Archive for மே 5, 2022
காராசேவு
இதுவும் மீள் பதிவுதான். பதினோரு வருஷங்களுக்கு முன்னர். பூண்டு பிடிக்காதவர்கள் அதை நீக்கிவிட்டுச் செய்யலாம். உங்கள் டேஸ்ட் எப்படியோ? அன்புடன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குள்ளாவது
ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்
வந்திருக்கிறேன். சுலபமாக எழுதவும், செய்யவும்
காராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,
எழுதியும் போட்டிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
கடலைமாவு—2 கப்
அரிசிமாவு—அரைகப்
சமையல் ஸோடா–கால் டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
உறித்த பூண்டு இதழ்கள்–3
லவங்கம்–2
ஏலக்காய்–1
கசகசா—2டீஸ்பூன்
வெண்ணெய்–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு–உப்பு
பொறித்தெடுக்க—தேவையான எண்ணெய்
செய்முறை—-மாவுகளைச் சேர்த்துச் சலிக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் உப்பு, ஸோடாஉப்பு, வெண்ணெய்
சேர்த்துத் தேய்த்துக் கலக்கவும்.
கசகசாவை ஊற வைத்து வடித்து. நறுக்கிய பூண்டுத்
துண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து
சிறிது ஜலம் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து
கெட்டியாக முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்
பிசைந்து கொள்ளவும்.
தேன்குழல் பிழியும் அச்சில் பெரிய கண் கொண்ட
வில்லையைப் போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை
வட்டமான வடிவத்தில் பிழியவும்.
நிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து
திருப்பிப்போட்டு எடுக்கவும்.
ஆறினவுடன் , துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.
காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
சேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்
செய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்
இருக்கிறது. வேறு என்ன வேண்டும்.
மாவை நன்றாகப் பிசைவது அவசியம்.