Archive for மே 22, 2016
மயிலத்திலிருந்து திருவருணை.
நகரங்களில் வயதான முதியவர்களுக்கு வெளியுலகம் மாடி வீடுகளாயின் ஜன்னல் மூலமும், உடம்பு அஸௌகரியங்களின்போது, டாக்டரிடம் போகும்போதும்,வரும்போதும் தரிசனமாகிறது. போன இடத்தில் பலவித நோயாளிகளைப் பார்க்கும் போது இன்னும் மனது இடிந்து போகிறது. எல்லாம் அவரவர்களுக்கு விதித்தது நடக்கும் என்று மனதிற்குத் தெரிந்தாலும் ஸமயத்தில் யாவும் மறந்து விடுகிறது. படிக்கும் விஷயங்களும், கேட்கும் விஷயங்களும் கொஞ்சமா,நஞ்சமா? எதற்கு இவ்வளவு பீடிகை.கோவில்களுக்குப் போவதானாலும் கூட ஒருவர் துணை வேண்டியுள்ளது. நகர வாஸங்களிள் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். யாவரும் அவ்வளவு பிஸி.
ஒரு நாற்பது தினங்கள் நானும் சென்னை சென்று தாற்காலிகமாக தங்க வந்த பெண்,மாப்பிள்ளையுடன் தங்கி சற்று வெளியூர்கள் பார்த்து வந்தேன். அவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிய வீட்டின் கீழ்த்தளத்தைச் சீர் செய்ய நியூ ஜெர்ஸியிலிருந்து வந்தார்கள். குலதெய்வம் மயிலம் கோவிலுக்குப் போகவேண்டும் உன்னால் முடியுமா என்றார்கள். நான் இரண்டு மணிக்கொருதரம் சிறிது ஆகாரம் உண்டு கொண்டு முன்னே,பின்னே என்று மருந்துகளுடன் அப்போது, இப்போது மாத்திரம் என்ன இருந்து கொண்டு இருந்தேன். ஸெரிலாக் கணக்கில் சாதத்தை மோருடன் கரைத்து, அல்லது ஸத்துமாக்கஞ்சி என்று ஆகாரம் வரையறுக்கப் பட்டிருந்தது.
பரவாயில்லை வீட்டுக் காரில்தானே போகிறோம் என்று காலையிலேயே எனக்கு ஆகாரம் தயாரிக்கப்பட்டு,அவர்களுக்கான சிற்றுண்டியுடன் அதிகாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டோம்.
மும்பையினின்றும் ப்ளைட்டில் கூட தனியாக வர முடியாது என மருமகள் உடன் வந்து மறு ப்ளைட்டில் மும்பை சென்றாள். ஜெனிவா பத்து வருஷங்களாகத் தனி
யாகவே போய்வந்தவள். அமெரிக்காவும் அப்படியே! இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளதான் முடிகிறது
காரில் போகிறோம். கோவில் வாசலில் இறங்கி உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்தால் போதும். அத்துடன் வேறு சில இடங்களும் போக வேண்டும்.
வளவனூர் மாரி அம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்யணும். கோலியனூர் போகணும். எங்காவது ஹோட்டலில் இரவு தங்கி விட்டு மறுநாள் நான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலையும் போக வேண்டும். இப்போது முடியாவிட்டால் இனி எப்போதுமே முடியாது என்று என் மனதின் ஆசைகளைச் சொன்னேன்.
எல்லாம் ஸரி என்ற முடிவுடன் இரவு நேரத்தில் அதிகப்படியாக உயரம் வேண்டுமென்று ரிஃப்ளெக்ஸ் இருப்பதால் மூன்று குஷன்களுடன் வண்டி. மயிலத்தை நோக்கி விரைந்தது. மயிலம் என்றஇவ்வூரின் பெயர் வரக்காரணம் சொல்வார்கள் அது ஞாபகம் வந்தது.
திருச்செந்தூரில் சூர ஸம்ஹாரத்திற்குப் பிறகு, சூர பத்மன் தன்னை முருகப் பெருமானுக்கு வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பினான். அப்போது முருகப் பெருமான் இத்தலத்தில் மயில் வடிவத்தில் அமர்ந்துதவம் புரியும்படி அருளினார். அதன் பிரகாரம் சூரபத்மன் இங்கு தவம் புரிந்து மயிலாக மாறி முருகப்பெருமானுக்கு வாகனமாக மாறினான். அதனால் இத்தலம் மயிலம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது.
இது சிறிய குன்றம்தான்.பெரியமலை இல்லை. மலை ஏறும்போதே குளத்தின் கரையில் குழந்தைகளும்,வேண்டுதல் செய்து கொண்ட பெரியவர்களும் தலையை மழித்துக் கொள்ளும் காட்சிகள். .இன்னும் மேலே நிறைய கல்யாண கோஷ்டிகோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டுவேன்களிளிருந்து இறங்கி ரோடோரத்திலேயே சில ஸம்பிரதாயங்கள் செய்வித்துக் கொண்டே பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்ட வீதி ஓரங்களில் மரத்தினடியில் ஸம்ப்ரமமாக நுணி வாழையிலைச் சாப்பாடும் நடந்து கொண்டு இருந்தது.இவையெல்லாம்கல்யாணத்தை முடித்துவிட்ட கோஷ்டி. ஆற அமற சாப்பாடு. பேச்சுகள், விமரிசனங்கள்.
பெரியபெரிய அகலமான அடுக்குகளிள் சமைத்ததை அப்படியே மூடி வேனில் ஏற்றி இருப்பார்கள் போலும். கீழிறங்கி இவைகளை எல்லாம் பார்க்க படம் பிடிக்க ஆவல். நீ கீழிறங்கினால் உனக்கும் சாப்பாடு போட்டு விடுவார்கள். இன்னும் கோவிலிலும் கல்யாணம் பாக்கி இருக்கும். அங்கு போய் விஸ்தாரமாகப் பார். முன்னே கோவிலுக்குப் போவதைப்பார் என்றாள் என் பெண். எங்கோ தூரதேசத்தில் இருந்த படியால் ஸம்ஸாரியகவும் இருந்ததால் நான் பார்த்த கல்யாணங்கள் மிகக் குறைவு.இம்மாதிரியான கல்யாணங்கள் பார்க்கவும் ஆசை.ஆச்சு வீல்சேருக்கு வருவோம்.
மயிலத்தில் வயதானவர்களுக்காக வீல்சேர் வசதி இருந்தது. கார்களில் செல்பவர்கள் ஒரு இடத்திலிருந்து அதில் போகலாம். மற்றபடி அவ்வளவாக செங்குத்தானபடிகளில்லை. வேறு இடத்திலிருந்து படிகளேறியே செல்வது வழக்கம். கடினமானது ஒன்றுமில்லை.
மேலே இருப்பது சென்ற முறை சென்ற வீல்சேர்.. மண்ரோடு. இந்தமுறை ரோடு நல்லது. இருந்த ஒரு வீல்சேர் சக்கரங்கள்,அப்படி,இப்படி மக்கார் செய்தது. ஏர்போர்ட்டில் ட்ராலி தள்ளுவதுபோல நடை வண்டி மாதிரி அதைப் பிடித்துகைகொண்டே மேலே போய்விட்டேன்..
எனக்காக காத்திருந்தது போல ஒரு கல்யாணசாப்பாடு, அலங்கரிக்கப்பட்ட மண் கலசங்கள்,இலை. மனிதர்கள், பெண்,மாப்பிள்ளை, எளிய திருமண உடையில் பார்ப்போமா? உண்ட இலைகள் ஒரு புறம், உண்ணும் இலைகள் ஒருபுறம்.பாலிகைக் குண்டான்கள் . இன்னும் சாப்பாடு பூராவும் முடியவில்லை.
இன்னும் கோவிலுக்குள்ளே போகலை. வேஷ்டி கட்டினவர்களைவிட பேண்ட்போட்டவர்களையே நிறைய பார்க்க முடிந்தது. கட்டம்போட்ட எளிய வழக்கமான கூரைப்புடவையில் பெண். கோவிலுக்கு போய்விட்டு , அங்கும் சில காட்சிகளைக் காணலாம். தொடர்ந்து வாருங்கள்.