Archive for ஏப்ரல் 16, 2012
அரட்டிகாய வேப்புடு.
அரட்டிகாய வேப்புடு புதுசா எதுவோ என்று பார்த்தால்
தெலுங்கில் வாழைக்காய் வறுவல் சில மாறுதல்களுடன்.
அவ்வளவுதான்.
நான் இங்கு வந்த ஸமயம் வாழைமரங்கள் குலைகள் முற்றி
ஒன்றன் பின் ஒன்றாக பழமாகவும், காயாகவும், தண்டாகவும்
உபயோகப் படுத்த வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.
வறுவல், கறி, தண்டில் கறி,கூட்டு,ஸாலட், என விதவிதமாக
செய்ய முடிந்தது. ஆட்கள் வேலை செய்ததால் நிறைய சாப்பாட்டுத்
தேவையும் இருந்தது. நிறைய செய்ததைச் சாப்பிடவும் ஆட்களிருந்தால்
குஷியோ குஷிதான்.
அதில் சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழை மரத்தின்
பட்டைகளைக்கூட இலை மாதிரி கிராமங்களில் சீவி உபயோகப்
படுத்துவார்கள்.
அம் மாதிரி ஒரு இலை தயாரித்தும் ஸந்தோஷப் பட்டேன்.
போட்ட இரண்டு குலைகளும் கல்பூர வல்லி என்ற நல்ல பழ
வகையைச் சேர்ந்தது.
நான் அதை வகைவகையாகச் செய து அதைப் பிடித்தும்
போட முயன்று இருக்கிறேன்.
வீட்டில் விளைந்தது என்றால் அலாதி ஸந்தோஷம்தானே?
அம்மாதிரி அந்தக்காயில் செய்த வேப்புடுவைப் பார்க்கலாம்.
முற்றிய எந்த வாழைக்காயிலும் இதைச் செய்யலாம்.
நான் இந்தக் கல்பூர வல்லி காயிலே செய்ததுதான் இது.
செய்த வகையைப் பார்ப்போமா?
~ஒன்றும் இவ்வளவு, அவ்வளவு என்று நான் குறிப்பிடவில்லை.
நல்ல முற்றிய வாழைக்காயைத் தோல்சீவித் தண்ணீரில் போடவும்.
வாழைக்காயைச் சற்றுப் பருமனாக ஒரு அங்குல அளவிற்குநீளமான
மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு சுத்தமான துணியில் பரப்பி
ஈரம் போக காற்றாட விடவும். எடுத்து துளி மஞ்சள்பொடி பிசறவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய காய்த்துண்டுகளை
கரகர பதத்தில் வறுத்து எடுக்கவும்.
வேறொரு வாணலியில் ஒருஸ்பூன் எண்ணெயில் சிறிது மெல்லியதாக
நறுக்கிய வெங்காயத்தை, முறுகலாக வதக்கவும்.
உப்பு மிளகாய்ப் பொடி வறுத்த வறுவலில் பிசறி வெங்காயத்துடன் சேர்த்து
முறுகலாகும் வரை வதக்கவும். இறக்கவும்.
பச்சைக் கறிவேப்பிலையும், ஒரு சின்ன மிளகாயும் வறுத்துச் சேர்த்து
அலங்கரிக்கவும். கடுகு, உ.பருப்பும் தாளிக்கலாம்.
டேபிளில் எல்லாப் பொருட்களுடனும் இதையும் அலங்காரமாகச் சுவைக்கக்
கொடுக்கலாம்.
தெலுங்குப் பெயரில் அரட்டிகாய வேப்புடு என்ற 5 நட்சத்திர ஹோட்டல்
சமையலும் இதுதான். அதான் வறுவல்தான்.
ஸாதாரண வறுவல் காயை மெல்லியதாக நறுக்கி வறுத்து உப்புக் காரம்
பிசறுவோம்.
என்னுடைய 231 ஆவது போஸ்ட் இது. நாளை 17—4–2012 எனக்கு 80 வயது
முடிகிறது. என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாக் அபிமானிகளுக்கு சிலவில்லாத
சென்னை வீட்டு தோட்டத்தின் வாழைப்பழங்களைக் காட்டி அளவில்லாத அன்புடன்
எங்கள் ஆசீர்வாதங்களைத் தெறிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
மும்பை.