Archive for ஜூலை, 2014
எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை
ஆகஸ்ட் எட்்டாம் தேதி வரலக்ஷ்மி பூஜை. சென்ற வருஷத்திய என் பதிவை திரும்பவும் அளிக்கிறேன்.
படித்து மகிழுங்கள். அன்புடனும்,ஆசிகளுடனும்.
பெயரே வரலக்ஷ்மி பூஜை. கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் பூஜை.
இதைத் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,மஹாராஷ்டிராமுதலான இடங்களில்
விவாகமான பெண்கள், தலைமுறைத்,தலைமுறையாகக் கொண்டாடி,
வரலக்ஷ்மி அம்மனிடம் நல்ல வரங்கள் வேண்டிப் பூஜித்துவரும் ஒரு நோன்பு.
பல குடும்பங்களில் வழக்கமில்லாதும் இருக்கலாம்.
பிறந்த வீட்டில் உண்டு, புகுந்த வீட்டில் இல்லை என்றும் சொல்வதுமுண்டு.
பொதுவில் குடும்பத்தின் ஐசுவரிய வளத்திற்கும், வளமான வாழ்க்கைக்கும்
கணவரின் க்ஷேமத்திற்காகவும் கொண்டாடப் படுகிறது,அனுஷ்டிக்கப் படுகிறது
என்பதுதான் எங்களின் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.
நாங்கள் எங்கள் குடும்பத்தில் எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான்
நான் சொல்ல வந்தது.
ஏறக்குறைய எல்லோருமே அம்மனைக் கலசத்திலிருத்தி அலங்காரங்கள் செய்து,
வீட்டற்குள் அழைத்து, மண்டபத்திலிருத்தி நல்ல முறையில் பூஜை செய்வது வழக்கம்.
சிற்சில விஷயங்களில், மாறுபாடு இருந்தாலும்,கொள்கையும்,பூஜையின்
காரணங்களும் ஒன்றேதான்.
தமிழ் நாட்டில் ஸுமங்கலிப் பெண்கள், இப்பூஜையை செய்வது வழக்கம்.
கர்நாடகாவில், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து, சாயங்காலவேளையில்
இப்பூஜைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
வடை,பாயஸம்,இட்டிலி. கொழுக்கட்டை, மஹாநிவேதநம்,பலவகைச் சமையல்கள்,
பருப்பு,சுண்டல்கள், வகை,வகையான பழங்கள் இவை யாவும் அவரவர்கள்
சவுகரியப்பட்டதை சிரத்தையாகச்,சேகரித்தும்,பூஜையில் நிவேதனம் செய்வார்கள்
பலவித பக்ஷணங்களைச் செய்து, அவைகளை நிவேதனம் செய்யும்
முறை உள்ளவர்களும் உண்டு.
ஆவணிமாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில்
இந்த நோன்பு வரும்.
சில ஸமயம் இது ஆடி மாதத்தில் அமையும். இந்த வருஷம் ஆடி மாதம்
வருகிரது.
ஆடி 31 ஆம்தேதி அதாவது ஆகஸ்ட் 16…
View original post 624 more words
ஒன்றில் மூன்று
மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்
செய்ததுதான் இது.
இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்
பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.
மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.
மூன்றாகப் பிரித்ததில் எல்லா வகையும் செய்ய முடிந்தது.
பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்
பார்ப்போமா உங்களுடன்.
காரமாங்காய் தொக்கு.
வேண்டியவைகள்.
துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.
மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்–அரைகப்
ருசிக்கு– உப்பு
கடுகு—1 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.
செய்முறை–
கடுகையும்,வெந்தயத்தையும், சூடான வாணலியில் எண்ணெய்விடாது
வறுத்துப் பொடிக்கவும்.
செய்முறை
நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது அலுமினியம் வாணலியிலோ பாதி
எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு வதக்கவும்.
புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்
சுருள வதக்கவும்.
நீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி
எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்
கிளறவும்.
பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து
உப்பு காரம் ருசி பார்த்து சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்து நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது
இனி.ப்புத் தொக்கு.
வேண்டியவைகள்
மாங்காய்த் துருவல்—-2கப்
வெல்லம்—-2கப்
உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்
எண்ணெய்—-3 டேபிள்ஸ்பூன்
வறுத்தரைத்த சீரகம்,வெந்தயம், வகைக்கு ஒருஸ்பூன் பொடித்துக் கொள்ளவும்.
மிளகாய்ப் பொடி—-2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—சிறிது.
செய்முறை
நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாங்காய்த் துருவலை
வதக்கவும். உப்பு , மஞ்சள் சேர்க்கவும்.
துருவல் வதங்கியதும், வெல்லத்தூளைச் சேர்த்துக் கிளறவும். வெல்லம் சேர்த்ததும்
சிறிது இளகும்.
நன்றாகக் கிளறிக்கொண்டே இருந்தால் மாங்காய் சேர்ந்து வெந்து, சுருண்டு வரும்.
கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி,வெந்தய,சீரகப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
பெருங்காயப்பொடி, அல்லது, சிறிது கரம் மஸாலாவும் சேர்த்துக் கிளறி
உபயோகிக்கலாம்.
இனிப்பு விருப்பமானவர்களுக்கு ரொட்டி,தோசை முதலானவற்றுடன் சேர்த்துச்
சாப்பிட நன்றாக இருக்கும்
. பச்சடியையும் எழுதிவிடுகிறேன்.
வேண்டியவைகள்
மாங்காய்த் துருவல்—அரைகப்
பச்சைமிளகாய்—3
வெல்லம்—-முக்கால்கப்,
துளி–உப்பு
எண்ணெய்—2 டீஸ்பூன்
கடுகு,பெருங்காயம்–சிறிது
வறுத்த வெந்தயப்பொடி,சீரகப்பொடி சிறிது.
செய்முறை
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகை வெடிக்க விட்டுநறுக்கிய பச்சை
மிளகாயை வதக்கி மாங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கவும்.
துருவல் வதங்கியதும் , அரைகப் தண்ணீர் சேர்த்து ,வெல்லமும் சேர்த்து
கொதிக்க விடவும். உப்பு,பெருங்காயம்,மஞ்சள் சேர்க்கவும்.
கொதித்துச் சற்றுக் குறுகி வரும்போது இறக்கி, வெந்தய,சீரகப்பொடியைச்
சேர்க்கவும்.
பச்சடி தயார். நீர்க்க இருந்தால் துளி மாவு கரைத்துச் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அவ்வளவுதான்.
மொத்தமாக கடுகு வெந்தயப் பொடிகள் இருந்தால் ஊறுகாய் வகைகளுக்கு சீக்கிரமே
தயார் செய்ய உபயோகமாக இருக்கும்.