Archive for திசெம்பர், 2009
புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லா வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
மங்களகரமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சொல்லுகிறேன் காமாட்சி
தோசை மிளகாய்ப்பொடி
வேண்டியவைகள்—-வற்றல் மிளகாய் 12அல்லது 15,-
காரத்திற்கேற்ப.
கடலைப் பருப்பு——-அரைகப்.
உளுத்தம் பருப்பு——-அரைகப்,
சர்க்கரை—-ஒரு டீஸ்பூன்,
புளி–ஒரு நெல்லிக்காயளவு,
வெள்ளை எள்—-கால்கப்,
பெருங்காயப் பொடி—-ஒரு டீஸ்பூன்
ருசிக்கு தேவையான உப்பு.
செய்முறை——வெறும் வாணலியில் எள், பருப்பு முதலானவற்றை ,
தனித் தனியாக, சிவக்க வறுத்துக் கொள்ளவும் .
துளி உப்புப்பொடி சேர்த்து காம்பு நீக்கிய மிளகாயை.
வெறும் வாணலியில் வறுத்தால் கமராமல் இருக்கும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வெறும் வாணலியில்
சற்றே வறுத்துக் கொள்ளவும்.
யாவும் ஆறிய பின் வேண்டிய உப்பு சேர்த்து ,புளி,
எள், நீங்கலாக, யாவையும் ஒன்று சேர்த்து மிக்ஸியிலிட்டு
பொடிக்கவும். சற்று பொடித்த பின் எள்ளைச் சேர்க்கவும்.
ஒரு சுற்று சுற்றி புளியையும் சேர்த்து கரகர என்ற
பக்குவத்தில் அரைத்து சுத்தமான பாட்டில்களில் எடுத்து
வைத்து உபயோகிக்கவும்.
இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும், நல்லெண்ணெய் சேர்த்துச்
சாப்பிட அவசரத்திற்கும் , அவசியத்திற்கும் ருசியானதுமான உற்ற
தோழனிது. வேர்க்கடலை, அல்லது பொட்டுக் கடலை சேர்த்தும்
உப்புக் காரத்தைக் கூட்டிக் குறைத்தும் செய்யலாம்.
பருப்புப் பொடி
வேண்டியவைகள்——-துவரம் பருப்பு அரை கப்
கடலைப் பருப்பு——-அரைகப்
உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்–ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு——-ஒரு டீஸ்பூன்
வற்றல் மிளகாய்—-மூன்று
பெருங்காயம்—சிறிது
ருசிக்கு வேண்டிய உப்பு
செய்முறை——வெறும் வாணலியில் பருப்புகளைத்
தனித்தனியாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். எள்ளையும்
இப்படியே தனியாக வறுக்கவும். மிளகு, மிளகாயையும் தீயாமல்
வறுத்து , உப்பு, பெருங்காயம், சேர்த்து மிக்ஸியில் சற்று
கரகரப்பான பதத்தில் பொடிக்கவும்.
பருப்புகளையும், மற்றவைகளையும், நிதானமான தீயில்
வறுக்க வேண்டும். வறுபடுதல் குறைவானால் பொடி,
சாப்பிடும் போது வாயில் ஒட்டும்.
சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது, நெய்யுடன் சேர்த்து
சாப்பிட ருசியாக இருக்கும். துணைக்கு பச்சடிகள் இசைவு.
கறிப்பொடி
வேண்டியவைகள்– ——–கடலைப் பருப்பு அரைகப்
உளுத்தம் பருப்பு அரைகப்,
தனியா அரை கப்,
மிளகாய் வற்றல் 15 , வேண்டிய காரத்திற்கு தக்கபடி
கட்டி பெருஙகாயம் சிறிதளவு
அரை டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை——நிதானமான தீயில் அரைஸபூன் எண்ணெயை
வாணலியில் விட்டு காய வைத்து தனியாவைத் தவிர
மற்ற சாமான்களைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தனியாவைத் தனியாக வறுத்துச் சேர்க்கவும்.
ஆறியபின் யாவற்றையும் மிக்ஸியிலிட்டு ரவைபோன்ற
கரகரப்பான பதத்தில் அரைத்தெடுத்து பாட்டில்களில்
கொட்டி மூடி வைத்து உபயோகிக்கலாம்.
வாஸனை பிடித்தவர்கள் சிறிதளவு சீரகமோ, பட்டையோ,
சேர்த்துப் பொடிக்கலாம். எண்ணெயில் வதக்கும் காய்
கறிகளுக்கும், வாழைக்காய், கத்தரிக்காய் ,கறிகளுக்கும்
இப்பொடி மிகவும் ஏற்றதாக இருக்கும்.
ரஸப் பொடி
- வேண்டியவைகள்——–காய்ந்த மிளகாய் வற்றல் 200 கிராம்
- .கொத்தமல்லி விதை 500 கிராம்.
- துவரம் பருப்பு 200 கிராம்.
- மிளகு 200 கிராம்.
- சீரகம் 200 கிராம்.
- விரளி மஞ்சள் 100 கிராம்.
செய்முறை——–மிளகாயைக் காயவைத்து, காம்பை நீக்கிக கொள்ளவும். மற்ற சாமான்களையும் , வெய்யிலில் நன்றாகக்
காயவைத்து ,ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து மிகவும்
நைஸாக இல்லாமல், சற்று,கரகரப்பான பதத்தில், அறைத்துக்
கொடுக்கச் சொல்லி , பேப்பரில் கொட்டிப் பரவலாக வைத்து
ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
அவ்வப்போது புதியதாகச் செய்வதானால் சிறிய அளவில்
வருத்துப் பொடி செய்து கொள்ளலாம். மிஷினில் அறைப்பதாநாலும்
லேசாக வறுத்துக் கொடுக்கலாம். வறுத்து அறைத்த பொடி
கெட்டுப் போகாது. நீண்ட நாட்கள் இருக்கும்.
ஸாம்பார்ப் பொடி.
வேண்டிய ஸாமான்கள்
கால் கிலோ மிளகாய் வற்றல்
அரைகிலோ கொத்தமல்லி விதை
துவரம் பருப்பு 150 கிராம்.
கடலைப் பருப்பு 150 கிராம்.
விரளி மஞ்சள் 100 கிராம்.
மிளகு 100 கிராம்.
வெந்தயம் 100 கிராம்.
செய்முறை ——எல்லா ஸாமான்களையும், நல்ல வெய்யிலில் தனித்தனியாக
காய வைத்து.மஞ்சளைத் துண்டு செய்து சேர்த்து , மிளகாய் அரைக்கும் மிஷினில்
அரைத்து, சூடுபோக ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைக்கலாம்.
குண்டு மிளகாயாக இருந்தால் காம்பை நீக்க வேண்டாம். நீளவாகு மிளகாயாக
இருந்தால் காம்பை நீக்க வேண்டும். வீட்டில் குறைந்த அளவு. மிக்ஸியில்
செய்வதானால் நன்றாக வறுத்தே செய்ய வேண்டும். மிஷினில் ்அரைக்கும்
பொடியை அவ்விடமே பெரிய பேப்பரில் பரத்தி. ஆறவைக்க வேண்டும்.
காய்ந்த கறிவேப்பிலை சேர்த்து அரைப்பதும் உண்டு.