Archive for ஜூலை 5, 2017
பாசிப்பருப்பு ரொட்டி
முன்பெல்லாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதானால் உணவிற்காக ஏதாவது தயார் செய்தே எடுத்துப் போவார்கள். இன்னும் முன்காலத்தில் அரிசி,பருப்புமுதல் கட்டி எடுத்துக் கொண்டே போவார்கள். ஸமீபத்தில் காட்மாண்டுவிலிருந்து ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஐரோப்பாவில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.
வந்த இடத்தில் சைவ உணவு சில ஸமங்களில் கிடைக்காது போகலாம். எதற்கும் கைவசம் ஏதாவது வைத்திருக்க வேண்டுமென்று, இனிப்புகளும், சில வகை ரொட்டிகளும் எடுத்து வந்திருந்தனர். ஜெயின் தம்பதிகள்.
எதுவும் கிடைக்காவிட்டால்,அலுத்து சலித்து திரும்பவும் ஹோட்டல் தேட வேண்டுமே என்று நினைக்காமல், ஏதோ ஒன்றுடன் இரண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டு விட்டு ,இனிப்பும் எடுத்துக் கொண்டால் அந்தநேர பசி அடங்கி விடும் என்றனர். ஸரி நாமும் கேட்டுக் கொண்டால் பிளாகில் ஒரு குறிப்புஎழுதலாமே என்று யோசித்து விவரம் கேட்டுக் கொண்டேன்.
நாம் பிரயாணங்களுக்காகத் தயாரிக்கா விட்டாலும் சுடச்சுட தயாரித்துச் சாப்பிடலாமே!
மாதிரிக்காக சிறிய அளவில் செய்தது. வீட்டிலுள்ள சாமான்களைக் கொண்டே செய்ய முடியும். வேண்டியவைகள்.
பயத்தம் பருப்பு—இரண்டு குழிக்கரண்டி.
ரொட்டிமாவு தேவையான அளவு, ரொட்டிக்கும்,பிரட்டியிட மேல் மாவிற்குமாக
எண்ணெய்–மாவில்க் கலந்து பிசைய–2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் வேண்டிய அளவு உபயோகிக்கவும்.
தாளித்துக் கொட்ட–கடுகு அரைஸ்பூன்+சீரகம் அரைஸ்பூன்+நெய் ஒரு டீஸ்பூன்
.வேண்டிய பொடிகள்—மிளகாய்ப்பொடி–ஒரு டீஸ்பூன்,
பெருங்காயப்பொடி–கால்டீஸ்பூன்,மஞ்சள்பொடி–கால்டீஸ்பூன்
கஸூரிமெத்தி–அரைடீஸ்பூன். அதாவது பொடித்த வெந்தய இலைகள்
ருசிக்குஉப்பு, கால்டீஸ்பூன் சர்கரை.
செய்முறை
பருப்பைக் களைந்து ஒருமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
தண்ணீரை ஒட்ட இறுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ,ஒருஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி,கடுகு,சீரகம் தாளித்து, அதனுடன் இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள்,பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். பருப்பைும் சேர்த்து சற்று வேகவைக்கவும். அதிகம் வேக வேண்டாம்.
நெத்துப்பதமாக பருப்பு அழுத்தமாக இருக்க வேண்டும். கீழிறக்கி ஆறவைக்கவும்.
பருப்பும்,அது வெந்த தண்ணீரும் இருக்கும். நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீருக்கு ஏற்றபடி ரொட்டிமாவைச் சேர்த்துப் பிசையவும். வேண்டியஉப்பு,சர்க்கரை,இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய், கஸூரிமெத்தி
இவைகளைையும் சேர்த்துச் சப்பாத்திமாவு பதத்திற்குப் பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.இது ஞாபகத்தில் இருக்கட்டும்.
இரண்டு கரண்டி ஊறவைத்தப் பருப்புடன் இரண்டு கரண்டி தண்ணீர் சேர்த்து சற்று வேக வைத்து ஆறிய கலவையில் மாவைப் போட்டு பிசைந்திருக்கிறோம். தண்ணீர் வேறெதுவும் சேர்க்கவில்லை. இது முக்கியம்.
பத்து நிமிஷங்கள் மாவை ஊறவைக்கவும்.,
இனி வழக்கமாக ரொட்டி தாரிப்பது போலவே மாவைப்பிரித்து, குழவியினால் மாவில்த் தோய்த்து ரொட்டிகளை இடவும். பருப்புடன் சேர்ந்து ரொட்டி இட அழகாகவே வருகிறது.
திட்டமான சூட்டில் ரொட்டிகளை எண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டுச்செய்து எடுக்கவும்.
ஆறவைத்து, நான்கு நான்காக அடுக்கிப் பார்ஸல் செய்து வைத்தால் அதிக நாட்கள் உபயோகிக்கலாமாம்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த எதனுடனும் சாப்பிடலாம். தயிர் மிகவும் ஏற்றது.
கறி,கூட்டு,சட்னி,ஊறுகாய்,டால் எது வேண்டுமோ அதையும் செய்யவும்.
டால்,காலிபிளவர்வதக்கல், கீரை,தயிர் இவைகளுடன் உங்களுக்குக் கொடுக்கிறேன். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.
எனக்கு உதவி என் மருமகள்.