Archive for மே, 2017
கல்யாண கணேசர்.
நமக்கெல்லாம் தெரிந்து பல கணேசர்கள் இருந்தாலும் கல்யாண கணேசரைப் பற்றி முதல் முதலாக இப்பொழுது தான் நான் படித்தேன்.
தமிழ் நாட்டைப் பொருத்த வரையில் கணேசர் கட்டை பிரம்மசாரிதான். அதே வடநாட்டில் அவரை விவாகமானவராகத்தான் சொல்லுவார்கள்.
ஸித்தி,புத்தி ஸமேத விக்னேசுவரர்தான்.
கைலாயகிரியில் பார்வதி பரமேசுவரருக்கு,தன் பிள்ளைகள் இருவருக்கும் விவாகம் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதாம்.
இதனையறிந்த கணேசரும்,முருகரும் , தாய்,தந்தையரிடம் போய் தனக்கே முதலில் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
பிள்ளைகளிருவரும் போட்டி இடுவதைப் பார்த்து,இதை நல்ல முறையில் தீர்க்கவேண்டுமென்று சிவன் விரும்பி இருக்கிறார்.
இந்த பூலோகத்தை யார் முதலில் பிரதக்ஷிணம் செய்து வருகிறீர்களோ, அவனுக்கு முதலில் விவாகம் என்று சொன்னார்.
முருகருக்கு ஏக குஷி. கணேஷசருக்கு இவ்வளவு சீக்கிரமாக உலகைச் சுற்றிவர முடியாது. நாம் வேகமாகப்போய் வந்து விடலாம் என்று மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உலகைச் சுற்றிவரப் போய்விட்டார்.!
கணேசருக்கோ தன்னால் உலகைச் சுற்றிவர முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு வினாடி யோசித்தார்.
மளமளவென்று நியமத்துடன் நீராடி,நியம நிஷ்டைகளைக் கடைப் பிடித்துத், தந்தைதாய் அருகிலே வந்தார். அவர்களைப் பார்த்து,
நீங்கள் இருவரும் இப்படி ஆஸனத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர்கள் முகத்தில் கேள்விக் குறி?
பூமியைச் சுற்றிவரக் கிளம்பவில்லையா? சீக்கிரம் கிளம்பு பணித்தனர் இருவரும்.
உங்கள் இருவரையும் ஒன்றாகப் பூஜிக்க விரும்புகிறேன்.
இருவரும் அமர்ந்தனர்
கணேசர் அவர்களிருவரையும் பூஜித்து, வணங்கி ஏழு முறை வலம் வந்து வணங்கினார்.
தந்தையே எனக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நான் சொன்னதை மறந்து விட்டாயா? சீக்கிரம் கிளம்பிப்போய் வலம் வா!
பார்வதிதேவியும் துரிதப் படுத்தினார்.
அம்மா நான் பூமி தேவியை வலம் வந்தாகி விட்டது.
என்ன சொல்கிராய் நீ!
ஆம் அம்மா. ஒரு முறையில்லை. ஏழு முறை வலம் வந்தாகி விட்டது. என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.
அதெப்படி?
திரும்பவும் வணங்கிவிட்டு,
தந்தையே வேதங்கள் கூறுவது இதுதானே?
தாய் தந்தயைரை பூஜித்து வணங்கினால், அவன் பூமிப் பிரதக்ஷிணம் செய்த பலனைப் பெறுவான் என்று கூறவில்லையா?
வீட்டிலிருக்கும் மாதா,பிதாவை வணங்கினால் ஒரு தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லவில்லையா?
அவர்களின் காலை அலம்பி அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் கங்கை நீருக்கொப்பாகும் என்றும் வேதங்கள் சொல்லியுள்ளது உங்களுக்குத் தெரியுமே!
தங்கள் திரு முகத்திலுண்டானதுதானே வேதம். தங்களுக்குத் தெரியாததா?
கணேசரின் சாதுர்யமான,அர்த்த பூர்வமான பதிலைக் கேட்டுஸந்தோஷத்தோடு கணேசரை அணைத்துக் கொண்டு, உன் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகின்றேன் .
நீ யாவற்றையும் ஸரியாகத்தான் சொல்லுகிராய். ஸத்யமான வார்த்தைகள்தான் இவைகள் என்றார் சிவன்.
யோசித்து இரண்டு பெண்களை நிச்சயித்தார். ஸித்தி,புத்தி என்ற இருவரும் சதுர்முகப் ப்ரம்மா விசுவ ரூபனின் புதல்விகள்.
தேவ,முனிவர்கள் யாவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.எப்பேர்ப்பட்ட கல்யாணம். வர்ணிக்க வார்த்தைகளில்லை. பிரம்மாவின் குமாரிகளாயிற்றே!
அழகான நகரையே நிர்மாணம் செய்து விவாஹம் நடந்திருக்கும்.
யாவரும் வந்து ஸந்தோஷமாக வாழ்த்த கணேசரின் விவாகம் ,கைலாயத்தில் கோலாகலமாக நடந்தது.
ஆக கணேசருக்கு விவாகம் நடந்த கதை எப்படி என்பதை சிவபுராணத்தில் இப்படி ஒருகதை படித்துத் தெரிந்து கொண்டேன்
. உலகை வலம்செய்து விட்டு வரும் முருகரை நாரதர் ஸந்தித்து, உன்னை உலகம் சுற்ற அனுப்பி விட்டு இங்கு கோலகலமாக கணேசருக்குக் கல்யாணம் நடத்திவிட்டார் உன் தகப்பனார் என்று கலகமூட்டினார். இது ஸரியில்லை. அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பாய்நீ? முருகருக்குக் கோபத்தைப் பல வழிகளிலும் தூண்டிவிட்டார் நாரதர்.
நம்மிடம் உண்மையைச் சொல்லி விட்டுப் பிறகு விவாகம் செய்திருக்கலாமே! இப்படி எண்ணங்கள் தோன்றியது. கைலாயத்தினுள் பிரவேசிக்கவே பிடிக்கவில்லை. கட்டியுள்ள நல்ல உடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு ஒரு கோவணத்தை மட்டிலும் தரித்துக் கொண்டு,தாய்தந்தையர் முன் சென்று கோபமாக ப் பேசலுற்றார்.
என்னை ஏமாற்றிவிட்டு கணேசருக்குக் கல்யாணம் முடித்து விட்டீர்கள். முதலில் அவருக்குத்தான் என்று சொல்லி இருக்கலாம். எனக்கு விவாகம் எதுவும் வேண்டியதில்லை. எந்த ஆடம்பரமும் தேவையில்லை
. நடந்த விஷயங்கள் எவ்வளவு சொன்னாலும் காதில் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாகக் கிிரவு்ஞ்ச மலைக்குச் சென்று அதன்மீது அமர்ந்து விட்டார். அவரைப்பார்க்க தாய் தந்தையரும் அவ்விடம் விஜயம் செய்கிரார்கள் என்று கதை போய்க்கொண்டு இருக்கிறது.
மாம்பழத்திற்காக மயிலேறி உலகத்தை சுற்றிலும் கிடைக்காமல் ஆண்டிவேடம் பூண்ட கதை யாவருக்கும் தெரியும்.
இப்படியும் பிள்ளையாரின் விவாகத்தோடும் பின்னிப் பிணைந்த கதை இது. நான் ரஸித்ததை எழுதியிருக்கிறேன். எவ்வளவோ பேருக்குத் தெரிந்த கதையாகவும் இருக்கலாம். பாருங்கள்.
பட உதவி—-இணையம்.
யானை எப்பொழுது வந்தது ரஷ்யாவிற்கு.
இது நமக்கு அவசியம் இல்லை. ஆனால் என்னுடைய மகனின் நண்பருக்கோ நான் எழுதுகிறேன் ப்ளாக். அதில் அவர் சொன்னதும் நான் எழுதுகிறேனா என்று பார்க்க எண்ணம்.
நான் மிகவும் உடல் நலமில்லாது இருந்த நேரம். அவர் மாஸ்கோவினின்றும் அடிக்கடி ஜெனிவா வந்து போய்க் கொண்டு இருந்தார். கூட வேலை செய்த மிகுந்த நட்பானவர் ஆதலால் இங்கு வீட்டில்தான் தங்குவார். என்னை உற்சாக மூட்டுவதற்காக ஏதேதோ சொல்லிக்கொண்டு இருப்பார், அப்போது
. எதுவும் மனதில் ஏற்றுக் கொள்ளும்படியான நிலை இல்லை என்னுடயது.
ஒரு வாரத்திற்கு முன் அவர் வந்திருந்தார். ஆன்டி எழுதினீர்களா இல்லையா என்ற கேள்வியுடன்.
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதே நினைவில்லை. அந்த ஸமயத்தில் நடந்தவைகள் கூட எதுவுமே ஞாபகத்திலில்லை. இதெல்லாமென்ன ? ஓரிருவரிகள் எந்த ஸ்லோகமாவது மனதில் வரவேண்டுமே. எவ்வளவு முயன்றும் அந்த ஸமயத்தில் எதுவும் வரவில்லை. ஊஹூம்
. அதனாலென்ன?
இப்போது திரும்பவும் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
அவர் பெயர் வினய். இந்தியர். இந்திய மொழி எதுவும் தெரியாது. கூர்க்க தம்பதிகளின் மகனாகப்பிறந்தாலும் கானடா நாட்டில் பிறந்து வளர்ந்து ,ஆர்மீனியன் யுவதியை மணந்து , அழகிய இரண்டு கூர்க்க அழகிகளாகிய இரண்டு மகள்களைப் பெற்று, இந்திய மண்ணின் கலகலப்போடு மற்றவர்களை நேசிக்கும் குணம் கொண்டவர். அவரும் Unaids இல் மாஸ்கோவில் டைரக்டராகப் பணியாற்றுபவர்.
மடை திறந்தமாதிரி பேச்சு. சாப்பாட்டு மேஜை. உணவு உண்டு கொண்டே அவர் எனக்குக் கதை சொல்கிரார் ஆங்கிலத்தில். புரிந்த வகையில் பெயர் முதலானது குறித்துக் கொள்கிறேன்.
ஒரு அக்கரையுடன், ஆசாரிய சிஷ்ய பாவத்துடன் நானும் எதிர்க்கேள்விகளும் கேட்டு ஓரளவு புரிந்து கொள்கிறேன்.
அந்த ராஜாவின் பெயர் தி கிரேட் பீட்டர். ரஷ்யாவின் ராஜா.
இப்போது நான் இதை ஒரு பதிவாக இதை எழுதுகிறேன்.
அவர் பிறந்த இடம் மாஸ்கோ என்றாலும் வளர்ந்தது,படித்தது எல்லாம் லண்டன்,பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற இடங்களில்தான்.
மாஸ்கோவைப் பார்த்தாலே பிடிக்காது பீட்டருக்கு. நாம் அரசாளும் போது தலைநகரை புதியதாக நிர்மாணம் செய்து அசத்த வேண்டும் என்று எப்போதும் நினைத்த வண்ணம் இருந்தான்.சிறிய வயது முதலே இதே எண்ணம். அரசனாகவும் வந்த பிறகு
1703 வருஷம் அவர் தலைநகரை அழகாக நிர்மாணம் செய்ய நினைத்தார். மாஸ்கோவை புதுப்பிப்பதைவிட வேறு ஒரு இடத்தில் தலைநகரை அழகுற நிர்மாணம் செய்ய வேண்டி நினைத்ததை நடத்த, ஒரு சட்டம் கொண்டு வந்தான்.
தான் தேர்ந்தெடுத்த இடத்தில் மட்டுமே புதியதாக வீடுகள் கட்ட முடியும். மாஸ்கோவிலோ மற்றும் வேறு எங்குமே புதியதாகக் கட்டிடங்கள் எழுப்பக்கூடாது என்று ஆணை பிறப்பித்து விட்டான். அதுவும் இருபது வருடங்களுக்கு.
அவர் தேர்ந்தெடுத்த இடத்தில் தானும் ஒரு சின்னதான அளவில் ஒரு காட்டேஜ்
அதைச்சுற்றி வனம்,காடு,அழகியதோட்டங்கள், நீரூற்றுகள்,அழகியசிலைகள்,என மிகவும்,வனப்பாகவும், பொழுது போக்கும் இடமாகவும்,நிர்மாணம் செய்தான்.அங்கே அவன் வசித்தான். புதியதாகக் கட்டும் எந்த ஒரு கட்டிடமும் அங்குதான் நிர்மாணிக்கப் பட்டது.
சுற்றிலும் பல பங்களாக்கள்,என மற்றும் பல அம்சங்களுடன் அந்தக்காலத்தில் அதைப்போன்ற நகரை உருவாக்குவது என்பது சிரமமான காரியம். இந்த இடமே தலைநகராக ஸெயின்ட் பீட்டர்ஸ் பர்க்காக உருவெடுத்துத் திகழ்ந்தது. தலைப்பில் உள்ள படம் அதுதான்.
1725 இல் தி பீட்டர்த கிரேட் காலமானார். அவருக்குப் பிறகு ரஷ்யன் பிரின்ஸைக் கலியாணம் செய்து கொண்ட ஒரு பெண்மணி பதவிக்கு வந்து விட்டாள். அவள் பெயர் கேத்தரின். அவளும் இந்தத் தலை நகரை மிகவும் பிரயாசைப்பட்டு அழகுற யாவையும் அமைத்து முடித்தாள்.
இதை ஒரு அதிசய நகராகவும்,அழகுப் பூங்காகவாகவும் யாவரும் விரும்பும் சுற்றுலா நகரமாகவும் இருக்க விரும்பி இதை முடித்தாள். பூங்காவினுள் நீரூற்றும், பளிங்குச்சிலைகளும் பல் வேறு இடங்களில் அமைத்தாள்.
ஆரம்பகாலத்தில் யாவரும் விரும்பிப் பார்க்க ஏராளமானவர்கள் வந்தனர். நாளடைவில் பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்தனர். வேனிற்காலத்தில் மட்டுமே பூங்கா களைகட்டும். அதுவும் மிகக் குறைய ஆரம்பிக்கவே ராணி கேத்தரினுக்கு, தான் முடித்த ஒரு இடத்தைப் பார்க்க, பார்வையாளர்கள் எப்போதும் வரும்படியாக இருக்க வேண்டும். கவலை சூழ்ந்து கொண்டது.
எப்படியாவது பார்வையாளர்களைப் பெற ஒரு யோசனை உதித்தது. ரஷ்யர்களும் அதிகம் பார்த்தே இராத ஒரு அதிசய ம் இங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
அவள் யோசனையில் யானை முன்னணி யில் வந்தது. சிலயானைகளை இந்தியாவிலிருந்து கொண்டுவர வேண்டும். போக்கு வரத்து சாதனங்கள் அதிகமில்லாத காலம். பலதரப்பட்ட சீதோஷ்ணங்கள். மலைகள்,நதிகள்,கடந்து வந்தாலும் பராமரிக்க ஆட்கள், வருஷம் முழுவதும் யானைக்குத் தீனிபோட பச்சைத் தாவரங்கள் எல்லாம் யோசித்து ஏற்பாடு செய்து, யானைகள் வாங்க ஒரு ரஷ்யக் குழுவினரை அனுப்ப, அவர்கள் இந்தியா வந்தனர்.
வரும் வழியிலுள்ள பாலங்கள் எல்லாம் யானையின் பளுவைத் தாங்கக் கூடியதாக பலமாக உறுதிப்படுத்தினார்கள். இப்படி பாலங்களெல்லாம் மராமத்து செய்யப்பட்டு உறுதியாக்கப்ட்டது.
நம் இந்தியாவிலும் அப்போது அரசர்கள்தானே ஆண்டு வந்தனர். ஒருயானை மட்டும் இல்லை,சிலயானைகள்.பாகன்கள்,வைத்தியர்கள் என்று மிகுந்த பொருட் சிலவில் நான்கைந்து வருஷங்கள் நடந்தே யானைகள் ஸெயின்ட் பீடர்ஸ் நகர்வந்தடைந்தது.
அதற்கு வேண்டிய கொட்டாரங்களும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு காக்கப்பட்டதாம். பார்வையாளர்கள் முன்பைவிட ஏராளமானவர்கள் வந்தனர். ராணி கேத்தரினுக்கு மிகவும் ஸந்தோஷம்.
அந்த யானையின் வம்சம் இன்னும் இருக்கா என்றேன். ? அதெல்லாமில்லை. ரஷ்யாவின் முக்கியமான இடங்களிலுள்ள மிருகக் காட்சி சாலையில் யானை இருக்கிறது. அவ்வளவு தான். ப்ளைட்டுக்கு நேரமாகிறது. நீங்களும் மாஸ்கோ வாருங்கள். உங்கள் கட்டுரை பார்க்கணும், எழுதுங்கள் என்று சொல்லி விடை பெற்றார் அந்த வினய். பாவம் அந்த யானைகள். ஜம்மென்று இந்த நாளானால் ப்ளேனில் கூட பறந்திருக்கலாம்!!!!!!!!!!!!!!!!!!!
ரஷ்யாவிற்கு எப்பொழுது யானைகள் வந்தது என்பதை விட ஸெயின்ட் பீடர்ஸ் பர்க் எப்படி உண்டாயிற்று என்ற ஸ்தல புராணம் என்ற தலைப்பே கொடுத்திருக்கலாம். எப்படியோ பாருங்கள். யானைகள்தான் அவ்விடத்தில் இல்லை. மற்ற யாவும் இருக்கின்றனவாம் ரஸிப்பதற்கு!!!
மட்டர் பனீர் முந்திரிக் கிரேவியுடன்.
பிள்ளையுடன் படித்த பால்ய சினேகிதர்கள் வருகிறார்கள் j`’ரொட்டியுடன் சாப்பிட. காரசாரமாக மட்டர் பன்னீரும் தயாராகிறது. சற்று வேறுமாதிரி என்று தோன்றியது. ப்ளாகில் குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகிறது. இதுவும் உபயோகமாக இருக்குமே. செய்து பாருங்கள். பூண்டு வெங்காயம் சேர்க்கவில்லை. ஒரிஜனல் முந்திரிச் சுவையுடன்—-
வேண்டியவைகள்.ப்ரோஸன் மட்டர்–200 கிராம்.பனீர்–200 கிராம். வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்
தாளித்துக் கொட்ட நெய்—2டீஸ்பூன்.
பெரிய தக்காளிப் பழம்—2 அரை அங்குல நீளம்–இஞ்சித்துண்டு. இவை இரண்டையுமாகச் சேர்த்து அரைத்த விழுது.
முந்திரிப் பருப்பு—8, ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை. இதைத் தர்பூஸ்கா ஸீட்ஸ் என்று வட இந்தியர் சொல்வார்கள், இவைகளை ஊரவைத்துத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்க ஸாமான்கள்
மிளகுஅரை டீஸ்பூன்—லவங்கம்-5,—பட்டை ஒரு அங்குல அளவிற்கு, ஏலக்காய்-இவைகளைப் பொடிக்கவும். ஸுமாராகப் பொடித்தல்ப் போதும். வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேஜ்பத்தி என்னும்லவங்க இலை–1
பொடிகள். மிளகாய்ப்பொடி–1 டீஸ்பூன்,—-மஞ்சள் பொடி தேவையான அளவு.
ருசிக்கு—உப்பு.
செய்முறை. பதப்படுத்தப்பட்ட பட்டாணியை வென்னீர் விட்டு அலம்பி ஊறவைக்கவும். பின்னர் திட்டமான தண்ணீரில் வேக வைக்கவும்.
பனீரைச் சிறு துண்டங்களாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ச்சி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து இரண்டுஸ்பூன்வைத்துச் சூடானதும்தேஜ்பத்தியைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளிவிழுதைக் கொட்டி சுருளக்கிளறவும்.
பொடிகளைச் சேர்த்துக் கிளறி, வெந்தமட்டரைத் தண்ணீருடன் சேர்க்கவும். இரண்டொரு கொதி வந்தபின் பனீரைச் சேர்க்கவும்.
திட்டமாக உப்பைச் சேர்த்து முந்திரி விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
மிகவும் கெட்டியாகத் தயாரிக்காமல் கூட்டு மாதிரி சற்று நெகிழும் பதத்தில் இருக்கும்படி தண்ணீரைக் கொதிக்கும்போதே திட்டமாகச் சேர்த்துச் செய்யவும்.
இறக்கி வைத்து ரொட்டி, பூரியுடன் பரிமாறவும். என்ன ருசியான து,எவ்வளவு ருசியானது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். உதவி–ஸுமன்