Archive for மே, 2016
மயிலத்திலிருந்து திருவருணை 2
பெண்ணும் பிள்ளையும் உட்கார்ந்து சாப்பிட நியூஸ் பேப்பர் ஆஸனம்போலுள்ளது. அடேடே ஃபோட்டோ கிராபரும் இருக்கிறார். அதெல்லாம் அவர் எடுத்துக் கொள்ளட்டும். நாம் முன்னாடி தரிசனம் பண்ணலாம். திரும்பிப்பார்த்துக் கொண்டே மேலே கோவிலுக்கு நடைபோட வேண்டியதாயிற்று.
சொல்லமுடியாத கூட்டம் இருக்கும் என்ற நினைப்புடன் பார்த்தால், ராகுகாலத்திற்கு முன் விவாகங்கள் முடிந்து அவரவர்கள் தெருவோர அமைப்பிற்குப் போய் விட்டதால், அடுத்த நல்ல நேரத்தை நோக்கி ஏற்பாடுகள் நடப்பது ஓரளவு யூகிக்க முடிந்தது. கோவிலுள்ளே கட்டண தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு ஓரளவு கூட்டமின்றியே ஸன்னிதானத்தை அடைய முடிந்தது.
லக்ஷணமாக ஓரளவு நபர்களாக தரிசனத்திற்கு அனுமதித்ததால் தெரிந்த குருக்கள் அவர்களும் இருந்தபடியால், நல்ல தரிசனமும்,அர்ச்சனையும் செய்து பிரஸாதம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு சுற்று சுற்றி விட்டு நான் ஓரிடத்தில் தங்கிக் கொண்டு, பெண்,மாப்பிள்ளை இருவரையும் நிதானமாக எவ்வளவு பிரதக்ஷிணம் செய்ய வேண்டுமோ, செய்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டேன்.
அவர்களுக்கு அடிக்கடி எங்காவது கோவில்களுக்குப் போய்க்கொண்டே இருப்பது வழக்கம். மயிலம் வந்து சேருமுன்னரே வழியில் காரை நிறுத்தி டிபனும் உட்கொண்டாயிற்று. அந்த விசாரமும் இல்லை. ஒரு வழியாக எல்லோரும் வெளியே வந்தால் ஆங்காங்கே காது குத்தும் வைபவங்களுக்கான வைபோகங்கள். தனித்தனி கும்பல், இராகுகாலம் கழித்து முகூர்த்தம் வைத்துக்கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன். இப்படிப் பலதரப்பட்ட வைபவங்கள் கண்ணிற்குக் குளிர்ச்சியாகக் காத்திருந்தது.
மயிலத்திலிருந்து பாண்டிச்சேரி சென்று என்பெண்ணின் நாத்தனாரையும் பார்ப்பதாக நிரல். அது காரில்தானே போகிறோம். இவ்விடநிகழ்ச்சிகள் படம் வேண்டும். நீங்கள் யார் எடுத்துக் கொடுத்தாலும் ஸரி, இதை எடுங்கள்,அதை எடுங்கள் என்று விரைவாக இயங்க முடியாததால் சொல்லி விட்டேன்.
தட்டுத் தட்டாய்ப் பக்ஷணங்கள், எல்லாதினுஸு பழவகைகள், இனிப்பு பக்ஷணங்கள் பல தினுஸில், என்ன இல்லை என்று வேண்டுமானால் ஆராய்ச்சி செய்யலாம். சீர் வகைகள் போலும்.! பரப்பப் பட்டிருந்தது. குலையோடு வாழைப்பழம். ஆப்பிள்,அன்னாஸி, ஆரஞ்ச்,சாத்துக்குடி. கவனித்துப் பார்த்தால் நேர்ந்து கொண்டு மொட்டையடித்துக் காது குத்தும் வைபவம். இரண்டு குழந்தைகளுக்கு. ஓஹோ இதுவும் நான் பார்த்து கண்டு களிப்பதற்காகவே என்று நினைத்துக் கொண்டேன். இந்தியாவை விட்டு வெளியிலிருந்தால் எல்லா நிகழ்ச்சிகளுமே அபூர்வம்தான். அதுவும் கோவில் போன்ற புண்ணிஸ்தலங்களில். வகைவகையான சீர் வரிசைகளுடன் பாருங்கள் இரண்டு குழந்தைகள் மழித்த தலையில் சந்தனப் பூச்சுடன். இதுவும் ஒரு அழகுதான்.
ஒன்றோடொன்று சிரித்துக் கொண்டே குழந்தைகள் மாமாமடியில். தாத்தா பிள்ளையார் பூஜை செய்து கற்பூர மேற்றும் தாத்தா போலும் பக்ஷணம் பழம் இன்னும் வரும் பாருங்கள் மாலை போட்டுக் கொள்ள வேண்டாமா? அடுத்து
அழாமல் சமத்தாக காது குத்திக் கொள்கிறதா? கொஞ்சம் பார்க்கலாம்.
பக்கத்திலேயே இன்னொரு வசதியான சீர் வரிசையுடன் ஆனால் அழகான எவர்ஸில்வர் தவலை,ஜோடுதவலைகளுடன் என்னென்ன பக்ஷணங்களோ? பார்க்க ரம்யமாக, முடிந்த கல்யாணம் போலத் தோன்றுகிறது. மங்களகரமாக விளக்கு பூஜை ஸாமான்களுடன் சும்மா ஒன்றிரண்டு படங்கள். பார்க்கலாமா? பெண்ணின் தலை மட்டும் படத்தில் என்று நினைக்கிறேன்.
வெளியில் முருகருக்குப் பொங்கலிடுவதைப் பார்க்க வேண்டாமா?வாருங்கள்.

பொங்கல்[/caption
]எல்லா வைபவங்களும் பார்த்தாயிற்று. வீல்சேர்தான் வரும்போது பார்த்தாயிற்று.படி வழி இறங்க முடியுமா?மெல்ல இறங்கினால் ஆயிற்று. நாங்களும் பிடித்துக் கொள்கிறோம் என்றனர். நானே மாற்றி இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு இறங்கி விடுவேன். இந்த வழிதான் இறங்கியாயிற்று.
[caption id="attachment_8393" align="aligncenter" width="455"] மயிலத்துப் படிகள்
தரிசனம் நல்லபடி முடித்து விட்டோம். அடுத்து கோவில் மூடுமுன் மணக்குள வினாயகரைத் தரிசிக்க புதுவையை நோக்கி வண்டி விரைகிறது. மானஸீகமாக நீங்கள் யாவரும் உடன் வருகிறீர்கள். போவோம் யாவரும் புதுவைக்கு. முருகா,முருகா!!!!!!!!!!!!
தொட்டில்-5
பலபல வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த ஸ்வீகரங்கள் எந்த வகைகளில் இருந்தது. அப்போதைய உறவு முறைகளும்,மருத்துவ வசதி குறைவுகளும்,பார்த்த கேட்டவைகள் இவை.நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்ததுதான் இவைகள். தெரிந்து கொள்ளலாமே. அவ்வளவுதான் மேலும் வரும்.
மயிலத்திலிருந்து திருவருணை.
நகரங்களில் வயதான முதியவர்களுக்கு வெளியுலகம் மாடி வீடுகளாயின் ஜன்னல் மூலமும், உடம்பு அஸௌகரியங்களின்போது, டாக்டரிடம் போகும்போதும்,வரும்போதும் தரிசனமாகிறது. போன இடத்தில் பலவித நோயாளிகளைப் பார்க்கும் போது இன்னும் மனது இடிந்து போகிறது. எல்லாம் அவரவர்களுக்கு விதித்தது நடக்கும் என்று மனதிற்குத் தெரிந்தாலும் ஸமயத்தில் யாவும் மறந்து விடுகிறது. படிக்கும் விஷயங்களும், கேட்கும் விஷயங்களும் கொஞ்சமா,நஞ்சமா? எதற்கு இவ்வளவு பீடிகை.கோவில்களுக்குப் போவதானாலும் கூட ஒருவர் துணை வேண்டியுள்ளது. நகர வாஸங்களிள் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். யாவரும் அவ்வளவு பிஸி.
ஒரு நாற்பது தினங்கள் நானும் சென்னை சென்று தாற்காலிகமாக தங்க வந்த பெண்,மாப்பிள்ளையுடன் தங்கி சற்று வெளியூர்கள் பார்த்து வந்தேன். அவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிய வீட்டின் கீழ்த்தளத்தைச் சீர் செய்ய நியூ ஜெர்ஸியிலிருந்து வந்தார்கள். குலதெய்வம் மயிலம் கோவிலுக்குப் போகவேண்டும் உன்னால் முடியுமா என்றார்கள். நான் இரண்டு மணிக்கொருதரம் சிறிது ஆகாரம் உண்டு கொண்டு முன்னே,பின்னே என்று மருந்துகளுடன் அப்போது, இப்போது மாத்திரம் என்ன இருந்து கொண்டு இருந்தேன். ஸெரிலாக் கணக்கில் சாதத்தை மோருடன் கரைத்து, அல்லது ஸத்துமாக்கஞ்சி என்று ஆகாரம் வரையறுக்கப் பட்டிருந்தது.
பரவாயில்லை வீட்டுக் காரில்தானே போகிறோம் என்று காலையிலேயே எனக்கு ஆகாரம் தயாரிக்கப்பட்டு,அவர்களுக்கான சிற்றுண்டியுடன் அதிகாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டோம்.
மும்பையினின்றும் ப்ளைட்டில் கூட தனியாக வர முடியாது என மருமகள் உடன் வந்து மறு ப்ளைட்டில் மும்பை சென்றாள். ஜெனிவா பத்து வருஷங்களாகத் தனி
யாகவே போய்வந்தவள். அமெரிக்காவும் அப்படியே! இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளதான் முடிகிறது
காரில் போகிறோம். கோவில் வாசலில் இறங்கி உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்தால் போதும். அத்துடன் வேறு சில இடங்களும் போக வேண்டும்.
வளவனூர் மாரி அம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்யணும். கோலியனூர் போகணும். எங்காவது ஹோட்டலில் இரவு தங்கி விட்டு மறுநாள் நான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலையும் போக வேண்டும். இப்போது முடியாவிட்டால் இனி எப்போதுமே முடியாது என்று என் மனதின் ஆசைகளைச் சொன்னேன்.
எல்லாம் ஸரி என்ற முடிவுடன் இரவு நேரத்தில் அதிகப்படியாக உயரம் வேண்டுமென்று ரிஃப்ளெக்ஸ் இருப்பதால் மூன்று குஷன்களுடன் வண்டி. மயிலத்தை நோக்கி விரைந்தது. மயிலம் என்றஇவ்வூரின் பெயர் வரக்காரணம் சொல்வார்கள் அது ஞாபகம் வந்தது.
திருச்செந்தூரில் சூர ஸம்ஹாரத்திற்குப் பிறகு, சூர பத்மன் தன்னை முருகப் பெருமானுக்கு வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பினான். அப்போது முருகப் பெருமான் இத்தலத்தில் மயில் வடிவத்தில் அமர்ந்துதவம் புரியும்படி அருளினார். அதன் பிரகாரம் சூரபத்மன் இங்கு தவம் புரிந்து மயிலாக மாறி முருகப்பெருமானுக்கு வாகனமாக மாறினான். அதனால் இத்தலம் மயிலம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது.
இது சிறிய குன்றம்தான்.பெரியமலை இல்லை. மலை ஏறும்போதே குளத்தின் கரையில் குழந்தைகளும்,வேண்டுதல் செய்து கொண்ட பெரியவர்களும் தலையை மழித்துக் கொள்ளும் காட்சிகள். .இன்னும் மேலே நிறைய கல்யாண கோஷ்டிகோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டுவேன்களிளிருந்து இறங்கி ரோடோரத்திலேயே சில ஸம்பிரதாயங்கள் செய்வித்துக் கொண்டே பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்ட வீதி ஓரங்களில் மரத்தினடியில் ஸம்ப்ரமமாக நுணி வாழையிலைச் சாப்பாடும் நடந்து கொண்டு இருந்தது.இவையெல்லாம்கல்யாணத்தை முடித்துவிட்ட கோஷ்டி. ஆற அமற சாப்பாடு. பேச்சுகள், விமரிசனங்கள்.
பெரியபெரிய அகலமான அடுக்குகளிள் சமைத்ததை அப்படியே மூடி வேனில் ஏற்றி இருப்பார்கள் போலும். கீழிறங்கி இவைகளை எல்லாம் பார்க்க படம் பிடிக்க ஆவல். நீ கீழிறங்கினால் உனக்கும் சாப்பாடு போட்டு விடுவார்கள். இன்னும் கோவிலிலும் கல்யாணம் பாக்கி இருக்கும். அங்கு போய் விஸ்தாரமாகப் பார். முன்னே கோவிலுக்குப் போவதைப்பார் என்றாள் என் பெண். எங்கோ தூரதேசத்தில் இருந்த படியால் ஸம்ஸாரியகவும் இருந்ததால் நான் பார்த்த கல்யாணங்கள் மிகக் குறைவு.இம்மாதிரியான கல்யாணங்கள் பார்க்கவும் ஆசை.ஆச்சு வீல்சேருக்கு வருவோம்.
மயிலத்தில் வயதானவர்களுக்காக வீல்சேர் வசதி இருந்தது. கார்களில் செல்பவர்கள் ஒரு இடத்திலிருந்து அதில் போகலாம். மற்றபடி அவ்வளவாக செங்குத்தானபடிகளில்லை. வேறு இடத்திலிருந்து படிகளேறியே செல்வது வழக்கம். கடினமானது ஒன்றுமில்லை.
மேலே இருப்பது சென்ற முறை சென்ற வீல்சேர்.. மண்ரோடு. இந்தமுறை ரோடு நல்லது. இருந்த ஒரு வீல்சேர் சக்கரங்கள்,அப்படி,இப்படி மக்கார் செய்தது. ஏர்போர்ட்டில் ட்ராலி தள்ளுவதுபோல நடை வண்டி மாதிரி அதைப் பிடித்துகைகொண்டே மேலே போய்விட்டேன்..
எனக்காக காத்திருந்தது போல ஒரு கல்யாணசாப்பாடு, அலங்கரிக்கப்பட்ட மண் கலசங்கள்,இலை. மனிதர்கள், பெண்,மாப்பிள்ளை, எளிய திருமண உடையில் பார்ப்போமா? உண்ட இலைகள் ஒரு புறம், உண்ணும் இலைகள் ஒருபுறம்.பாலிகைக் குண்டான்கள் . இன்னும் சாப்பாடு பூராவும் முடியவில்லை.
இன்னும் கோவிலுக்குள்ளே போகலை. வேஷ்டி கட்டினவர்களைவிட பேண்ட்போட்டவர்களையே நிறைய பார்க்க முடிந்தது. கட்டம்போட்ட எளிய வழக்கமான கூரைப்புடவையில் பெண். கோவிலுக்கு போய்விட்டு , அங்கும் சில காட்சிகளைக் காணலாம். தொடர்ந்து வாருங்கள்.
தொட்டில்–4
உதவி—கூகல்—நன்றி
என்னது திரும்பவும் ஆசாரமான குடும்பத்துத் தொட்டிலேவாா? நீங்கள் கட்டாயம் நினைப்பீர்கள் . இம்மாதிரி கதைகளெல்லாம் நான் சொன்னால்தானே உண்டு. எல்லா இடத்திலேயும் எதிர்மறையேதானா? நல்லது ஒன்றுமே இல்லையா? சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்.. ஞாபகம் வரும் அளவிற்கு எழுத்து வேகம் போதவில்லை.ஆமாம் இன்னொரு வைதீகக் குடும்பம் இப்படிதானே ஆரம்பிப்பீர்கள். என்ன செய்வது. இப்படிப்பட்ட ஸமுதாயத்தில்தான் புத்ரன் இல்லைவிட்டால் பித்ருக்கள் கடைதேற மாட்டார்கள் என்ற எண்ணங்கள் ஆழப் பதிந்திருந்த காலம். அவர் ஒருவேதமூர்த்தி.
வேதவித்துஎன்றேசொல்வார்கள்வேதங்கள்,தர்மசாஸ்திரம்,தத்துவ வியாகரணங்கள் எல்லாம் கரைத்துக் குடித்தவர். கிரஹஸ்தன் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணமானவர். குடும்பத்துக்கு ஒரே பிள்ளை. அவருக்குப் பெண்தானா கிடைக்காது. நல்ல குடும்பத்துப் பெண்ணுடன் விவாகமாகி பல வருஷங்களுக்குப் பின் பெண் மகவு. ஸந்தோஷம் அநுபவிக்கக விடாமல், அடுத்த மூன்று நாட்களிலேயேே மகராஜி போய்ச் சேர்ந்து விட்டாள். அம்மாவினால்க் குழந்தையை எவ்வளவு நாட்கள் பார்த்துக் கொள்ள முடியும்? அப்படியும் ஐந்தாறு வருஷங்கள் போயிற்று. இன்னொரு விவாகம் செய்தாலும் சிறிய பெண்கள்தானே கிடைக்கும். திரும்பவும் விவாகம் செய்தார்கள்.. நாலைந்து வருஷங்கள் கடந்தது.பாட்டிக்கு பேரன் பிறக்கப் போகிறான் என்று ஸந்தோஷம்.
பார்க்கிறவர்கள் எல்லோரும் தாயும்,பிள்ளையும் நல்லபடி வெவ்வேறாகி ஸுகப்பிரஸவம் ஆக வேண்டும் என்றே ஆசிகள் வழங்கும் காலமது. பிரஸவம் என்பது மறு பிறவி.. ஆயிரம் காலத்துப் பயிராக இருக்க வேண்டும் என்பார்கள். வைத்திய வசதி கிடையாது. நம்மது என்ன ஆயிற்று பார்ப்போமா?
எவ்வளவு ஜாக்கிரதை,எப்படி இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும். சோதனை என்பது இதுதானோ? மூத்தவளாவது ஒரு குழந்தையை விட்டுப் போனாள். இவளது குழந்தை உலகத்தையே பார்க்கவில்லை.மறுபடியும் சோகம்.இவளும் போய்ச் சேர்ந்தாள். அந்தகாலகட்டத்தில் பெண்களைக் கொடுக்கவும் மனிதர்கள் தயார். காலம் ஓடவேண்டுமே. பெண்ணுக்கும் நல்ல இடமாகப் பார்த்து பிறகும் ஒத்தாசை
வேண்டுமே!
ஊருக்குள்ளேயே ஸம்பந்தம் வேண்டுமே? அவரும் பெண்ணுக்கு முதலில் நல்ல இடத்தில் விவாகம் செய்து விட்டுத் தானும் கலியாணம் செய்து கொள்கிரார். நல்ல வேளை இந்தக் கல்யாணத்தின் மூலம் ஸந்ததி உண்டாகவில்லை..
பெண் கர்பவதி ஆகிராள். நல்லபடி ஆகவேண்டுமே என்ற பயம்தான் மேலிடுகிறது. அந்த நாட்களில் இப்படி எவ்வளவு காலம் முன்நின்றது யூகிக்க முடியவில்லை. குடும்பத்தின் முதல் ஸந்தோஷமாகப் பேரன் பிறந்தான். ஸந்தோஷம் கரை புரண்டது. எவ்வளவுவருஷங்களுக்குப்பின்வீட்டில்சம்பந்திகள்,மாப்பிள்ளை,வருவோர்,போவோர் என களை கட்டியது.மூன்றாவதாக பெண்ணைக் கொடுத்தவர்களுக்கு மட்டும் நம் பெண்ணிற்கு ஒன்றுமில்லாது போய்விடுமோ என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்து விட்டத
.எந்த காலத்திலும்எல்லோரிடமும் எல்லா குணங்களும் ஆங்காங்கே தலை தூக்கிக் கொண்டுதான் இருந்தது.ஆனால் ஸம்பந்தப் பட்டவளோ எவ்வளவோ கஷ்டங்களை நேரில் பார்த்ததின் பயன் குடும்பத்தின் ஸந்தோஷத்தை அவளுடயதாகவே ஏற்றுக்கொண்டு நல்ல முறையில் தோழமையுடன் பாராட்டுவதும்,சீராட்டுவதாகவும் பெரிய மனுஷியாகவே செயல்பட்டு குடும்பத்தை அழகுற நடத்தினாள். குழந்தை பேரனாகவும்,பிள்ளையாகவும் அவ்வளவு உயர்வுடன் கொண்டாடப்பட்டு ஊரே அவர்களை மெச்சும் படி அவ்வளவு ஸந்தோஷமாக இருந்தது குடும்பம்.
. நாட்டிலும் வியாதிகள் கண்டு பிடிப்பும்,நிவாரணங்களும்,டாக்டர்களும் வைத்திய வசதிகளும் ஓரளவு பெருகின என்றே சொல்ல வேண்டும்.
வசூரி,விஷ ஜுரங்கள், குழந்தைகளுக்கு ஈரல் குலைக்கட்டி இன்னும் இப்படி எத்தனையோ வியாதிகளும் ,அவைகளுக்கான மருந்துகளும் கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் நேரம்.நாமும் தொட்டிலுடன் இன்னும் சற்று மேலே போவோமா? தொடருவோம். மே மாதம் 18 ஆம்தேதி 2016 அன்று பதிப்பிக்கப் பட்டது இந்த நான்காவது பாகம்.
தொட்டில்-3
படஉதவி –கூகலுக்கு நன்றி
ஒவ்வொருகதையாக நான் முன்னே நீ முன்னே என்று மனதில் போட்டிபோட ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒன்றுக்கொன்று ஸம்பந்தமிருப்பதுபோலத் தோன்றினாலும் இம்மாதிரி எல்லாம் இப்போது சொல்லிக் கேட்க கூட முடியாது.அவ்வளவு உஷாரான காலமிது. இப்போது நடப்பவைகள் இன்னும் புதியமாதிரி உள்ளது. முன்பு ஸ்வீகாரம் அதாவது தத்தெடுப்பது என்பது சுலப காரியமில்லை. பணம்,காசு,ஸொத்து,ஸுதந்திரம்,வீடுவாசல் எல்லாமிருந்து ,அதிலும்நல்லகுடும்பமாக,நெருங்கியஉறவினர்கள்தான்,பங்காளிகளாக இருந்தால்தான்தத்து எடுக்கவோ, கொடுக்கவோ விரும்புவார்கள். நல்லது கெட்டது
நம் கையிலா இருக்கிறது குடும்பத்தில் உள்ள. எல்லோருக்கும் கஷ்டப்படாத வகையில் சொத்துக்களை எழுதி ரிஜிஸ்டர் செய்து விட்டு , ஆசார அனுஷ்டானத்துடன் உறவினர்முன், விதி பூர்வமாக தத்தெடுப்பது என்பது விருந்துகளுடன் முடியும். பிறகு நல்ல நாளில் தத்தெடுத்தவர்கள் ஸ்வீகாரப் பிள்ளைக்கு உபநயனம்,பிரமோபதேசம் செய்வார்கள். தத்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு அதிலும் தாய்க்கு கனமான பவுனிலான சங்கிலி கட்டாயம் போடுவார்கள்
. மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.நல்ல கனமாகத்தான் சங்கிலி இருந்தது. வம்பில்லை இது. வழக்கமான டயலாக். ஸொத்தே அவர்கள் வசம் வருகிறது. ஒற்றுமையும்,நேசமும் வளர்க்கத்தான் பாடு படுவார்கள். எங்கோ ஒன்று ஆக்கிரமிப்புபோல அமைந்து விடுவதும் உண்டு.ஏதோ எனக்கு ஞாபகம் வந்த சிறிதளவு ஸமாசாரமிது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்பவர்களைக்கூட சில ஸமயம் ஸ்வீகாரம் விடாது. அந்த ஒற்றைத்தெரு கோகிலா பாட்டி,தாத்தா எதுவும் வேண்டாம். எல்லாம் கோவிலுக்குக் கொடுத்து விடலாம்,குழந்தை இல்லா விட்டால் என்ன என்று சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று போய்விட்டார். குழந்தை வளர்ப்பதிலும் கஷ்டங்கள் எவ்வளவோ உள்ளது. தானமாக எழுதி வைத்து விடலாம் என்றவர்தான்அவ்வளவாகவயதுமுதிர்ந்தவரும்இல்லை.காயோ,கறியோ,பழங்களோ, எல்லாம் ஏழைகளுக்கு வாரிவாரி வழங்கியவர். சற்று வயதான பாட்டி. என்ன செய்ய முடியும். அவ்வளவாக விவகாரம் போதாது. ஊர்க்காரர்கள் சேர்ந்து பாட்டியின் தம்பியின் பேரனை ஸ்வீகாரம் செய்து வைத்தனர்.
தம்பி யாவற்றையும் பார்த்துக் கொண்டார். அதிக வருஷம் பாட்டி உயிருடனில்லை. கோவில் முதலானவற்றிற்கும் ஏராளமாக கொடுத்தார்கள். காலம் சென்று கொண்டே இருந்தது. பாட்டியின் மகனும் அழகிய வாலிபனாகி,படித்து,முடித்து தில்லியில் வேலைக்குப் போனான். என்ன நீங்களே சொல்வீர்கள் காதலா? என்று. ஆமாம் அதுவேதான். கூட வேலை செய்யும் அழகியபெண். மிக்க சினேகம்தான். இவன் மனதில் ஒருதலைக்காதல்போல. அது தெரியாத அந்தப்பெண் வேறு நண்பருடன் திடீர் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பார்டிக்கு அழைக்க பையன் விட்டு விட்டான் மனதை.
பயித்தியம் பிடித்தவன்போல் பிதற்ற ஆரம்பித்து விட்டான்.
கலங்கிவிட்டது மனம். கூட இருந்தவர்கள் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்க, ஓடினார்கள் பெற்றவர்கள்.எதுவும் தெரியாதவர்கள். மனதை விட்டுவிட்ட பிள்ளையைப் பார்த்து, காரணம் மற்றவர்கள் சொல்லக் கேட்டு பதறி ஊருக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவுதான் எதிரில் யாரைப் பார்த்தாலும் உன்னை நான் எவ்வளவு காதலித்தேன். உன்னிடம் சொல்வதற்குள், என்னை நீ புரிந்து கொள்ளவில்லையே! இப்படி செய்து விட்டாயே, இது ஸரியில்லை, நான் உன்னை விரும்புகிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்து விட்டான். ஊரில் வீட்டுக்கு வீடு அறியாத பெண்கள். வாசலில் தலைகாட்டவே பயம்.தப்பித் தவறி பெண்கள் எதிர்ப்பட்டால் மிகவும் கஷ்டமாகிவிடும்.வயித்தியம் அவர்கள் செய்தாலும் , வீட்டில் அவனைத் தக்க வைக்க முடியவில்லை.
அந்தகாலத்துவயித்தியங்கள்மந்திரம்,தந்தரம்,ரக்ஷை,திருஷ்டி என்று பலவகைகள் செய்து அவன் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே கஷ்டமாக இருந்தது. பெண்கள் உள்ள வீட்டின் வாசலில்ப் போய் உட்கார்ந்து விடுவான். இதனால் எவ்வளவு புரிந்து கொண்ட குடும்பங்களாக இருந்தாலும் மனஸ்தாபங்கள் உண்டாக ஆரம்பித்தது. ஏச்சு பேச்சு சண்டை,சச்சரவு அளவிற்கு உயர்ந்தது. ஏதோ நல்ல காலம். இதெல்லாம் பாட்டிக்கு இல்லை. சென்னையில் நல்ல டாக்டர் ஒருவர் இருப்பதாகத் தெரிந்து, அவ்விடம் அழைத்துப்போனதில், யார் செய்த புண்ணியமோ, படிப்படியாக உடல்நிலை முன்னேறியது. திரும்ப அதே வேலையிலும் சேர அனுமதி வந்தது.சுபாவத்தில் மிகவும் ஒழுங்கான பையன்.
டாக்டரின் ஆலோசனை பையனுக்கு நல்லதொரு விவரங்கள், உண்மை அறிந்த பெண்ணாய்ப் பார்த்து விவாகம் செய்வித்து, தாய்தந்தையர்களான நீங்களும் உடன் போய் இருங்கள். எல்லாம் ஸரியாகிவிடும் என்று மருந்துகள் ஏதோ சிறிது நாட்களுக்கும் கொடுத்தார். எல்லாம்ஸரி. பெண் யார் கொடுப்பார்கள். பிள்ளைக்கு வசதிகளுக்குக் குறை ஒன்றுமே இல்லை. ஊரே அவனால் சினேகமிழந்தது. இதற்கு வழி யார் வகுப்பது? பெரிய கேள்விக் குறி யாவர் மனதிலும். விடை எப்படிக் கிடைக்கும். வேலைக்குப் போயாக வேண்டும். ஊர் மட்டிலும் மாற்றிக் கிடைத்தது.அம்மா மிகவும் நல்ல பெயரெடுத்தவள். அவள் பெண்ணையே , உன் பெண்ணைக்கொடு. நான் யாரிடம் கேட்பேன்? இந்த உபகாரம் செய். வேறு வழி இல்லை. ஸ்வீகாரத்தில் புத்ரான் தேஹி என்று பிள்ளையை யாசகமாகக் கேட்பார்களாம்
. நான் உன்னுடன் பிறந்தவனுக்காக மருமகளாகத் தானம் கொடு என்று கேட்கிறேன் என்று அறற்றி இருக்கிரார்கள்.பின்னிப் பிணைந்த குடும்பமது. எவ்வளவோ யோசித்திருப்பார்கள். பல டாக்டர்களைக் கலந்து ஆலோசித்திருப்பார்கள். ஆடம்பரமில்லாது திருப்பதியில்ப் போய்த் தன் பெண்ணை, விவாகம் செய்து கொடுத்துவிட்டனர் அந்த பாசமுள்ள தம்பதியினர். குடும்பம் தொடங்கியது.அந்தப்பெண்ணும் எவ்வளவு பயந்திருப்பாள்? வேளை நன்றாக இருந்தது.
யாவும் நல்ல படியே சென்று ஒரு குழந்தையும் பிறந்தது. நேசம் மிகுந்தது. குழந்தைதான் சற்று மூளை வளர்ச்சி குன்றியதாக இருந்தது. திரும்பவும்கவலைகளா? அதிக மாதங்கள் அது ஜீவித்திருக்கவில்லை
நெருங்கிய உறவில் ஸம்பந்தம் செய்வதால் இம்மாதிரி குறைகள் உண்டாகிறதென்று அறிந்த காலமது.அவளுக்கு அடுத்து கர்பகாலத்திலேயே தக்க மருந்துகள் சாப்பிட்டுத் ,தற்காப்பு முறையில் இரண்டு குழந்தைகள் பிறந்து வாழ்க்கை எந்த சிக்கலுமின்றி வளமாக ஓடி பாட்டி தாத்தாவின் வம்சம் விளங்கியது
. ஊர் ஜனங்களுக்கு ஓரளவு நெருங்கிய உறவில் ஸம்பந்தம் எந்தளவிற்குப் பாதிக்கிறதென்ற நீதி போதனையும் கிடைத்தது. எவ்வளவு சிக்கல். வேண்டாமென்றாலும் விடாத தொட்டில் ஸம்பந்தம். நினைவுகள் இன்னும் கரை புரள்கிறது. இன்றும் உறவில் ஸம்பந்தம் என்பது அறவே ஒழிக்கப்படவில்லை. நல்ல காலம் இருந்தால் இராகுகாலம் ஒன்றும் செய்யாது என்பது இதுதான் போலும்.
குள்ளர்களின் நகரம்.

குள்ளர்களின் நகரம்
இது என்ன புது தகவல் என்கிறீர்களா? அதிசயம், ஆனால் உண்மை என்ற தலைப்பிற்குத் தகுந்த மாதிரி ஏதாவது செய்திகள் பத்திரிக்கைகளில் பார்த்தால் அதை சேமிக்க எண்ணம் வந்து விடும்.
ஈரான் நாட்டின் , ஷாஹ்தாத் என்னும் புராதன நகரின் அருகில் உள்ள பாலை வனத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறது. இதன்பெயர் மகுனிக். ஸராஸரி மனிதர்கள் வசிக்கும்படியான உயரமே இல்லாத சிறிய களிமண் வீடுகள் கொண்ட ஒரு நகரம் அளவிற்கு அமைந்திருக்கிறது. வீடுகளின் கதவுகள் நகர்த்த முடியாத களிமண்ணினால் செய்து அடைக்கப் பட்டுள்ளது. உள்ளிருந்து வெளிவரமுடியாத அளவிற்கு கதவுகள் அடைக்கப் பட்டிருக்கும் காரணம் விளங்கவில்லை.
இறந்தவர்கள் திரும்ப வரலாம் என்ற நம்பிக்கையில் அவர்களை வைத்து மூடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடங்களில் 1948, 1956 வருஷங்களில் அகழியல்,தொல்லியல் ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டிருக்கிரது. அப்போது பல விஷயங்கள் வெளியாயின.
கி.மு 3000,4000 ஆண்டுகளுக்கு முன்னே அவ்விடம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிரார்கள் என்று அங்கு கிடைத்த பொருட்களின் அடிப்படையில் ஊகிக்கப்படுகிறதாம். வீடுகள்,உலைகள், கூரைகள் அலமாரிகள், விவசாயத்திற்கான கருவிகள், உலோகக் கருவிகள் முதலானவற்றின் மூலம் ஆதாரங்களும் கிடைத்தது. தங்க ஆபரணங்கள், இரும்பு,பித்தளை உலோகங்களை உபயோகப் படுத்திய சான்றுகளும் கிடைத்தனவாம். இங்கு வாழ்ந்தவர்கள் உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்ந்திருக்கிரார்கள். இப்பகுதியில் மம்மி உருவங்களும் 2005 இல் கிடைத்திருக்கிறது. இதுவே குள்ளர்கள் நகரம் என்பதற்கு ஆதாரமாகவும் ஆகிறது..
பத்திரிக்கை தந்த தகவலுக்கு மிகவும் நன்றி. சித்திரக்குள்ளன் என்று கதை சொல்வார்களே அவனுடைய ஊராக இருக்குமோ?
அன்னையர் தினம்.

அன்னையர்கள்.
பிரதி வருஷம் மேமாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல் பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு ஆதரியுங்கள். பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான் அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்மனைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.
முதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள். ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். இது பொதுவான வேண்டுகோள். அன்னையர் தின உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். வாழ்க அன்னையர் தினம். வளர்க மக்களின் அன்பு.
8—5—2016 அன்னையர்தினம். போற்றுங்கள் அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.
தொட்டில் 2

தொட்டில்கள்
லக்ஷ்மி அக்காவிற்கு ஏதோ கருப்பைக் கோளாறுகள். அவளக்காவிற்கு நிறைய குழந்தைகள் . பிள்ளையோ,பெண்ணோ அக்கா கர்பமாக இருக்கும்போதே அவளை அழைத்துக் கொண்டு வந்து பிறந்தது முதல் குழந்தையை வளர்க்க உத்தேசம். மாமியார் பிள்ளைக்கு வேறு கல்யாணம் செய்து விடப்போகிறாள் என்ற பயம்.அக்காவிற்கும் ஆண் குழந்தையே பிறந்தது. ஸொத்து ஸுகத்திற்கா பஞ்சம். ஒருமாதம் வரை உடனிருந்து விட்டு அக்கா ஊர் போய்ச் சேர்ந்தாள்
.லக்ஷ்மியின் மாமியார் சொல்லுவாள். சின்னக்குழந்தை பிறந்து வளர்ந்து, அழணும்,சிரிக்கணும், விளையாடணும், படுத்தணும், விழணும், எழுந்திருக்கணும், கூட இருக்கும் பசங்களுடன் சண்டை போடணும்,ஸமாதானம் ஆகணும், எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளணும்,பாத்து,பாத்து வளக்கணும், இப்படி எல்லாம் இருக்க பெரியவனாக்க குழந்தை வேண்டுமென்பாள் அது ஞாபகம் வந்தது..
என்ன கோலாகலமான தொட்டில் வைபவம்? அதனைத்தொடர்ந்து,பார்த்ததும்,கேட்டதும் ஞாபகம் வரத்துடங்கியது. ஸாதாரணமாக தொட்டிலுக்கு அலங்காரம்அதிகம் இருக்காது. மெத்தென்று பழைய துணியை மடித்துப்,போட்டு சுற்றிலும் வேப்பிலை தொங்கும். தரையில் அரிசியைப்பரப்பிஅதில்பெயரைஎழுதி,துளிபவுனைப்போட்டுஅதில்பெரியவர்களான,
பாட்டியோ அத்தையோகுழந்தையின் பெயரை அதன் காதில் மெல்ல மூன்று முறைச்சொல்லி விட்டு தொட்டிலில் கிடத்தி தாலட்டுப் பாடுவார்கள்.இதெல்லாம் ஸாயங்கால வேளையில். ராமரையும்,கிருஷ்ணரையும் முன்னிருத்தியே பாட்டுகள் இருக்கும். லாலி என்ன தாலாட்டு என்ன வந்தவர்கள் குழந்தைக்கு கையில் பணத்தைத் திணிப்பதென்ன? பணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறதே!. சமர்த்து. கேட்கணுமா என்ற ஸர்டிபிகேட்டுகளும் கிடைக்கும். பதினொன்றாம் நாள் காலையிலேயே புண்யாசனத்தின் போதே பெயரிடுபவர்களும் உண்டு.
தொட்டிலில் ஒரு சிறிய சுண்டல் மூட்டையும் இருக்கும்.அப்பா இவர்கள் வீட்டிலோ ஏகதடபுடல். வந்த குழந்தைகளுக்கெல்லாம் பரிசுகள். திருவிழா தோற்றுப்போகும். கோலாகலமான தொட்டில்.
இதுவும் ஒரு ஸ்வீகரித்தல்தான்.செல்லமோசெல்லம். நடந்தால் குழந்தைக்கு கால் தேய்ந்து போகும். போகிறபோக்கிலே கண்டித்து வளர்க்காமல் நினைத்ததை சாதிக்கும் முரட்டுப் பிள்ளையாக வளர்ந்தது.காலம் வயதைக் கூட்டினால் ரௌடியாக உருவெடுக்க வேண்டியதுதானே. படிப்பென்னவோ வந்தது. மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. ஊரிலுள்ள பெண்களைப் பார்த்து நக்கலடித்துக்கொண்டு , கோபித்தால் இதற்குதான் என்னை வளர்த்தீர்களா என்று கேட்பதுமாக இருந்தான். நல்ல வேளை ஊரிலுள்ளவர்கள் முன்னாடி ஒரு கால்கட்டுப் போடு. எல்லை தாண்டிவிட்டால் கஷ்டம் என உணர்த்த கடவுளருள் சமத்துள்ள,சாந்தமான பெண்ணொன்று கிடைத்து அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால் தேடி மணமுடித்தனர். குடும்பம் மிகவும் பாழ்படாமல் ஒரு கௌரவமான முறையில் வழிநடந்து அந்தப் பெண் பாராட்டுதலுக்கு உள்ளானாள். அவள் எவ்வளவு மனக் கஷ்டம் அனுபவித்தாளோ? அவன் திருந்துவதற்குள் பாதி ஸொத்து காலி. இன்று குடும்பம் நன்றாக உள்ளது. இது ஒரளவு தக்க மனைவி கிடைத்ததின் பலன். காலத்தில் திருத்தித் திருந்தியதால் பேரனும் பேத்தியுமாக வம்சம் வளருகிறது. ஸ்வீகாரம் ஓரளவு ஒழுங்காகியது. ஸொந்தம் ,இரவல் காரணமில்லை.
அதிக செல்லம் ஆபத்தில் முடியும். இது மட்டும்தானா ஞாபகத்தில் வந்தது?
வேறு பெரிய பெயர்போன ஆசாரஅனுஷ்டான சாஸ்த்திர ஸம்பிரதாயங்கள் அறிந்து, வேத,தர்ம சாஸ்திரங்கள் அறிந்த குடும்பம் ஒன்றும் ஒரு நிமிஷத்தில் கண் முன் ஓடியது.
ஸந்தேகங்கள் கேட்டுசாந்தி,ஹோமங்கள்,நாகப்பிரதிஷ்டை இதற்கு இது பரிஹாரம், செய்யக் கூடியவைகள், கூடாதவைகள் என்று , ஜாதகத்தின் பலன்களுக்கேற்ப பரிஹாரங்களும், சாஸ்திரமறிந்து சொல்லக்கூடிய குடும்பம். பலன்பெற்றோர் ஏராளம். அந்தக் குடும்பத்தில் பெண் ஒன்றும் பிள்ளை ஒன்றுமாக இரண்டுபேர். பிள்ளைக்கு ஸந்தான பாக்கியம் ஏற்படவில்லை. இந்தக் காலமா?எல்லோருக்கும் சொல்கிறாரே அவருக்கென்ன ஆயிற்று என்று கேட்பார்கள். டாக்டரைப் பார்ப்பதுதானே என்று கேட்பார்கள். அந்தக்காலமில்லை அப்போது. யோசித்து யோசித்து ஸ்வீகாரம்தான் ஸரி என்று பட்டது. பூணூல் போடாத பையன்கள்தான் ஸ்வீகாரத்திற்கு ஏற்றது. தேடினார்கள் உறவில் கிடைத்த பையனை ஒன்பது வயதான அழகிய பையனை ஸ்வீகரித்தனர்.
தெரிந்த கலைகளை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டாமா? பையன் பரவாயில்லை, அக்கரை காட்டினான். இருப்பினும் பாட்டில்தான் நாட்டம் இருந்தது பையனுக்கு. ஏதோபெயரளவிற்கு வேதம் படிப்பதாக பாவனை செய்து கொண்டு பாட்டுபாடுவதும்,கூத்தடிப்பதுமாக வளரத் தொடங்கினான். ஊர் சுற்றுவது,பாடுவது, இப்படி கூத்துகள் அறங்கேற ஆரம்பித்தது எல்லாம் வயதானால் ஸரியாகி விடும் அதிகம் கண்டித்தால் வேறு விதமாக பையன் மாறிவிட்டால் என்ன செய்வது?இப்போதே பதில் பேசுகிறான். கண்டித்தால் சண்டையும்,சச்சரவுமாக அல்லவா குடும்பம் போய்விடும். ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் ஸரியாகப் போகும். பெண்யார் கொடுப்பார்கள்.தன் வம்சம்விளங்க பெண்ணின் பெண்ணையே, நன்றாகத் திருந்தி விடுவான் என்று பேத்தியையே மணம் முடித்து வைத்து திருந்துவானா என்று பார்த்தார். வம்சம் விளங்க பேரன்,பேத்தி கிடைத்தது. ஊர் சுற்றும் பாட்டுக் கும்பலுடன் பழகி வேண்டாத பழக்கங்கள்.குடி,சீட்டாட்டம் போதாதா? பார்த்த பெரியவர் மனந்தாளாது கால கதியடைந்தார். பிள்ளைக்குத் தத்தாரித்தனம் அதிகமாகியது. இருக்கும் ஸொத்துக்களையும் அழித்து விடுமுன்னர் ஊரிலுள்ள பெரியவர்கள் எப்படியோ முனைந்து ஓரளவு ஸெட்டில்மென்ட் செய்து இருப்பவர்கள் வாழ ஊரிலுள்ளோர் வழி செய்தனர். எந்த ஸமயத்தில் எங்கு வீழ்ந்திருப்பானோ, என்ன தண்ட கடன்களை வாங்கி சந்தி சிரிக்கும்படி செய்து விடுவானோ என்ற பயத்திலேயே, தாயும்,பெண்ணுமாக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு குழந்தைகளையும் வளர்த்து, அவனையும் கவனித்து , அவன் போன பின்னர்தான் குடும்பத்திற்கே விடிவு ஏற்பட்டது. ஸந்ததிகள் பெரியவரின் வம்சமாக நன்றாக உள்ளனர். அந்த குடும்பம் மனதில் பரந்தோடியது.இதே மாதிரி மற்றொரு குடும்பமும் என்னை மறந்து விட்டாயா என்று கேட்கிறது. பார்க்கலாமா? தொடரலாம்.

தொட்டில்
படங்கள் உதவி—கூகல்..நன்றி
உஜ்ஜெயின் கும்பமேளா
மத்தியபிரதேசம் உஜ்ஜெயினில் மஹா காளேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. அவ்விடத்திய க்ஷிப்ரா நதியில் மஹா கும்பமேளா நடக்கிறது. அதில் ஸ்நாநம் செய்வது மிக்க விசேஷம். அவ்விடத்திய சில காட்சிகள் என் மகன் அனுப்பியது. நீங்களும் பார்க்கலாமே!

க்ஷிப்ரா நதி
உஉ
உஜ்ஜெயின் நதி, மற்றும் பார்க்க அழகான காட்சிகளுடன்.