Archive for பிப்ரவரி 28, 2012
நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.
கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடியது இந்தவகை. யாவரும் நெல்லை
மிஷினி்ல் கொடுத்து அரிசியாக செய்து வரும்போது எப்படியும் சிறிதளவாவது
அரிசி இடிந்து நொய்யாக அதாவது குருணையாக மாறும். அதைத் தனியாக
எடுத்துப் பல விதங்களில் உபயோகப் படுத்துவார்கள். புழுங்கலரிசியில் அதிகம்
நொய் விழுவதில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புளி உப்புமாவை
எழுத நினைத்தும் ஒன்று நொய் கிடைப்பதில்லை. இவ்விடம்
வரும்போது கவனத்தில் வருவதில்லை. இந்த ஸமயம் எல்லாம்
கூடி வந்தது. வகையாகவும் அமைந்தது. இது என்ன மஹாப்பெறிய
வஸ்துவென்று நினைக்கலாம். இங்கே சென்னையில் வீட்டைச் சுற்றி
பெயின்டிங் வேலை நடைபெற்றது. வேலையாட்கள் மிகவும் தூரத்திலிருந்து
வருவதால் அவர்களுக்கு டிபன், சாப்பாடு வீட்டிலேயே செய்து
கொடுத்தார்கள். இதில் நானும் இந்த உப்புமாவைச் செய்யும்படி சொல்லி
ஞாபகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உங்கள் யாவருடனும் அதைப்
பகிர்ந்து கொள்வதுதானே முக்கியக் காரணம். புளிப்பொங்கல் எனக்கு
ரொம்பவே பிடித்திருந்தது. கதையில்லை நிஜம் இது. சிறிய அளவில்
வேண்டியதைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—
அரிசி நொய்–2 கப்
புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்
மிளகாய்வற்றல்—3
வெந்தயம்–கால் டீஸ்பூன்
பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி
ருசிக்கு—உப்பு
தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்
கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்
சிறிது மஞ்சள்ப் பொடி
செய்முறை—
நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்
அரிசி நொய்யைக் களைந்து கல்லில்லாமல் அறித்தெடு்த்து தண்ணீரை
வடிக்கட்டவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து 2,3 முறை தண்ணீர்விட்டுக்
கறைத்துச் சக்கையை நீக்கவும்.
புளித்தண்ணீரை அளந்து விடவும்.மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து
ஒரு பங்கு நொய்யிற்கு 3 பங்கு தண்ணீரென மொத்தக் கணக்கில்
அளந்து விடவும்.
வாணலியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு,வெந்தயம்,மிளகாய்,
பருப்புகள், பெருங்காயம் இவைகளைத் தாளித்துகறிவேப்பிலை,பூண்டு,
வெங்காயத் துண்டுகள் இவைகளையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீருடன்
கூடிய நொய்யில் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து ரைஸ் குக்கரில் இவைகளை
மாற்றி குக்கரை ஆன் செய்யவும்.
பதமாக வெந்து முடிந்ததும், குக்கரைத் திறந்து கரண்டிக் காம்பினால்
வெந்த கலவையை நன்றாகக் கிளறி மூடவும்.
5 நிமிஷங்கள் கழித்துத் தயாரான புளிப் பொங்கலை சுடச்சுடப்
பகிர்ந்து உண்ண வேண்டியதுதான்.
புளி, காரம் இரண்டுமே அதிகப்படுத்தலாம். இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்க்கலாம். வேர்க்கடலை தாளிக்கலாம். ரிச்சாக தயாரிப்பதானால்
இருக்கவே இருக்கிறது முந்திரி.
பாஸ்மதி அரிசியின் நொய் ஆனால் 2 பங்கு ஜலமே போதும்.
இது ஸிம்பிள் தயாரிப்பு.
பொங்கலோ, உப்புமாவோ எந்த பெயர் வேண்டுமானாலும் நாம்
சொல்லலாம்.
4 கப் செய்ததை அப்படியே போட்டிருக்கேன். யார் வேண்டுமானாலும்
எடுத்துச் சாப்பிடலாம்.
.
சேர்த்துப்