Archive for ஜூலை, 2011
இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.
இது வாய்க்கு ருசியாகவும், ஆரோக்கியமுமான தொக்கு.
செய்வதுமெளிது. விருப்பமானவைகளுடன் சேர்த்துச்
சாப்பிடலாம். டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது.
வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6
சக்கரை—ஒன்றரை கப்
மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்
வறுத்தறைத்த வெந்தய சீரகப்பொடி–1 டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்.
உப்பு—–ருசிக்கு ஏற்ப
செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக
இருந்தால் 4 ஆக எடுத்துக் கொள்ளலாம்.
பழத்தை அலம்பி சிறிய ப்ரஷர் குக்கரில் அரைகப் தண்ணீர்
சேர்த்து மிதமான தீயில் 2 விஸில் வரும்வரை வேகவைத்து
இறக்கவும்.
ப்ரஷர் அடங்கியபின் ஆறவைத்து, பழத்தைப்பிய்த்துப்போட்டு
விதைகளை அகற்றிவிட்டு, மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில்
போட்டு நன்றாக அறைத்து எடுக்கவும்.
வேகவைத்த ஜலமும் சேர்த்து அறைக்கலாம்.
அடி கனமான நான்ஸ்டிக் பேனில் சக்கரையுடன் சிறிது
ஜலம் சேர்த்து சற்று கொதிக்கவிடவும்.
சக்கரை கறைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அறைத்த
விழுதை அதனுடன் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் ஹல்வா மாதிரி சுருண்டு வரும் வரைக் கிளறி
உப்பு,மிளகாய்ப்பொடி, வெந்தய, சீரக,பெருங்காய,மஞ்சள்ப்
பொடிகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
வேக வைத்த அளவு எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தின்
சாற்றை எடுத்து கொட்டைகளை நீக்கி இறக்கி வைத்துள்ள
கலவையில் சேர்த்துக் கிளறவும். சாறு அதிகம் சேர்க்கலாம்.
சூடு ஆறிய பின்னர் சுத்தமானபாட்டில்களில்
சேமித்துவைக்கவும்.
பெருங்காயம் தூக்கலாக இருந்தால் வாஸனையாக இறுக்கும்.
விருப்பப்பட்டவர்கள் சோம்பு, ஏலக்காய், லவங்கம்,பட்டை,
ஜாதிக்காய், முதலாவதின் ஏதாவதொன்றின் பொடியையும்
ஒரு துளி சேர்க்கலாம்.
எண்ணெய் இல்லாத தொக்கு.பிரிஜ்ஜில் வைக்கும்
அவசியமில்லை.
இதனுடனேயே இன்னொரு பக்கம் பூண்டு சேர்த்த டொமேடோ
தொக்கும் தயாராயிற்று.
அதையும் சேர்த்துப் பாருங்களேன். ஏற்கெனவே இஞ்சி சேர்த்துச்
செய்த குறிப்பு இருக்கிரது.
இது வேறு ருசி. இதையும் பாருங்களேன் ஸமயத்திற்குஉதவும்.
வேண்டியவைகள்—-பெறியசைஸ் தக்காளிப்பழம்—6
உறித்த பூண்டு இதழ்கள்—15
மிளகாய்ப்பொடி—3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—1டீஸ்பூன்
வறுத்தறைத்த வெந்தய, சீரகப் பொடி—தலா 1டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
புளி—ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய்—கால் கப்பிற்கதிகம்
சக்கரை—1டீஸ்பூன்.
செய்முறை—தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக
கொதிக்கும் தண்ணீரை பழம் அமிழும்படியாக அதன்மேல்
விட்டு மூடிவைக்கவும்.
புளியை ஈரப்படுத்தி ஊர விடவும்.
ஜலம் ஆறியபின் பழத்தை எடுத்துத் தோலை உறித்துத்
தனியாக வைக்கவும்.
உறித்து வைத்துள்ள பூண்டை சிறியதாக நறுக்கிப் போட்டு
மிக்ஸியில் அறைக்கவும்.
தக்காளி, புளியையும் சேர்த்து அறைக்கவும்.
நான்ஸ்டிக் பாத்திரத்திலோ,அல்லது அகலமான பேனிலோ
கலவையைக்கொட்டி நிதானமான தீயில் கொதிக்கவைத்துக்
கிளறவும்.
கலவை திக்காக சேர்ந்து வரும்போது வாணலியில்எண்ணெயை
– க்காயவைத்து மிளகாயை வறுத்து, கடுகை வெடிக்கவிட்டு
கீழிறக்கி பொடிகளைச் சேர்த்துக் கிளறி, கலவையில் கொட்டிக்
கிளறவும். வேண்டிய உப்பு சேர்க்கவும்.
சக்கரையும்தான்.
துளி ஸ்பூனில் எடுத்து ஆற வைத்து ருசி பார்க்கவும்.
சுருளக்கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டில்களில் சேமிக்கவும்.
ப்ரிஜ்ஜில் வைத்து நீண்ட நாள் உபயோகிக்கலாம்.
ருசி பார்க்கச் சொன்னது உப்புக்காரம் கூடக் குறைய
வேண்டுமானால் சேர்ப்பதற்காகத்தான்.படத்தில் சில பொடிகள்
வைக்கத் தவறியிருப்பேன். அதெல்லாம் ஒரு பிரமாதமில்லை.
குறிப்புகளே அவசியமானது.
டால்.தோலுடன் கூடியபாசிப்பருப்பு
இந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்
தோலுடன் கூடிய பருப்பு. ருசி நன்றாகவே இருக்கிரது.
டால் வகைகளை தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பிலும்
தயாரிக்கலாம்.
ரொட்டி. பூரி வகைகளுடனும், சாத வகைகளுடனும் சேர்த்தும்
.உண்ணலாம்.
எளிய வகைதான். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்
பொடிக்க ஸாமான்—மிளகு–அரை டீஸ்பூன்
சீரகம்—1டீஸ்பூன்
லவங்கம்—4
நறுக்க வேண்டியவைகள்—பச்சைமிளகாய்–3
வெங்காயம்—-2
உறித்த பூண்டு இதழ்கள்—4
தக்காளி—1
இஞ்சி—சிறிது
தாளிக்க எண்ணெய், நெய் வகைக்கு 2, 3 டீஸ்பூன்கள்
பிரிஞ்சி இலை—1
சிவப்பு கேப்ஸிகம்—-விருப்பத்திற்கு
பொடிகள்—மஞ்சள்பொடி—1டீஸ்பூன்
மாங்காய்ப்பொடி–1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு,—உப்பு, துளி சர்க்கரை
செய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்
பொடி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ப்ரஷர் குக்கரில்
2விஸில் வரும்வரை வைத்து வேகவிட்டு இறக்கவும்.
பொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நெய்எண்ணெயைக்காயவைத்து
பிரிஞ்சி இலையைப்போட்டு , வெங்காய வகையாராக்களையும்
சேர்த்து நன்றாக வதக்கவும். சுருள வதக்கி , பொடித்த
பொடியைப்போட்டுப் பிரட்டி நறுக்கிய தக்காளியையும் சேர்த்து
பின்னும் வதக்கவும்.
பெருங்காயம், மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.
வெந்த பருப்பைச் சிறிது மசித்து தாளிப்பில் சேர்த்து, வேண்டிய
உப்பு, துளி சக்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஆம்சூர் வேண்டாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
பொடித்து போடுவது நல்ல வாஸனையைக் கொடுக்கும்.
காரம் வேண்டிய அளவு மிளகாயோ, பொடியோ கூட்டிக்
கொள்ளலாம்.
ரொட்டிக்காகவென்றால் டாலை சற்று திக்காகவும்,
சாதவகையுடனென்றால் சற்று நீர்க்கவும் தயாரிப்போம்.
பச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கலாம்.
காப்ஸிகம் சேர்த்தால் கண்ணிற்கும் விருந்தாக இருக்கும்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு ஆதலால் வேக வைக்கும்
போது தண்ணீர் அதிகம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
தாளித்து பருப்பில் சேர்த்தாலும், பருப்பை தாளிதத்தில்
சேர்த்தாலும் எல்லாம் ஒன்றுதான்.
பொடிபோட்ட ஸாம்பார்
ஸாதாரணமாக ஸாம்பார் பொடி போட்டு செய்யும் ஸாம்பார்களில்
காய்கறிகள் எதெது சேர்த்துச் செய்தால் நன்றாஇருக்கும். என்று
எனக்குத் தெறிந்ததைச் சொல்லுகிறேன்,
1 காப்ஸிகம்,காரட், பச்சைமிளகாய்
2 பூசணி, கத்தரிக்காய்
3 நூல்கோல்,வெங்காயம், பச்சைமிளகாய்
4பரங்கிக்காய், கேப்ஸிகம்,பச்சைமிளகாய்
5 வெண்டை ,தக்காளி, பச்சைமிளகாய், காப்ஸிகம்
வெண்டைக்காயை வதக்கிப் போடவும்.
6 அவரைக்காய், வெந்தயக்கீரை, பட்டாணி
7பாலக்,பட்டாணி,தக்காளி,சின்ன வெங்காயம்
8 காரட், பட்டாணி
9உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி
10 முள்ளங்கி, சின்ன வெங்காயம்
11முருங்கக்காய், சின்ன வெங்காயம்
12 பச்சை சுண்டைக்காய்,தக்காளி
13 பாகற்காய், தக்காளி.
சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வெள்ளிக் கிழங்கு,
இவை போன்ற கிழங்குகளைத் தனித்துப் போட்டு செய்யும்
பருப்புக் குழம்புகள் ருசியாக இருக்கும்.
எல்லா ஸாம்பாரிலுமே தக்காளிப் பழம் ஒன்றை சிறியதாக நறுக்கி
வதக்கி சேர்க்கலாம்.ஸாம்பாரில் தக்காளியா என்று கேட்கும் போரும்
உண்டு. வறுத்து அறைத்த ஸாம்பார் என்றால் தக்காளியை வறுத்த
ஸாமான்களுடன் வதக்கி, சேர்த்து அறைத்து விட்டால் கூடநன்றாக
இருக்கிறது.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உறித்து ஸாம்பாரில் சேர்க்க
வேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சற்று நீளமாக நறுக்கி சற்று
வேகவைத்து ஸாம்பாரைச் செய்ய வேண்டும்.
பொதுவாக பாத்திரத்தில் தாளித்து காயை சற்று வதக்கி பிறகு புளி
ஜலம், ஸாம்பார்ப்ரொடி, உப்பு ,சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு,
வெந்த பருப்பைச் சேர்த்து பின்னும் கொதிக்கவிட்டு இறக்குவது
ஒரு முறை.
பாத்திரத்தில் சிறிது ஜலத்தில் காயைச் சிறிது வேகவைத்து
புளிஜலத்தைச் சேர்த்து, ஸாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க
வைத்து, வெந்த பருப்பு சேர்த்து , எண்ணெயில்கடுகு,வெந்தயம்
பெருங்காயம் தாளித்து இறக்குவதும் ஒரு முறை.
எதற்கும் ஒரு மாதிரிக்கு காரட், காப்ஸிகம் ஸாம்பார் செய்வோமா.
பெருஜ்ஜீரகம் ஸாம்பார்ப் பொடியில் நான் போடுவதில்லை.
புடலங்காய்,பீர்க்கங்காய்வாழைக்காய்,கொத்தவரங்காய்,வெள்ளரிக்காய்
முதலானது ஸாம்பாரில் போடுவதில்லை. வெங்காயம் கூட சின்ன
வெங்காயம்தான் ஸாம்பாருக்கு ஏற்றது.
தனித்த வெங்காய ஸாம்பார் மிகவும் எல்லோராலும் விரும்பப்படுகிறது.
சின்ன அளவில் புதியதாகப் பொடி செய்வோம்.
மிளகாய் வற்றல்—4, கொத்தமல்லி விதை—1டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன், வெந்தயம்அரை டீஸ்பூன்,
மிளகு—எண்ணிக்கையில் 6அல்லது 7
மிளகாய் தவிர மற்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க
வறுக்கவும்.
மிளகாயை துளிஎண்ணெயிலகறுகாமல்வறுக்கவும்.யாவற்றையும்
ஆற வைத்து துளி மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில்பொடிக்கவும்.
ஸாம்பார்ப் பொடி சின்ன அளவில் ரெடி.
அல்லது வீட்டில்வைத்திருக்கும்ஸாம்பார்பொடிஉபயோகித்தாலும்
ஸரி..
திட்டமான காரட்—-3
பச்சையோ, சிகப்போ காப்ஸிகம்-1
பச்சைமிளகாய்–1
தக்காளி–1
துவரம் பருப்பு—முக்கால் கப் அளவிற்கு களைந்து வேக வைத்துக் கொள்ளவும்.
புளி—ஒரு சின்ன எலுமிச்சையளவு
தாளிக்க—எண்ணெய்
கடுகு, வெந்தயம் தலா அரைடீஸ்பூன்
வாஸனைக்கு வேண்டிய பெருங்காயம்
காரட்டைத் தோல் சீவி சற்றுப் பருமனான வில்லைகளாக
நறுக்கிக் கொள்ளுவோம்.
காப்ஸிகமும் அப்படியே. தக்காளியைச்துண்டுகளாக்குவோம்
புளியை ஊறவைத்து 2, 3 கப் ஜலம் சிறிதாகச்சேர்த்து
நன்றாகக் கரைத்து சக்கையை நீக்குவோம் .
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகை
வெடிக்கவிட்டு. வெந்தயத்தையும் கூடவே சிவக்க வைத்து,
பெருங்காயத்தையும் தாளித்து, பச்சைமிளகாய் ,தக்காளியை
வதக்கி, அலம்பின காய்களையும் போட்டு 2 பிரட்டு பிரட்டி
கரைத்த புளி ஜலத்தைச் சேர்ப்போம்.
திட்டமாக உப்பு, பொடித்த ஸாம்பார்ப் பொடி , அல்லது
ஏற்கெனவே இருக்கும் ஸாம்பார்ப் பொடியில் 3 டீஸ்பூன்
சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்க ஆரம்பித்த பிறகு சற்று தீயைக் குறைத்து, காய்
வெந்து, புளி, பொடி வாஸனை குறைந்த பின், வெந்த
பருப்பைத் திட்டமாகக் கலக்கிச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விட்டு ஸாம்பார் நீர்க்க இருக்கும்போல்
தோன்றினால் ஒருஸ்பூன் அரிசி மாவைத் துளி
தண்ணீரில்க் கரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும்
இறக்கி கொத்தமல்லி கறிவேப்பிலையைத் தூவி
உபயோகிக்கவும். காரம் வேண்டியளவிற்கு மிளகாயை
அதிகரிக்கலாம்.
இந்தக் காய்கறி ஜோடிகள் எனக்கு மனதில்ப்பட்டு
நான் செய்கிறேன். அது ஒன்றுதான் விசேஷமே தவிர
வேறொன்றுமில்லை.
சொல்லுகிறேன்னு பேர் கொடுத்திருக்கிறேனே அதனால்
சொல்லும் மாதிரியே எழுத்து வார்த்தைகள் அமைந்து
விட்டது.
பொடிபோட்ட ஸாம்பார். அதனால் தேங்காயைக்கூப்பிடவில்லை.
மொத்தமாக இயந்திரத்தில் ஸாம்பார்ப் பொடி செய்தால்
துவரம் பருப்பு போடலாம். அரிசியும் நான் போடுவதில்லை.
கதை மாதிரி நீண்டு விட்டது பதிவு.









