Posts filed under ‘கறி வகைகள்’
மூங்ரா ஸப்ஜி
முள்ளங்கிச் செடியின் காய்க்கு மூங்ரா என்று சொல்லுகிறார்கள்.
மெல்லிய வெங்காயத் தாள்போல சற்று உருட்சியாக இறுக்கிறது.
பனீர் சேர்த்தும், சேர்க்காமலும் ஸப்ஜி செய்கிறார்கள். ருசியும் வாஸனையும் முள்ளங்கியை ஒத்திருக்கிறது.
வேண்டியவைகள்.– மூங்ரா—அதுதான் முள்ளங்கிக்காய் கால்கிலோ
பனீர் துண்டுகள்—-10,அல்லது 15 துண்டுகள்
பச்சைமிளகாய்—3
பூண்டு இதழ்கள்—6
இஞ்சி—சிறிய துண்டு்
எண்ணெய்—2டேபிள்ஸ்பூன்
சீரகம்—அரைடீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
மஞ்சள் பொடி—நிறம் கொடுக்க
செய்முறை.—–பனீர்த் துண்டுகளை சிறிது எண்ணெயில்
லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்
. காயைக் காம்பு நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி அலம்பி வடிக்கட்டவும்.
இஞ்சி, மிளகாய், பூண்டை அரைத்துக் கொள்ளவும்.அல்லது
நசுக்கிக் கொள்ளவும். வாணலியோ, நான் ஸ்டிக்பேனிலோ எண்ணெயைச் சூடாக்கி சீரகத்தைத்தாளித்து அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்.
மஞ்சளைச் சேர்க்கவும்.
விழுது வதங்கியதும் , நறுக்கிய காயைச் சேர்த்து, சிறிது
ஜலம் தெளித்து நிதான தீயில் மூடிவைத்து வதக்கவும்.
காய் வதங்கியதும், உப்பு சேர்த்து வதக்கி.பனீரையும்
சேர்த்துப் பிறட்டி இறக்கவும். பனீரை உதிர்த்துப் போட்டும்
வதக்கலாம்.
கொத்தவரைக்காய் கறி மாதிரியும், தேங்காய், பருப்பு
சேர்த்தும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
இதுவும் டில்லியில் வின்டரில் கிடைக்கும் காய் வகை-
-தான். மாருதலான காய். ரொட்டி, டாலுடன் இதுவும்
ஒரு ஸப்ஜி.
கடுகுக்கீரை வதக்கல்.
குளிர் சீஸனில் இந்தக் கீரை மிகவும் நன்றாக இருக்கும்.
வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக இதை உபயோகிப்பார்கள்.
க்ரோட்டன்ஸ் மாதிரி பெறிய இலைகளுடன் ஒரு வகையும்,
சிறிய இலைகளுடன் மஞ்சள் பூவுடன் ஒரு வகையும் கிடைக்கும்.
இரும்புச் சத்து அதிக முள்ளது இக்கீரை.
ஸரஸோங்கி ஸாக்.மக்கைகா ரோடி .ஜோடி ப்ரபலமானது.
முதலில், கீரையைச் செய்ய வேண்டிய சாமானைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—–பெரிய இலை கடுகுக் கீரை 2 கட்டு
சுமார் 20 இலைகள்.
எண்ணெய்——2 டேபிள் ஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு—-1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—–2
பெருங்காயம்—–சிறிது
பூண்டு—4 இதழ் தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கியது
தேங்காய்த்துறுவல்—-கால்கப்
ருசிக்கு—உப்பு.
செய்முறை—–.கீரையைச் சுத்தம் செய்து, அதன் பருமனான
அடிபாகக் காம்பையும், நரம்புகளையும் நீக்கி, பொடியாக
நறுக்கித் தண்ணீரில் அலசி வடிய வைக்கவும்.
அடிக் கனமான காய்கள் வதக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக்
காயவைத்துமிளகாய், சீரக, பருப்பு வகைகளை சிவக்க வறுத்து,
பூண்டு பெருங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
தாளிப்பு வதங்கியதும், கீரையைச் சேர்த்து, ஒரு கால்சிட்டிகை
சர்க்கரை சேர்த்துக் கிளறி மூடவும்.
நிதான தீயில் கீரை நன்றாக வெந்து வதங்கும் வரை அடிக்கடி
கிளறி மூடவும்.
ஈரப் பதம் குறைந்தால் சிறிது ஜலம் தெளித்து வதக்கவும்.
கீரை வதங்கியதும், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கி
இறக்கவும்.
துளி சர்க்கரை சேர்ப்பது கீரை பச்சென்று நிறம் மாறாமல்
இருப்பதற்காக.
சாதாரணமாக நம் சமையலில்தான், தேங்காய்,
பருப்புகள் உபயோகம்அதிகம்.
வெந்தயம்,மிளகாய், பெருங்காயம் மட்டிலும் சேர்த்து
வதக்குவதும் ருசியாகத்தான் உள்ளது.
மிருதுத் தன்மைக்காக வெந்தயம் சேர்ப்பது.
வதங்கிய கீரையில் லேசாக புளிப்பு ருசியும் இருக்கும்.
அதனால் வெந்தயம் வறுத்துச் சேர்த்தாலும் கசப்பு இருக்காது.
ஏறக்குறைய ஆத்திக் கீரையின் ருசிதான் என்று எனக்குத்
தோன்றுகிறது. குளிர்காலத்துக்கு ஏற்ற கீரை.
ஜெனிவாவில் கூடகடுகு கீரை வகையைச் சேர்ந்த cima di rapa
என்ற italie வகைக் கீரை கிடைக்கிறது. அதே ருசி.
பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறது.
ஆலு தாம்
இதுவும் ரொட்டி, பூரி, ஏன் தோசையுடன் கூட சேர்த்துச்
சாப்பிட நல்லதொரு ஜோடி.
வேண்டியவைகள்
சிறியவகை பேபி பொடேடோ—-அரைகிலோ
பொடிக்க மிளகு–1 டீஸ்பூன்,லவங்கம் 6, சின்ன துண்டுபட்டை
அறைக்க–வெங்காயம்.—-2 திட்டமான அளவு
பூண்டு—4 இதழ்,, இஞ்சி சிறிய துண்டு
தக்காளிப்பழம்–2
வேண்டிய பொடிகள்
தனியா பொடி—2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—–1 டீஸ்பூன்
கரம் மஸாலா பொடி—அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி—அரை டீஸ்பூன்
பிரி்ஞ்சி இலை–ஒன்று
உருளைக்கிழங்கு பொரிக்க —வேண்டிய எண்ணெய்
மஸாலா வதக்க– 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை—–உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை
உறிக்கவும். அதிகமாக வேக வேண்டாம்.
பொடிக்கக் கொடுத்திருப்பதை பொடித்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு வெங்காயத்தைத் தனியாக அரைக்கவும்.
எணெ்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளித்து, வெங்காய
இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு நிதான தீயில் வதக்கவும்.
விழுது ப்ரவுன் கலராக மாறியதும், பொடிகளைச் சேர்த்துப்
பிரட்டி,தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
எண்ணெய் பிறியுமளவிற்கு வதக்கிப் பிறகு 2 கப்பிற்கு
சற்று அதிகமாகவே தண்ணீரைச் சேர்த்து வேண்டிய
உப்பைப் போட்டு கொதிக்க விடவும்.
வேறு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
உறித்து வைத்திருக்கும் முழு உருளைக் கிழங்கை
சிறிது சிறிதாகப் போட்டு சற்று சிவக்கப் பொரித்து
கொதிக்கும் கலவையில் சேர்த்து கொதிக்கவிட்டு
சேர்ந்தாற்போல் ஆகும்போது இறக்கி கொத்தமல்லி
தூவி உபயோகிக்கவும். வேண்டிய அளவு காரம் கூட்டிக்
குறைக்கவும்.
தக்காளி அறைப்பதற்குப் பதில் 150 கிராம் டொமேடோ
ப்யூரியை சேர்த்தும் கொதிக்க விடலாம்.
கலர் சிவப்பாக நன்றாக இருக்கும்.
ப்ரி்ஞ்சி இலையைச் சேர்க்கவும்.
பீட்ரூட் கறி
இதுவும் கறிப்பொடி உபயோகித்து செய்தால் ருசியாகஇருக்கும்.
வேண்டியவைகள்
பீட்ரூட்—-அரைகிலோ
வெங்காயம்—-2
எண்ணெய்—–2டேபிள் ஸ்பூன்
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு உப்பு
கடுகு—1டீஸ்பூன்
கறிப்பொடி—–1டேபிள் ஸ்பூன்
செய்முறை—–பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல்சீவி
சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எணெணெயைக் காயவைத்து கடுகை
வெடிக்கவிட்டு இஞ்சி வெங்காயத்தை நன்றாக வதக்கி
பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும். வேண்டிய உப்பு
சேர்த்து, சிறிது ஜலம் தெளித்து மூடியால் மூடிவைத்து,
நிதான தீயில் கிளறிவிட்டு நன்றாக வேகும்படி வதக்கவும்.
காய்வதங்கி நீர் வற்றியவுடன் கறிப் பொடியைத் தூவி
வதக்கி இறக்கவும்.
பொடிவகைகளில் கறிப்பொடி செய்யும் வகை கொடுக்கப்பட்டு
இருக்கிறது. அவசியமாயின் காரம் கூட்டிக் குறைப்பது
உங்கள் கையில்.
கோஸ் கறி
மிகவும் சுலபமாகச் செய்யக் கூடியது.
வேண்டியவைகள்–—-கோஸ்—அரைகிலோ
பச்சை மிளகாய்—– 2
காரட்–1
பச்சை பட்டாணி—–ஒரு கைப்பிடி
அல்லது—-பச்சை கேப்ஸிகம்—-1
நசுக்கிய இஞ்சி—அரை டீஸ்பூன்
கடுகு–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–அரைகப் [விருப்பத்திற்கு]
எண்ணெய்——–2 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
செய்முறை——-கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் அலம்பி வடிக்கட்டியில் போட்டு நீரை வடிக்கவும்.
கேரட்டையும் தோல் சீவி நறுக்கவும்..
மிளகாயை நீளவாட்டில் கீறிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ச்சி,கடுகு
உளுத்தம்பருப்பைத் தாளித்து, இஞ்சி பச்சை மிளகாயை
வதக்கி கோஸ்,கேரட்,பச்சைப் பட்டாணியைப் போட்டுக் கிளறி
வதக்கி மூடி நிதான தீயில் கிளறிவிட்டு வதக்கவும்.
சற்று வதங்கியதும், வேண்டிய உப்பு சேர்த்துக் கிளறவும்..
நீர் வற்றியதும் தேங்காயைச் சேர்த்து வதக்கவும். கீழிறக்கி
நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்,. பட்டாணி இல்லாவிட்டால்
காப்ஸிகம் சேர்க்கவும்.
3 கலரில் பார்க்கவும். நன்றாக இருக்கும்.
ரொட்டிக்காக செய்யும் போது தனியா,மிளகாய்ப்பொடிகள்,
சேர்த்து, உருளைக்கிழங்கு துண்டங்களையும் கலந்து எண்ணெய்
அதிகம் விட்டு வதக்கலாம்.
உருளைக்கிழங்கு காரக்கறி
வேண்டியவைகள்—-கால்கிலோ—-உருளைக் கிழங்கு
எண்ணெய்——5 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி——2 டீஸ்பூன்
சீரகப்பொடி——2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—-1டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
கடுகு—-1 டீஸ்பூன
பச்சை கறிவேப்பிலை—-கால்கப்
தோல் உறித்த பூண்டு இதழ்கள்—–10
செய்முறை———கிழங்குகளைத் தோலுடன் நன்றாக வேக வைத்துத்
தோலை உறித்து திட்டமான துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
பூண்டை மென்மையாக நசுக்கிக் கொள்ளவும்.
கிழங்குடன் உப்பு, காரம், மஞ்சள் பொடியைக் கலக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக்,
கடுகை வெடிக்க விட்டு ,கறிவேப்பிலையைச் சேர்த்து வறுக்கவும்.
தீயைக் குறைத்து பூண்டு விழுதைக் கூட்டி வதக்கவும்.
வதங்கியவுடன் கிழங்கைச் சேர்த்து நன்றாக திருப்பி விட்டு
வதக்கவும். சற்று ஈரப் பசைபோக வதங்கியவுடன் சீரகப்
பொடியைத் தூவிக் கலந்து இறக்கவும்.
பூண்டு வேண்டாமென்றால் இஞ்சியைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.
காரப் பொடியுடன், தனியாப் பொடி, கரம் மஸாலா, சிறிது
மாங்காய்ப் பொடியும் தேவையான அளவு சேர்த்துத் தயாரிக்கலாம்.
வறுத்த கறிவேப்பிலையும், பூண்டு, சீரகப் பொடியும் தனித்த
ருசியைக் கொடுக்கும்.
பீன்ஸ் அவரை பருப்புசிலி
பீன்ஸ் அவரைக்காய் சேர்த்தோ, அல்லது தனியாகவோ கொத்தவரைக் காயிலோ பருப்புசிலி நன்றாக இருக்கும்.
வேணடியவைகள்—அரைகப் துவரம் பருப்பு
கால்கப்—-கடலைப் பருப்பு
வற்றல் மிளகாய்—-5 காரத்திற்கு வேண்டியளவு
ருசிக்கு –உப்பு
காய்—–நறுக்கியது [பொடியாக] கால்கிலோ
பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்
எண்ணெய்—4 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி–சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை——-பருப்புகளைக் களைந்து 2 மணிநேரம் தண்ணீரில்
ஊற வைத்து நீரை ஒட்ட வடிக்கட்டி,மிளகாய் பெருங்காயம்
சேர்த்து கரகர பக்குவத்தில் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
அரைத்த கலவையை, மைக்ரோவேவின் அகலமான தட்டில்
எண்ணெய் தடவி அடை போலப் பரப்பி வைத்து உயர்ந்த சூட்டில்
4நிமிஷங்கள் மைக்ரோ வேவ் செய்து எடுக்கவும்.
எடுத்து ஆற விடவும். ஆறின பின் சிறு துண்டங்களாகச் செய்து
மிக்ஸியில் போட்டு வைப்பரில் 4 சுற்று சுற்றினால், பருப்பு
உதிர் உதிராக புட்டுப் போல கிடைக்கும்.
நறுக்கிய காய் எதுவோ அதை சிறிது ஜலம் சேர்த்து நனறாக
வேக வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து வெந்த காயைக் கொட்டி
வதக்கி உதிர்த்த பருப்புக் கலவையையும் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் சற்று சிவக்க உதிர் உதிராகக் கிளறி இறக்கவும்
வதக்கும் போதே வேண்டிய உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.
கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
மைக்ரோவேவ் இல்லாது செய்வதானால் நிதானமான தீயில்
தோசைக்கல்லில் அடைமாதிரிதட்டி மூடி வேகவைத்து,
திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, ஆற வைத்து,
துண்டித்து மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொண்டு செய்யலாம்.
பருப்புக் கலவையில் தனியா, ஜீரகம், மஸாலா, புளி , இஞ்சி,
வெங்காயம் என நமக்குப் பிடித்தவற்றையும் சேர்த்து
அரைத்தும் செய்யலாம். ஜலம் விடாது அரைக்கவும்.
காப்ஸிகம், வாழைப்பூ, ஆத்திக் கீரை, வெந்தயக் கீரை.
காராமணிக்காய் என நமக்கு வேண்டியவற்றுடன் ஜோடி சேர்த்து
தயாரிக்கலாம்.
அரைத்த பருப்புக் கலவையை ஸ்டீம் செய்து உதிர்த்தும்,
நேரடியாகவே தாளிதத்தில் போட்டு உதிராக வறுத்தும்
செய்யலாம்.
காலிப்லவர் கறி
வேண்டியவைகள்——சின்னதாக ஒரு பூ. சிறிய பூக்களாக நறுக்கி
அளந்தால் 4 கப் அளவிற்கு
வெங்காயம்—-2
பூண்டு—–5 இதழ்கள்
பச்சை மிளகாய் —-3 நீட்டுவாக்கில் நறுக்கவும்.
தக்காளி—-2 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிது
கடுகு, சீரகம்—தலா அரைடீஸ்பூன்
கரம் மஸாலா—–அரை டீஸ்பூன்
ருசிக்கு உப்பு, சிறிது மஞ்சள்பொடி
எண்ணெய்—-3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித் தழை சிறிது
செய்முறை—–நறுக்கிய துண்டங்களில் மூழ்கும் அளவிற்கு கொதிக்கும்
தண்ணீரைக் கொட்டி 10 நிமிஷங்கள் தட்டினால் மூடிவைக்கவும்.
ஆறியபின் தண்ணீரை வடிக்கட்டவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து
பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், இஞ்சியையும்,
மிளகாயையும் நன்றாக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து
வதக்கவும்.
உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வடிக்கட்டிய காலிப்லவரைச் சேர்த்து
நன்றாகக் கலந்து நிதானமான தீயில் சரியான மூடியினால் மூடித்
திறந்து கிளறி வதக்கவும். நன்றாக வதங்கியதும், மஸாலாப்பொடி
சேர்த்துக் கலந்து சில நிமிஷம் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லியைத் தூவவும்.
உருளைக் கிழங்கு சேர்த்தும் செய்யலாம். சரிபாதி, கிழங்கும் பூவுமாக
நறுக்கி அலம்பி, இறுத்து மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு 2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு, மஞ்சள் சேர்த்துக் கலந்து 7–8 நிமிஷங்கள் .ஹை
பவரில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
மற்றபடி சற்று காரம் அதிகம் சேர்த்து முதலில் கூரிய வகையிலேயே
தாளிதம் செய்தும் செய்யலாம்.
மைக்ரோ வேவில் வேகவைத்து செய்தால் சற்று உதிர் உதிராக
சுலபமாக சீக்கிரம் செய்ய முடிகிரது.
அதிகம் வெங்காயம் சேர்த்துவதக்கி, பூவைச் சேர்த்து வதக்கியும்
உப்பு கறிப்பொடி, சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தும் செய்யலாம்.
கேரட், கேப்ஸிகம் ,பட்டாணி, கிழங்கு. சேர்த்தும் செய்யலாம்.
உப்பு,காரம், எண்ணெய், சரிவர ஒழுங்கான தீயினில் சமைத்தால்
நமது விருப்பத்திற்கிணங்க கூட்டுப் பொருட்களைச் சேர்த்துச்
சமைத்து ருசி கூட்டலாம்.
வாழைக்காய் பொடிமாஸ்
இதுவும் ஒரு சுலபமான முறைதான்
வேண்டியவை—2 முற்றிய வாழைக்காய்
பச்சைமிளகாய்—3
இஞ்சி—–ஒரு துண்டு
கடுகு—-1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு வகைக்கு 2 டீஸ்பூன்
எண்ணெய்——2 டேபிள் ஸபூன்
வேகவைத்துப் பிழிந்த துவரம் பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல்—-அரைகப்
புளிப்பிற்கு வேண்டிய அளவு—-எலுமிச்சை சாறு
பச்சைக் கொத்தமல்லி—-நறுக்கியது—-2 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
செய்முறை—-வாழைக்காயை 2, 2, துண்டங்களாக நறுக்கி தோலுடன்
அலம்பி, அமிழ ஜலம் வைத்து பாத்திரத்தில் வேகவைத்து வடிக்கட்டவும்
ஆறியவுடன் பழம் உறிப்பதுபோல் தோலை உறித்துவிட்டு உட்பகுதியை
உதிர்த்துக் கொள்ளவும். காய் முக்கால் பாகம் வெந்தால் போதும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பருப்பு வகைகளைத்
தாளித்து, நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை வதக்கி, காயை உப்பு
மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் வெந்த பருப்பு, சேர்த்து வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி, லேசான எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகிக்கவும் .
காரம், வெங்காய பூண்டு வாஸனை வேண்டுபவர்கள் தேவைப்
படுவதைத் தாளிதத்தில் சேர்த்து வதக்கிக் கூட்டவும்.
வாழைக்காய்க் கறி
நல்ல முற்றிய வாழைக்காயில் கறி செய்தால் நன்றாக வரும்.
மொந்தன் காய்தான் நன்றாக இருக்கும். சாதாரணமாக இது எங்குமே
கிடைக்கின்றது.
வேண்டியவைகள் —வாழைக்காய்—2
பச்சை மிளகாய்——3
தேங்காய்த் துருவல்—-அரைகப், அல்லது விருப்பம் போல்
தாளிக்க எண்ணெய்——–3 டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
கறி வேப்பிலை—– கொஞ்சம்
ருசிக்கு—–உப்பு
மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி—-சிறிதளவு
சின்ன அளவில் புளி
செய்முறை——-வாழைக்காயை அலம்பித் தோல் சீவி திட்டமான
துண்டங்களாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வாழைக்காய் கறுப்பாகாமல் இருக்க புளியை சிறிது ஜலம் விட்டு
ஊற வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும்.
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயைத் தண்ணீர் விடாமல்
மிக்ஸியிலிட்டு ஒன்றிரண்டாக மசித்து எடுக்கவும்.
நன்றாக அலம்பிய காய்த் துண்டுகளை ,துண்டுகள் அமிழ
ஜலம் விட்டு, புளித் தண்ணீர்,மஞ்சள் பொடி சேர்த்து ,அடுப்பில்
வைத்து வேகவிட்டு மிகவும் அளிந்து போகாமல் சரியான பதத்தில்
இறக்கித் தண்ணீரை வடிக் கட்டவும்.
வெந்த காயுடன் உப்பு, தேங்காய்க் கலவையைப் பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, காயம் கடுகு,பருப்பு
வகைகளைத் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பிசறி
வைத்துள்ளதைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும். இது
ஒரு வகை.
இதே வகையில் தேங்காய் சேர்க்காமல் காயை வதக்கி, கறிப்பொடி
உப்பு சேர்த்து மேற் கூரியவாறே தாளிதத்துடனும் ஒரு வகை
செய்யலாம்.
தாளிதத்துடன், தனியா, சீரகம், மிளகாய்ப் பொடி சேர்த்தும் வதக்கலாம்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உபயோகித்தால் ருசி கூடும்.
சமயத்தில் எதுவும் தயார் இல்லை என்றால் சாம்பார் பொடியோ,
ரஸப் பொடியோ, கரம் மஸாலாவோ. மற்றும் ரெடிமேட் மஸாலாவோ
காயுடன் சேர்த்து வதக்கலாம். மற்றும் சில வகைகளையும் பார்க்கலாம்.
காய் வதங்கும் போது உப்பு காரம் சேரும்படி சட்டுவத்தால் சற்று மசித்துக்
கிளறவும்.







