Archive for மே 14, 2012
அரைத்துவிட்ட மாங்காய் ஸாம்பார்.
இந்த ஸாம்பாரும்அதிகம் புளிப்பில்லாத மாங்காயில் செய்தால்
மிகவும் நன்றாக இருக்கும். ஒட்டு மாங்காயான கிளி மூக்கு மாங்காயில் செய்ததுதான் இந்த ஸாம்பாரும்.
காயை நறுக்கி வாயில் போட்டுப் பார்த்தால் புளிப்பைப் பற்றி
எவ்வளவு என்று தானாகவே தெறிந்து போகும்.
அதற்கேற்றார்போல் உப்புக் காரம் சேர்க்கலாம். ஸரி
இப்போது நாம் ஒரு திட்டமான மாங்காய்க்குண்டானதைப்
பார்ப்போம்.
வேண்டியவைகள்
மாங்காய்—-திட்டமான சைஸில்—-ஒன்று
துவரம் பருப்பு—அரைகப்
மிளகாய் வற்றல்—5அல்லது 6
பச்சை மிளகாய்—1
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
தனியா—-1 டேபிள்ஸ்பூன்.
மிளகு—7,8 மணிகள்
அரிசி—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—கால்கப்
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், பெருங்காயம்.
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறிவேப்பிலை.
விருப்பப் பட்டால் பாதி கேப்ஸிகம்
ருசிக்கு—-உப்பு
செய்முறை.
துவரம் பருப்பைக் களைந்து திட்டமாக தண்ணீர் விட்டு மஞ்சள்பொடி
சேர்த்து ப்ரஷர்குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் மிளகாய் ,தனியா, அரிசி, மிளகை வறுத்து
,அதனுடன் தேங்காயையும் வதக்கி இறக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் சிறிது ஜலம் தெளித்து அறைத்து
எடுக்கவும்.
மாங்காயைக் கொட்டை நீக்கி துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
கேப்ஸிகம், பச்சைமிளகாயு், மாங்காயுடன் வேண்டிய உப்பு சேர்த்து
குழம்பு வைக்கும்பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மாங்காய் வெந்தவுடன் அறைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி
விடவும்.
வெந்த பருப்பைக் கரைத்துச் சேர்த்து பின்னும் நன்றாக கொதிக்கவிட்டு
இறக்கவும்.
நல்லண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
நான் வெங்காயம் போடுவதில்லை.
வேண்டியவர்கள் ஸாம்பார் வெங்காயத்தைச் சேர்த்துக்
கொண்டு செய்யவும்.
ருசிகள் பலவிதம். அதிலே இது ஒருவிதம்.
தடித்த தோல் உள்ள மாங்காயாக இருந்தால் தோலைச் சீவி
விட்டுச் சேர்க்கவும். உப்பு, புளிப்பு, காரத்திற்கு தகுந்தபடி
ஸாம்பாரை கெட்டியாகவோ, சிறிது நெகிழ்வாகவோ
தயாரிக்கவும். மாங்காய் ஸீஸன். செய்து பார்க்கலாமே.