
நறுக்கியதைக் கரண்டியால் எடுக்கவும்.
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய
பிரண்டையை சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின்னர் நறுக்கிய இஞ்சியையும் வதக்கி எடுக்கவும்.
பருப்புகளையும்.மிளகாய், பெருங்காயத்தையும் சிவக்க வறுத்து
எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
புளி, மிளகாய், இஞ்சி, வதக்கிய பிரண்டை, தேங்காய்த் துருவல்
யாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மசிய
அறைக்கவும்.
மிகுதி வருத்த ஸாமான்கள் உப்பு சேர்த்து மேலும் சற்று
கரகர பதத்தில் கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.
துவையலில் காரல் ஒன்றும் இருக்காது. சாதத்தில் நெய்
சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பச்சைமோர், மோர்க்குழம்பு என தொட்டுக் கொண்டு
சாப்பிட ருசிதான்.
சிரார்த்த துவையலில். தேங்காயிராது. கறிவேப்பிலையும்
எள்ளுண்டையும் வைத்து பருப்புகள்,மிளகாய், புளி சேர்த்து
அரைப்பார்கள்.
அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.
எதுவோ எனக்குப் பிடித்தமானது. எழுத பிரண்டை கிடைத்தது.
அதுதான் விசேஷம்.