புளியங்காய்ச் சட்னி
பிப்ரவரி 2, 2015 at 10:47 முப 5 பின்னூட்டங்கள்
சட்னி வகையில் புளியங்காயையும் அரைத்துச் சட்னி செய்யலாம்.
புளியங்காய் கிடைக்க வேண்டும். அதுதான் யோசனையே தவிர
செய்வது சுலபம்.
ஏராளமான ஸாமான்களும் தேவை இல்லை.
படத்தில் காட்டியமாதிரிதான் புளியங்காய் கிடைத்தது.
அதையே கணக்காகவும் வைத்துக்கொள்ளலாம்.
புளியங்காய்கள்—-8
மிளகாய்ப்பொடி—-ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்ப்பொடி—துளி
ருசிக்கு உப்பு
நல்லெண்ணெய்—-ஒரு டீஸ்பூன்
வெந்தயம்—கால் டீஸ்பூன்
கடுகும்,பெருங்காயமும் சிறிதளவு.
செய்முறை.
புளியங்காயை நன்றாக அலம்பிச் சுத்தம் செய்து ஈரம் போகும்படி
துடைத்து வைக்கவும்.
தோலையும் , காம்புகளையும், கோதுகளையும் நீக்கவும். காய் சற்று
முற்றியதாகத் தோன்றினால் விதைகளையும் நீக்கவேண்டும்.
சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
அரைப்பதற்கு முன்பான படமிது.அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் விட வேண்டாம். ஒரு கிண்ணத்தில் எடுக்கவும்.
அரைத்த விழுதில் மிளகாய்ப்பொடி,மஞ்சள்பொடி சேர்க்கவும்.
எண்ணெயைக் காயவைத்து கடுகு,வெந்தயம்,பெருங்காயம் தாளித்துக்
கொட்டவும்.
அப்படியே காரஸாரமாக இஷ்டமானவைகளுடன் சேர்த்துச்
சாப்பிடலாம்.
பூண்டு,வெங்காயம் வேண்டுவோர் அதனையும் வதக்கிச் சேர்த்து
அரைக்கலாம். ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
அல்லது அதிகமிருந்தால் எண்ணெயில் சுருளக் கிளறி இறக்கி வைத்துக்
கொள்ளலாம்.
காரம் விருப்பத்திற்கு தக்கபடி அதிகரிக்கவும்.
பிஞ்சு புளியங்காயானால் அப்படியே சுத்தம் செய்து துடைத்துக்,
காம்பைமட்டும் நீக்கிவிட்டு துண்டங்களாக்கி உப்பு சேர்த்து, மிக்ஸியில்
அரைத்து எடுத்து வேண்டிய மிளகாய்ப்பொடி,மஞ்சள்ப்பொடி சேர்த்துக்
எண்ணெய் அதிகம் விட்டு , கடுகு,வெந்தயம்,பெருங்காயம் தாளித்துக்
கொட்டிக் கலந்து எடுத்துச் சேமிக்க வேண்டியதுதான்.
எண்ணிக்கை அதிகம் புளியங்காய்கள் வைக்கலாம்.
இது சற்று கெட்டியாக வரும். அதிக நாட்கள் இருக்கும்.
கொட்டை,கோது, தோல் என்று எதுவும் தனியாக எடுக்க வேண்டிய
அவசியமிராது. எல்லாம் புளிப்பான சாப்பிடத் தக்கதாக இருக்கும்.
இதன் பெயர் புளியங்காய்த் தொக்கு.
சட்னிக்கும்,தொக்கிற்கும் இதுதான் வித்தியாஸம்.
என் பெண்ணைக்கொண்டு கிடைத்ததில் இந்த சட்னி செய்து
படம் எடுத்து அனுப்பிய குறிப்பிது.
புளியங்காயிற்கு இங்கு எங்கு போவது. அதிலும் நான்?
Entry filed under: சட்னி வகைகள். Tags: எண்ணெய், புளியங்காய், மிளகாய்ப்பொடி.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar | 9:54 பிப இல் பிப்ரவரி 2, 2015
காமாக்ஷிமா,
கடைசிப்படம் நாவில் எச்சில் ஊற வைத்துவிட்டது.
இங்கும் புளியங்காய் & புளியம்பழம் தோலுடன் கிடைக்கிறது. விலை ஜாஸ்தி. இந்தக் காயை வாங்கி என்ன செய்வார்கள் என யோசிப்பதுண்டு. இப்போதானே தெரியுது தொக்கு வைப்பார்கள் என.
சின்ன வயசுல புளியங்காயை சும்மா மரமரனு மென்று தின்னுடுவோம். அதிலும் செங்காய் என்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். உங்களுக்குத் தெரியாதுன்னு கதை அடிச்சிகிட்டிருக்கேன் ஹா ஹா ஹா. அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 8:39 முப இல் பிப்ரவரி 5, 2015
அமெரிக்காவில் புளியம் பழம்,காய் எல்லாம் கிடைக்ககிறது. கூடுதலான தகவல். யார் கிடைத்து வாங்கிச் செய்யப் போகிரார்கள் என நினைத்தேன்.
வேண்டுமானால் எங்கும் கிடைக்கலாம். உன் புளியங்காய் நினைவு ஒன்றே இப்பதிவிற்கு போதும்.
பூ,காய்,பழம், இலை என புளிப்புச் சுவை யாவுமே தருவதால் எதிலும் சேர்க்க முடியும். புளி இல்லாத தமிழ்நாடு இல்லை.
பெரிய சாலை ஓரங்களின் இரண்டு புறமும் தமிழ்நாட்டில் புளிய மரங்கள் அணிவகுப்புதான். நன்றி அன்புடன்
3.
adhi venkat | 2:47 பிப இல் பிப்ரவரி 6, 2015
புளியங்காய் சட்னி வித்தியாசமாக இருக்கேம்மா. புளிப்பு எனக்கு எப்போதுமே பிடிக்கும். கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
4.
chollukireen | 10:40 முப இல் பிப்ரவரி 7, 2015
எனக்குக்கூட புளிப்பு இல்லாமல் சாப்பிடவே பிடிக்காது. ஒரு நாரத்தங்காய் ஊறுகாய்த் துண்டாவது வேண்டும்.
கிடைத்தால் செய்துபார். அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 9:42 முப இல் மார்ச் 2, 2015
புளிப்பான விறுவிறுப்பான பதிவுக்கு நன்றிகள்.
புளியங்காய்கள் மரத்திலிருந்து பறித்து நிறையவே சாப்பிட்டுள்ளேன். 🙂