Archive for ஜூலை 7, 2009
அக்கி ரொட்டி[அல்லது]அரிசி மாவுரொட்டி.
அரிசிமாவு—-ஒருகப்
தேங்காய்த் துருவல்–முக்கால்கப்
சீரகம்—கால்டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஒன்று
துளி பெருங்காயப்பொடி
ருசிக்கு உப்பு
ரொட்டி தயாரிக்க எண்ணெய்
எண்ணெய் நீங்கலாக மற்றவைகளைச் சேர்த்துக் கலந்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவைப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியோ அல்லது நான்ஸ்டிக் பேனோ இரண்டு எடுத்துக்கொண்டு உட்புறம் நன்றாக எண்ணெயைத் தடவவும். பின்னர் ஒர் சின்ன மாங்காயளவு மாவை எடுத்து உருட்டி கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு வாணலியில் வைத்து மெல்லியதாக அடைபோல வாணலியின் , ஷேப்பிலேயே பரத்தித் தட்டவும். நடுவில் இரண்டு பொத்தல்கள் இடவும். சுற்றிலும் பரவலாக 2,3 ஸ்பூன் எண்ணெய்விட்டுப் பிறகே[கவனிக்கவும்] வாணலியை காஸிலோ ஸ்டவ்விலோ வைத்து மிதமான சூட்டில் வைக்கவும்.இரண்டொரு நிமிஷ,ங்கள் தட்டினால் மூடித் திறக்கவும். சறறு முறுகலாகச் சிவந்த பிறகு சல்லிக் கரண்டியினால் திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய் விட்டு பதமாக வேகவிட்டு எடுக்கவும். வாணலியைக் கீழே இறக்கி விட்டு அடுத்து மற்ற வாணலியை ரொட்டியுடன் அடுப்பிலேற்றவும். முதல் வாணலியைத் தண்ணீர்விட்டு அலம்பி சூட்டைப் போக்கி அடுத்த ரொட்டியைத் தயாரித்துக் கொண்டால் தொடர்ந்து செய்ய சுலபமாக இருக்கும்.
சூடு இல்லாத லாணலியில்தான் கையினால் ரொட்டியை மெல்லியதாகத் தட்ட முடியும். ஆதலால் இரட்டை வாணலி முறை. சுடச்சுட ஊருகாய் சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
இதையே பச்சை மொச்சைப்பருப்பு, பச்சைப் பட்டாணி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் முதலானவாகளைச் சேர்த்தும் நமது ரஸனைக்கேற்ப பல ருசிகளில் கார சார மாகவும் தயாரிக்கலாம்.