Archive for ஜூன் 28, 2011
மட்ரி.
இது ஒரு வடஇந்திய வகை மைதாமாவின் தயாரிப்பு.
பார்க்கப்போனால் நம்முடைய தட்டை மாதிரிதான். பருப்புகள்
போடுவதில்லை. சற்று வித்தியாஸமான ருசி. கரகரப்பாகச்
செய்கிறார்கள். சிறிதளவு வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள்.
இது மேத்தி மட்ரி. அவசரத்திற்கு ஊறுகாயுடன்காலைடிபனில்கூட
மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான் கற்றுக்கொண்டேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்.
மைதாமாவு—-2 கப்
ஓமம்—2 டீஸ்பூன்
மாவுடன் சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
மட்ரி பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்
செய்முறை.
ஓமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாவைக் கொட்டி ஓமம், திட்டமான உப்பு
சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
மாவில் சிறிது சிறிதாக மேலே குறிப்பிட்ட 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், 1ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
புட்டுமாவுபோல , மாவைக் கையிலெடுத்துப் பிடித்தால் பிடிபட
வேண்டும்.
உதிர்த்தால்தான் உதிர வேண்டும். இம்மாதிரி பக்குவமாக கலக்கவும்.
செய்து பார்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக ஜலத்தைத் தெளித்து மிகவும்
கெட்டியான மாவாக நன்றாகப் பிசைந்து கொள்ளவும்..
அழுத்தமாகப் பிசைந்த மாவைத் திரட்டி பாதி மாவைச் சிறிய
உருண்டைகளாக உருட்டி அப்பளக் குழவியினால் சிறிய கனமான
வட்டங்களாகச் செய்து கொள்ளவும்.
போர்க்கினால் வில்லைகளின் மேல் குத்தி துளைகளிடவும்.
மீதிமாவைக் கனமான அப்பளாமாக இட்டு போர்க்கினால் குத்தி
கத்தியினால் துக்கடாக்களாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஜாஸ்தி புகையவிடாமல்
நிதானமான சூட்டில் இவைகளைக் கொஞ்சம், கொஞ்சமாகப்போட்டு
கிளறிவிட்டு பொறித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில்ஆறவிடவும்.
கரகரப்பான மட்ரி தயார்.
மாவு அழுத்தி இடும்படியான கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைய
வேண்டும். இது நன்றாக ஞாபகம் வைக்க வேண்டும்.
பெரிய அளவில் சற்றுப் பெரியதாகச் செய்து வைத்துக்கொண்டு
டிபனில் ஒரு அயிட்டமாக உபயோகிப்பார்களென நினைக்கிறேன்.
இதையே ஒருகப் மைதாவுடன் 1 டேபிள்ஸ்பூன் கடலைமாவு,துளி
மிளகாய்ப்பொடி, 1டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெந்தயக்கீரை,
எண்ணெயும்,நெய்யுமாக 2டேபிள்ஸ்பூன், உப்பு,ஜீரகப்பொடி சேர்த்து
ஸாதா மட்ரி செய்யும் முறையிலேயே மேதி மட்ரியும் செய்யலாம்.
.





