தொட்டில் 2
மே 3, 2016 at 6:28 முப 15 பின்னூட்டங்கள்

தொட்டில்கள்
லக்ஷ்மி அக்காவிற்கு ஏதோ கருப்பைக் கோளாறுகள். அவளக்காவிற்கு நிறைய குழந்தைகள் . பிள்ளையோ,பெண்ணோ அக்கா கர்பமாக இருக்கும்போதே அவளை அழைத்துக் கொண்டு வந்து பிறந்தது முதல் குழந்தையை வளர்க்க உத்தேசம். மாமியார் பிள்ளைக்கு வேறு கல்யாணம் செய்து விடப்போகிறாள் என்ற பயம்.அக்காவிற்கும் ஆண் குழந்தையே பிறந்தது. ஸொத்து ஸுகத்திற்கா பஞ்சம். ஒருமாதம் வரை உடனிருந்து விட்டு அக்கா ஊர் போய்ச் சேர்ந்தாள்
.லக்ஷ்மியின் மாமியார் சொல்லுவாள். சின்னக்குழந்தை பிறந்து வளர்ந்து, அழணும்,சிரிக்கணும், விளையாடணும், படுத்தணும், விழணும், எழுந்திருக்கணும், கூட இருக்கும் பசங்களுடன் சண்டை போடணும்,ஸமாதானம் ஆகணும், எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளணும்,பாத்து,பாத்து வளக்கணும், இப்படி எல்லாம் இருக்க பெரியவனாக்க குழந்தை வேண்டுமென்பாள் அது ஞாபகம் வந்தது..
என்ன கோலாகலமான தொட்டில் வைபவம்? அதனைத்தொடர்ந்து,பார்த்ததும்,கேட்டதும் ஞாபகம் வரத்துடங்கியது. ஸாதாரணமாக தொட்டிலுக்கு அலங்காரம்அதிகம் இருக்காது. மெத்தென்று பழைய துணியை மடித்துப்,போட்டு சுற்றிலும் வேப்பிலை தொங்கும். தரையில் அரிசியைப்பரப்பிஅதில்பெயரைஎழுதி,துளிபவுனைப்போட்டுஅதில்பெரியவர்களான,
பாட்டியோ அத்தையோகுழந்தையின் பெயரை அதன் காதில் மெல்ல மூன்று முறைச்சொல்லி விட்டு தொட்டிலில் கிடத்தி தாலட்டுப் பாடுவார்கள்.இதெல்லாம் ஸாயங்கால வேளையில். ராமரையும்,கிருஷ்ணரையும் முன்னிருத்தியே பாட்டுகள் இருக்கும். லாலி என்ன தாலாட்டு என்ன வந்தவர்கள் குழந்தைக்கு கையில் பணத்தைத் திணிப்பதென்ன? பணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறதே!. சமர்த்து. கேட்கணுமா என்ற ஸர்டிபிகேட்டுகளும் கிடைக்கும். பதினொன்றாம் நாள் காலையிலேயே புண்யாசனத்தின் போதே பெயரிடுபவர்களும் உண்டு.
தொட்டிலில் ஒரு சிறிய சுண்டல் மூட்டையும் இருக்கும்.அப்பா இவர்கள் வீட்டிலோ ஏகதடபுடல். வந்த குழந்தைகளுக்கெல்லாம் பரிசுகள். திருவிழா தோற்றுப்போகும். கோலாகலமான தொட்டில்.
இதுவும் ஒரு ஸ்வீகரித்தல்தான்.செல்லமோசெல்லம். நடந்தால் குழந்தைக்கு கால் தேய்ந்து போகும். போகிறபோக்கிலே கண்டித்து வளர்க்காமல் நினைத்ததை சாதிக்கும் முரட்டுப் பிள்ளையாக வளர்ந்தது.காலம் வயதைக் கூட்டினால் ரௌடியாக உருவெடுக்க வேண்டியதுதானே. படிப்பென்னவோ வந்தது. மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. ஊரிலுள்ள பெண்களைப் பார்த்து நக்கலடித்துக்கொண்டு , கோபித்தால் இதற்குதான் என்னை வளர்த்தீர்களா என்று கேட்பதுமாக இருந்தான். நல்ல வேளை ஊரிலுள்ளவர்கள் முன்னாடி ஒரு கால்கட்டுப் போடு. எல்லை தாண்டிவிட்டால் கஷ்டம் என உணர்த்த கடவுளருள் சமத்துள்ள,சாந்தமான பெண்ணொன்று கிடைத்து அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால் தேடி மணமுடித்தனர். குடும்பம் மிகவும் பாழ்படாமல் ஒரு கௌரவமான முறையில் வழிநடந்து அந்தப் பெண் பாராட்டுதலுக்கு உள்ளானாள். அவள் எவ்வளவு மனக் கஷ்டம் அனுபவித்தாளோ? அவன் திருந்துவதற்குள் பாதி ஸொத்து காலி. இன்று குடும்பம் நன்றாக உள்ளது. இது ஒரளவு தக்க மனைவி கிடைத்ததின் பலன். காலத்தில் திருத்தித் திருந்தியதால் பேரனும் பேத்தியுமாக வம்சம் வளருகிறது. ஸ்வீகாரம் ஓரளவு ஒழுங்காகியது. ஸொந்தம் ,இரவல் காரணமில்லை.
அதிக செல்லம் ஆபத்தில் முடியும். இது மட்டும்தானா ஞாபகத்தில் வந்தது?
வேறு பெரிய பெயர்போன ஆசாரஅனுஷ்டான சாஸ்த்திர ஸம்பிரதாயங்கள் அறிந்து, வேத,தர்ம சாஸ்திரங்கள் அறிந்த குடும்பம் ஒன்றும் ஒரு நிமிஷத்தில் கண் முன் ஓடியது.
ஸந்தேகங்கள் கேட்டுசாந்தி,ஹோமங்கள்,நாகப்பிரதிஷ்டை இதற்கு இது பரிஹாரம், செய்யக் கூடியவைகள், கூடாதவைகள் என்று , ஜாதகத்தின் பலன்களுக்கேற்ப பரிஹாரங்களும், சாஸ்திரமறிந்து சொல்லக்கூடிய குடும்பம். பலன்பெற்றோர் ஏராளம். அந்தக் குடும்பத்தில் பெண் ஒன்றும் பிள்ளை ஒன்றுமாக இரண்டுபேர். பிள்ளைக்கு ஸந்தான பாக்கியம் ஏற்படவில்லை. இந்தக் காலமா?எல்லோருக்கும் சொல்கிறாரே அவருக்கென்ன ஆயிற்று என்று கேட்பார்கள். டாக்டரைப் பார்ப்பதுதானே என்று கேட்பார்கள். அந்தக்காலமில்லை அப்போது. யோசித்து யோசித்து ஸ்வீகாரம்தான் ஸரி என்று பட்டது. பூணூல் போடாத பையன்கள்தான் ஸ்வீகாரத்திற்கு ஏற்றது. தேடினார்கள் உறவில் கிடைத்த பையனை ஒன்பது வயதான அழகிய பையனை ஸ்வீகரித்தனர்.
தெரிந்த கலைகளை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டாமா? பையன் பரவாயில்லை, அக்கரை காட்டினான். இருப்பினும் பாட்டில்தான் நாட்டம் இருந்தது பையனுக்கு. ஏதோபெயரளவிற்கு வேதம் படிப்பதாக பாவனை செய்து கொண்டு பாட்டுபாடுவதும்,கூத்தடிப்பதுமாக வளரத் தொடங்கினான். ஊர் சுற்றுவது,பாடுவது, இப்படி கூத்துகள் அறங்கேற ஆரம்பித்தது எல்லாம் வயதானால் ஸரியாகி விடும் அதிகம் கண்டித்தால் வேறு விதமாக பையன் மாறிவிட்டால் என்ன செய்வது?இப்போதே பதில் பேசுகிறான். கண்டித்தால் சண்டையும்,சச்சரவுமாக அல்லவா குடும்பம் போய்விடும். ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் ஸரியாகப் போகும். பெண்யார் கொடுப்பார்கள்.தன் வம்சம்விளங்க பெண்ணின் பெண்ணையே, நன்றாகத் திருந்தி விடுவான் என்று பேத்தியையே மணம் முடித்து வைத்து திருந்துவானா என்று பார்த்தார். வம்சம் விளங்க பேரன்,பேத்தி கிடைத்தது. ஊர் சுற்றும் பாட்டுக் கும்பலுடன் பழகி வேண்டாத பழக்கங்கள்.குடி,சீட்டாட்டம் போதாதா? பார்த்த பெரியவர் மனந்தாளாது கால கதியடைந்தார். பிள்ளைக்குத் தத்தாரித்தனம் அதிகமாகியது. இருக்கும் ஸொத்துக்களையும் அழித்து விடுமுன்னர் ஊரிலுள்ள பெரியவர்கள் எப்படியோ முனைந்து ஓரளவு ஸெட்டில்மென்ட் செய்து இருப்பவர்கள் வாழ ஊரிலுள்ளோர் வழி செய்தனர். எந்த ஸமயத்தில் எங்கு வீழ்ந்திருப்பானோ, என்ன தண்ட கடன்களை வாங்கி சந்தி சிரிக்கும்படி செய்து விடுவானோ என்ற பயத்திலேயே, தாயும்,பெண்ணுமாக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு குழந்தைகளையும் வளர்த்து, அவனையும் கவனித்து , அவன் போன பின்னர்தான் குடும்பத்திற்கே விடிவு ஏற்பட்டது. ஸந்ததிகள் பெரியவரின் வம்சமாக நன்றாக உள்ளனர். அந்த குடும்பம் மனதில் பரந்தோடியது.இதே மாதிரி மற்றொரு குடும்பமும் என்னை மறந்து விட்டாயா என்று கேட்கிறது. பார்க்கலாமா? தொடரலாம்.

தொட்டில்
படங்கள் உதவி—கூகல்..நன்றி
Entry filed under: கதைகள்.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 10:35 முப இல் மே 3, 2016
எப்படி எப்படி மனிதர்கள்! ஒவ்வொருத்தரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும். குடும்பம் தானாக முன்னேறும்.
2.
chollukireen | 1:02 பிப இல் மே 3, 2016
சில ஸமயங்கள் மதி இருந்தாலும் விதி விடுவதில்லை என்று சொல்வார்களே அது உண்மைதான் என்று பல ஸம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அம்மாதிரிதான் இவைகளெல்லாம் என்று நினைக்கிறேன். உங்கள் பின்னூட்டமும் ஸரியானது. வருமுன் கார்ப்போம் என்ற எண்ணம் அவசியம். பதிலுக்கு முதலாவதற்கு நன்றி.அன்புடன்
3.
ஸ்ரீராம் | 2:57 பிப இல் மே 4, 2016
சில நேரங்களில் சில மனிதர்கள்..!
4.
chollukireen | 5:53 முப இல் மே 5, 2016
பாருங்கள் இவர்களும் சிலநேரங்களில் சில மனிதர்களாக சரித்திர மனிதர்களாகி விடுகிரார்கள்.
நன்ரி அன்புடன்
5.
ranjani135 | 5:25 பிப இல் மே 4, 2016
தொட்டில் என்ற பெயரில் ஸ்வீகாரப் பிள்ளைகளின் கதையை எழுதிக் கொண்டு போகிறீர்கள். எனக்குக் கூட இரண்டு ஸ்வீகாரப் பிள்ளைகளின் கதை நினைவிற்கு வந்தது உங்கள் கதைகளைப் படித்தபின். உங்கள் கதையில் ஒரு பிள்ளை மனைவி வந்தபின் உருப்பட்டுவிட்டான். எனக்குத் தெரிந்த கதையில் இரண்டுமே உருப்படவில்லை. இந்த மாதிரி நிகழ்வுகளைப் படிக்கும்போது மனது ரொம்பவும் வேதனைப் படுகிறது. தத்து கொடுத்த பெற்றோர்களாவது பிள்ளைகளுக்கு புத்தி சொல்லவேண்டும்.
தத்து கொடுத்துவிட்டோமே என்று இந்தப் பக்கத்து பெற்றோர்களும், தத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம் ஏதாவது சொன்னால் நம்மை விட்டுவிட்டுப் போய்விடுவானோ என்று அவர்களும் நினைப்பதாலேயே இப்படி நடக்கிறது என்று தோன்றுகிறது.
தொடர்ந்து தொட்டில் ஆடட்டும்!
6.
chollukireen | 6:06 முப இல் மே 5, 2016
புத்தி சொல்லாது இருப்பதில்லை. ஸகவாஸ தோஷம் சிலரை மாற்றவே முடியாமற் போய்விடுகிறது. ஆரம்பத்தில் வெளியிற் சொல்லவே வெட்கப்பட்டு, மூடி மறைத்து, பின் யாவும் அம்பலத்திற்கு வந்து விடுகிறது. அவரவர்கள் தொடையைத் தானாகக் கிள்ளிக்கொண்டு வலிக்கிறது என்று சொல்ல முடியாத கதைதான் இது. ஊரில் யாவருக்கும் எல்லாம் தெரிந்தும் ஸம்பந்தப்பட்டவர்களுக்கு விஷயம் தெரியாமல் கடைசியில் தெரிந்து கஷ்டம் மிஞ்சும். இப்படியும்தானே! நிறைய கதைகள் யாவருக்கும் ஞாபகம் வரும். அதுதான் எனக்கு இலாபமானது. எல்லாம் நடந்தவைகள்தானே! அன்புடன்
7.
chitrasundar5 | 7:30 பிப இல் மே 4, 2016
காமாக்ஷிமா,
இந்த தொட்டில் தொடர் மனதை எங்கெங்கோ கொண்டுசென்று ஆட்டி வைக்கிறது.
கண்டிக்காமல் விட்டதால் இப்படி ஆகிப்போனார்கள் ! கண்டித்தாலும் ‘அவ பிள்ளையா இருந்தா …..’ என்ற வார்த்தைகளுக்கு பயந்தும் விட்டிருக்கலாம். குழந்தையில் எடுத்தால்கூட பரவாயில்லை, ஒன்பது பத்து வயதாக இருக்கும்போது ? அவனது மனநிலை எப்படி இருக்கும் ? பெற்றவர் & தத்து எடுத்தவர் மேல் உள்ள கோபத்தினால்கூட வழி மாற சான்ஸ் உண்டு.
“ஒரு பொண்ணு வந்தா எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லி சொல்லியே எத்தனையோ பெண்களை படாதபாடு பட வைத்திருக்கிறார்கள். நீங்க சொன்ன மாதிரியே மருத்துவத்தினால் இது கொஞ்சம் குறைந்துதான் போயிருக்கிறது.
அடுத்த தொட்டிலில் ஆடுபவர்களை அறிந்துகொள்ளும் ஆவலுடன்…. சித்ரா .
8.
chollukireen | 6:22 முப இல் மே 5, 2016
கூட்டுக் குடும்பங்களில் தத்து என்றால் கூடவே குழந்தை வளர்ந்திருக்கும். 7 வயதில்தான் பூணல் போடமுடியும். அதனால் சின்னக் குழந்தை அதிகமில்லை. அண்ணன் தம்பிகள் குழந்தை என்றால் தத்தெடுக்காமலேயே மனதினால் ஒரு குழந்தையை அங்கீகாரம் செய்து கொண்டு விடுவார்கள். யோசித்து யோசித்து தத்தெடுப்பதற்குள் பையனுக்கு 7 வயது ஆகிவிடும். எடுத்தவர்கள் உயர்வாகக் கொண்டாடுவதால் தத்தைப்பற்றி அவர்களுக்கு யோசனைகள் அதிகம் ஏற்படுவதில்லை. நல்லது நடந்த குடும்பங்களும் பல இருக்கிறதே!. என் மனதில் இம்மாதிரி, எழுதியுள்ளமாதிரி குடும்பங்கள் வருகிரது. பார்ப்போம்.
நீ சொல்வதும் மிகவும்ஸரி. நன்றி. அன்புடன்
9.
chollukireen | 11:47 முப இல் செப்ரெம்பர் 29, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தொட்டில் இரண்டு ஆட வந்துள்ளது. இது ஒருவிதமானது.தொடர்ந்து இந்தத் தலைப்பில் உள்ள எல்லா தொட்டில்களையும் வாராவாரம் பதிவிடுகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேறுமாதிரியானது. காலையிலேயே பதிவிட்டிருக்க வேண்டுமோ என்னவோ? நான் மாலையில் சிறிதுநேரமே கணினியில் உட்காருகிறேன். பார்க்கலாமா உங்களை எல்லாம்! அன்புடன்
10.
பார்வதி இராமச்சந்திரன | 12:29 பிப இல் செப்ரெம்பர் 29, 2020
ஒரு விதத்தில் பார்த்தால், பொறுப்பற்ற பிள்ளைகள் படுத்தும் பாடு கஷ்டப்படுத்தினாலும், ஊர், உறவுகள் பொறுப்பாக, ‘எல்லோரும் வாழ வேண்டும் ‘ என்ற எண்ணத்துடன், அக்கறை கொண்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்தில் தலையிட்டு, சரிப்படுத்தி…..இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?!. கூடி வாழ்ந்த காலம். மிக்க நன்றி அம்மா!!. பதிவுடன் கூடவே பயணித்த திருப்தி!.
11.
chollukireen | 11:51 முப இல் செப்ரெம்பர் 30, 2020
இது அந்தக்கால நடைமுறை. இப்போது ஊர் இருக்கிறதே தவிர உறவு எங்கே இருக்கிறது? அசைபோடும் நிலையில்தான் யாவும் இருக்கிறது. உன்மறுமொழிக்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
12.
Geetha Sambasivam | 2:45 முப இல் ஒக்ரோபர் 1, 2020
தத்து எடுத்துக்கொண்டு அந்தப் பிள்ளையினால் சுகப்பட்டவர்களை விடக் கஷ்டப்பட்டவர்களே அதிகம். நீங்கள் சொல்கிறாப்போல் சொத்தையே அழித்துவிட்டு ஸ்வீகாரப் பெற்றோரைத் திட்டுபவர்கள் உண்டு. இந்தக் காலத்திலும் ஸ்வீகாரம் என்பது இருக்கத் தான் செய்கிறது.
13.
chollukireen | 11:31 முப இல் ஒக்ரோபர் 1, 2020
அதிகமாக முன்பு பார்த்த அளவு இப்போது பார்க்க முடிவதில்லை. இப்போது ஸொத்து என்பதை ரொக்க டிபாஸிட்டுகளாக வைத்து அதையும் காலப்போக்கில் இழந்துவிடும்படியான நிலையும் ஏற்பட்டு விடுவதைப் பார்க்கிறோம். ஸொந்தமே பந்தம் இல்லாத போது, பந்தம் ஸொந்தமாவது அபூர்வம்தான். இப்படிதான் இருக்கும் போல உள்ளது. நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு. அன்புடன்
14.
ஸ்ரீராம் | 2:02 பிப இல் ஒக்ரோபர் 6, 2020
காலா காலத்தில் மணம் முடிக்க பெண் கிடைப்பதே சிரமமாய் இருக்கிறது அம்மா…
15.
chollukireen | 10:59 முப இல் ஒக்ரோபர் 7, 2020
பரவலாக இப்படித்தான் சொல்கிரார்கள். படிப்பும்,வேலையும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகளை அதிமாகக் கொடுத்து விட்டது. காலா காலத்தில் எதுவும் நடப்பது இல்லை. சிரமம் இடம் மாறிவிட்டது. அன்புடன்