குதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.
ஜூலை 8, 2015 at 9:18 முப 16 பின்னூட்டங்கள்
விண்டுப் பார்த்து சுளைசுளையாக இருக்கா? ஸரியான பதந்தான். அதுவும் கூட இருக்கிறது.
எல்லா இடத்திலும் இப்போது சிறுதானியங்களின் உபயோகம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. எல்லாவகை சிறுதானியங்களும்,மேலும் அதிக ஸாமான்களை/யும்க கொண்டு கஞ்சி மாவு தயாரிப்பது என்பது யாவர் வீட்டிலும்,பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அளவுகளில் சற்றேறக்குறைய வித்தியாஸங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையாக யாவரும் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள். எங்கள் பெண்ணின் வீட்டிலும் இது மிகவும் பிரபலம். வயதானவர்கள், அதிகம் பொருப்புகளை வகிக்கும் நடுத்தர வயதினர் என யாவருக்கும் நல்ல,ஸத்தையும்,ஆரோக்யத்தையும் அளிக்கிறது.
கரண்டியால் அளந்து தானியங்கள் போடுவதில்லை. கடையிலிருந்து பாக்கெட்.பாக்கெட்டாக வாங்கிவந்து வறுத்து அரைப்பதுதான். அவியலின் காய்கள் போல , இதில் இல்லாத தானியங்களே கிடையாது. பார்க்காத சிறுதானியங்களைக்கூட ,சென்னையில் கிடைப்பதை வாங்கி வந்ததைப் பார்த்த போதுதான் எனக்கும் சில தானியங்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்தது. சொன்னால் இவ்வளவா என்று மலைத்துப் போகும் அளவிற்கு தானியங்கள். நானும் அந்த ஸத்து மாவின் சக்தியை அரிந்துகொண்டு சாப்பிட்டு வருகிறேன்.. மாவு போஸ்டில் வந்து விடுகிரது. அந்தப்பெயர்களின் பட்டியலைப் பாருங்கள். பல படங்களையும் பாருங்கள்.
தினை, சாமை மேல்வரிசை, கீழ் வரிசை வரகரிசி, கொள்ளு அடுத்து

இன்னும் சில படம் 2மேல்வரிசை–கேழ்வரகு, கம்பு அடுத்து ஜெவ்வரிசி, சம்பா கோதுமை,நடுவில் பார்லி, இன்னும் படத்தில் இல்லாதவைகள் மக்காச் சோளம்,பொட்டுக்கடலை,புழுங்கலரிசி,பாதாம், குதிரைவாலி அரிசி, ஏலக்காய், போதுமா ஸாமான்.?
நல்ல சுத்தமாகக் கிடைக்கும் ஸாமான்களை வாங்கி அப்படியே சற்று வாஸனை வருமளவிற்கு வறுத்து, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் கஞ்சிமாவு ரெடி.
இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்து, இரண்டுகப் நல்ல தண்ணீரில் கரைத்து, மேலும் தண்ணீருடன்அடுப்பில் வைத்துக் கிளறினால் வேண்டிய அளவிற்குத் திக்காகவோ,நீர்க்கவோ கஞ்சி காய்ச்ச முடியும்,பால்,சர்க்கரை,தேன் எது வேண்டுமோ அதைச் சேர்த்துப் பருகவேண்டியதுதான்.
கஞ்சி கொதிக்க ஆரம்பித்தபின்தீயைமட்டுப்படுத்தி ஐந்து நிமிஷம் கிளறினால்ப் போதும். நல்ல ஸத்துள்ள கஞ்சி. வாஸனைக்கு ஏலக்காயும், சக்திக்குத் தகுந்தாற்போல பாதாமும் போடலாம். கேழ்வரகு மெயினாக ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக் கொண்டு மற்றவைகளை குறைத்துப் போடலாம்.
ஸரியான அளவு பின்னால் எழுதுகிறேன். குதிரைவாலி அப்பம் தலைப்பு அதைப் பார்க்கலாம்.
சென்னையிலிருந்து வரும்போதே அரைகிலோ குதிரைவாலி அரிசியும் ஃப்லைட்டில் கூட வந்து விட்டது.வேளை வந்தது இப்போதுதான். கிச்சடியும்,பச்சடியும் செய்தேன்..ஒருகப் அரிசியில் கறிகாய்கள் சேர்த்து கிச்சடி,கூடவே தயிர்ப் பச்சடி. நல்ல டேஸ்ட்தான். அட திரும்பவும் எங்கோ போகிறது குதிரைவாலி.. அப்பம்தான் நான் சொல்ல வந்தது. வாங்க அப்பம் செய்யலாம் அப்பம்,குதிக்க, குழக்கட்டை கூத்தாட என்று வசனம் உண்டு. மோமோவாகக் கொழுக்கட்டை ஆயிற்று. இப்போது எண்ணெயில் அப்பத்தைக் குதிக்க விடுவோம். வேண்டியவைகள் நான் செய்த வகையில்
குதிரைவாலி அரிசி–ஒருகப்
உளுத்தம் பருப்பு—கால்கப்,எண்ணி பத்து வெந்தயம்.
தேங்காய்த் துருவல்—-2 டேபிள்ஸ்பூன்.
அப்பம் வேக வைக்க வேண்டிய தேவையான எண்ணெய்.
உப்பு அப்பத்திற்கு பச்சைமிளகாய்–1 , சீரகம்துளி,பெருங்காயம் ஒரு துளி,உப்பு,கொத்தமல்லி இலை சிறிது.
செய்முறை—கு. வாலி அரிசி,பருப்பு,வெந்தயம் மூன்றையும் நன்றாக ஊறவைத்து மிக்ஸியில்,தேங்காயுடன் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைக்கவும்.,தோசைமாவு பதத்தில் இருக்கலாம்.
இரண்டு டேபிள்ஸ்பூன் மைதாவும் சேர்த்துக் கரைக்கவும்.
பாதி மாவைத் தனியாக எடுத்து அதில் துளி உப்பு,பொடியாகநறுக்கிய மிளகாய்,சீரகம்,பெருங்காயம்,கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும். மிகுதி பாதி மாவில் வெல்லமோ,நாட்டுச் சக்கரையோ, சர்க்கரையோ நான்குஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கரைக்கவும். ஏலப்பொடி துளி போடவும்.
அப்பக்காரல் தேடினால் எனக்குக் கிடைக்கவில்லை. சின்ன வாணலியிலேயே எண்ணெயைக் காய வைத்து சின்னக்கரண்டியால் ஒவ்வொன்றாக அப்பத்தை வார்த்து,வேக வைத்துத் திருப்பி எடுத்தேன். மொத்தமே படத்தில் இருக்கும் அளவுதான். வென்தயம் போட்டால் அப்பம் சுளைசுளையாக வரும். வீட்டில் யாரும் இல்லை. முதல்தரம் இந்த அரிசி அப்பம் செய்தேன்.. சக்கரைதான் கிடைத்தது. அதான் கலர் குறைவு.
வெல்ல அப்பத்தில் பெருஞ்சீரகம் கூட போடுபவர்களும் உண்டு, இதுவும் ஒரு டிப்ஸ்தான். முதலில் செய்தது கிச்சடிதான். அதையும் அப்புறம் போட்டு விடுகிறேன். எப்படி இருக்கு? காமா,சோமா இல்லை நன்றாக இருந்ததென்று சொன்னார்கள். பார்ப்போம்,
அப்பம் வார்க்கும் அப்பக்காரலில் செய்தால் ஒரே அளவாகக் குண்டு குண்டாக வரும்..
Entry filed under: இனிப்பு வகைகள். Tags: குதிரைவாலி.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 12:59 பிப இல் ஜூலை 8, 2015
நாங்களும் செய்து பார்க்கிறோம்… நன்றி…
2.
chollukireen | 8:13 முப இல் ஜூலை 10, 2015
கொஞ்சமாகப் பண்ணியது. சுடச்சுடவே காலியாகிவிட்டது. செய்யுங்கள் ருசியுங்கள். அன்புடன்
3.
ஸ்ரீராம் | 1:48 பிப இல் ஜூலை 8, 2015
இதுவரை கேள்விப்பட்டதுமில்லை, சாப்பிட்டதுமில்லை. படங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன அம்மா.
4.
chollukireen | 8:20 முப இல் ஜூலை 10, 2015
செய்து,சாப்பிட்டு,காமிராவில் அடக்கி,கவர்ச்சியாகப் படம் என்றால், பரவாயில்லையே! குதிரைவாலி அரிசி சென்னை சரவணாஸ்டோர் உபயம். நானும் எப்படி என்று பார்க்கத்தான் கேட்டேன். கூடவே வந்து விட்டது. நன்றி ஸ்ரீராம் அவர்களே.
5.
chitrasundar | 12:41 முப இல் ஜூலை 9, 2015
காமாஷிமா,
ம் ம் சிறுதானிய ரெசிபியா ! சூப்பர். ஊரில் இருந்தபோது சத்துமாவு அரைச்சிருக்கேன். அப்பம் இதுவரை செய்ததில்லை. சுளைசுளையா வர்றதுக்கான டிப்ஸை நினைவில் வைத்துக்கொள்கிறேன். அப்பத்தை எண்ணெயில் குதிக்க 🙂 வைத்து கொண்டு வந்து கொடுத்ததற்கு நன்றிமா. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 8:28 முப இல் ஜூலை 10, 2015
சிலஸமயம் புழுங்கலரிசியுடன் வெந்தயத்தை அரைத்துவிட்டு, உளுந்து மாவு சிறிது சேர்த்து தோசை வார்ப்பதுண்டு. அந்த புழுங்கலரிசி வெந்தயமாவில் வெல்லம் போட்டு அப்பம் எப்போதும் எங்கள் பாட்டி செய்வார்கள். சுளைசுளையாக அவர்களின் வர்ணிப்பு இது.நீயும் ரஸித்து இருக்கிறாய். நன்றி பெண்ணே. அன்புடன்
7.
Geetha Sambasivam | 4:59 முப இல் ஜூலை 9, 2015
அப்பம் நிறையச் செய்தாலும் குதிரைவாலி அரிசியில் செய்ததில்லை. செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.
8.
chollukireen | 8:30 முப இல் ஜூலை 10, 2015
செய்து பார்த்தும் முடிந்தபோது எப்படி இருந்தது என்று எழுதுங்கள். நன்றி. அன்புடன்
9.
Geetha Sambasivam | 1:09 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
நான் ஏற்கெனவே இதைப்பார்த்திருக்கேன். மறந்திருக்கேன். குதிரைவாலி அரிசியில் பொங்கல் செய்தேன். நன்றாகவே இருந்தது. இந்தக் குழி அப்பம் இன்னும் செய்து பார்க்கலை. செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன். இங்கே குருணையாகத் தான் கிடைக்கிறது. முழு அரிசியாக இல்லை. 😦
10.
chollukireen | 1:44 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
குருணை என்று இல்லை. அரிசியே நம்முடைய அரிசி மாதிரி இது ஒரு வகை என்று நினைத்தேன். வாங்கிப்பார்த்தால் வரகு ,சாமை,மாதிரி இதுவும் இருக்கு.
பேர்தான் குதிரைவாலி அரிசி. பார்க்க அரிசி நொய்தான். கொஞ்சம் முன்னே பின்னே வித்தியாஸம் இருக்கு. நானும் முதல் முறை பார்த்தேன். பெண் வாங்கிக் கொடுத்தாள். ருசியில் கூட வேறு தானியம் என்ற சுவை வித்தியாஸமும் தெரியவில்லை. புதுசு புதுசா ஜமாயுங்கள்.அன்புடன்
11.
chollukireen | 11:26 முப இல் ஓகஸ்ட் 8, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
சிறுதானியவகையின் குழி அப்பம் இது. நான் எழுதியபோது இது புதுவகை. செய்து பாருங்கள் அன்புடன்
12.
ஸ்ரீராம் | 2:30 பிப இல் ஓகஸ்ட் 8, 2022
முன்னரும் படித்துக் கமெண்ட்டியிருக்கிறேன்! குதிரைவாலியில் நாங்கள் காஞ்சி மட்டும் செய்து சாப்பிட்டிருக்கிறோம்!
13.
chollukireen | 11:29 முப இல் ஓகஸ்ட் 11, 2022
இது மீள் பதிவுதானே. நன்றி. அன்புடன்
14.
chollukireen | 11:32 முப இல் ஓகஸ்ட் 11, 2022
மிகவும் நன்றி. யாவருக்கும் எல்லாமே பிடிக்காது. மீள் பதிவுதான் இது. அன்புடன்
15.
நெல்லைத்தமிழன் | 11:33 முப இல் ஓகஸ்ட் 9, 2022
நன்றாக வந்திருக்கிறது. படங்களும் அழகு
எனக்கு குழி அப்பம் (பணியாரம்) பிடிப்பதில்லை. உன்னி அப்பம் என்று சொல்கின்ற இனிப்பு குழி அப்பம் முன்பு பிடித்தது. அதற்கு விடும் எண்ணெயைப் பார்த்த பிறகு அதுவும் பிடிக்காமல் போய்விட்டது.
16.
chollukireen | 11:34 முப இல் ஓகஸ்ட் 11, 2022
மிக்க நன்றி. அன்புடன்