Archive for ஜூன், 2012
பாதாம்ஹல்வா
வேண்டியவைகள்.
பாதாம் பருப்பு—–1 கப் நிறைய. கோபுரம்போல
பால்—–~ஒரு கப்
சர்க்கரை—-ஒன்றறை கப்
நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
குங்குமப்பூ—-சில இதழ்கள். 1ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.
ஏலப்பொடி—சிறிது
வேண்டுமானால் அலங்கரிக்க முந்திரிப்பருப்பு
செய்முறை.
இரண்டு 3கப் கொதிக்கும் தண்ணீரை விட்டு, ஒரு 10நிமிஷம்
பாதாம் பருப்பை ஊற வைக்கவும். ஊறிய
பருப்பைப் பிதுக்கினால் தோல் சுலபமாக உறிக்க வரும்.
தோலை உறிக்கவும்.
உறித்த பருப்பை நன்றாக அலம்பி மிக்ஸியில் போட்டு
வேண்டிய அளவு பால் விட்டு நன்றாகவும், நறநறப்பாகவும்
அறைத்துக் கொள்ளவும்.
கெட்டியான துவையல் பதம்ஸரியாக இருக்கும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும், அறைத்த
விழுதையும் சேர்த்துக் கலந்து நிதான தீயில் வைத்துக்
கிளறவும்.
சர்க்கரை சேர்த்ததினால் கலவை இளகி பின் கொதிக்க
ஆரம்பிக்கும்.
ஒரு ஸ்பூன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூவைச்
சேர்க்கவும்.
கை விடாது கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கொதித்துப்
பின் இறுக ஆரம்பிக்கும்.
இறுக ஆரம்பித்த பிறகு சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக்
கிளறவும்.
பொருமையாகக் கிளறவும். கலவை கெட்டியான பதத்தில்
வரும் போது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
திரட்டிப்பால் மாதிரி திரண்டு வரும் பதம் ஸரியாக
இருக்கும்
முந்திரியினால் அலங்கரிக்கவும்.
குங்குமப்பூ சேர்ப்பதால் இளம் மஞ்சளில் கலரும் அழகாக
வரும்.
சுவைக்கத் திகட்டாத நல்ல இனிப்பு.
ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாக சிறிது இடைவெளி விட்டு
நெய்யைச் சேர்க்கவும்.
பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக சுருட்டி வைத்தாலும்
கொடுப்பதற்கு ஸரியாக இருக்கும்.
நெய் கணக்கைவிட அதிகம் கூட இழுக்கும்.
வாழைத் தண்டு மோர்க்கூட்டு
தயிரை விட்டுதான் செய்கிரோம். சொல்வது என்னவோ
மோர்க்கூட்டுதான். வாழைத் தண்டில் கறி, பச்சடி மாதிறி
இதுவும் ஒரு வகை. கிராமப்புறங்களில் வாழைத்தண்டு,
சுலபமாக கிடைப்பதால் எளிய முறையான இது அடிக்கடி
செய்யும் ஒரு வியஞ்சனமாகும்.
வேண்டியவைகள்.
ஒரு துண்டு—வாழைத்தண்டு. இளசாக
பச்சைமிளகாய்—2
இஞ்சி—ஒரு துண்டு
தேங்காய்த் துருவல்—3 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு—-2 டீஸ்பூன்
தனியா—1 டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
நல்ல தயிர்—1 கப்பிற்கதிகம்
ஒரு துளி மஞ்சள் பொடி
ருசிக்கு உப்பு.
தாளிக்கஎண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு
பச்சைக் கொத்தமல்லி வேண்டிய அளவு.
செய்முறை
வாழைத் தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி லேசான
மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
கடலைப்பருப்பு,சீரகம், தனியாவை அலம்பி ஊரவைத்து
அதனுடன் மிளகாய், இஞ்சி, தேங்காய் சேர்த்து மிக்ஸியில்
நன்றாக அறைத்துக் கொள்ளவும்.
தயிரைக் கெட்டியாகக் கடைந்து , அரைத்த விழுதைச்
சேர்த்துக் கலக்கவும்.
வாழைத் தண்டை சிறிது தண்ணீரில், ஒட்டப் பிழிந்து போட்டு
நன்றாக வேக வைக்கவும். உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும்.
தண்ணீர் அதிகமானால் இறுத்து விடவும்.
தண்டு நன்றாக வெந்ததும் அரைத்த கலவையைக் கொட்டிக்
கிளறி ஒரே ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவவும்.
ருசியான மோர்க்கூட்டு தயார். இஷ்டப்படி எத்துடனும் சேர்த்துச்
சாப்பிடலாம்.
வாழைத் தண்டு பிட்லை
அதிகம் நாரில்லாத அடிமரத்து வாழைத் தண்டு
வீட்டிலேயே கிடைத்ததால் பிட்லை செய்ய நன்றாக
இருந்தது.
தண்டின் மேலிருக்கும் பட்டைகளை நீக்கவும்.
வாழைத் தண்டை வறுவலுக்கு நறுக்குவது போல ஒரு
வில்லையை நறுக்கி, ஒரு விரலில் நாரை இழுத்துச் சுற்றிக்
கொண்டு, அடுத்தடுத்து வில்லைகளை நறுக்கி நாரை
நீக்கவும்.
வில்லைகளை நாலைந்தாக அடுக்கி மெல்லிய துண்டுகளாக
நறுக்கவும்.
2 டேபிள்ஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் நறுக்கிய துண்டுகளை
அவ்வப்போது போட்டு வைத்தால் தண்டு கறுக்காமல்
இருக்கும்.
வேண்டியவை
சுமாரான ஒரு துண்டு வாழைத் தண்டிற்கான பிட்லையைச்
செய்ய ஸாமான்கள்.
துவரம்பருப்பு—–அரைகப்
கொத்தமல்லி விதை—-1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—-5
கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-1 டீஸ்பூன்
மிளகு—-கால் டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—-அரைகப்
புளி—-ஒரு கோலியளவு
தக்காளி—-ஒன்று
எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன், தாளித்துக் கொட்ட கடுகு,
பெருங்காயம்.
மஞ்சள் பொடி சிறிது
ருசிக்கு—உப்பு
செய்முறை.
துவரம் பருப்போடு வேண்டுமானால் சிறிது கடலைப் பருப்பும்
சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தனியா,மிளகாய்,பருப்பு,,மிளகை துளி எண்ணெயில் வறுத்து
சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் வதக்கி,
தேங்காயையும், சேர்த்துப் பிரட்டி சீரகம் சேர்த்து ஆறியவுடன்
மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அறைத்து வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க
வைத்து, நறுக்கிய மோர்த் தண்ணீரில்போட்ட வாழைத்
தண்டை ஒட்டப் பிழிந்து போட்டு நன்றாக வேகவைக்கவும்.
புளியைக் கறைத்து விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து
கொதிக்கவிட்டு, அறைத்த கலவையையும் சேர்த்துக் கிளறி
ஒரு கொதி விட்டு, வெந்த பருப்பைச் சேர்க்கவும்.
கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு, பெருங்காயம் தாளித்துக்
கொட்டி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
கெட்டியாகவோ, சற்று தளரவோ செய்யவும்.
வாழைத் தண்டு உடம்பிற்கு நல்லது.
சுடசுட சாதத்துடன் சாப்பிட்டால் ருசிதான். உடன் சாப்பிட
இருக்கவே இருக்கிறது பொறித்த அப்பளாம், வடாம்.
இது சென்னையில் செய்தது. காரம் உங்கள் இஷ்டம் போல
கூட்டிக் குறைக்கலாம்.
பீட்ரூட் ஜூஸ்
இதுவும் ரொம்பவே சுலபமானது. நான் கொஞ்சமா ஒரு பீட்ரூட்டில்
செய்து பார்த்தேன். மாதிரிக்கு துளித் துளி ருசி பார்த்ததிலேயே
அரைடம்ளர் காலியாகி விட்டது. பரவாயில்லை.
இன்னொரு தரம் செய்யமுயற்சிப்பதைவிட இருப்பதையே குடுத்தால் போதும்.
யார் குறை சொல்லப் போகிறார்கள் என்று தோன்றியது.
யாருக்கு வேண்டுமோ தயங்காமல் சொல்லுங்கள்.
செய்து அனுப்பி விட்டால் போகிறது.
நான் பீட்ரூட்டை வேகவைத்துச் செய்தேன். அதனால்
பச்சையான வாஸனை இல்லாமல் நன்றாக இருந்தது.
வேண்டியவைகள் அதிகம் ஒன்றுமில்லை
பீட்ரூட்—–ஒன்று
இஞ்சித் துருவல்—-சிறிது
எலுமிச்சை சாறு—-ருசிக்குத் தக்கபடி
சர்க்கரை—-4 டீஸ்பூன்
காலா நமக்—-அரை டீஸ்பூன்.
செய்முறை
பீட்ரூட்டைத் தோல் சீவித் துண்டங்களாக்கி வேக வைக்கவும்.
மைக்ரோவேவில் வேகவைத்தாலும் ஸரி.
இஞ்சித் துருவலைச் சேர்த்து ஆறினவுடன் மிக்ஸியில்
சிறிது தண்ணீருடன் நன்றாக அறைக்கவும்.
வேகவைத்த தண்ணீர் இருந்தாலும் அதையும் சேர்த்துக்
கறைத்து பெறிய கண் உள்ள வடிக்கட்டியினால் ஜூஸை
வடிக்கட்டவும்.
சர்க்கரை, எலுமிச்சை சாறு. காலாநமக் சேர்த்துக் கலக்கவும்.
டம்ளரில் நல்ல கலருடன் ஜூஸ் தயார்.
ஐஸ் துண்டுகள் சேர்த்துப் பருகினால் ஜில் என்று
ருசியாக இருக்கும்.
மேங்கோலஸி
சொல்லப்போனால் மாம்பழமோர்தான். அழகாகச்
செய்து கொடுத்தால் வெய்யிலுக்கு மாம்பழச்சுவை
-யுடன் ஜில் என்று குடிப்பதற்கு இதமாக இருக்கிறது.
அதுவும் நல்ல இன மாம்பழம் சேர்த்துச் செய்தால்
சொல்லவே வேண்டாம். அவ்வளவு நன்ராக இருக்கு.
பார்ப்போமா?
வேண்டியவைகள்
நல்ல மாம்பழம்—-ஒன்று
புளிப்பில்லாத மோர்—அரை டம்ளர்
காலாநமக்கென்று சொல்லப்படும் உப்பு—அரைடீஸ்பூன்
வேண்டிய அளவு—ஐஸ் தண்ணீர்
செய்முறை
மாம்பழத்தைத் தோல் சீவித் துண்டங்களாகச் செய்து
கொள்ளவும்.
மாம்பழத் துண்டுகளை மிக்ஸியிலிட்டு கூழாக மசித்துக்
கொள்ளவும்.
மோரையும், காலா நமக்கையும் சேர்த்து மிக்ஸியைச் சற்று
ஓடவிட்டு எடுத்து ஐஸ்த்தண்ணீரைச் சேர்த்து கண்ணாடித்
தம்ளர்களில் விட்டுப் பருக வேண்டியதுதான்.
புளிப்புப் பழமாக இருந்தால் சர்க்கரையைச் சேர்த்து
மோருடன் நீர்க்கச் செய்து அருந்தலாம்.
மாம்பழ சீஸன். நான் செய்ததைச் சொன்னேன்.
உங்கள் விருப்பம்போல சுவையில் மாறுதல்களுடனும்
செய்யலாம். பிடித்ததா. இல்லையா?
பார்க்கலாம்.
என்ன சமையல்?
ஸிம்பிலாக சமைக்கிறேன் என்று பிரதீஷா செய்த சமையலை
நீங்களும் தான் ருசியுங்களேன். அஸ்ஸாம் டாலும் சென்னை
ரஸமும் பொதுவான கறிகளும்கலந்து ருசியுங்களேன்.
ஒரு டால். பயத்தம்பருப்பும், மசூர் டாலும் கலந்து வேகவைத்து
பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி, பூண்டு,
தக்காளியை நன்றாக வதக்கிச் சேர்த்து உப்பு, மஞ்சளுடன்
சேர்த்துக் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்தது.
மஸாலா போடலை. துளி சீரகப்பொடி போட்டது.
உருளைக் கிழங்கை மெல்லியதாக நறுக்கி 1ஸ்பூன்
எண்ணெயுடன் 5 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்து எடுத்து
வாணலியில் எண்ணெயில் கடுகைத் தாளித்து, உப்பு,காரம்
மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கியது.
அடுத்து நிறைய தக்காளியை மைக்ரோவேவில் வேகவைத்து
எடுத்து துளி புளி சேர்த்து கறைத்து சாறு எடுத்து, ரஸப்பொடி,உப்பு,
பூண்டு விழுதுடன் நிதான தீயில் நன்றாகக் கொதித்துக்
குறைந்தவுடன், துவரம்பருப்பு வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி
ஒது கொதி வந்தவுடன் இறக்கி, நெய்யில் கடுகு, பெருங்காயம்
பொரித்துக் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கியது.
கமகம ரஸம்.
வீட்டில் தோய்த்த புளிப்பில்லாத தயிர்.
கொஞ்சம் ஊறுகாய்.
வதக்கிய வெண்டைக்காய் கறி.
நடுவில் குட்டி காப்ஸிகம் பஜ்ஜி அதுவும் சுடச்சுட
பாக்கலாமா, கேட்கலாமா, ருசிக்கலாமா
பஜ்ஜியைச் செய்யலாம்.
வேண்டிய அளவு–
-கடலைமாவு,துளி அரிசி மாவு
ருசிக்கு வேண்டிய உப்பு,மிளகாய்ப்பொடி
துளி ஸோடா உப்பு
துளி பெருங்காயப்பொடி
கொத்தமல்லி இலை கொஞ்சம்
கேப்ஸிகம் வேண்டியஅளவு.
செய்முறை
மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
முழுதாகவும் போடலாம்.
உப்பு, ஸோடா, பெருங்காயம், மிளகாய்ப்பொடி யாவற்றையும்
மாவுடன் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.
சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து இட்டிலி மாவு பதத்தில்
நன்றாகக் கறைத்துக் கொள்ளவும்.கொத்தமல்லியையும்
சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கி வைத்திருப்பதை
மாவில் அமிழும்படி தோய்த்து பஜ்ஜிகளாகப் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டாமல் சட்டுவத்தால் பிரித்து விட்டு,
சிவந்து வரும்போது திருப்பிவிட்டு மறுபுறமும் சிவந்ததும்
எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்தெடுத்து உபயோகப் படுத்தவும்.
எண்ணெய் திட்டமான சூட்டில் இருக்கவும்.
புகையும்படி அதிக சூடு வேண்டாம்.
என்ன சமையல் என்கிற தலைப்பு. சமையல் சொல்லிவிட்டேன்.
குக்கரில் சாதம் ரெடி. அப்பளாமும் பொரித்தாகிறது.
எல்லாரும் வந்து சாப்பிடலாம்.
மேஜையிலும் வைத்தாகிவிட்டது.