Archive for ஒக்ரோபர், 2011
மோர் மிளகாய்
பெயர் தான் மோர் மிளகாயே தவிர ஊறுவதென்னவோ தயிரில்தான்.
நல்ல ருசியான மிளகாய். எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்துடன்
சாப்பிட கட்டு சாப்பாட்டுகளுடன் எடுத்துப் போக என சுலபமானது.
ஜெனிவா வெய்யிலில் தயாரித்த என்னை ஏன் போடவில்லை என்று
கேட்பது போல மனதில் ஒரு எண்ணம். எழுதின குறிப்பைப் போட்டுவிட்டால்
போகிறது. விருப்பமானவர்களுக்கு உபயோகமாக இருக்குமே.
வேண்டியவைகள்.
பச்சை மிளகாய்—அதிக காரமில்லாத சிறிய சைஸ் ஒரு 20 , 25.
பெறிய சைஸாக இருந்தால் நம்பரைக் குறைத்துக் கொள்ளவும்.
நல்ல தயிர்—–ஒருகப். அதிகமும் விடலாம்.
உப்பு ருசிக்குத் தக்கபடி .2 டீஸ்பூன் வரை ஸரியாக இருக்கும்.
செய்முறை.
மிளகாய்களை அலம்பித் துடைத்துக் காயின் நுனியில் சற்றுக் கீரவும்.
காம்பையும் சிறிது வைத்து மிகுதியை நீக்கவும்.
கண்ணாடி, அல்லது ஜாடிக் கிண்ணத்தில் மிளகாயைப் போட்டு அது
மூழ்கும்படி தயிரைக் கடைந்து அத்துடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.
2, 3நாட்கள் தயிரில் ஊறின பிறகு மிளகாயைச் சற்று பிழிந்தாற்போல
எடுத்து வெய்யிலில் காயவைக்கவேண்டும்.
ஒரு ட்ரேயிலோ, தட்டிலோ பாலிதீன் பேப்பரினால் கவர் செய்து
அதன் மேல் பரவலாக மிளகாயைப் பரப்பி நல்ல வெய்யிலில்
காயவைக்கலாம்.
தயிர்க் கலவையையும் கூடவே வெய்யிலில் வைக்கவும்.
வெய்யில் போன பிறகு மிளகாயைத் திரும்பவும் தயிருடனே
கலந்து வைக்கவும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படியே மிளகாயைக் காய வைக்கவும்.
வெய்யிலில் வைக்க வைக்க மிளகாயும், தயிரும் காய்ந்து விடும்.
கொஞ்சம்,தயிர், உப்பு காய்ந்து மிளகாயினின்றும் பொடியாக உதிரும்.
நன்றாகக் காய்ந்த மிளகாயை பாட்டிலில் போட்டு வைத்து, வேண்டும்
போது எண்ணெயில் சற்றுக் கருக வறுத்து உபயோகிக்கவும்.
தயிரில் ஊறின மிளகாய்கள் நல்ல மணத்துடன் உப்பும் உறைப்புமாக
ருசியாக இருக்கும். எண்ணெயில் வறுத்த பிறகுதான்.
ஊறும் போதே பச்சையாக தொட்டுக் கொள்ள உபயோகிப்பவர்களும்
உண்டு.
கெட்டியான புளிக்கரைசலிலும் மிளகாயை ஊறவைத்து இதே முறையில்
காயவைத்து தயாரிப்பதும் உண்டு.
தயிர் அதிகமாகவே சேர்க்கவும்.
மோர்க்குழம்பு, மோர்க்களி, இட்லிஉப்புமா இவைகளில் முக்கியமாக
இம்மிளகாய் உபயோகப்படும்.
வீட்டில் அதிகப்படியாக மிகுந்து போகும் 7, 8 மிளகாயில் கூட இதைச்
சிறிய அளவில் செய்து காயவைத்து உபயோகப் படுத்தலாம்.
மூன்றாவது படம் ஊறும் மிளகாய்.
கடைசி படம் நன்றாகக் காய்ந்த மோர் மிளகாய். இனி வறுக்க வேண்டியதுதான் பாக்கி.

கார மபின்.சோளம்.
மெல்லியதாக உடைத்த சோள ரவையில் செய்த இதைஎங்களுக்கு மிகவும்வேண்டியவர்கள்செய்துகொண்டுவந்திருந்தனர். மிகவும் ருசியாக இருந்ததால் செய் முறைகேட்டேன். மிகவும்அக்கறையாகஉங்களப்ளாகில்போடுங்கள்என்று
செய்முறைவிளக்கம்அளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்
மெல்லியதான சோளரவை–1 கப்.polenta
மைதா—1 கப்
ருசிக்கு உப்பு
இவைகளைக் கலந்து கொள்ளவும்.
அடுத்து—எண்ணெய் –கால்கப்,
மோர் கடைந்தது–இரண்டே முக்கால் கப்
இவை இரண்டையும் மாவுடன் சேர்த்துக் கரைத்து
இட்டிலி மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து கொள்ளவும்.
மேலும் பதப்படுத்திய இனிப்பு சோள முத்துகள்—1 கப்
காப்ஸிகம் மெல்லியதாக நறுக்கிய துண்டுகள்–1 கப்
parmezan. பார்மிஜான் சீஸ்ப் பொடி–1 கப்
பச்சைமிளகாய்–2 சிறியதாக நறுக்கியது
இவைகளை மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
செய்முறை—அவனைச் சூடாக்கவும்
கலக்கிய மாவை சிறிய மபின் கப்புகளில் விட்டு
ட்ரேயில் அடுக்கி வைத்து
90 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 20 நிமிஷங்கள்
பேக் செய்து எடுக்கவும்.
அழகான கலரில் ருசியான கார மபின்கள் ரெடி.
ருசித்துப் பாருங்கள். நன்றி ஸ்டெல்லா.
தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புமிக்க வலைப்பதிவு உலகத்தின் அனைவருக்கும், மற்றும் யாவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். இனிமையாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். அன்புடன் சொல்கிறேன் காமாட்சி.வணக்கம்.
காராசேவு
நீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குள்ளாவது
ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்
வந்திருக்கிறேன். சுலபமாக எழுதவும், செய்யவும்
காராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,
எழுதியும் போட்டிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
கடலைமாவு—2 கப்
அரிசிமாவு—அரைகப்
சமையல் ஸோடா–கால் டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
உறித்த பூண்டு இதழ்கள்–3
லவங்கம்–2
ஏலக்காய்–1
கசகசா—2டீஸ்பூன்
வெண்ணெய்–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு–உப்பு
பொறித்தெடுக்க—தேவையான எண்ணெய்
செய்முறை—-மாவுகளைச் சேர்த்துச் சலிக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் உப்பு, ஸோடாஉப்பு, வெண்ணெய்
சேர்த்துத் தேய்த்துக் கலக்கவும்.
கசகசாவை ஊற வைத்து வடித்து. நறுக்கிய பூண்டுத்
துண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து
சிறிது ஜலம் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து
கெட்டியாக முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்
பிசைந்து கொள்ளவும்.
தேன்குழல் பிழியும் அச்சில் பெரிய கண் கொண்ட
வில்லையைப் போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை
வட்டமான வடிவத்தில் பிழியவும்.
நிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து
திருப்பிப்போட்டு எடுக்கவும்.
ஆறினவுடன் , துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.
காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
சேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்
செய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்
இருக்கிறது. வேறு என்ன வேண்டும்.
மாவை நன்றாகப் பிசைவது அவசியம்.
வாழ்த்துகள்
சொல்லுகிறேன் வலைத்தள அபிமான ஸகோதர
அபிமானிகள், ஸகோதரிகள், மற்றும் யாவருக்கும்
ஸரஸ்வதி பூஜை, விஜயதசமி நல் வாழ்த்துக்களை
அன்புடன்தெறிவித்துக் கொள்கிறேன்.
ஆசிகள் சொல்லுகிறேன் காமாட்சி.