Archive for ஏப்ரல் 12, 2012
மாங்காய்ப் பச்சடி
இங்கே மாங்காய் ஸீஸன். மாங்காய்ப் பச்சடி செய்து சாப்பிடலாம்.
ஒட்டு மாங்காய் அதிக புளிப்பு இருக்காது. அதைப் பார்த்ததும், ஸரி
இதையும் ருசித்து,புசித்து பிடித்து, போடுவோம் என்றுத் தோன்றியது.
செய்யலாமே
வேண்டியவைகள்.
கிளி மூக்கு மாங்காய்—-ஒன்று
வெல்லத்தூள்—1 கப்பைவிட கொஞ்சம் அதிகம்.
பச்சை மிளகாய்—2 காரமிளகாய்
முந்திரி—7 அல்லது 8 துண்டுகள்
ஏலக்காய்—1 பொடிக்கவும்
செய்முறை.
மாங்காயை அலம்பித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தோல் பருமனாக இருந்தால் தோலைச் சீவவும்.
இந்த வகை மாங்காயிற்கு அப்படியே போடலாம்.
பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு நான் மைக்ரோவேவில்தான்
10 நிமிஷங்கள் ஹைபவரில் வேகவைத்து எடுத்தேன்.
வெல்லப் பொடியை சிறிது ஜலம் விட்டுக் கறைத்து தீயில்
2அல்லது 3 கொதிவிட்டு இறக்கி வடிக்கட்டவும்.
வடிக்கட்டிய வெல்ல ஜலத்தைக் கொதிக்கவிட்டு அதில்
வெந்த மாங்காய், பச்சை மிளகாயைச் சேர்த்து நிதான தீயில்
சற்று கெட்டியாகும்வரை கொதிக்க வைத்து இறக்கி ஏலப்பொடி
சேர்க்கவும்.
முந்திரியை ஒடித்து பச்சையாகவோ, வறுத்தோ அலங்கரிக்கவும்.
துளி உப்பு சேர்க்கலாம்.
இனிமையும்,காரமுமான மாங்காய்ப் பச்சடி தயார்.
புளிப்பு மாங்காய்களிலும் தயாரிக்கலாம்.
புதுவருஷத்திலும் ,வேப்பம்பூ பச்சடியுடன் இந்தப் பச்சடியும்
செய்வதுண்டு. இதிலேயே துளி வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்து
சாஸ்திரத்திற்கு சேர்த்துவிட்டேன் என்று சொல்பவர்களும் உண்டு.
எது எப்படியோ புதுவருஷத்திற்கு மாங்காய்ப் பச்சடியை
சொல்லியிருக்கிறேன்.சித்திரைப் புத்தாண்டு நந்தன வருஷத்தை
இனிமையாக வரவேற்போம்.
எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் நந்தன வருஷத்து
சித்திரையை வரவேற்று வாழ்த்துகளைக் கூறும்
அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.