Archive for ஓகஸ்ட், 2016

தொட்டில்—13

முகூர்த்தம் பாத்தாச்சு. வெளியில் சொல்லவில்லை. ராஜுவின் சித்திதானே ஸூத்ரதாரி.
பின்னல் தொட்டில்

முகூர்த்தம் பார்த்த தினத்தில்தான் குளத்தங்கரையிலுள்ள வேம்பிற்கும்,அரசிற்கும் கல்யாணம். மரங்கள்தான் அவைகள். வனபோஜனம். ஊரே கோலாகலமாக இருக்கும். குளக்கரையில் விவாகம் முடிந்த பின்னர் ஊரில் பெரிய வீட்டில் சாப்பாடு. வைதீகர்கள் அந்த வரும்படியில் இருப்பார்களே!

இம்மாதிரி நல்ல காரியங்கள் பார்த்துப் பார்த்துச் செய்யும் பாட்டி ஒருவர் இருந்தார்.
அவரிடமே விஷயங்கள் சொன்ன போது, இதுக்கென்ன விசாரம்? முதல் முகூர்த்தம் இதைப் பண்ணிவிட்டு மாலையும் கழுத்துமா அவர்களையும் அழைத்துக் கொண்டு போனால் போயிற்று. மீதி நாள் பூரா இருக்கே. எனக்கும் கொஞ்சம் நல்ல காரியம் செஞ்சோம் என்ற திருப்தியும் கிடைக்கும்.

எல்லா விஷயங்களும்தான் நீ சொல்லி விட்டாய். கார்த்தாலே ஏதாவது காபிடிபன் போரும். சாப்பாடெல்லாம் நான்தான் செய்யறேனே. அப்புறம்அவாளுக்கு என்ன செய்ய இஷ்டமோ தாராளமாக செய்து கொள்ளுங்கோ. மறுநாள்வரை  ஜமாய்க்கலாமே.

செலவு செய்ய முடியாத கஷ்டமெல்லாம் இல்லை அவாளுக்கு.
ஸரி எங்காத்திலேயே பந்தல்போட்டு நான் எல்லாம் செய்யறேன்.

மாப்பிள்ளை ராஜு போய் அவன் அண்ணாவிடம் சொன்னான். ஆகாசத்திற்கும்,பூமிக்குமாக குதிக்காத குறைதான்.
பெண் ஒண்ணு இருக்கு,  இதெல்லாம் அவசியமா? என்ன இருக்கோ எல்லாவற்றையும் அந்தப் பெண்மேலே எழுதி வைச்சுட்டு அப்புறம் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ. இவ்விடம் வராதே. என்றனராம்.

எழுதி வைத்திருப்பதும்,இதுவரை நான் கொடுத்திருப்பதும் உங்களிடம் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.இப்போதும் என்னால் முடிந்ததை நான் கொடுப்பேன்.

வருவதும்,வராததும் உங்கள் இஷ்டம் என்று சொல்லி வந்து விட்டான். ஒரே சாபம்தான். கூடவும் நான்கு வேண்டிய மனிதர்களை அழைத்துப் போயிருந்தான். சித்திக்கும் சேர்ந்து அர்ச்சனை. காச்சு மூச்சு  கத்தல்தானாம்.

இங்கே பெண் வீட்டிலும் அவளுடைய அப்பாவிற்கு பாட்டிக்கிழவி எவ்வளவு காலம் இருந்து விடப் போகிறாள்? கிழவி போன பிறகு ஸொத்தில் உன் பெண்ணையும் கையெழுத்துப் போடச் சொல்லி உனக்கு ஆதாயமாகவே உன் பெண் இருப்பாள் என்ற உறுதி மொழியும் கொடுத்து, வாயடைத்து வைத்தனர்

. குடிப்பான் போல இருக்கு. அதான் அவனுக்கு நியாய அநியாயம் எதுவும் தெரியலே. பிசாசு புளிய மரத்திலே ஏறாது இருக்கணும். பாட்டிக்கு பிற்காலம் ஸொத்து நம்முது என்ற என்ற அளவில் ஓய்ந்தது .
அப்பாவிற்கு உறுதி மொழி கொடுக்கும்படியான நிலை

பரோபகாரப் பாட்டியும், சித்தியும் ஏர்பாடுகளைச் செய்தனர். ஊர் பூராவிற்குமே அழைப்புதானே. முக்கியமான உறவுக்காரர்கள் மட்டிலும்   கல்யாணத்திற்கு வந்தனர்.  கல்யாணம் நன்கு முடிந்தது.,

அரசு வேம்பு கல்யாணத்தில்  சாவகாசமாக  அவர்களிடம்  எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.என்று   யாவரும் அலங்காரங்களுடன்   சீர் சுமந்துகொண்டு போக பாட்டி வீட்டில் கூடி விட்டனர். வைதீகர்கள்,லௌகீகர்கள் உட்பட.

கல்யாணிக்கும் அவள் பாட்டி எதுவும் குறை வைக்கவில்லை.    கொட்டுமேளம் கொட்ட ராஜு,கல்யாணி தம்பதிகளின் ஊர்வலம்போல   சீர்வரிசைகளுடனும், பூஜா திரவியங்களுடனும்   எல்லோரும்   குளக்கரை நோக்கிப்போனது அவ்வளவு கண்கொள்ளாக் காட்சிதான் என்று தெரிந்தவர்கள்  சொல்வார்கள்.

ஸம்ரதாய பூஜைகள் நடந்து    கல்யாணம்  வேம்பு,அரசுக்கு முடிந்து  ,யாவரும் வீடு திரும்பும்போது யாவர் வீட்டிலும்  ஆரத்திசுற்றி திருஷ்டி கழித்து,   சாப்பாடுதான் எப்படிப்பட்டது,   வேதியர்கள்   திண்ணையில் உட்கார்ந்து பஞ்ஜாதி ஓத,   சந்தனப்பூச்சும்,பனை விசிறியும் யாவரின் கையில்,   ஸம்பாவனைகளும்,  யாவருக்கும்   தாம்பூலமுமாக ஒரு கோலாகலத் திருமணமுமாக முடிந்தது.

பின்னிப் பிணைந்ததாக  அரசங்கன்றையும்   வேப்பங்கன்றையும் வளர்த்து   ஏதோ  அரச இலை இவ்வளவு  என்று தோராயமாக ஒரு காலம் கணக்கிட்டு, அவை இரண்டிற்கும் முறையே பூணூல் கல்யாணம் என்று செய்வார்கள். பிறகுதான் அந்த மரம் பூஜைக்குரியதாகக் கணக்கிடப்பட்டு,அரசப் பிரதக்ஷிணம் முதலானது செய்யவும், நாகப் பிரதிஷ்டை முதலானது செய்து   வழிபடவும் உகந்ததாகக்  கருதப்படும். எனக்கு ஞாபகத்தில் இவ்வளவுதான் இருக்கிறது.

கல்யாணி சில மாதங்கள்  சித்தியுடன் இருக்கட்டும். பிறகு மாப்பிள்ளையும் இதே ஊரில் வேலை கிடைத்து வந்து விட்டால்,  என்னுடனே வந்து தங்கட்டும். அவளுக்கில்லாதது  என்ன?   நான் ஒருவள்  இவ்வளவு பெரிய  வீட்டில் என்ன செய்வது?

இப்படி,அப்படி அண்டர் கிரவுண்ட் ஏற்பாடுகளுடன் கல்யாணி புக்ககம் போனாள். அடுத்த இரண்டொரு மாதத்தில் ஜெயாவின் கல்யாணம் என்று தெரிந்து, ராஜு மட்டும் தானாகவே சென்று, முடிந்த  அளவு பணம் கொடுத்து விட்டு ஏச்சு பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான்.

நல்ல வேளை ராஜுவிற்கும் ஊரிலேயே வேலை கிடைத்து விட்டது. மாதங்கள் ஓடியது. கல்யாணியை மசக்கைக்காக பாட்டி வீட்டிற்கு வந்தாள். சித்தி இங்கும்,அங்குமாக இருக்கட்டும். பிரஸவத்திற்குப் பின் தனிக் குடித்தனம் வைக்கலாம் என்று பேசிக் கொண்டனர். கொள்ளுப்பேரன்   என்றால் மகிழ்ச்சி

நடைமுறைகளெல்லாம் அவ்வப்போது குளக்கரையில்  வேண்டியவர்களால் அலசப்படுவது கிராம வழக்கம்.. வம்பென்று நினைப்பதில்லை. அன்றும் அப்படியே. கல்யாணிக்கு எல்லாம் நன்றாக ஆகிவிட்டது. அவ அம்மாவுக்குதான் பிடுங்கல் ஜாஸ்தியாப் போச்சு. ராஜு அப்படித் தாங்குகிறான்.பாவம் அவம்மா

எவ்வளவு காலம் உங்கம்மா இருப்பாள்? எவ்வளவு காலம் இருந்தா என்ன நாம்தானே  வரும்படியை அனுபவிக்கிறோம் என்று சொல்லப்போக, அதிலிருந்து  சண்டையும் சாடியும் பதில் சொன்னால் அமக்களம்.  அவளுக்கு உடம்பு நன்னா இல்லே. அடிக்கடி தலை வலிவந்து துடித்துப் போகிறாள்.   படபடப்பு. ஊரிலேந்து வந்திருக்காள். நிலபுலன்களை விற்க ஏற்பாடு செய் என்று சொல்கிறானாம்.

யார் வாங்குவா இந்த ஸொத்தை?  பாவம் மில்லையா மாமி.இந்த பிளட் பிரஷர் எல்லாம் யாருக்கும் தெரியாது. டாக்டரிடம் போனால்தானே. அவரும் பெயர் சொல்லி விளக்கும் காலமில்லை அது. ரொம்பப் படுத்தரான். கலங்கிப் போயிருக்கா. கல்யாணிக்கு  பிரஸவம்  பார்க்க வந்திருக்காள்.

பேரன் பிறந்து ஸந்தோஷத்தைக் கொஞ்ஜம் அனுபவித்ததுடன்ஸரி. அன்னிக்கும் ஏதோ வாக்குவாதம். அப்படியே கீழே உட்கார்ந்ததுடன் ஸரி. மகராஜி என்ற பட்டத்துடன் போய்ட்டா. என்ன பண்றது.?  மன்னிதான் உடைஞ்சு போயிட்டா. இதெல்லாம் முடிந்து அவனுக்கு இங்கே ஒண்ணும் இல்லே என்று ஆகிவிட்டது.

இப்போ புது விஷயம் பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைதானே. அவனும் கல்யாணம் பண்ணிண்டு ஒரு பிள்ளையும் பிறந்தாச்சு.  அந்த குழந்தைதான் வாரிசு என்று சொல்லி வந்திருக்கிறானாம்.

ஊரில் எல்லோருமாக எடுத்துச்சொல்லி அவனுக்கு எந்த பாத்யதையும் இல்லை என்று சொல்லி ,கையில் சிறிது கணிசமாகப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம் இப்படி கதை மாறியது.

காலஓட்டத்தில் பாட்டிக்காக  விரத ஸுகங்களும் நடந்தது.பாட்டியும் நல்ல கதி அடைந்தாள். கல்யாணிக்கு எல்லாம் ஆண் குழந்தைகள். பெண்ணும் வரபோக இருக்கிராள்.    தொட்டில்கள் அழகாக ஆடுகின்றன. குடும்பத்தை கௌரவமாக வகிக்கும்   கல்யாணி, மூத்தாள்பெண், சித்தி என எல்லா குடும்பங்களிலும்  விதவிதமான தொட்டில்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன. வாரிசு என்னவோ கல்யாணிதான். இப்படியும் தொட்டில்கள்.
மரத்தொட்டில்
படம் உதவி கூகல்

ஓகஸ்ட் 24, 2016 at 8:52 முப 9 பின்னூட்டங்கள்

தொட்டில் 12

தொட்டில் 12

வீட்டுக்குள்ள நுழைந்தப்புறம் எல்லாம் நமக்குத் தெரிந்தது ஓர்ப்படிக்கும் தெரியும். புதுசா சொல்ல என்ன இருக்கு? நீலாவையே போய்ப்பார்த்து மீதி ஸமாசாரங்களையும் கேட்டு எதை, எப்படிச் சொல்லலாம் என்று அவளையே யோசித்துச் சொல்லச் சொல்லணும்.

என்ன பாட்டி நீவேறெ எனக்குப் மாப்பிள்ளை பார்க்கிறயா என்று கேட்டு விடும்அந்தப் பெண்.
நீலாவாத்து சாப்பாடெல்லாம் ஆகட்டும். யோசனை முடிந்து ஈரப்புடவையை ஓர்ப்படியிடம் கொண்டு கொடுத்து விட்டு மத்தியானமா வரேன். நீலா என்னவோ சொன்னா. ஸரியா கேட்டுண்டு வரேன். நீயும் தினம் கேக்கரே மன்னி.
ஸரி ஏதாவது நல்லதா வரணும்.

என்ன ஒரு வத்தக் குழம்பும்,சுட்டஅப்ளாமும். இரண்டுநாளா தோசை ராத்தரியில். மாவு புளிச்சு வழியறது. ஊறுகாமிளகாயும்,கடுகு பெருங்காயம் தாளிச்சுக்கொட்டி வாணலியில் இரட்டை விளிம்பு தோசையாக இராத்திரி இரண்டு வார்த்தால் மாவும் காலியாகும். எண்ணெய் நிறைய விட்டு வார்த்தால் தானே ருசி கொடுத்துவிடும்.
இரவு ஆகாரத்தையும் கற்பனையில் செய்தாகிவிட்டது.

ifஊரில் அக்ரஹாரம்
நன்றி கூகல். படம் ஒரு மாதிரிக்கு.

பானுவின் புக்ககம் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தது ஒரு காலத்தில். அவள் மாமனார் இராமாயணம்,பாரதம், பாகவதம் என்று கதை வாசிப்பவர். மனைவி இல்லை. பிள்ளைகள் மூன்று பேர்.

அக்கால முறைப்படி காலாகாலத்தில் பிள்ளகளுக்குக் கல்யாணமாகி ஒரே கூட்டுக் குடும்பம். கடைசி பிள்ளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மற்றவர்களுக்கு ஸந்தானம் ஏற்படவில்லை. நாகப்பிரதிஷ்டை,ராமேசுவரம்போய் திலஹோமம், சாந்திகள் எல்லாம் காலா காலத்திலேயே செய்து விட்டனர். அந்தகாலத்து அரசப்ரதக்ஷிணம் என்று எல்லாம் வரிசைக்கிரமாக நடந்தது.
மனதில் அசைபோட்டுக்கொண்டு நீலாவாத்திற்குப் போனால் அவளும் மிகுதியைக் கூட சேர்த்து அசைபோட்டாள்.

முன்னாள் கதைகளென்றால் மருத்துவ வசதி குறைவு,அகால மரணம் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை . இவைகளைப் படிப்பவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். சின்ன நாட்டுப்பெண் திடீரேன்ற ஜுரத்தில் போய்விட்டாள்.

ஜெயா எல்லோருக்கும் அருமைப் பெண் ஆகிவிட்டாள். பெற்றவன் மறு கல்யாணம் வேண்டாமென்ற விரக்தி.
என்பெண்,உன் பெண் என்று போட்டா போட்டியில் ஓரகத்திகளுக்குள் சண்டை.
நமக்கென்று ஏதாவது செய்து கொள்ள வேண்டுமே தவிர இவளுடன் இருக்க முடியாது என்று பெரியவள் தனிக்குடும்பம் போய்விட்டாள்.

பெரியவர் அதான் குடும்பத்தலைவர் பேத்திக்கும் பங்கு கொடுத்து பத்திரம் எழுதிவிட்டுப் போய்ச் சேர்ந்து விட்டார். சொத்து விஷயமாக கோர்ட் கேஸ் என்று அண்ணந்தம்பிக்குள் மனஸ்தாபம்.

பெண் குழந்தை நடு பிள்ளையின் பராமரிப்பில் இருந்து ஒட்டுதலும் ஏற்பட்டு விட்டது. விவரமறிந்த வயதாகவும் ஆகிவிட்டது. பெண் குழந்தைக்கு பராமரிப்பில் பெண் துணையும் அவசியம். ஸமாதானமாகப் போங்கள் உரிமை  உங்களுக்குத்தான். என்று ஜட்ஜ் தீர்ப்பு கூறிவிட்டார்.

பிரிந்து வாழ்ந்தாகி விட்டது.  பெண்ணையும் ஒட்டவிடவில்லை. அவர்களுடன் சேர்ந்து இருக்கவும்  முடியவில்லை.  தனக்கென்று எதுவும்  ஒரு பைஸா கூட வைக்கவும் முடியவில்லை.

இது யார்,யார் யாருக்கு என்னென்ன தூண்டி விடுவார்களோ? எப்படி இக்குடும்பம் இம்மாதிரி ஆகியதோ? எல்லாம் புதிராக இருந்தது.   இதெல்லாம் அறிந்த விஷயம். இப்போதைய நிலவரம் என்ன அதைச்சொல்லு. அதுதானே முக்கியம்.

அவனுடைய சித்திதான் கூப்பிட்டிருந்தாள் போயிருந்தேன்.   அவனைக் கல்யாணம் செஞ்சுக்கோ. என்ன வயஸாயிடுத்து உனக்கு நாப்பது இருக்கும். இப்படி தனியாக அலைகிராயே! உன் பெண்ணிற்கும்  அவர்கள் வரன் பார்த்திருக்கிரார்கள். உன்னிடம் சொல்லவில்லை.
எனக்கு  எதற்கு கல்யாணம் என்று   திட்டுவார்கள் என்றான்.  போக்கு வரத்தே இல்லை. பெரியவளும் ஏதோ தூர உறவில் ஸ்வீகாரத்திற்கு ஏற்பாடாம்.

நான் சொன்னேன் உனக்குன்னு குடும்பம் வேணும். வேலையில் இருக்கே. ஸம்பாதிக்கிறே! அவனுக்கும் மனதில் தோன்ற ஆரம்பித்து இருக்கு. நான் பார்க்கிறேன் என்றேன். ஹூம் கொட்டி இருக்கிறான்.
பொருப்பான பொண்ணா இருந்தா போரும். ஒண்ணும் பண்ண வேண்டாம். மீதியை நான் பாத்துக்கறேன் என்றேன்.

சித்தியும் வயதானவள்தான். ஸ்டேட்மென்ட் கொடுக்க ஒரு ஆஸாமி, வேண்டுமே. யாரையும் கூப்பிடவேண்டாம். அவன் அண்ணாமார்களுக்கு ஒரு மரியாதையாக சொன்னால் போதும் என்ற அளவிற்கு சொல்லி வைத்திருக்கேன். என்றார்.

நீங்க ஊருக்கு போவதற்கு முன் உங்க மன்னியைக் கேட்டு விவரம் சொல்லுங்கள். நானும் போய்ச் சொல்றேன். அந்தப் பெண்ணிற்கும் நான் போய் ஸம்மதமா என்று கேட்கிறேன்.
அவன் ஒன்றும் ஊருக்குப் புதியவனில்லை. எல்லாருமே தூரத்து உறவாகத்தான் இருக்கும். ஸரி நான் போய் விசாரிக்கிறேன்.
மாமி தேங்காத் துகையல் அரைச்சேன் நிறைய இருக்கு . கொஞ்சம் எடுத்துண்டு போங்கோ. சின்ன கிண்ணத்தில் துண்டு இலையைப் போட்டு மூடித் துகையல் தூது போகிறது.

மன்னிக்கு ஸமாசாரம் அஞ்ஜலாகிறது. மாப்பிள்ளை ,பெண்ணை வரச்சொல்லி ஆளனுப்புகிராள். அவர்களும் வந்தார்கள்.
நீலா பெண்ணோடு பேசி மனதை ஆராய்கிராள். பளிச்சென்று சொல்லாவிட்டாலும் இந்த அடைந்து கிடக்கும் தளையிலிருந்து, வெளியே போனால் போதும் என்ற மனநிலை பளிச்சிட்டது. ஆனாலும் அங்கும் உறவுகள் தொல்லை கொடுக்காமல் இருப்பார்களா என்பதை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள் என்ற வார்த்தையே பதிலாக வந்தது. பெண் ,பிள்ளை பார்க்க என்ற ஸம்பிரதாயத்திற்கு அவசியமில்லை. எல்லோரும் தெரிந்தவர்களே!

இக்காலத்தில் பெண்கள் பிள்ளைக்கு லக்கேஜ் இருக்கா என்று விஜாரிக்கிறார்களாம். அதாவது அப்பா,அம்மா கூட இருப்பார்களா என்பதற்கு. அக்காலத்திலும் இந்தச் சுவடுகள் ஆங்காங்கே இருந்திருக்கிறது.

ஏராளமான வாக்கு வாதங்களிடையே அப்பாவின் எக்கேடு கெட்டுப்போங்கோ என்ற கோபமான ஸிக்னல்.
அப்புறம் என்ன ஆச்சு?
பெண்ணுக்கு கல்யாணம் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து புருஷனுடைய ஏச்சும்,பேச்சும் மனஸு வெறுத்தே போச்சு அம்மாவுக்கு. தான் சொன்ன பிள்ளையையே கொண்டு வந்து பலவந்தமாகத் தாலி கட்டவைக்கிறேன் என்ற புருஷனின் ஸவால் வெளியே சொல்ல முடியாமல் பயமுறுத்தியது.
இங்கேயும் ஒற்றுமை இல்லை. வாயளவில் கல்யாணம் நிச்சயித்தாயிற்று. வெளியில் எங்கும் சொல்லவில்லை. மிக்க வேண்டியவர்களுக்குதான் தெரியும்.
மன்னி விசாரப்படாதே. கல்யாணிக்கு எல்லாம் ஸரியா நடக்கும். தொடரும்.

ஓகஸ்ட் 19, 2016 at 10:20 முப 20 பின்னூட்டங்கள்

தொட்டில் 11

பின்னல் தொட்டில்

பின்னல் தொட்டில்

பொழுது புலர ஆரம்பித்து விட்டது.   இப்பொழுதே போனால்  நிதானமாக குளித்து விட்டு,  ஆரஅமர  துணிகளைப் புழிந்து கொண்டு  கரையிலுள்ள மாமரப் பிஞ்சுகள்  உதிர்ந்துள்ளதைப் பொறுக்கிக் கொண்டு நிதானமாகக்  கதைபேசிக்கொண்டு வரலாம்.முதல்நாள் இரவே  யார் யார் வருகிரார்கள் என்று கேட்டுக் கொண்டாயிற்று. 
குளத்தில்  இறங்கி அமிழ்ந்து உட்கார்ந்து விட்டால்  கரை ஏறவே மனம் வராது.
புருஷர்களுக்கு ஒரு பக்கம். பெண்களுக்கு ஒரு பக்கம் படிக்கட்டுகள். புருஷாள் வருவதற்கு முன்னால்ப்போனால் யோசனை இல்லாமல் குளிக்கலாம். இரங்கி விட்டால் முதலில்

துருதுருவென்றுமீன் குஞ்சுகள்   காலை   கிசுகிசு மூட்டுவதுபோல   நெளிந்து,நெளிந்து  தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும்.   கல் படிக்கட்டுகளில் துணியைத் துவைத்துக்    கசக்கிக் கசக்கி   தண்ணீரில்  இரண்டு முறை அலசி விட்டால் பளிச்சென்று  எந்தப் புடவை,வேஷ்டி துணிகளானாலும்   புதுத்துணியை முதல் முறை தண்ணீரில் நினைத்தது போலத் தோன்றும். ஸோப்பாவது,மண்ணாவது எதுவும் அவர்களுக்குத்  தெரியாது.

தனி நபரானாலும் அக்கம்,பக்கம் உள்ள உறவினர்கள்,வயதானவர்களின்   துணிகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து   துவைத்துக் கொண்டு கொடுப்பது வழக்கம்.

ஓர்ப்படி குளத்துக்குப் போறேன்.  புடவை இருந்தா குடு.    நான் கிளம்பிவிட்டேன். நீ வரியா?  நான் போயிண்டே இருக்கேன். மீனா, பட்டு எல்லாரும் வந்துட்டா.

நீங்க போயிண்டே இருங்க. ஒரு எட்டுலே உங்களைப் பிடிச்சூடுவேன். கரையில் விபூதி ஸம்படம்,குங்குமச் சிமிழ் மரத்தில்,தேய்த்துக் குளிக்க  நல்லதாக குண்டு மஞ்சள்.

யராவது ஒத்தர் எடுத்துண்டா போதும்.

அவரவர்கள் முடிந்த அளவு துணியுடன்   பேசிக்கொண்டே குளத்தை அடைவார்கள்.

கிராமத்துக் குளம்  இப்படிதான்

படமுதவி—-கூகல் மிக்க நன்றி

குளத்தில் பல் தேய்த்துத் துப்பக்கூடாது. ஸோப்பெல்லாம் போடவே கூடாது. மாகஸ்னானம்,துலாஸ்னானம் என்றால்   தினம் வெற்றிலை,பாக்கு,பழங்கள் என அது ஒரு மூட்டை கூடவரும்.  விதரணையாக குளித்து  நிவேதனம்செய்து வேண்டியவர்களைத் தேடிப் பிடித்து,   மஞ்சள் குங்கும   வினியோகம்.  துணி அலசும்போது   யாருக்காகிலும் அதிகம் துணி இருந்தால்,எங்கிட்ட இரண்டு புடவையைக்கொடு . நான் அலசித் தரேன்.  வேளையோடு கிளம்பினாத்தான்  மீதி காரியம் ஓடும்.

துணி விலகாமல்  தேய்த்துக் குளித்து ,   பிழிந்த புடவையை லாவகமாக இடுப்பைச் சுற்றி அரை வட்டமாக   பின்னும் இரண்டு சுற்று சுற்றி   மேலாக்கையும் ஸரிவர கழுத்தைச் சுற்றவைத்து,பிழிந்த புடவை,பாவாடை என எல்லாவற்றையும், ஸரிவர இரண்டு தோளிலுமாகப் போட்டுக்கொண்டு, ஜலக்கிரீடை முடிந்து,  கும்பலாக  கிளம்பி பேசிக்கொண்டே அன்றைய நிகழ்ச்சி நிரல்களைப் பறிமாறிக் கொண்டு வந்தால்தான் மற்ற காரியங்களே ஓடும்.  அன்றைய கிராமங்களில்  சற்று முன்னேறிய பின்னும் இந்த வழக்கம் இருந்தது.

ஒரு வயதானவள் பேச ஆரம்பித்தாள்.   என்னவோ போ.  சின்ன வயஸிலே கல்யாணமே தேவலைபோல இருக்கு.

எங்க ஓர்ப்படியைத்தான் சொல்கிறேன்.   எனக்குத்தான்  எதுவுமே இல்லை. ஏதோ  கிருஷ்ணாராமான்னு காலம் போறது.    கால் நடக்க முடியாத ஓர்படி.  மாப்பிள்ளைதான் ஸரியில்லை.  பேத்திக்கு கல்யாணம் பண்ணணும்னு விசாரம். நிலம்,நீர்,வீடு வாசல்   எல்லாம் இருக்கு.   எதையும் எதுவும் செய்ய முடியாது.

ஏன் என்ன அப்படி. எதையாவது வைத்து வாங்கி   ஸமாளிக்கலாமே.  அதுதானே இல்லை.    அண்ணா அப்படி எல்லாம் செய்ய முடியாதபடின்னா எழுதி வைத்து விட்டார்.   என்னிதும் அப்படிதான்.    விக்க வாங்க முடிந்தா யாராவது ஏமாத்தி விடுவா. ஆயுஸு வரைக்கும்   இருக்கிறதை வைச்சிண்டு அரை வயிறு கஞ்சியாவது  குடிக்கட்டும்னு   ஸ்வாதீனம் கொடுக்க மாட்டா.

அண்ணாவுக்கோ மாப்பிள்ளை பேரிலேயே நம்பிக்கை இல்லை. அதனாலே பெண்டாட்டி,பெண்   அவளின்  பிற்காலத்திற்குப் பின்னாலே  வாரிசுகளாமே. அவர்கள்தான் எது வேண்டுமானாலும் செய்யலாமாம். பத்திரம் பதிஞ்சுட்டுப் போயிட்டாராம்!
மாப்பிள்ளைஸரியில்லே. பொண்ணு என்ன பண்ணுவா? ஏதோ ஸுமாரான இடமாவது வேண்டும். நாளைக்கே எல்லாம் அவளுக்கும்தானே.
ஏதோ உறவில் பார்க்றதாகச் சொல்லலே. ஆமாம். அது ஒன்று விட்ட உறவு. பையன் ராஜா மாதிரி இருக்கான்.. வயஸுப் பிள்ளைகள். இப்படி அப்படி ஏறத்தாழ இருக்குமோன்னோ. எங்கோயோ ஹோட்டல்லே வேலை செய்யறான் போல இருக்கு.. பேத்திக்கு துளிகூட இஷ்டமில்லே. பேச்செடுத்தாலே அழுகையும் அமக்களமாகவும் ஆயிடறது. உனக்குத் தெரிந்தவா உறவுலே யாராவது இருந்தா விசாரி.

நம்ம ஊரிலேயும் யாராவது அந்தத் தெருவில் இருக்காளா விசாரி. ஓர்ப்படிதான் விசாரிச்சு சொல்லுன்னா. அதான் சொல்றேன்.

நாளைக்கு வரச்சே பேசலாம். அவரவர்கள் வீட்டு விசாரப்பட ஆத்தை நெருங்கியாச்சு. ஏழெட்டுநாள் இந்தப் பேச்சே எடுக்காமல் குளித்துக் கரை ஏறியாகி விட்டது.

ஏண்டீ உன்னிடம் சொன்னேனே. ஏதானும் விஜாரிச்சயா? பாவம் எங்க ஓர்ப்படி. பொண்ணு ஊரிலே இருக்கா. பேத்திதான் கூட இருக்கா. யாரானும் விஜாரிச்சுச் சொன்னாதானே உண்டு. உங்கிட்டே சொன்னேன்னேன்.
ஏதாவது சொன்னாளா என்று கேட்டுக் கொண்டே இருக்கா.

நானும் விஜாரித்தேன். அசலூரா இருந்தாகூட பரவாயில்லை என்று.
இங்கேயே இருக்கிறவாளோட உறவுகூட புதுசா மனது மாறி இருக்காளாம்.

கல்யாணமே வேண்டாம் நாலு பசங்களாயிடுத்துன்னு சொன்னவாளும் புதுசா ஹூம் கொட்ட ஆரம்பிச்சிருக்காளாம். இன்னொண்ணு பிக்கல் பிடுங்கல் இல்லே. ஒரு பொண்ணுதான். அதுவும் குழந்தை இல்லை. பெரியபொண்ணாயிடுத்து. வெளியூரில் இருந்தாளே பானு அவபுருஷன்.

இதெல்லாம் நாம் சொன்னால் நன்னாயிருக்காது. காசு பணம் அதிகம் செலவாகாது.
நானும் கேள்விப்பட்டேன். எதுக்கும் அப்பன்காரன் ஸரி சொல்லணும். கல்யாணம் ஆகாம எத்தனை வருஷம் வீட்டில் அடைந்து கிடக்கணும் இந்தப் பொங்க.

அதனால்தான் அந்தப் பெண்ணும் யோசித்துக் கொண்டு இருக்கு. இந்த அப்பா, இந்தப் பணம் காசு எதுவும் மாறப்போவதில்லை.
வரவனாவது கண்ணியமானவனாக இருக்கணும். அந்த உறவுக்காரப்பிள்ளை வேண்டவே வேண்டாம். அதிலே மன உறுதியாக இருக்கு.

நானும் இன்னிக்குப் போய்ச் சொல்லுகிறேன். நல்லதா ஏதாவது முடிவு எடுக்கட்டும். இன்னும் இரண்டுநாள் நான் குளத்துக்கு வரலே. எங்க அக்காவாத்துக்குப் போறேன். இதெல்லாம் விசாரிக்கச் சொல்லுகிறேன்.
ஸரியா.
பானுவின் புருஷன் வீட்டு ஸமாசாரங்கள் மனதில் அசைபோட ஆரம்பித்து விட்டது. தொடருவோம்.

 

ஓகஸ்ட் 16, 2016 at 10:23 முப 14 பின்னூட்டங்கள்

வரலக்ஷ்மிவிரதபடங்கள்

இன்றைய  வரலக்ஷ்மிபூஜை   மானஸீக  அர்ப்ப்பணிப்புகளும்,  வாழ்த்துகளும்.சில படங்களும் அவ்வளவே!!!!!!!!!!!!

அம்மனழைக்க  ரெடி.

அம்மனழைக்க ரெடி.

.

அம்மனை அழைத்து வந்தாயிற்று. அமர்ந்த அம்மனுக்கு நமஸ்காரங்கள்.

அமர்ந்திருக்கும் அம்மன்

அமர்ந்திருக்கும் அம்மன்

பூஜைக்குத் தயார்.

பூஜைக்குத் தயார்.

பூஜைக்குத் தயார்.

மேலும் சிலபடங்கள்.

பூஜை

பூஜை

இதுவும் அதுவே

இதுவும் அதுவே

அடுத்து இதுவும்.

அம்மன்

அம்மன்

பூஜை முடிந்து சரடு கட்டிக்கொண்டபின் அம்மனின் அழகு.

உலகத்தில் எல்லோரின் நன்மையையும் வேண்டி ருள்பாலிக்க எங்களின் விண்ணப்பம்  அம்மனுக்கு.

உலகத்தில் எல்லோரின் நன்மையையும் வேண்டி அருள்பாலிக்க எங்களின் விண்ணப்பம் அம்மனுக்கு.

யாவருக்கும் ஆசிகளும் வாழ்த்துகளும்.

பூஜை நிர்வாகம், அமைப்பு, யாவும் மருமகள் பிரதீஷாவும், பேத்தி மனஸ்வினியும். எனக்கு  நிம்மதியாக எழுதமுடிந்தமைக்கு எல்லோரும் நன்மையுடன் இருக்க வேண்டும்.

அம்மனைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சமையலைப் பற்றி எழுதாத ஒரு பதிவு. அன்புடன்

ஓகஸ்ட் 12, 2016 at 10:51 முப 7 பின்னூட்டங்கள்

சீஸ்பால்ஸ்

வேண்டிய ஸாமான்கள்

மேலே இருப்பது  சீஸ் பால் செய்யஉபயோகப்படுத்திய  சில ஸாமான்கள்.  நல்ல மழை,குளிர் போன்ற ஸமயங்களில்   யாவரும்  காபி,டீயுடன் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

செய்வது ஸுலபம்தான்.   இக்காலங்களில்  சீஸ்    சேர்த்த பண்டங்கள்  யாவரும் விரும்பிச் சாப்பிடும் பொருளாகவும் ஆகிவிட்டது.   பிரட்,உருளைக்கிழங்கு, சீஸ்,காய்கறிகள்,எண்ணெய் இவை யாவுமே முக்கியப் பொருட்கள்.  வாங்க நீங்கள் யாவரும். எப்படிச் செய்வதென்று பார்ப்போம்.  அப்படியே அளவுகளையும்.பார்ப்போம்.

பிரட்ஸ்லைஸ் —3,    பெரிய அளவிலான உருளைக்கிழங்கு –2.   காப்ஸிகம்1   துருவின சீஸ்  மூன்று டேபிள்ஸ்பூன்,  சிறிது  முட்டகோஸ்,பொரிப்பதற்கு எண்ணெய்.  ருசிக்கு–உப்பு,   மிளகுத்தூள்   ஒரு டீஸ்பூன். பச்சைமிளகாய்  அரைத்த விழுது சிறிதளவு

செய்முறை—–பிரட்டை   மிக்ஸியிலிட்டுப் மாவாகப்பொடித்துக்கொள்ளவும்.காப்ஸிகம்,கோஸ் இரண்டையும்  மிகவும்   பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை  நன்றாக வேக வைத்து  தோலை உறித்து   சூடு இருக்கும்போதே நன்றாக மசித்துக் கொள்ளவும்.   ஆறினவுடன்  பிரட் பொடியில்  ஓரளவு பாக்கி வைத்துக்கொண்டு      மசித்த உருளைக் கிழங்குடன் பொடியைச் சேர்த்துப் பிசையவும்.மிளகாய் விழுது,உப்பு  சேர்த்துக் கெட்டியான பதத்தில்  பிசையவும். தண்ணீர் விடக் கூடாது. வேகவைத்த உருளைக்கிழங்கின் ஈரப்பசைக்குப் போதுமான ரொட்டித்தூள் போட்டால் போதுமானது.

அடுத்து  பொடியாக நறுக்கிய  கேப்ஸிகம்,கோஸுடன்  சீஸ்,மிளகுப்பொடி,உப்பு  சிறிதுசேர்த்துக் கலக்கவும். இதில் உப்பைக் குறைத்துப் போட்டால் நீர்க்காமல் இருக்கும்.

பிசைந்து வைத்திருக்கும்  உருளைக்கலவையில்  ஒரு சிறிய எலுமிச்சை அளவு எடுத்து    சிறிய கிண்ணம் போல  விரல்களால்    அகட்டிச் செய்து கொள்ளவும்.

அதில் சிறிதளவு  காய்கறிக் கலவையை வைத்து  பக்குவமாக    மூடி, லேசாக உருட்டி பிரட்பொடியில்  லேசாகப் பிரட்டவும். இப்படியே  யாவற்றையும் செய்து கொண்டு, அடி அகலமான வாணலியை அடுப்பில் எண்ணெயைக்  காயவைத்து மிதமான தீயில் உருண்டைகளைப் போட்டு லேசாகத் திருப்பி விட்டுச் சிவக்க எடுக்கவும். தக்காளி சாஸுடனோ, மற்றும் பிடித்தமானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

போட்டோவைத் தனித்தனியாக எடுக்கவில்லை. சிறிது ரொட்டித்தூள் மிகுதியும் ஆகலாம். செய்து பார்க்கிறீர்களா? டவுன் ஸைடில்தான் இந்தச் சீஸ் கலாசாரமெல்லாம். எங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லுவர்களும் இருக்கலாம். பாருங்கள்.

 

ஓகஸ்ட் 8, 2016 at 1:54 பிப 13 பின்னூட்டங்கள்

விருந்து சமையலில்கொறடா.

இலையில்  விருந்து சாப்பாடு

இலையில் விருந்து சாப்பாடு

போடமறந்த கொறடா

போடமறந்த கொறடா

கொறடா என்ற பெயரைப் பார்த்தால் இடுக்கி மாதிறி ஏதோ இரும்பு ஸாமான் என்று தோன்றும். ஆனால் இதுவும் ருசியை இடுக்கிப் பிடிப்பதால் இதற்குக் கொறடா என்ற பெயர் போலும்!!!!!

செய்வது மிக எளிதுதான். இதை தோசை,இட்லி,அடை வடை என்று யாவற்றினும் சேர்த்துச் சுவைக்கலாம். எங்கள் ஊர் விசேஷ சாப்பாடுகளில் ஒரு ஓரத்தில் இதுவும் இருக்கும்.
இப்போது சாப்பாடே வேறு விதமாக மாறி விட்டது. மெனுவும் மாறி விட்டது. அதனால் என்ன? என்ன பிரமாதம்,துவையல் மாதிரி தானேஎன்று சொல்வதும கேட்கிறது. சமையல் எழுதி ஏராளநாட்களாகிவிட்டது. எதையாவது எழுதுவோம் என்றால் வகையாக கொறடாப் பிடியில் சிக்கியது.
வேண்டியவைகள்—நல்ல நிறமான புளி ஒரு எலுமிச்சையளவு. பச்சை மிளகாய்–8, வற்றல் மிளகாய்– 3, தோல் சீவிய இ்ஞ்சி–2 அங்குல நீளம் [ கூடக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை], சுத்தம் செய்த பச்சைக் கொத்தமல்லி 2,அல்லது,3 பிடி. காம்புகள் உட்பட போடலாம். பெருங்காயம் பிடித்த அளவு, உப்பு தேவையானது. நல்லெண்ணெய்–3 டேபிள்ஸ்பூன், கடுகு வேண்டிய அளவு.

செய்முறை–வற்றல் மிளகாயைக் கிள்ளியும்,புளியைப் பிய்த்துப் போட்டும் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும். புளி நீரை உறிஞ்சும் அளவு தண்ணீர் போதும். புளி ஊறியவுடன், சிறியதாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி இவைகளைச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைக்கவும்.

களிம்பு ஏறாத வாணலியில், நல்லெண்ணையைக் காயவைத்து கடுகை வெடிக்க விட்டு பெருங்காயத்தையும் சேர்த்து அறைத்த கலவைையைச் சேர்த்துக் கிளறவும். வேண்டிய உப்புடன், ஒரு கொட்டைப்பாக்களவு வெல்லத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியுமளவிற்குக் கிளறி இறக்கவும்..
பந்தி சாப்பாடுகளில் உப்பு உரைப்பு,புளிப்பு எது குறைவாகஇருந்தாலும், இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடும்போது யாவும் ஸமனாகி விடும். ருசி பார்த்துச் சொல்லுங்கள்.

கொறடா

கொறடா


அதிக நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். காரப் பிரியர்களுக்கு ஏற்றது. மிதமான காரம் வேண்டுமானால் மிளகாயைக் குறைக்கவும்.

ஓகஸ்ட் 4, 2016 at 1:52 பிப 28 பின்னூட்டங்கள்


ஓகஸ்ட் 2016
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,488 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.