Archive for மே 3, 2012
பச்சை கொத்தமல்லிப்பொடி
கொத்தமல்லித் தழை வாங்கியது அளவுக்கு அதிகமாக மிகுந்து
விடும் போல இருந்தது. காரம் அதிகமில்லாமல் பொடியாகச்
செய்து உபயோகிக்கலாம் என்று செய்தது. சாதத்திலேயே
நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்போல அமைந்து விட்டது.
வேண்டியவைகள்
நிறைய மிகுந்த கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து
நிழலில் ஃபேன் அடியில் ஒரு துணியில் பறத்தி மூடி காற்றாட
உலர்த்தவும். ஈரம் இல்லாதிருக்க வேண்டும்.
உளுத்தம் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
குண்டு மிளகாய்—-12,அல்லது இன்னும் சில
ருசிக்கு உப்பு
துளி சர்க்கரை
பெருங்காயப்பொடி–சிறிது
புளி—-ஒரு நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—-2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பருப்புகள்,மிளகாய்
பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் வெறும் வாணலியில் , பிய்த்துப்போட்டு
லேசாக வேண்டுமானால் வறுத்துக் கொள்ளலாம்.
பருப்புகள்,மிளகாய்,உப்பு, பெருங்காயம்,சர்க்கரை
சேர்த்து மிக்ஸியில் ரவை மாதிறி கரகரப்பாகப் பொடித்து
எடுக்கவும்.
கொத்தமல்லி இலையையும் புளியையும் சேர்த்து மிக்ஸியில்
தண்ணீர் சேர்க்காமல் 4 சுற்று சுற்றினால் பேஸ்ட் பதத்தில்
இலைகள் மசியும்.
முதலில் செய்த வைத்த பொடியைச் சேர்த்து 2 சுற்று சுற்றி
எடுக்கவும்.
தயாராகும் போது சற்று சேர்ந்தாற்போல இருந்தாலும் நாழியாக
ஆக உதிர்ந்தாற்போல ஆகும்.
எல்லாவற்றுடனும் எண்ணெய் சேர்த்துச் சாப்பிட,மோர் சாதத்துடன்
தொட்டுக்கொள்ள ஏற்றது.
அதிகம் ஸாமான்கள் சேர்த்துத் தயாரித்து நாட்பட உபயோகிக்க
ஃப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
ருசிக்கேற்ப காரம் அதிகரிக்கவும்.
இதுவும் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
நாம் செய்வதிலேயே சில வித்தியாஸங்கள் அவ்வப்போது
ஏற்படுகிறது.