Archive for ஜூலை 30, 2011
இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.
இது வாய்க்கு ருசியாகவும், ஆரோக்கியமுமான தொக்கு.
செய்வதுமெளிது. விருப்பமானவைகளுடன் சேர்த்துச்
சாப்பிடலாம். டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது.
வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6
சக்கரை—ஒன்றரை கப்
மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்
வறுத்தறைத்த வெந்தய சீரகப்பொடி–1 டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்.
உப்பு—–ருசிக்கு ஏற்ப
செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக
இருந்தால் 4 ஆக எடுத்துக் கொள்ளலாம்.
பழத்தை அலம்பி சிறிய ப்ரஷர் குக்கரில் அரைகப் தண்ணீர்
சேர்த்து மிதமான தீயில் 2 விஸில் வரும்வரை வேகவைத்து
இறக்கவும்.
ப்ரஷர் அடங்கியபின் ஆறவைத்து, பழத்தைப்பிய்த்துப்போட்டு
விதைகளை அகற்றிவிட்டு, மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில்
போட்டு நன்றாக அறைத்து எடுக்கவும்.
வேகவைத்த ஜலமும் சேர்த்து அறைக்கலாம்.
அடி கனமான நான்ஸ்டிக் பேனில் சக்கரையுடன் சிறிது
ஜலம் சேர்த்து சற்று கொதிக்கவிடவும்.
சக்கரை கறைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அறைத்த
விழுதை அதனுடன் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் ஹல்வா மாதிரி சுருண்டு வரும் வரைக் கிளறி
உப்பு,மிளகாய்ப்பொடி, வெந்தய, சீரக,பெருங்காய,மஞ்சள்ப்
பொடிகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
வேக வைத்த அளவு எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தின்
சாற்றை எடுத்து கொட்டைகளை நீக்கி இறக்கி வைத்துள்ள
கலவையில் சேர்த்துக் கிளறவும். சாறு அதிகம் சேர்க்கலாம்.
சூடு ஆறிய பின்னர் சுத்தமானபாட்டில்களில்
சேமித்துவைக்கவும்.
பெருங்காயம் தூக்கலாக இருந்தால் வாஸனையாக இறுக்கும்.
விருப்பப்பட்டவர்கள் சோம்பு, ஏலக்காய், லவங்கம்,பட்டை,
ஜாதிக்காய், முதலாவதின் ஏதாவதொன்றின் பொடியையும்
ஒரு துளி சேர்க்கலாம்.
எண்ணெய் இல்லாத தொக்கு.பிரிஜ்ஜில் வைக்கும்
அவசியமில்லை.
இதனுடனேயே இன்னொரு பக்கம் பூண்டு சேர்த்த டொமேடோ
தொக்கும் தயாராயிற்று.
அதையும் சேர்த்துப் பாருங்களேன். ஏற்கெனவே இஞ்சி சேர்த்துச்
செய்த குறிப்பு இருக்கிரது.
இது வேறு ருசி. இதையும் பாருங்களேன் ஸமயத்திற்குஉதவும்.
வேண்டியவைகள்—-பெறியசைஸ் தக்காளிப்பழம்—6
உறித்த பூண்டு இதழ்கள்—15
மிளகாய்ப்பொடி—3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—1டீஸ்பூன்
வறுத்தறைத்த வெந்தய, சீரகப் பொடி—தலா 1டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
புளி—ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய்—கால் கப்பிற்கதிகம்
சக்கரை—1டீஸ்பூன்.
செய்முறை—தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக
கொதிக்கும் தண்ணீரை பழம் அமிழும்படியாக அதன்மேல்
விட்டு மூடிவைக்கவும்.
புளியை ஈரப்படுத்தி ஊர விடவும்.
ஜலம் ஆறியபின் பழத்தை எடுத்துத் தோலை உறித்துத்
தனியாக வைக்கவும்.
உறித்து வைத்துள்ள பூண்டை சிறியதாக நறுக்கிப் போட்டு
மிக்ஸியில் அறைக்கவும்.
தக்காளி, புளியையும் சேர்த்து அறைக்கவும்.
நான்ஸ்டிக் பாத்திரத்திலோ,அல்லது அகலமான பேனிலோ
கலவையைக்கொட்டி நிதானமான தீயில் கொதிக்கவைத்துக்
கிளறவும்.
கலவை திக்காக சேர்ந்து வரும்போது வாணலியில்எண்ணெயை
– க்காயவைத்து மிளகாயை வறுத்து, கடுகை வெடிக்கவிட்டு
கீழிறக்கி பொடிகளைச் சேர்த்துக் கிளறி, கலவையில் கொட்டிக்
கிளறவும். வேண்டிய உப்பு சேர்க்கவும்.
சக்கரையும்தான்.
துளி ஸ்பூனில் எடுத்து ஆற வைத்து ருசி பார்க்கவும்.
சுருளக்கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டில்களில் சேமிக்கவும்.
ப்ரிஜ்ஜில் வைத்து நீண்ட நாள் உபயோகிக்கலாம்.
ருசி பார்க்கச் சொன்னது உப்புக்காரம் கூடக் குறைய
வேண்டுமானால் சேர்ப்பதற்காகத்தான்.படத்தில் சில பொடிகள்
வைக்கத் தவறியிருப்பேன். அதெல்லாம் ஒரு பிரமாதமில்லை.
குறிப்புகளே அவசியமானது.