Archive for ஜூலை 18, 2022
ஃப்ரூட்சாட்.
நான்கைந்து வருஷங்களுக்கு முன்னர் ஜெனிவா வந்திருந்தபோது எழுதினது. அப்போது கிடைத்த பழங்கள் இது.மீள்பதிவிற்கு கிடைத்த பதிவு இது. ஸீஸனுக்குத் தகுந்தாற்போல பழங்களை மாற்றிச் செய்யுங்கள். ருசி உங்கள் கையில்தான். அன்புடன்
எல்லாவித பழங்களும் வீட்டில் இருந்தது. தில்லியில் கடைகளில், ஃப்ரூட் சாட் கிடைக்கும். வெந்த உருளைக்கிழங்கின் துண்டுகள் கூட போட்டுப் பார்த்திருக்கிறேன். இது பழங்களைமட்டும் சேர்த்துச் செய்தது. என் மருமகள் என்ன வேண்டுமோ எல்லாம் செய்து கொடுக்கிறாள்.
வீட்டில் தனியாகப் பொழுது போக வேண்டுமே.!
முடிந்தபோது எழுதுகின்றேன். அவ்வளவுதான்.
வேண்டியவைகள்.
நான் எவைகளைச் சேர்த்தேன் என்பதுதான் இது.
அவ்வப்போது கிடைக்கும் பிராந்தியப் பழங்களைக் கொண்டு ஸீஸனுக்குத் தகுந்தாற்போலத் தயாரிக்கலாம்.
சிறிய வாழைப்பழம்—1, ஆப்பிள் –1, கிவி—1, பப்பாளி நறுக்கியது –1கப், திராக்ஷை—அரைகப், துண்டுகளாக்கிய அனாசிப்பழம்–அரைகப், மாதுளை முத்துகள் அரைகப், ஆரஞ்சுச் சுளைகள் தோல்நீக்கியது –அரைகப்.
புளிப்பில்லாத தயிர்—1கப், வறுத்துப் பொடிசெய்த சீரகப்பொடி–அரை டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், சாட்மஸாலா—அரைடீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், இந்துப்பு அதாவது காலாநமக் என்று சொல்லுவது ஒரு சிட்டிகை.
செய்முறை—- பழங்களை அழகாக சீராக நறுக்கி , ஃபிரிஞ்ஜில் சிறிதுநேரம் ஒரு பவுலில் வைத்து எடுக்கவும். தயிரையும் வைக்கவும்.
வாயகன்ற பவுலில் உள்ள பழங்களின் மீது, தயிரைப் பரவலாக விட்டு, மேலே பொடிகளைத் தூவவும். தேனையும் கலக்கவும். அருமையான சாட் ரெடி.
நன்றாகக் கலந்து அழகிய கிண்ணங்களில் போட்டு, ஸ்பூனுடன் சாப்பிடக் கொடுக்கவும்.
ருசித்தீர்களா?