அன்னையர் தினப் பதிவு—24
பிப்ரவரி 21, 2015 at 12:44 பிப 15 பின்னூட்டங்கள்
பசங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்ததே அவர்தானாம்.
பூராவுமே அவர்கள் பள்ளிக்கூடத்தில்தானாம் படித்தது..
இதெல்லாம் முன்னாடியே தெரிந்து கொள்ள வேண்டாமா?
நான் ஒரு அசடு. .
எப்படி என்னால் இப்படியெல்லாம் சொல்ல முடிந்தது?
அம்மா மனதில் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பாள்.
காட்மாண்டுவில் ஸெயின்ட் ஜேவியர்ஸ் பள்ளியை அடுத்து
எங்களின் வீடு.
இரண்டாவது மாடி நாங்கள் இருப்பது. அவர்கள் ஸ்கூலில் நடப்பது
ஒவ்வொன்றையும் பார்க்க முடியும்.
பிள்ளைகள் அவ்விடம் படித்ததால், அடிக்கடி அவர்களைப் பார்ப்பது,
பேசுவது,அவர்களும் நம் வீட்டிற்கு வந்து போவது,யாராவது
தமிழ் ஃபாதர்கள், பிரதர்கள் வந்தால் தமிழ்க்குடும்பம், நாம்
அவர்களுக்கு வேண்டியவர்கள், என்ற முறையில் அறிமுகப்
படுத்துவது, அவர்களைச் சாப்பிட அழைத்து வருவது என்ற முறையில்
யாவரும் வந்து போவது எல்லாம் வழக்கமானது.
இதெல்லாம் நேரில் சொல்ல, நினைத்தபோது போனில் சொல்ல
வசதிகளும் கிடையாது.
என்ன செய்யலாம் பசங்களிடம் அம்மாவின் கேள்வி.
நீ எதெல்லாம் செய்கிறாயோ அது போதும்.
நம்மாத்தில் சாப்பிட்டு அவர்களுக்கு வழக்கம்.
ரஸம் இரண்டு டம்ளர் வாங்கிக் குடிப்பார்கள். கவலையே வேண்டாம்.
எது செய்தாலும்,தோசை,இட்லி தெரியாதது ஒன்றுமே இல்லை.
ஃபாதரும் வந்தார். ஃபில்டர் காஃபி.
இட்லி,சட்னி,மிளகாப்பொடி எண்ணெய் எல்லோரும் சாப்பிட்டோம்.
ஒரு ரூம் வீட்டில் சேர்தான் உண்டு. மேஜை கிடையாது.
அவரும் விசேஷ ஸௌகரியங்கள் எதுவும் எதிர்பார்க்க மாட்டார்.
அவர்கள் தங்கும் இடத்தில் எல்லா ஸௌகரியங்களும் உண்டே தவிர
கையில் சிலவு செய்ய அதிக பணம் கிடையாது. கிடைக்காதோ என்னவோ?
எங்கு வந்தாலும் மாணவர்களுடன் தங்குவார்.
முடியாத இடங்கள் தவிர இரயிலிலும்,பஸ்ஸிலும்தான் போவார்கள்.
மத்தியான வேளையில் வெளியில் போனாலும், இரவு சாப்பிட,தங்க என்று
வந்து விடுவார். அங்கிருந்த நாட்களில் எங்கள் சம்மந்தி மாமியும் சாப்பிட
கூப்பிட்டு மரியாதை அளித்தனர்.
அவ்விடமும் தரையிலேயே உட்கார்ந்து சாப்பிட விருப்பம் தெரிவித்து
ரஸித்து சாப்பிட்டு ரஸமும் இரண்டு டம்ளர் வாங்கிக் குடித்து விட்டு
பாராட்டிவிட்டு வந்ததை மாமியும் ஞாபகப்படுத்தி அடிக்கடி நினைவு
கூறுவது வழக்கம்.
நைஸ்லேடி,நைஸ்லேடி, தேங்க்யூ,தேங்க்யூ அளவில்லாமல்
சொல்வார்.
அம்மாவிற்கும் ஏதோ பரிசு கிடைத்த மாதிரி வெகு ஸந்தோஷம்.
தனக்குத் தெரிந்த எல்லா நல்ல வஸ்துக்களையும் செய்து போட்டு
சிரிப்பாலேயே ஸந்தோஷத்தை
ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாக் கூழிட்டாலும் உண்பதே அமுதமாகும் இல்லையா?
சேவையிலேயே பலவிதம். குருமாவெல்லாம் தெரியாது.
பெயர் பசங்கள் சொன்னாலே அதெல்லாம் நாம் சாப்பிடறதில்லை
என்றுசொல்லும் ரகம்.
இதெல்லாம் இப்படிதான் இருந்திருக்கும்.
வடைகள் இருந்திருக்கும். இன்னும் அழகாக வந்திருக்கும்.
இது மட்டும் தானா? இல்லை. எவ்வளவோ வகைகள்
கேட்டுக் கேட்டு உபசாரம் செய்து கொடுக்கும் பழக்கம் நமதல்லவா?
மேஜையில் வைத்து விட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளும்
அவர்களுக்கு ஒரு வயது முதிர்ந்தவளின் உபசாரம் பாஷை
புரியாவிட்டாலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஊருக்குத் திரும்பும் போது அவர் ஏதாவது வாங்கிக் கொள்ளுங்கள் என
பணத்தை நீட்ட அதெல்லாம் ஒள்றும் வேண்டாம், நீங்கள் யார் வந்தாலும்
இங்கே வந்து விட்டுப் போங்கள் என அம்மா சொல்ல இப்படி, எல்லாம்
நடந்தது.
இந்தியா வந்து விட்டுப்போன நினைவுகளை ஃபாதர் இன்னும் நினைவு
வைத்திருக்கிரார்.ஃ பாதர்கள் நாங்கள் எங்கு இருந்தாலும் வந்து ஒரு
வேளையாவது சாப்பிட்டுவிட்டுப் போவதென்பது ஜெனிவா வரைத்
தொடருகிறது.
பசங்கள் படிப்பு முடிய இரண்டு வருஷமே பாக்கியுள்ள நிலையில்
பாட்டியின் பேத்தி பிரஸவத்திற்காக காட்மாண்டு வந்திருந்தாள்.
பேத்தியின் புகுந்த வீட்டில் பிள்ளைகளுக்கு அவரவர்கள் பொறுப்பினை
ஏற்றுக்கொண்டு நடத்த வேண்டும்.
நான்கு குடும்பங்கள் சேர்ந்திருக்க வீடும் ஸௌகரியமாகஅமைவதில்லை.
என்ற காரணங்களால் நல்ல முறையில் அவரவர்கள் வீடு பார்க்கத் துவங்கி
தனிக் குடித்தனம் ஸெட்டிலாகியது.
பெண்ணிற்கும் ஆண் குழந்தை பிறந்து கொண்டு விடும் நேரம் வந்தது.
மாப்பிள்ளை அவரின் பெரிய அண்ணா மன்னியுடன் தங்கியிருந்தார்.
ராயல் ப்ளைட்டில் கல்கத்தா ட்ரிப் ஒன்று வந்தது.
நல்லபடியாக குழந்தையையும்,தாயையும் கொண்டு விடவேண்டி
அவளப்பா பேரனுடனும், பெண்ணுடனும் சென்னை வந்தனர்.
அவர்களும் வீடு பார்த்திருந்தனர். வீட்டில் யாவருக்கும் கையில் சிறிய
குழந்தைகள்.
எல்லோருக்கும் யாராவது பெரியவர்கள் உடனிருந்தால் நல்லது.
அவர்களும் யோசித்திருப்பார்கள். பாட்டி வந்து உடனிருக்கட்டுமே என.
மாப்பிள்ளையின் அம்மாவே மாமி நீங்கள் இவர்களுடன் வந்திருங்கள்
என்று அம்மாவிடம் கூறினாலும்,
கூப்பிட்டார்கள் என்று உடன் போவது நன்றாயிருக்குமா?
சுதந்திர வாழ்க்கை என்பது இது போல் இருக்குமா?
புருஷத்துணையுடன் பசங்களைப்பற்றி கவலைஇல்லாமல் இருக்கலாம்.
சவுகரியங்களும் இருக்கும். இருந்தாலும் , பெண் வீட்டினர்,மாப்பிள்ளை
சேர்ந்து யிருந்தால் யாராவது பேசத்தான் பேசுவார்கள், இப்படியெல்லாம்
மனக்குழப்பம்.
பேத்தியை வளர்த்த பாசம் ஒரு புறம்..
எதுவாக இருந்தாலும் மனக்கிலேசம் என்பது இப்படிதான் வரும்.
சம்பந்தி அம்மாவோ, மாமி நீங்கள் வந்திருந்தால் மிக்க உதவிதான்.
நான் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டேன் நானும் என் பெண்ணிற்கு
ஒத்தாசையாக இருக்கப் போக வேண்டியுள்ளது.
குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்புதான்.
பசங்களையும் அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள்.
மறுத்துப் பேச முடியாமல் மனப்போராட்டத்தை விடை கொடுத்து அனுப்பி
விட்டு கொள்ளுப்பேரனுடன் இருக்கும் படியானப் பிரமோஷனுடன்
அவர்களின் இரண்டு அறைகள் கொண்ட சற்று வசதியான வீட்டில்
குடும்பம் இடம்மாறியது.
பொருப்பெல்லாம் நீங்கள்தான் என்று , மாப்பிள்ளை மரியாதை கொடுத்து
அன்புடன் இருந்தார்.
அம்மாவிற்கு திருவண்ணாமலை என்றால் உயிர். அடிக்கடி போகவர
என்று இருப்பார்.
பேரன்கள் படிப்பு முடிந்து டில்லியில் வேலைக்கும் சேர்ந்தாகி விட்டது.
ஒருமுறை திருவண்ணாமலை போன போது, அப்பா வேலை செய்த
ஸ்கூலில் ஓய்வூதியம் கொடுக்கிறார்கள். என்று கேள்விப்பட அங்கு
இருந்த எங்கள் நாத்தனார் அவர்களின் கணவர், அம்மாவிற்காக
முயற்சிக்கலாம் என்று சொல்ல, ஸ்கூல் சென்று விசாரித்திருக்கிரார்கள்.
அவர் ஒரு ஆகஸ்ட் தியாகி.
பிறருக்கு உதவி என்பதே அவர் வாழ்நாளின் முக்கிய குறிக்கோளாக
இருந்தது.
ஸ்கூலில் அப்பாவின் டெத் ஸர்டிபிகேட்,மற்றும் விவரங்கள் குறித்துக்
கொண்டுவர கேட்டிருக்கிரார்கள்.
சென்னைப் பெண்ணின் பிள்ளையும் மாற்றல் கிடைத்து ரூர்கேலாவில்
பணி . பெண் சென்னையிலில்லை.
ஊருக்குப்போய் ,டெத் ஸர்டிபிகேட் வாங்க மணியக்காரரிடம் கேட்டால்
அவர் எல்லாவற்றையும் திருப்பிப் பார்த்து விட்டு, ஸர்டிபிகேட் கொடுக்க
மரணமே பதிவு செய்யப்பபடவில்லை. என்றார்.
இறந்ததற்கு டாக்டர் ஸர்டிபிகேட்,கொளுத்துவதற்கு பர்மிஷன்,
இதெல்லாம் அவசியமில்லாத ஊர்.
இந்த விஷயங்கள் தேவை என்ற விழிப்புணர்ச்சியும் இல்லாத காலம்.
அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு அஷ்டமத்தில் சனி.
ஓடிப்போனவர்களுக்கு ஒன்பதாம் மடத்தில் ராஜா என்பதுபோல
இப்படி யாருக்கேனும் சிரமம் ஏற்பட்டால் விழிப்புணர்ச்சி தானாகவே
வந்து விடும். அம்மா என்ன செய்தாள்? தொடருவோம்.
Entry filed under: அன்னையர் தினம். Tags: 24 ஆம் பதிவு.இரயில், சேர், பஸ், மேஜை.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar | 4:44 பிப இல் பிப்ரவரி 22, 2015
காமாக்ஷிமா,
உங்களைப் போலவே நாங்களும் ஃபாதர் வருகையின்போது நடந்த உபசரிப்புகளைக் காணும்படி செய்துவிட்டீர்கள். எவ்வளவு சமாளிப்புகள், பெரிய விஷயம்தான்.
ஓய்வூதியம் கிடைத்ததா ? அதைப் பெறுவதற்கு அந்த நாளில் அன்னையார் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன ? என்பதை அறியும் ஆவலில் ….. அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 11:40 முப இல் பிப்ரவரி 23, 2015
அன்புள்ள சித்ரா உன்னுடைய பாராட்டு அம்மாவிற்கு.. அடுத்து அதைப்பற்றிதான் எழுத வேண்டும். என் மனத் திருப்திக்காக கடந்தகாலம் முன்னோட்டமாக வருவதைப் பகிர்ந்து கொள்கிறேன். எவ்வளவு மனக்கிலேசங்கள் வந்தாலும், தூர உதறிவிட்டு அம்மா இருந்தது ஒரு எடுத்துக்காட்டுதான். எல்லோருக்கும் வயதான காலங்களில் சில அனுபவங்கள் ஏற்படுகிறது.
இம்மாதிரிதான் மனதால் எல்லாவற்றையும் உதறித் தள்ள வேண்டும் என்ற படிப்பினையை அம்மாவின் ஞாபகங்கள் அணி வகுப்பதுதான் இந்தப்பதிவுகளின் சாரமே என்று நினைக்கிறேன்.தொடர்ந்து படித்து, உன் கருத்துகளை எழுதுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அன்புடன்
3.
பிரபுவின் | 8:36 முப இல் பிப்ரவரி 23, 2015
தனிக் குடித்தனம் என்ற சொல் முன்பு இருந்திருக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்லுவேன்.பல திருப்பங்களுடன் நகர்கின்றது உங்கள் திரைக்கதை (அன்னையர் தினப் பதிவு).அன்புடன்..
4.
chollukireen | 11:42 முப இல் பிப்ரவரி 23, 2015
ஸரியாகச் சொன்னீர்கள். இது மனத் திறப்புக் கதைதான்.
உங்கள் விசே,ப் பாராட்டுதளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
chollukireen | 11:43 முப இல் பிப்ரவரி 23, 2015
விசேஷ என்று திருத்தி வாசிக்கவும். அன்புடன்
6.
பார்வதி இராமச்சந்திரன். | 2:04 பிப இல் பிப்ரவரி 25, 2015
ஆஹா!.. பாட்டியின் சேவை, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடருகிறது.. தங்களது எழுத்து நடை மிகவும் வசீகரிக்கின்றது..குறிப்பாக, சில வார்த்தைப் பிரயோகங்கள். ‘ பாட்டியின் பேத்தி பிரஸவத்திற்காக காட்மாண்டு வந்திருந்தாள்’.. ரொம்பவே ரசித்தேன்.. பாட்டி, பென்ஷன் வாங்கினார்களா?!..தன் பேரன்கள், பெண் சென்னையிலில்லாத போது, பேத்தியுடன் வாழ்வை எப்படி எதிர்கொண்டார்கள் என்று அறிய ஆவலாயிருக்கிறது.. அம்மாவின் மனப்பக்குவம், கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று!..
7.
chollukireen | 8:29 முப இல் பிப்ரவரி 27, 2015
ஆமாம் உங்கள் சேவை எங்களுக்குத் தேவை என்ற அளவிலேயே தான் இருந்தாள். உடனே பதிலளிக்க முடியவில்லை. இன்டர்நெட் ப்ராப்ளம். ரொ
8.
chollukireen | 8:34 முப இல் பிப்ரவரி 27, 2015
ரொம்பவே ரசித்ததாக எழுதியிருப்பதைப் பார்த்து நன்றி சொல்லுகிறேன்.. நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அடுத்த பதிவில் பதில் கிடைத்துவிடும்.. உன்னுடைய பதிவுகளை நிதானமாகப் படித்து மனதில் வாங்குகிறேன். வரவிற்கு நன்றி. அன்புடன்
9.
ranjani135 | 1:25 பிப இல் மார்ச் 4, 2015
பாதர் வந்து பாட்டியின் சமையலை சாப்பிட்டு ரசித்ததை (தரையில் உட்கார்ந்துகொண்டு!) இரண்டு டம்ளர் ரசம் வாங்கிக் குடித்ததை ரசித்துப் படித்தேன். கடைசிவரை யாருக்காவது உபயோகமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் அம்மாவின் மனசு எல்லோருக்கும் வரவேண்டும். எல்லோருடனும் ஒத்துப் போகும் அந்த குணம் மிகவும் அரிது.
தாமதமாக வருகிறேன். ஆனால் நிதானமாகப் படிக்க முடிந்தது. பென்ஷன் கிடைத்ததா? தொடர்ந்து படிக்கிறேன்.
10.
chollukireen | 6:46 முப இல் மார்ச் 11, 2015
வாருங்கள் ரஞ்ஜனி. உங்களைக் காணோமே என்று பார்த்தேன். இதை படித்து பின்னூட்டமிடுபவர்கள் வராவிட்டால் என்ன காரணமாக இருக்கும் என்று அவர்களுடனே மனதால் போய்விடுகிறேன்.
உங்கள் அக்கா நல்லபடி குணமாக கடவுளை வேண்டுகிறேன். உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி.அன்புடன்
11.
chollukireen | 11:40 முப இல் ஜூன் 28, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
அம்மாவின் நினைவான பதிவுகளும் வேறு வழியாகத் திரும்புகிறது. பாருங்கள் படியுங்கள். அன்புடன்
12.
Geetha Sambasivam | 11:51 முப இல் ஜூன் 28, 2021
ஆஹா, பாட்டியின் சேவை, தவலடை தான் எனக்குக்கொஞ்சம் தகராறு பண்ணும். சில சமயங்கள் உதிர்ந்து விடுகிறது. மற்றவையும் பார்க்கவும் நன்றாக இருப்பதால் சாப்பிடவும் நன்றாகவே இருந்திருக்கும். பாட்டியும் உடல் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் செய்து போட்டிருக்காரே! என்ன இருந்தாலும் அந்தக் கால மனுஷி அல்லவா! அடுத்துப் பாட்டி என்ன செய்யப் போகிறார் என்பதை அறியக் காத்திருக்கேன்.
13.
chollukireen | 11:36 முப இல் ஜூன் 29, 2021
உங்கள் பாராட்டுதல் எனக்கு மனம் நிறைந்து விட்டது. அன்புடன்
14.
ஸ்ரீராம் | 2:30 பிப இல் ஜூன் 28, 2021
பணம் காசெல்லாம் தூசு. சாப்பிட்டவர்கள் முகமும் மனமும் மலர, நன்றாயிருக்கிறது என்று ரசித்துச் சாப்பிட்டு இன்னும் இரண்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டால் அதற்கு ஈடு இணை எது?
15.
chollukireen | 11:33 முப இல் ஜூன் 29, 2021
அதுதான் மனம் நிறைந்த விஷயம் அன்புடன்