தொட்டில்-3
படஉதவி –கூகலுக்கு நன்றி
ஒவ்வொருகதையாக நான் முன்னே நீ முன்னே என்று மனதில் போட்டிபோட ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒன்றுக்கொன்று ஸம்பந்தமிருப்பதுபோலத் தோன்றினாலும் இம்மாதிரி எல்லாம் இப்போது சொல்லிக் கேட்க கூட முடியாது.அவ்வளவு உஷாரான காலமிது. இப்போது நடப்பவைகள் இன்னும் புதியமாதிரி உள்ளது. முன்பு ஸ்வீகாரம் அதாவது தத்தெடுப்பது என்பது சுலப காரியமில்லை. பணம்,காசு,ஸொத்து,ஸுதந்திரம்,வீடுவாசல் எல்லாமிருந்து ,அதிலும்நல்லகுடும்பமாக,நெருங்கியஉறவினர்கள்தான்,பங்காளிகளாக இருந்தால்தான்தத்து எடுக்கவோ, கொடுக்கவோ விரும்புவார்கள். நல்லது கெட்டது
நம் கையிலா இருக்கிறது குடும்பத்தில் உள்ள. எல்லோருக்கும் கஷ்டப்படாத வகையில் சொத்துக்களை எழுதி ரிஜிஸ்டர் செய்து விட்டு , ஆசார அனுஷ்டானத்துடன் உறவினர்முன், விதி பூர்வமாக தத்தெடுப்பது என்பது விருந்துகளுடன் முடியும். பிறகு நல்ல நாளில் தத்தெடுத்தவர்கள் ஸ்வீகாரப் பிள்ளைக்கு உபநயனம்,பிரமோபதேசம் செய்வார்கள். தத்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு அதிலும் தாய்க்கு கனமான பவுனிலான சங்கிலி கட்டாயம் போடுவார்கள்
. மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.நல்ல கனமாகத்தான் சங்கிலி இருந்தது. வம்பில்லை இது. வழக்கமான டயலாக். ஸொத்தே அவர்கள் வசம் வருகிறது. ஒற்றுமையும்,நேசமும் வளர்க்கத்தான் பாடு படுவார்கள். எங்கோ ஒன்று ஆக்கிரமிப்புபோல அமைந்து விடுவதும் உண்டு.ஏதோ எனக்கு ஞாபகம் வந்த சிறிதளவு ஸமாசாரமிது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்பவர்களைக்கூட சில ஸமயம் ஸ்வீகாரம் விடாது. அந்த ஒற்றைத்தெரு கோகிலா பாட்டி,தாத்தா எதுவும் வேண்டாம். எல்லாம் கோவிலுக்குக் கொடுத்து விடலாம்,குழந்தை இல்லா விட்டால் என்ன என்று சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று போய்விட்டார். குழந்தை வளர்ப்பதிலும் கஷ்டங்கள் எவ்வளவோ உள்ளது. தானமாக எழுதி வைத்து விடலாம் என்றவர்தான்அவ்வளவாகவயதுமுதிர்ந்தவரும்இல்லை.காயோ,கறியோ,பழங்களோ, எல்லாம் ஏழைகளுக்கு வாரிவாரி வழங்கியவர். சற்று வயதான பாட்டி. என்ன செய்ய முடியும். அவ்வளவாக விவகாரம் போதாது. ஊர்க்காரர்கள் சேர்ந்து பாட்டியின் தம்பியின் பேரனை ஸ்வீகாரம் செய்து வைத்தனர்.
தம்பி யாவற்றையும் பார்த்துக் கொண்டார். அதிக வருஷம் பாட்டி உயிருடனில்லை. கோவில் முதலானவற்றிற்கும் ஏராளமாக கொடுத்தார்கள். காலம் சென்று கொண்டே இருந்தது. பாட்டியின் மகனும் அழகிய வாலிபனாகி,படித்து,முடித்து தில்லியில் வேலைக்குப் போனான். என்ன நீங்களே சொல்வீர்கள் காதலா? என்று. ஆமாம் அதுவேதான். கூட வேலை செய்யும் அழகியபெண். மிக்க சினேகம்தான். இவன் மனதில் ஒருதலைக்காதல்போல. அது தெரியாத அந்தப்பெண் வேறு நண்பருடன் திடீர் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பார்டிக்கு அழைக்க பையன் விட்டு விட்டான் மனதை.
பயித்தியம் பிடித்தவன்போல் பிதற்ற ஆரம்பித்து விட்டான்.
கலங்கிவிட்டது மனம். கூட இருந்தவர்கள் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்க, ஓடினார்கள் பெற்றவர்கள்.எதுவும் தெரியாதவர்கள். மனதை விட்டுவிட்ட பிள்ளையைப் பார்த்து, காரணம் மற்றவர்கள் சொல்லக் கேட்டு பதறி ஊருக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவுதான் எதிரில் யாரைப் பார்த்தாலும் உன்னை நான் எவ்வளவு காதலித்தேன். உன்னிடம் சொல்வதற்குள், என்னை நீ புரிந்து கொள்ளவில்லையே! இப்படி செய்து விட்டாயே, இது ஸரியில்லை, நான் உன்னை விரும்புகிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்து விட்டான். ஊரில் வீட்டுக்கு வீடு அறியாத பெண்கள். வாசலில் தலைகாட்டவே பயம்.தப்பித் தவறி பெண்கள் எதிர்ப்பட்டால் மிகவும் கஷ்டமாகிவிடும்.வயித்தியம் அவர்கள் செய்தாலும் , வீட்டில் அவனைத் தக்க வைக்க முடியவில்லை.
அந்தகாலத்துவயித்தியங்கள்மந்திரம்,தந்தரம்,ரக்ஷை,திருஷ்டி என்று பலவகைகள் செய்து அவன் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே கஷ்டமாக இருந்தது. பெண்கள் உள்ள வீட்டின் வாசலில்ப் போய் உட்கார்ந்து விடுவான். இதனால் எவ்வளவு புரிந்து கொண்ட குடும்பங்களாக இருந்தாலும் மனஸ்தாபங்கள் உண்டாக ஆரம்பித்தது. ஏச்சு பேச்சு சண்டை,சச்சரவு அளவிற்கு உயர்ந்தது. ஏதோ நல்ல காலம். இதெல்லாம் பாட்டிக்கு இல்லை. சென்னையில் நல்ல டாக்டர் ஒருவர் இருப்பதாகத் தெரிந்து, அவ்விடம் அழைத்துப்போனதில், யார் செய்த புண்ணியமோ, படிப்படியாக உடல்நிலை முன்னேறியது. திரும்ப அதே வேலையிலும் சேர அனுமதி வந்தது.சுபாவத்தில் மிகவும் ஒழுங்கான பையன்.
டாக்டரின் ஆலோசனை பையனுக்கு நல்லதொரு விவரங்கள், உண்மை அறிந்த பெண்ணாய்ப் பார்த்து விவாகம் செய்வித்து, தாய்தந்தையர்களான நீங்களும் உடன் போய் இருங்கள். எல்லாம் ஸரியாகிவிடும் என்று மருந்துகள் ஏதோ சிறிது நாட்களுக்கும் கொடுத்தார். எல்லாம்ஸரி. பெண் யார் கொடுப்பார்கள். பிள்ளைக்கு வசதிகளுக்குக் குறை ஒன்றுமே இல்லை. ஊரே அவனால் சினேகமிழந்தது. இதற்கு வழி யார் வகுப்பது? பெரிய கேள்விக் குறி யாவர் மனதிலும். விடை எப்படிக் கிடைக்கும். வேலைக்குப் போயாக வேண்டும். ஊர் மட்டிலும் மாற்றிக் கிடைத்தது.அம்மா மிகவும் நல்ல பெயரெடுத்தவள். அவள் பெண்ணையே , உன் பெண்ணைக்கொடு. நான் யாரிடம் கேட்பேன்? இந்த உபகாரம் செய். வேறு வழி இல்லை. ஸ்வீகாரத்தில் புத்ரான் தேஹி என்று பிள்ளையை யாசகமாகக் கேட்பார்களாம்
. நான் உன்னுடன் பிறந்தவனுக்காக மருமகளாகத் தானம் கொடு என்று கேட்கிறேன் என்று அறற்றி இருக்கிரார்கள்.பின்னிப் பிணைந்த குடும்பமது. எவ்வளவோ யோசித்திருப்பார்கள். பல டாக்டர்களைக் கலந்து ஆலோசித்திருப்பார்கள். ஆடம்பரமில்லாது திருப்பதியில்ப் போய்த் தன் பெண்ணை, விவாகம் செய்து கொடுத்துவிட்டனர் அந்த பாசமுள்ள தம்பதியினர். குடும்பம் தொடங்கியது.அந்தப்பெண்ணும் எவ்வளவு பயந்திருப்பாள்? வேளை நன்றாக இருந்தது.
யாவும் நல்ல படியே சென்று ஒரு குழந்தையும் பிறந்தது. நேசம் மிகுந்தது. குழந்தைதான் சற்று மூளை வளர்ச்சி குன்றியதாக இருந்தது. திரும்பவும்கவலைகளா? அதிக மாதங்கள் அது ஜீவித்திருக்கவில்லை
நெருங்கிய உறவில் ஸம்பந்தம் செய்வதால் இம்மாதிரி குறைகள் உண்டாகிறதென்று அறிந்த காலமது.அவளுக்கு அடுத்து கர்பகாலத்திலேயே தக்க மருந்துகள் சாப்பிட்டுத் ,தற்காப்பு முறையில் இரண்டு குழந்தைகள் பிறந்து வாழ்க்கை எந்த சிக்கலுமின்றி வளமாக ஓடி பாட்டி தாத்தாவின் வம்சம் விளங்கியது
. ஊர் ஜனங்களுக்கு ஓரளவு நெருங்கிய உறவில் ஸம்பந்தம் எந்தளவிற்குப் பாதிக்கிறதென்ற நீதி போதனையும் கிடைத்தது. எவ்வளவு சிக்கல். வேண்டாமென்றாலும் விடாத தொட்டில் ஸம்பந்தம். நினைவுகள் இன்னும் கரை புரள்கிறது. இன்றும் உறவில் ஸம்பந்தம் என்பது அறவே ஒழிக்கப்படவில்லை. நல்ல காலம் இருந்தால் இராகுகாலம் ஒன்றும் செய்யாது என்பது இதுதான் போலும்.
குள்ளர்களின் நகரம்.

குள்ளர்களின் நகரம்
இது என்ன புது தகவல் என்கிறீர்களா? அதிசயம், ஆனால் உண்மை என்ற தலைப்பிற்குத் தகுந்த மாதிரி ஏதாவது செய்திகள் பத்திரிக்கைகளில் பார்த்தால் அதை சேமிக்க எண்ணம் வந்து விடும்.
ஈரான் நாட்டின் , ஷாஹ்தாத் என்னும் புராதன நகரின் அருகில் உள்ள பாலை வனத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறது. இதன்பெயர் மகுனிக். ஸராஸரி மனிதர்கள் வசிக்கும்படியான உயரமே இல்லாத சிறிய களிமண் வீடுகள் கொண்ட ஒரு நகரம் அளவிற்கு அமைந்திருக்கிறது. வீடுகளின் கதவுகள் நகர்த்த முடியாத களிமண்ணினால் செய்து அடைக்கப் பட்டுள்ளது. உள்ளிருந்து வெளிவரமுடியாத அளவிற்கு கதவுகள் அடைக்கப் பட்டிருக்கும் காரணம் விளங்கவில்லை.
இறந்தவர்கள் திரும்ப வரலாம் என்ற நம்பிக்கையில் அவர்களை வைத்து மூடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடங்களில் 1948, 1956 வருஷங்களில் அகழியல்,தொல்லியல் ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டிருக்கிரது. அப்போது பல விஷயங்கள் வெளியாயின.
கி.மு 3000,4000 ஆண்டுகளுக்கு முன்னே அவ்விடம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிரார்கள் என்று அங்கு கிடைத்த பொருட்களின் அடிப்படையில் ஊகிக்கப்படுகிறதாம். வீடுகள்,உலைகள், கூரைகள் அலமாரிகள், விவசாயத்திற்கான கருவிகள், உலோகக் கருவிகள் முதலானவற்றின் மூலம் ஆதாரங்களும் கிடைத்தது. தங்க ஆபரணங்கள், இரும்பு,பித்தளை உலோகங்களை உபயோகப் படுத்திய சான்றுகளும் கிடைத்தனவாம். இங்கு வாழ்ந்தவர்கள் உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்ந்திருக்கிரார்கள். இப்பகுதியில் மம்மி உருவங்களும் 2005 இல் கிடைத்திருக்கிறது. இதுவே குள்ளர்கள் நகரம் என்பதற்கு ஆதாரமாகவும் ஆகிறது..
பத்திரிக்கை தந்த தகவலுக்கு மிகவும் நன்றி. சித்திரக்குள்ளன் என்று கதை சொல்வார்களே அவனுடைய ஊராக இருக்குமோ?
அன்னையர் தினம்.

அன்னையர்கள்.
பிரதி வருஷம் மேமாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல் பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு ஆதரியுங்கள். பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான் அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்மனைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.
முதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள். ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். இது பொதுவான வேண்டுகோள். அன்னையர் தின உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். வாழ்க அன்னையர் தினம். வளர்க மக்களின் அன்பு.
8—5—2016 அன்னையர்தினம். போற்றுங்கள் அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.

தொட்டில் 2

தொட்டில்கள்
லக்ஷ்மி அக்காவிற்கு ஏதோ கருப்பைக் கோளாறுகள். அவளக்காவிற்கு நிறைய குழந்தைகள் . பிள்ளையோ,பெண்ணோ அக்கா கர்பமாக இருக்கும்போதே அவளை அழைத்துக் கொண்டு வந்து பிறந்தது முதல் குழந்தையை வளர்க்க உத்தேசம். மாமியார் பிள்ளைக்கு வேறு கல்யாணம் செய்து விடப்போகிறாள் என்ற பயம்.அக்காவிற்கும் ஆண் குழந்தையே பிறந்தது. ஸொத்து ஸுகத்திற்கா பஞ்சம். ஒருமாதம் வரை உடனிருந்து விட்டு அக்கா ஊர் போய்ச் சேர்ந்தாள்
.லக்ஷ்மியின் மாமியார் சொல்லுவாள். சின்னக்குழந்தை பிறந்து வளர்ந்து, அழணும்,சிரிக்கணும், விளையாடணும், படுத்தணும், விழணும், எழுந்திருக்கணும், கூட இருக்கும் பசங்களுடன் சண்டை போடணும்,ஸமாதானம் ஆகணும், எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளணும்,பாத்து,பாத்து வளக்கணும், இப்படி எல்லாம் இருக்க பெரியவனாக்க குழந்தை வேண்டுமென்பாள் அது ஞாபகம் வந்தது..
என்ன கோலாகலமான தொட்டில் வைபவம்? அதனைத்தொடர்ந்து,பார்த்ததும்,கேட்டதும் ஞாபகம் வரத்துடங்கியது. ஸாதாரணமாக தொட்டிலுக்கு அலங்காரம்அதிகம் இருக்காது. மெத்தென்று பழைய துணியை மடித்துப்,போட்டு சுற்றிலும் வேப்பிலை தொங்கும். தரையில் அரிசியைப்பரப்பிஅதில்பெயரைஎழுதி,துளிபவுனைப்போட்டுஅதில்பெரியவர்களான,
பாட்டியோ அத்தையோகுழந்தையின் பெயரை அதன் காதில் மெல்ல மூன்று முறைச்சொல்லி விட்டு தொட்டிலில் கிடத்தி தாலட்டுப் பாடுவார்கள்.இதெல்லாம் ஸாயங்கால வேளையில். ராமரையும்,கிருஷ்ணரையும் முன்னிருத்தியே பாட்டுகள் இருக்கும். லாலி என்ன தாலாட்டு என்ன வந்தவர்கள் குழந்தைக்கு கையில் பணத்தைத் திணிப்பதென்ன? பணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறதே!. சமர்த்து. கேட்கணுமா என்ற ஸர்டிபிகேட்டுகளும் கிடைக்கும். பதினொன்றாம் நாள் காலையிலேயே புண்யாசனத்தின் போதே பெயரிடுபவர்களும் உண்டு.
தொட்டிலில் ஒரு சிறிய சுண்டல் மூட்டையும் இருக்கும்.அப்பா இவர்கள் வீட்டிலோ ஏகதடபுடல். வந்த குழந்தைகளுக்கெல்லாம் பரிசுகள். திருவிழா தோற்றுப்போகும். கோலாகலமான தொட்டில்.
இதுவும் ஒரு ஸ்வீகரித்தல்தான்.செல்லமோசெல்லம். நடந்தால் குழந்தைக்கு கால் தேய்ந்து போகும். போகிறபோக்கிலே கண்டித்து வளர்க்காமல் நினைத்ததை சாதிக்கும் முரட்டுப் பிள்ளையாக வளர்ந்தது.காலம் வயதைக் கூட்டினால் ரௌடியாக உருவெடுக்க வேண்டியதுதானே. படிப்பென்னவோ வந்தது. மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. ஊரிலுள்ள பெண்களைப் பார்த்து நக்கலடித்துக்கொண்டு , கோபித்தால் இதற்குதான் என்னை வளர்த்தீர்களா என்று கேட்பதுமாக இருந்தான். நல்ல வேளை ஊரிலுள்ளவர்கள் முன்னாடி ஒரு கால்கட்டுப் போடு. எல்லை தாண்டிவிட்டால் கஷ்டம் என உணர்த்த கடவுளருள் சமத்துள்ள,சாந்தமான பெண்ணொன்று கிடைத்து அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால் தேடி மணமுடித்தனர். குடும்பம் மிகவும் பாழ்படாமல் ஒரு கௌரவமான முறையில் வழிநடந்து அந்தப் பெண் பாராட்டுதலுக்கு உள்ளானாள். அவள் எவ்வளவு மனக் கஷ்டம் அனுபவித்தாளோ? அவன் திருந்துவதற்குள் பாதி ஸொத்து காலி. இன்று குடும்பம் நன்றாக உள்ளது. இது ஒரளவு தக்க மனைவி கிடைத்ததின் பலன். காலத்தில் திருத்தித் திருந்தியதால் பேரனும் பேத்தியுமாக வம்சம் வளருகிறது. ஸ்வீகாரம் ஓரளவு ஒழுங்காகியது. ஸொந்தம் ,இரவல் காரணமில்லை.
அதிக செல்லம் ஆபத்தில் முடியும். இது மட்டும்தானா ஞாபகத்தில் வந்தது?
வேறு பெரிய பெயர்போன ஆசாரஅனுஷ்டான சாஸ்த்திர ஸம்பிரதாயங்கள் அறிந்து, வேத,தர்ம சாஸ்திரங்கள் அறிந்த குடும்பம் ஒன்றும் ஒரு நிமிஷத்தில் கண் முன் ஓடியது.
ஸந்தேகங்கள் கேட்டுசாந்தி,ஹோமங்கள்,நாகப்பிரதிஷ்டை இதற்கு இது பரிஹாரம், செய்யக் கூடியவைகள், கூடாதவைகள் என்று , ஜாதகத்தின் பலன்களுக்கேற்ப பரிஹாரங்களும், சாஸ்திரமறிந்து சொல்லக்கூடிய குடும்பம். பலன்பெற்றோர் ஏராளம். அந்தக் குடும்பத்தில் பெண் ஒன்றும் பிள்ளை ஒன்றுமாக இரண்டுபேர். பிள்ளைக்கு ஸந்தான பாக்கியம் ஏற்படவில்லை. இந்தக் காலமா?எல்லோருக்கும் சொல்கிறாரே அவருக்கென்ன ஆயிற்று என்று கேட்பார்கள். டாக்டரைப் பார்ப்பதுதானே என்று கேட்பார்கள். அந்தக்காலமில்லை அப்போது. யோசித்து யோசித்து ஸ்வீகாரம்தான் ஸரி என்று பட்டது. பூணூல் போடாத பையன்கள்தான் ஸ்வீகாரத்திற்கு ஏற்றது. தேடினார்கள் உறவில் கிடைத்த பையனை ஒன்பது வயதான அழகிய பையனை ஸ்வீகரித்தனர்.
தெரிந்த கலைகளை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டாமா? பையன் பரவாயில்லை, அக்கரை காட்டினான். இருப்பினும் பாட்டில்தான் நாட்டம் இருந்தது பையனுக்கு. ஏதோபெயரளவிற்கு வேதம் படிப்பதாக பாவனை செய்து கொண்டு பாட்டுபாடுவதும்,கூத்தடிப்பதுமாக வளரத் தொடங்கினான். ஊர் சுற்றுவது,பாடுவது, இப்படி கூத்துகள் அறங்கேற ஆரம்பித்தது எல்லாம் வயதானால் ஸரியாகி விடும் அதிகம் கண்டித்தால் வேறு விதமாக பையன் மாறிவிட்டால் என்ன செய்வது?இப்போதே பதில் பேசுகிறான். கண்டித்தால் சண்டையும்,சச்சரவுமாக அல்லவா குடும்பம் போய்விடும். ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் ஸரியாகப் போகும். பெண்யார் கொடுப்பார்கள்.தன் வம்சம்விளங்க பெண்ணின் பெண்ணையே, நன்றாகத் திருந்தி விடுவான் என்று பேத்தியையே மணம் முடித்து வைத்து திருந்துவானா என்று பார்த்தார். வம்சம் விளங்க பேரன்,பேத்தி கிடைத்தது. ஊர் சுற்றும் பாட்டுக் கும்பலுடன் பழகி வேண்டாத பழக்கங்கள்.குடி,சீட்டாட்டம் போதாதா? பார்த்த பெரியவர் மனந்தாளாது கால கதியடைந்தார். பிள்ளைக்குத் தத்தாரித்தனம் அதிகமாகியது. இருக்கும் ஸொத்துக்களையும் அழித்து விடுமுன்னர் ஊரிலுள்ள பெரியவர்கள் எப்படியோ முனைந்து ஓரளவு ஸெட்டில்மென்ட் செய்து இருப்பவர்கள் வாழ ஊரிலுள்ளோர் வழி செய்தனர். எந்த ஸமயத்தில் எங்கு வீழ்ந்திருப்பானோ, என்ன தண்ட கடன்களை வாங்கி சந்தி சிரிக்கும்படி செய்து விடுவானோ என்ற பயத்திலேயே, தாயும்,பெண்ணுமாக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு குழந்தைகளையும் வளர்த்து, அவனையும் கவனித்து , அவன் போன பின்னர்தான் குடும்பத்திற்கே விடிவு ஏற்பட்டது. ஸந்ததிகள் பெரியவரின் வம்சமாக நன்றாக உள்ளனர். அந்த குடும்பம் மனதில் பரந்தோடியது.இதே மாதிரி மற்றொரு குடும்பமும் என்னை மறந்து விட்டாயா என்று கேட்கிறது. பார்க்கலாமா? தொடரலாம்.

தொட்டில்
படங்கள் உதவி—கூகல்..நன்றி
உஜ்ஜெயின் கும்பமேளா
மத்தியபிரதேசம் உஜ்ஜெயினில் மஹா காளேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. அவ்விடத்திய க்ஷிப்ரா நதியில் மஹா கும்பமேளா நடக்கிறது. அதில் ஸ்நாநம் செய்வது மிக்க விசேஷம். அவ்விடத்திய சில காட்சிகள் என் மகன் அனுப்பியது. நீங்களும் பார்க்கலாமே!

க்ஷிப்ரா நதி
உஉ
உஜ்ஜெயின் நதி, மற்றும் பார்க்க அழகான காட்சிகளுடன்.
தொட்டில் 1

பொழுது போகாமல் ஏதோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்,வெளியில் போகாமல் தன் தள்ளாமையைக் காரணம் காட்டும் தாயைப் பார்த்தவுடன் மனம் கனத்தது. பிள்ளையல்லவா?
ஆபீஸிலிருந்தும் வந்ததும் வராததுமாய் அம்மா நான்உன்னைக் கூட அங்கு அழைத்துப்போகிறேன்.கட்டாயம் பெரியவர்கள் வந்துதான் ஆசீர்வாதம் செய்ய வேண்டுமாம்.வந்ததும் வராததுமாக அவ்வளவு முக்கிய செய்தி அம்மாவிற்கு.
ஆமாம் 75வயது முதியவளை அழைத்துப் போகிறானாம். வந்ததும் வராததும் அம்மாவிற்கு மனம் குளிர வார்த்தைகள். இந்த வயதானவர்கள் வீட்டிலிருந்தால் ஏதோ பெரிய உபசாரம் அவர்களுக்கு. வீட்டில் எத்தனைப் பிரசினைகளை நாம் கவனிக்கிறோம். நாம் பின்னுக்குப் போவது இவர்களால்தான் போலுள்ளது. இப்படி சில மருமகள்களின் எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கிறது.
என்ன அவஸரம் எங்கு ஓடிவிடப் போகிரார்கள். அப்புறம் விசாரித்தால் போதாதா. தான்தான் பெரிய ஆஸாமி என்ற எண்ணம் இப்படிதான் வந்து விடும் இவர்களுக்கு.
அழைத்துப் போகிறேன் என்று சொன்ன ஒரு வார்த்தையே அம்மாமார்களுக்கு வேண்டியவர்கள் வீட்டிற்குப்போய், வந்திருப்பவர்களிடம் அளவளாவிய ஒரு பெருமையை மனது ஒரு க்ஷணத்தில் அனுபவித்து விடுகிறது.போய் என்ன செய்யப்போகிறோம்?
நம்மை சற்று ஜாக்கிரதையாக அழைத்துப் போகும் பொருப்பு, இன்னும் போன இடத்திலும் நம்மைசற்று கவனிக்கும் பொருப்பு இவையெல்லாம் பிள்ளைக்கா?இன்னும் அக்கரையாக வேலைதான் பிரமோஷன் ஆகும். வாஸ்தவமும் அதுதானே.இப்படி சிந்திக்கும் மருமகளின் முகத்தை பார்த்து விட்டு நீங்கள் போய்விட்டு வாருங்கள். நான் போன மாதிரிதான் என்று ஒரு நொடியில் மனதை மாற்றிக்கொண்டு வாய்கள் மொழியை உதிர்க்கும். வாஸ்தவமும் அதுதானே!
முகமே காட்டிக் கொடுக்கிறதே
ஏன் அப்படி சொல்லணும் என்ன விசேஷம் கேட்டு விட்டுப் பதில் சொல்லுங்கள். நான் காபி கலக்கப்போகணும். மேலே போய் ட்ரஸ் மாத்திண்டு வரேன். நீ ஸந்தோஷப் படுவாய் அதான் வந்தவுடனே சொன்னேன். பிள்ளை மேலே போயாச்சு. என்ன நாம் ஸந்தோஷப்படும்படியான அவ்வளவு பெரிய ஸமாசாரம். யோசனை பலத்தது.
ஆவல் அதிகரித்தது. என்னுடைய சினேகிதன் குழந்தைக்கு நாளைக்குத் தொட்டில் போட்டு பெயரிட வேண்டுமாம் . பெரியவளாக நீ வரவேண்டுமாம்.
என்னது,தொட்டிலா.குழந்தையா என்ன சொல்றே நீ! அதெல்லாம் நாளைக்குப் போனால்தான் தெரியும். வீட்டுக்கு வரும்போது அவஸரமா சொல்லிவிட்டுப் போனான். எனக்கும் ஒன்றும் புரியலே. போனால்த் தெரியும். அவ்வளவுதான்.
வயதானவர்களுக்கு எண்ண ஓட்டமா பஞ்சம். இரவு படுத்தால் எண்ண ஓட்டம் கனவா,நினைவா இது எத்தகையது?
எத்தனை தொட்டில்கள் போட்டுப்பார்த்து பேரிட்டு வாழ்த்தி இருக்கிறோம். குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என்று பல காலமான பிறகு அவர்கள் வீட்டில் தொட்டில். ஆச்சரியம். மனது சிந்திக்க ஆரம்பித்து விட்டது.
என்ன ஒரு இருபதுவயதில் லேட் கலியாணம்தான் அந்தக் காலத்தில் எனக்கு வாசலில் நிக்காதே, பெரியவா வாசலில் நடந்துபோனா அதுவும் நாம் எழுந்து நிற்க வேண்டும். அறியா பிள்ளைகள் ரோடில் போனால் எழுந்து உள்ளேயே ஓடிப்போய்விட வேண்டும். எங்கேயாவது போகவேண்டுமானால் அதுவும் கல்யாணம் கார்த்திக்கு வயதானவர்களுடன் உட்கார்ந்து பதவிசாக இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்து ஊர் கதைகளெல்லாம் பேசுபவர்கள் பேச்சை மட்டும் தாராளமாக காதில் விழும். வம்பு என்று சொல்வதா நியூஸ் பேப்பர் என்று சொல்வதா? அது அந்தக்காலம். நல்லது கெட்டது எல்லாம் அத்துபடியாகும்.
ஜெயாமாமி பெரிய பணக்கார பாட்டி என்று கூடச் சொல்லலாம். மாமா இல்லை. ஒவ்வொரு காரியமும் அவ்வளவு விதரணை. கூடப் பிறந்தவர்கள் உறவு, தெரிந்தவர்கள் என்று யாவருக்கும் அவ்வளவு உபகாரம். தயை,தாக்ஷண்யம் எல்லாம். குழந்தைகள் கிடையாது. மிகவும் யோசித்து யோசித்துச் சின்ன தங்கையின் பிள்ளையை ஸ்வீகாரம் எடுத்தார். நல்ல அருமையான பிள்ளை. தன் கூடவே வைத்துக்கொண்டு சீராட்டி,பாராட்டி,படிக்க வைத்துகாலேஜும்படிக்கவைத்து,மனமகிழ்ந்து இருந்தார். கிராமங்களில் வேலை கிடைக்குமா? நல்ல வேலை சென்னையிலும் வேலை கிடைக்கப்போகிறது.. ஊரார்முதல் யாவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. நான் ,நீ என்று பெண் கொடுக்க முன் வந்தனர். அழகான பெண்,படித்தபெண்,நல்ல குணமுள்ளவள் என்று தூரத்து உறவினரின் வழியில் மருமகளும் வந்தாயிற்று. மருமகளோ நகரத்தில் படித்தவள். பார்க்க,பேச அழகுதான். நல்ல பெண்
ஊரே கொண்டாடியது. புதுப்பொண்ணு ஒரு காரியம் கண்ணில் காட்டாமல் எல்லாம் செய்து மாதங்களோடி விட்டது. பண்டிகை,பருவம் ஐயோ இந்தப் பெண்ணிற்கு மடி ஆசாரமே தெரியவில்லையே! மாமிக்கு தோன்றியது. நாம் சொல்லிக் கொடுப்போம். காத்தாலே எழுந்ததும்,பல் கில்தேச்சுட்டுவந்து ஸாமியை நமஸ்காரம் பண்ணணும்னு சொன்னோம். ஒரு நாள் கூட பண்ணி பாக்கலே. குளிச்சுட்டு மடியா புடவை கட்டிண்டுதான் சமையல் பண்ணணும். அட கூட மாடவாவது ஒத்தாசை பண்ணும்மான்னு சொன்னா அதுவும் இல்லே. நம்ம அளவு மடி இல்லாவிட்டாலும்,லாண்ட்ரிலேந்து இஸ்திரி பண்ணி வந்த புடவையைக் கட்டிக் கொண்டு வந்து, கூடமாட செய்ய வரா. சொன்னா புடவை சுத்தம்தானே அம்மா வேணும் இதெல்லாம் என்னம்மா? எனக்கு சுத்தமா இதெல்லாம் பிடிக்காது என்று நேரில் சொல்லி விட்டாள். ஸரி நாம் எதுவும் சொல்லக்கூடாது. நல்ல பேர் கிடைக்காது. மனம் குமுறினாலும் பார்க்கலாம். நாமே செய்து கொள்வோம் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள். எச்சல் பண்ணி சாப்பிட்டால் கை அலம்பணும் இப்படி செய்யணும்மா என்று நல்ல முறையில் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு மறு நாளே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஸகஜபாவம் தொலைந்து விட்டது. எதையும் சொல்ல முடிவதில்லை. நாம் ஏதோ வேண்டுமென்று சொல்வதுபோல பிள்ளையிடம் உருவேற்றி விட்டாள்.
என்ன பெரிம்மா வரவர அதோட ரொம்ப மல்லு கட்ரே போலெருக்கே. வேலைக்கு நான் போகும்போதேஎன்னோட அவ வந்துடணுமாம். அதுவரை பொறந்தவீடு போகிறேன் என்கிறாள் . அப்படி என்னதான் நடக்கிறது இங்கே. என்னாலே நம்ப முடியலே. ஒண்ணுமே இல்லப்பா நடந்தது இதுதான். வேண்டாம் பெரிம்மா போகட்டும். வீடு பார்த்து அப்புறம் அவவரட்டும். நான் அவளைக் கொண்டு விட்டுடறேன். உன் மடி ஆசாரம்,அன்பு அவளுக்குப் புரியாது. நான் எப்படியும் அடுத்த வாரம் போகணும். மறுத்து எதுவும் சொல்ல முடியலே. துக்கம்,தொண்டையை அடைக்க பிரமித்து நின்றாள். எல்லாம் ஒவ்வொன்றாக நாளாவட்டத்தில் அவளிஷ்டப்படியே நடந்தது.பேரன்,பேத்தி பிறந்தது. போய்ப் பார்த்து விட்டு வந்தாள். அவள் திரும்பவராததுடன் கணவனையும், ஸொத்தில் விற்கவும்,இதை விற்கவும் என்று மனஸ்தாபம், அபிப்ராய பேதமுண்டாக்கி பேச்சு வார்த்தை அற்றுப் போகும் அளவிற்கு வளர்ந்து விட்டது. மாமி எதைக் கேட்டாலும் கொடுத்தாள். ஊர் அக்கம் பக்கம் அருகில் தெரிந்த,அரிந்த பெண்களிடம் பாசம் காட்டி காலம் முழுதும் அவர்களின் அன்புடன் காலத்தைக் கழித்தாள். ஆஸ்திக்குப் பிள்ளையாக எல்லாம் அவர்களுக்குப் போயிற்று. மாமியும் ஊராரின் அன்பிலேயே நல்லபடி போனார்.வளர்த்த ஸ்வீகாரம்.தொட்டில்போடாதது.
இது மனதை விட்டு அகலுமுன்னரே லக்ஷ்மி அக்காவாத்துத் தொட்டில் ஞாபகம் வந்து விட்டது.
தொடரும்
பிறக்கும்போதே ஹெச் ஐ வி யுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம்.
எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரை இது.
Continue Reading ஏப்ரல் 20, 2016 at 6:50 முப 6 பின்னூட்டங்கள்
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Continue Reading ஏப்ரல் 13, 2016 at 10:10 முப 14 பின்னூட்டங்கள்
காஃபியிலும் ஆர்கானிக்முறை இருக்கிறது.
காஃபிக் கொட்டையைப் பற்றிய செய்தி. நான் காஃபி பருகுவதே கிடையாது. எவுதவாவது செய்யலாமே
Continue Reading ஏப்ரல் 8, 2016 at 10:39 முப 2 பின்னூட்டங்கள்
விளாம்பழம்
அனேகமாக எல்லோருக்குமே இப்பழத்தைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை . ஆனால் மிகவும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பழ வகை. பார்வைக்கு வில்வப்பழத்தைப் போன்ற உருவமும், அதே போன்ற தடித்த ஓட்டுடனும் கூடியது. காயாக இருக்கும்போது அதன் உள்ளே இருக்கும் சதைப் பற்று துவர்ப்பு. ருசியுடன் இருக்கும். பழுத்த பின் புளிப்பும்,துவர்ப்புமான ஒரு கலவை ருசி வரும்.அத்துடன் வெல்லமோ,சர்க்கரையோ சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும். உப்பு,புளி சேர்த்து காரத்துடன் கொதிக்க வைத்து காரப் பச்சடியும்,வெல்லம் சேர்த்து இனிப்புப் பச்சடியும் செய்வதுண்டு. பழம் நன்றாகப் பழுத்து விட்டால் விளாம்பழத்தை கையிலெடுத்து ஆட்டிப் பார்த்தால் உள்ளே ஓட்டை விட்டுப் பிரிந்து விளாம்பழத்தின் குலுக்கல் தெரியும். நன்றாக வயது முதிர்ந்த பெரியோர்கள் விட்டதடி ஆசை விளாம் பழத்தின் ஓட்டோடே என்பார்கள். பழம் பக்குவமானவுடன் லேசான எடையுடன் உள்ளுக்குள்ளேயே ஓட்டை விட்டு விலகிவிடும்.. பழத்தை உடைத்து அகன்ற திக்கான அதன் ஓட்டை அகற்றி பின்னர்தான் அது உபயோகத்தில் வரும். சிரார்த்த தினத்தில் இப்பச்சடி செய்வது மிகவும் விசேஷம்.
இதன் விசேஷ குணங்கள் பித்தத்தைப் போக்கும். வாயுத் தொல்லைகள் அகலும். இம்மரத்தின் பிசின் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த மருந்தாக உபயோகப்படும். வயிற்றுப் புண்ணைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. எங்கள் வீட்டில் இதனுடைய ஓட்டின் பெரிய துண்டுகளை ரஸத்தை இறக்கும்போது சேர்த்து இறக்குவார்கள். ரஸம் கமகம என்று எங்களுக்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது.
உயரமான இம்மரங்களில் சிறிது முள்ளும் உண்டு. ஆங்கிலத்தில் இதை Wood apple என்று சொல்வார்கள். காய்,பழம் எல்லாவற்றையும் உபயோகித்து மோரிலும் பானங்கள் தயாரிக்கலாம். எல்லா இடங்களிலும் வளரக்கூடிய மரம்..
திருக்காறாயில் என்ற இடத்தின் கோவிலின் ஸ்தல விருக்ஷமே இந்த விளா மரம்தான்.
இலை,பூ,காய்,பழம் என்ற எல்லாவித இதன் பாகங்களுமே மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது என்பதை மனதிற்கொண்டு நல்ல பழக்கடைகளில் விசாரித்து கிடைக்கும்போது யாவரும் உபயோகிக்க வேண்டுமென்பதே என் எண்ணம்.

