Archive for ஏப்ரல் 2, 2012
பச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.
வெந்தயக் குழம்பைத்தான் நாங்கள் மெந்திக் குழம்பு என்று பேச்சு
வழக்கில் சொல்லுவோம்.
துவாதசி சமையலில் சுண்டைக்காயும் ஒரு முக்கியமான இடத்தை
வகிக்கிறது.
சென்னையில் சுண்டைக்காய் சுலபமாக கிடைத்ததால் குழம்பும்
செய்து, சுண்டைக்காய்ப் பருப்புசிலியும், ப்ளாகில் போட செய்தும்,
படமெடுத்தும் வைத்திருக்கிறேன். சுலப முறையை எழுதுகிறேன்.
பருப்புசிலியைப் பின்னாடி பார்ப்போம். பலாக்கொட்டையும் பழ
சீஸனானதால் கிடைத்ததைச் சேர்த்துப் போட்டு ச் செய்தேன்.
இப்போது குழம்பிற்கு வேண்டியதைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்
புளி ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தாளித்துக்கொட்ட—கடுகு—அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—-1
நல்லெண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
வெல்லம்—சிறிது
ருசிக்கு—உப்பு
ஸாம்பார்ப் பொடி—3 டீஸ்பூன்
அரிசிமாவு—ஒரு டீஸ்பூன்
முக்கியமான பச்சை சுண்டைக்காய்—கால்கப்
இருந்தால் பலாக்கொட்டை—7 அல்லது 8
கறிவேப்பிலை—சிறிது.
செய்முறை
புளியை 2 கப் ஜலம் விட்டுக் கறைத்துக் கொள்ளவும்.
பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி நன்றாக நசுக்கித்
தண்ணீரில் அலசவும்.
விதைகள் ஓரளவிற்கு வெளியேறும். வடிக் கட்டவும்.
பலாக் கொட்டையையும் மேல் தோல் நீக்கி உட் பருப்பைத்
துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு
வெந்தயம்,பருப்புகள்,பெருங்காயம்,மிளகாய் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, சுண்டைக்காயைச் சேர்த்து நிதான தீயில்
நன்றாக வதக்கவும்.
சுண்டைக்காய் வதங்கியதும், ஸாம்பார்ப் பொடியைச் சேர்த்துச்
சற்றுப் பிரட்டி புளி ஜலத்தைச் சேர்க்கவும்.பலாக் கொட்டையையும்
உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
துவாதசி சமையல் ஆனபடியால் பூண்டு, வெங்காயம்
சேர்ப்பதில்லை.
துளி வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
குழம்பு சற்று சுண்டி சுண்டைக்காய் வெந்தவுடன்
சற்று திக்காக இருப்பதற்காக அரிசி மாவைத் துளி
ஜலத்தில் கறைத்துக் கொட்டிக் கொதிக்கவைத்து இறக்கவும்.
முன்போ, பின்போ கறிவேப்பிலை சேர்க்கவும்.கமகம
குழம்பு தயார்.
சுண்டைக்காயும், பலாக்கொட்டையும் ஸரியான ஜோடி.
ஸாம்பார் பொடிக்குப் பதில்,தனியா,மிளகாய், மிளகுப் பொடி
சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சேர்த்து வறுத்து அறைத்தும்
செய்யலாம் சாதத்துடன். நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பருப்பு சாதத்துடன் துவாதசியன்று சூப்பர் காம்பினேஷன்.