Archive for மே 29, 2012
புடலங்காய்க் கறி.
இதுவும் சுலபமான தயாரிப்புதான். நல்ல பிஞ்சு காயாக இருந்தால் ,
கறி, கூட்டு,பச்சடி என பலவிதங்களில் தயார் செய்யலாம்.
பத்தியச் சாப்பாட்டில் கூட புடலங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
துவையல்,வறுவல்,மோர்க்குழம்பு என விதவிதமாகத் தயார்
செய்யலாம்.
முதலில் கறி செய்வோம்.
வேண்டியவைகள்.
புடலங்காய்—அறை கிலோ
பயத்தம் பருப்பு—-கால் கப்.
தேங்காய்த் துருவல்—-கால்கப்
மிளகாய்—-காரம் வேண்டிய அளவிற்கு
இஞ்சி—-வாஸனைக்காக சிறிது
ருசிக்கு—உப்பு
மஞ்சள்ப் பொடி—சிறிது
தாளித்துக் கொட்ட –எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு—சிறிதளவு
செய்முறை
புடலங்காயை அலம்பி நறுக்கி, விதைகளிருந்தால் அகற்றிவிட்டு
பொடியாக நறுக்கவும். பிஞ்சு காயானால் அப்படியே
கூட நறுக்கலாம்.
பயத்தம் பருப்பைக் களைந்து தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
பருப்பையும், நறுக்கின காயையும் ஒன்று சேர்த்து உப்பு,
மஞ்சள்ப்பொடியைக் கலந்து கையினால் அழுத்தமாகப் பிசறி
ஊற வைக்கவும்.
அழுத்திப் பிசறுவதால் பருப்பு காய் விடும் தண்ணீரிலேயே
நன்றாக ஊறும். சற்று ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுத்தம்
பருப்பைத் தாளித்துக் கொட்டி இஞ்சி, பச்சை மிளகாயை
வதக்கி, காய்,பருப்புக் கலவையைக் கொட்டி வதக்கவும்.
நிதான தீயில் மூடிவைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து
காயை வதக்கவும்.
ஸிம்மில் வைத்தால் கூட ஸரியாக இருக்கும்.
காய்பருப்பு வதங்கியதும் தேங்காய்த் துருவலைச்
சேர்த்துக் கிளறி வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
பத்தியச் சாப்பாட்டில் தேங்காய் போடுவதில்லை.
ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம்.
மிளகாய் ஸவுகரியம்போல காய்ந்ததோ, பச்சையோ
சேர்க்கலாம். பருப்பு,தேங்காயும் கூட்டிக் குரைக்கலாம்.