Archive for பிப்ரவரி, 2012
நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.
கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடியது இந்தவகை. யாவரும் நெல்லை
மிஷினி்ல் கொடுத்து அரிசியாக செய்து வரும்போது எப்படியும் சிறிதளவாவது
அரிசி இடிந்து நொய்யாக அதாவது குருணையாக மாறும். அதைத் தனியாக
எடுத்துப் பல விதங்களில் உபயோகப் படுத்துவார்கள். புழுங்கலரிசியில் அதிகம்
நொய் விழுவதில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புளி உப்புமாவை
எழுத நினைத்தும் ஒன்று நொய் கிடைப்பதில்லை. இவ்விடம்
வரும்போது கவனத்தில் வருவதில்லை. இந்த ஸமயம் எல்லாம்
கூடி வந்தது. வகையாகவும் அமைந்தது. இது என்ன மஹாப்பெறிய
வஸ்துவென்று நினைக்கலாம். இங்கே சென்னையில் வீட்டைச் சுற்றி
பெயின்டிங் வேலை நடைபெற்றது. வேலையாட்கள் மிகவும் தூரத்திலிருந்து
வருவதால் அவர்களுக்கு டிபன், சாப்பாடு வீட்டிலேயே செய்து
கொடுத்தார்கள். இதில் நானும் இந்த உப்புமாவைச் செய்யும்படி சொல்லி
ஞாபகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உங்கள் யாவருடனும் அதைப்
பகிர்ந்து கொள்வதுதானே முக்கியக் காரணம். புளிப்பொங்கல் எனக்கு
ரொம்பவே பிடித்திருந்தது. கதையில்லை நிஜம் இது. சிறிய அளவில்
வேண்டியதைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—
அரிசி நொய்–2 கப்
புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்
மிளகாய்வற்றல்—3
வெந்தயம்–கால் டீஸ்பூன்
பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி
ருசிக்கு—உப்பு
தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்
கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்
சிறிது மஞ்சள்ப் பொடி
செய்முறை—
நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்
அரிசி நொய்யைக் களைந்து கல்லில்லாமல் அறித்தெடு்த்து தண்ணீரை
வடிக்கட்டவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து 2,3 முறை தண்ணீர்விட்டுக்
கறைத்துச் சக்கையை நீக்கவும்.
புளித்தண்ணீரை அளந்து விடவும்.மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து
ஒரு பங்கு நொய்யிற்கு 3 பங்கு தண்ணீரென மொத்தக் கணக்கில்
அளந்து விடவும்.
வாணலியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு,வெந்தயம்,மிளகாய்,
பருப்புகள், பெருங்காயம் இவைகளைத் தாளித்துகறிவேப்பிலை,பூண்டு,
வெங்காயத் துண்டுகள் இவைகளையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீருடன்
கூடிய நொய்யில் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து ரைஸ் குக்கரில் இவைகளை
மாற்றி குக்கரை ஆன் செய்யவும்.
பதமாக வெந்து முடிந்ததும், குக்கரைத் திறந்து கரண்டிக் காம்பினால்
வெந்த கலவையை நன்றாகக் கிளறி மூடவும்.
5 நிமிஷங்கள் கழித்துத் தயாரான புளிப் பொங்கலை சுடச்சுடப்
பகிர்ந்து உண்ண வேண்டியதுதான்.
புளி, காரம் இரண்டுமே அதிகப்படுத்தலாம். இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்க்கலாம். வேர்க்கடலை தாளிக்கலாம். ரிச்சாக தயாரிப்பதானால்
இருக்கவே இருக்கிறது முந்திரி.
பாஸ்மதி அரிசியின் நொய் ஆனால் 2 பங்கு ஜலமே போதும்.
இது ஸிம்பிள் தயாரிப்பு.
பொங்கலோ, உப்புமாவோ எந்த பெயர் வேண்டுமானாலும் நாம்
சொல்லலாம்.
4 கப் செய்ததை அப்படியே போட்டிருக்கேன். யார் வேண்டுமானாலும்
எடுத்துச் சாப்பிடலாம்.
.
சேர்த்துப்
பாகற்காய் வறுவல். முறை 2
மாதிரிக்குத்தானே. ஸுமார் 4 பாகற்காய் எடுத்துக்கொண்டு செய்து
பார்க்கலாம். சுலபமாக செய்வதற்கு மைக்ரோவேவ் மிக்க
ஒத்தாசையாக இருக்கிறதல்லவா?
வேண்டியவைகள்—எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்தான்.
அரை டீஸ்பூன்–சர்க்கரை
கால் டீஸ்பூன்—–மஞ்சள்ப்பொடி
புளி ஜலம— கெட்டியாக 1 டேபிள்ஸ்பூன்
உப்பு—வேண்டிய அளவு
எண்ணெய்—–வேண்டிய அளவு
செய்முறை—பாகற்காயை அலம்பி மெல்லிய வட்டங்களாக
நறுக்கி விதைகளை நீக்கவும்.
புளிஜலம்,உப்பு,ம.பொடி, சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசறி
ஊற வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து நன்றாக ஒட்டப் பிழிந்து மைக்ரோவேவ்
பாத்திரத்தில் மாற்றவும்.
4 டீஸ்பூன் எண்ணெயைக் காயுடன் கலந்து பிசறி ஹை
பவரில் மைக்ரோவேவ் செய்யவும்.
திரும்பவும் எடுத்துக் கிளறிவிட்டு 2 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்யவும்.
இப்படியே பின்னும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் கலந்து ஒரு நிமிஷம்
மைக்ரோவேவ் செய்யவும்
தண்ணீர் வற்றும் வரை ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டுமைக்ரோவேவ் செய்து
நல்ல கரகரப்பான பதம் வரும்போது எடுத்து ஒரு நிமிஷம் ஆற வைக்கவும்.
வாணலியில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி வறுவலையும்
சேர்த்து போதும், போதாதற்கு உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்து கரகர பதத்தில்
இறக்கி உபயோகிக்கவும். வெங்காயம் வேண்டாம். அதுவும் ஸரி. பூண்டு,
பெருங்காயப்பொடி எது வேண்டுமானாலும் வாஸனைக்கு சேர்க்கலாம்.
பாகற்காய் ருசி பிடித்தவர்களுக்கு இந்த வகையும் முயற்சிக்கலாம்.
மாங்காய் இஞ்சி பிசறல்.
இந்த மாங்காய் இஞ்சி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை
வந்த பிறகு மாங்காயிஞ்சியை ஸ்மரிக்காமல் இருக்க முடியுமா?
கேட்பதற்கு முன்னாடியே எனக்கு பிடிக்கும் என்ற முறையில் மாஇஞ்சியை
என் பெண் வாங்கி வந்து விட்டாள். ஸரி, எதையும் தேடிப் போகாமல்
இருப்பதைவைத்து ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது.
ஸாதாரணமாக பொடியாக மாஇஞ்சியை நறுக்கி, உப்பு சேர்த்து,
எலுமிச்சை சாறு சேர்த்து , கடுகு தாளித்து, பச்சைமிளகாயையும்
துளி வதக்கிப் போட்டால் அதுவே மிக்க ருசியாக இருக்கும்.
எனக்கு எப்படி செய்தால் பிடிக்கும்,செய்தேன் என்பதையும்தான்
நீங்களும் படியுங்களேன். பிரமாதமொன்றுமில்லை. இருந்தாலும்
எழுதுகிறேன். படியுங்கள்.
வேண்டியவைகள்—–
நல்ல கேரட்—பெறியதாக ஒன்று
திட்டமான நீளம் கொண்ட மாங்காயிஞ்சி—4 துண்டுகள்
கேப்ஸிகம்—1 பச்சைநிறம்.
பச்சைமிளகாய் பாதியோ அல்லது ஒன்றோ
பூண்டு இதழ்—ஒன்று.பிடித்தவர்கள் உபயோகிக்கவும்.
வெங்காயம்—-1
உப்பு—ருசிக்கு
சர்க்கரை—ஒரு துளி
கடுகு, சீரகம்—மொத்தமாக அரை டீஸ்பூன்.
உளுத்தம் பருப்பு—-சிறிது
எண்ணெய்—-துளி. தாளிக்க
சின்ன எலுமிச்சம் பழம்—1
கொத்தமல்லித்தழை—மேலே தூவ
செய்முறை—இஞ்சி,கேரட்டைத் அலம்பித் தோல்
சீவிப் பொடியாக நறுக்கவு்ம்.
காப்ஸிகத்தையும் அதே அளவில் நறுக்கவும்.
ஒரு கரண்டியில் துளி எண்ணெயில் கடுகு,சீரகம் உ.பருப்பு,தாளித்து
பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி வைக்கவும்.
எலுமிச்சை சாற்றில்,,உப்பு, சர்க்கரை சேர்த்து நறுக்கிய துண்டங்களின்
கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
தாளிதத்தைச் சேர்த்து கொத்தமல்லி தூவவும். உரிகானோ இருந்தலும்
ஒரு துளி போடலம்.
வாய்க்கு ருசியானது. பார்க்கவும் அழகாக இருக்கு. சாப்பாட்டுடன்,
ருசிதான். வெங்காயத்தை பிடித்த முறையில் வதக்கியோ,
பச்சையாகவோ நறுக்கிச் சேர்க்கலாம்.
வினிகர் சேர்த்தும் செய்யலாம்.
மக்னி அல்லது மகானா.makhana
நான் மஃக்னி யைப்பற்றி இங்கே எழுதுகிறேன். மும்பையில்
மக்னி என்று சொல்வது பெரும்பாலான இடங்களில் மகானா
என்று அதுவும் வட இந்தியாவில் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி
விவரம் கேட்டு எழுதியதில் ஏராளமான விவரங்கள் அறிய
முடிந்தது. எனக்கு தெறிந்ததில் சிலவற்றை எழுதுகிறேன்.
மகானா. makhana இங்லீஷ் பெயர் foxnut
இது ஒரு தண்ணீரில் வளரும் தாவரம்.
லில்லி குடும்பத்தைச் சேர்ந்தது. இலை ரவுண்ட்ஷேப்.
பெறிய அளவு. இலை மேலே பச்சை நிறம். கீழே பர்பல் நிறம்.
பூவும்–பர்பல்நிறம்தான்.
ஒயிட் கலர், ஸ்டார்ச்சி ஸீட். சாப்பிடத் தகுந்தது.
விதைக்காக கல்ட்டிவேட் செய்கிரார்கள்.
விளையும் இடங்கள்—இந்தியா,சைனா, ஜப்பான்.
சீதோஷ்ணம்–ஹார்ட் ட்ரை ஸம்மர்,கோல்ட் வின்ட்டரில்
பயிராகும்.
லேட் ஸம்மரில் கலெக்ட் செய்வார்கள்.
3000 வருஷங்களாக சைனாவில் விளைவிக்கிறார்கள்.
இந்தியாவில் பீஹாரில் மாத்திரம் 96000 ஹெக்டேரில்
தண்ணீரில் பயிராகிரது.
இதை பச்சையாகவும், உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
சைனாபெயர்—- Qian’shi
சைனாவில் மருந்துகளிலும், ஸூப்புகளிலும், மற்றும் பல
விதங்களிலும் உபயோகிக்கிரார்கள்.
ஆண்மை பலப்படும், முதுமை தள்ளிப்போகும் என சைனீஸ்
நம்புகிறார்கள்.
இந்தியாவில் , வட இந்தியாவிலும்,, இந்தியாவின் மேற்குப்
பகுதிகளிலும், அதிக உபயோகமாகிறது.
பீஹாரில் பண்டிகைகளிலும், கடவுளுக்கான நிவேதனப்
பண்டங்களிலும், இது அதிகமாக உபயோகப் படுத்தப்
படுகிரது.
கஞ்சி, பாயஸம்,லட்டு, புட்டிங், சமையல் என பல
விதங்களில் மிகுதியாக உபயோகப் படுத்துகிறார்கள்.
நான் அறிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன்.
ஜெநிவாவில் என் சம்மந்தி அம்மா அவர்கள் செய்ததையும்,
படம்பிடித்து வைத்திருந்தேன். ஷாஹி மட்டர் மகானா.
இதை வழக்கமான ஸாமான்களுடன் முந்திரி பருப்பையும்
சேர்த்து அரைத்து,மட்டரை வேகவைத்துச் சேர்த்து, மகானாவை
வறுத்துச் சேர்த்துச் செய்தது.
எல்லா கடைகளிலும், வட இந்தியாவில் கிடைக்கிறது.
லோடஸ் ஸீட் என்று சிலரும்,இது வேறு என்று சிலரும்
சொல்கிறார்கள். இப்போது முக்கியமாக தென்நிந்தியாவிலும்
கிடைப்பதாகச் சொல்கிரார்கள்.
சோளப்பொரி மாதிரி சற்றுப் பெறிய சைஸில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.நான் இங்கு இன்னமும்
விசாரிக்கவில்லை. ரொட்டி, பூரி போன்ற வட இந்திய
உணவுகளுடன் நன்றாக இருக்கிரது.
உருளை வதக்கல்
இதுவும் ஸாதாரண வதக்கல் தான். விசேஷமாக மாருதலில்லை.
5 ஸ்டார் ஹோட்டல் குறிப்பு இது சும்மா 4 பெறிய உருளைக் கிழங்கில்
கொஞ்சம் மாற்றி செய்தேன் நான். வறுப்பதற்குப் பதில் வதக்கினேன்
.அவ்வளவுதான். இதையும் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
உருளைக்கிழங்கு—சற்றுப் பெறிதாக 4
வெங்காயம்—பெறிசா 1
பூண்டு இதழ்—4
பச்சைமிளகாய்–1
இஞ்சிவிழுது—அரை டீஸ்பூன்
வெள்ளை எள்—அரை டீஸ்பூன்
கடுகு—கால் டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய், மஞ்சள், தனியாப் பொடி வகைகள்–வகைக்கு சிறிது
கறிவேப்பிலை—10 இலைகளுக்குமேல்.
ஒரு துண்டு எலுமிச்சை
செய்முறை.
கிழங்கை த் தண்ணீரில் வேகவைத்து உறித்துத் துண்டங்களாகச்
செய்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் கடுகு,எள்ளை வெடிக்கவிட்டு,நறுக்கிய
வெங்காயம்,பூண்டு மிளகாயை வதக்கி பொடிகளைச் சேர்த்து
இறக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உறித்த துண்டங்களைச்
உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
இறக்கிய வதக்கலில் முன்பாக வதக்கிய வெங்காயக் கலவையைச்
சேர்த்துக் கலந்து எலுமிச்சைச் சாறு கலந்து பாத்திரத்தில் மாற்றி
கரிவேப்பிலையை புதியதாக வறுத்துப்போட்டு டேபிளில் வைத்தால்
5 ஸ்டார் வதக்கல்தான்.
வேகவைத்த கிழங்கை எண்ணெயில் பொறித்து எடுப்பதற்குப்
பதிலாக நான் வதக்கி எடுத்து செய்திருக்கிறேன்.
அதுதான் வித்தியாஸம்.