Archive for நவம்பர், 2010
அரிசி உப்புமா
வேண்டியவைகள்—
பச்சரிசி—–2கப்
துவரம் பருப்பு–2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் —கால் டீஸ்பூன.
இந்த அளவு செய்வதற்கு வீட்டிலேயே மிக்ஸியில் ரவை தயாரித்துக்
கொள்ளலாம்.
அரிசியில2 ஸ்பூன் ஜலம் சேர்த்துப் பிசறி வைத்து ஒரு மணி நேரம்
கழித்து மிக்ஸியில் பெறிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு வகைகளைச் சற்று சூடாக்கி ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
வெந்தயமும் சேர்த்துப் பொடிக்கவும்
தாளிக்க வேண்டிய ஸாமான்கள்
நல்ல எண்ணெய்—3 டேபிள் ஸ்பூன்
கடுகு–1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் —3
உளுத்தம் பருப்பு—-3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—முக்கால் கப்
மிளகு சீரகம்–தலா அரைடீஸ்பூன்
நெய் –2 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு–கறிவேப்பிலை
செய் முறை—
முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் வெண்கலப்பானை, உருளி,போசி,
கோதாவரிகுண்டு என, அளவைகளுடன் கால்படி, அரைபடி, பட்ணம்படி
என அடை மொழிகளுடன் பாத்திரங்கள் உண்டு.
அவைகளில் செய்வதுதான் வழக்கம்.
இப்போது எல்லா அளவுகளையும் ப்ரஷர் குக்கர்கள் ஏற்றுக்
கொண்டு விட்டது. நாம் இப்போது குக்கரிலேயே செய்வோம்.
ப்ரஷர் பேனோ அல்லது குக்கரையோ காஸில் வைத்து எண்ணெயைச்
காயவைத்து மிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
இவைகளைத் தாளித்து,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
தண்ணீர் சேர்ப்போம்.
அளவு ஒரு பங்கு ரவை என்றால் இரண்டரை பங்கு ஜலம்
சேர்க்கலாம். மிளகு,சீரக ம் உடைத்தது
உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதிக்கும் போது தீயைச் சற்றுக் குரைத்து,
அரிசி பருப்புரவையைச் சேர்த்து நிதானமாகக் கிளறவும்.
கலவை, வெந்து சேர்ந்து வரும் சில நிமிஷங்கள்
இரண்டொருதரம் நன்றாகக் கிளறி விட்டு நெய் சேர்த்துக் கிளறி,
குக்கரை மூடவும். தீயை ஸிம்மில் வைத்து 7, 8, நிமிஷங்கள்
வேகவைத்து இறக்கி 5, 6, நிமிஷம் கழித்து உபயோகிக்கவும்.
வெந்தயம் சேர்ப்பது உப்புமா மெத்தென்று மென்மையாக
இருப்பதற்காக.வாஸனையாகவும் இருக்கும்.
சாதம் காணும் பழைய அரிசியாக இருந்தால் உப்புமா உதிர்உதிராக
வரும்.
காய் வகைகள், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய்
சேர்த்தும் செய்யலாம்.சாதாரணமாக தேங்காய் சேர்த்து செய்வது
சுலபமாகவும், பழக்கமாகவும் இருக்கிறது.
உடன் சாப்பிட சட்னி, ஊறுகாய்கள், தயிர், வெல்லம், சர்க்கரை
என எல்லாமே ஸரியாக இருக்கும்.
மாகாளிக்கிழங்குசேர்த்த தயிர் பச்சடிமாதிரி சுவை கொடுக்கும்.
மொத்தமாக அரிசியில், பருப்பு, வெந்தயம் சேர்த்து மிஷினில்
உடைத்து வைத்துக் கொண்டால் வேண்டும்போது செய்ய இன்னும்
சுலபமாக இருக்கும்.
வாணலியில் கிளறி மைக்ரோவேவ் பாத்திரத்தில் மாற்றி
ஹைபவரில் 6,7 நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்தும்
எடுக்கலாம்.
சாதாரணமாக உப்புமாவை வேக வளைய நன்றாகக் கிளற வேண்டும்
பூரி
செனா மஸாலாவுடனும்,—–ஆலுதாம் கறி வகைகளுடனும் சாப்பிட
பூரியும் செய்வோமா?
வேண்டியவைகள்——கோதுமைமாவு—–2கப்
ருசிக்கு உப்பு
பூரி பொரிக்க —
வேண்டுமான எண்ணெய்.
செய்முறை—-நன்றாகச் சலித்தெடுத்த கோதுமை மாவில்
4 டீஸ்பூன் எண்ணெயும், ருசிக்கு உப்பும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
திட்டமாக ஜலம்விட்டு கெட்டியாக மாவை நன்றாகப் பிசையவும்.
தளர இருக்கக் கூடாது.
நன்றாகப் பிசைந்த மாவை திரட்டி ஒரே அளவு உருண்டைகளாகப்
பிரித்து உருட்டிக் கொள்ளவும்.
ஜலம் குரைவாக சேர்ப்பதால் இப்படி எழுதுகிரேன். உருண்டைகளை
அழுத்தமாக உருட்டினால் பூரி விரியாமல் வட்டமாக வரும்.
ஒவ்வொரு உருண்டையாக சிறிது எண்ணெயில் தொட்டுக்
குழவியினால் வட்டமான பூரிகளாக இடவும்.
மாவு தோய்த்து இடுவதில்லை. ஒரு தட்டைக் கவிழ்த்துப்
போட்டு அதன்மேல் பூரிகளைப் பரத்தலாக வைத்துக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து நல்ல
சூடான எண்ணெயில் பூரிகளை சற்று சட்டுவத்தால்
லேசான அழுத்தம் கொடுத்து திருப்பி விட்டு பூரிகளைப்
பொரித்தெடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு உபயோகிக்கவும்.
இந்த முறையில் செய்த பூரிகள் எண்ணெய் அதிகம்
இழுப்பதில்லை.
வாணலியில் எண்ணெயும் குழம்புவதில்லை.
பூரியும் நன்றாக உப்பிக்கொண்டு நன்றாகவே இருக்கிறது.
இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது மேல்மாவு தோய்த்து
பூரியை இடும் முறை.
இந்த முறைக்கு மாவில் சற்று ஜலம் அதிகம் சேர்க்கிரோம்.
இது எண்ணெய் தொட்டு இட்ட பூரிகள்
செய்யச் செய்ய யாவும் நன்றாக பழக்கமாகி விடும்.
சோலே[செனாமஸாலா]
வேண்டியவைகள்
வெள்ளை கொண்டைக் கடலை—-2கப்காபூலிச்செனா]
அரைக்க.வெங்காயம்—-பெறியதாகஒன்று
பூண்டு—-4 இதழ்கள்
இஞ்சி–அரை அங்குலத் துண்டு
தக்காளி–பெறியதாக 1
வேண்டிய பொடிகள்—தனியாப்பொடி–2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன்
மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்
ஏலப்பொடி–சிறிது
பொடிக்க-லவங்கம்–8
மிளகு—1 டீஸ்பூன்
பட்டை—சிறு துண்டு
தாளிக்க,எண்ணெய்—-4டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை–1
ருசிக்கு—உப்பு
கெட்டியாகக் கரைத்த புளி ஜலம்—-3 டேபிள்ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—–சிறிதளவு
செய்முறை.—-கடலையை 5, 6,மணிநேரத்திற்குக் குறையாமல்
தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
கேஸ்ரோலில் சூடான தண்ணீர் விட்டு கடலையைப் போட்டு மூடி-
-வைத்து ஊறவைத்தால் அவசர சமயங்களில் சீக்கிரமாகவே
ஊறும்.
தக்காளியைத் தனியாகவும், பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளைச்
சேர்த்துத் தனியாகவும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
பட்டை,லவங்கம், மிளகு இவைகளைப் பொடிக்கவும்.
ஊறவைத்த கடலையை நான்கு கப் ஜலம் சேர்த்து ப்ரஷர்
குக்கரில் நன்றாக வேகவைக்கவும். இரண்டு மூன்று விஸில்
வந்த பிறகு ஸிம்மில் வைத்து 4 ,அல்லது 5 நிமிஷங்கள்வைத்து
இறக்கவும்.
சற்று பெறிய வாணலியிலோ, அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்திலோ
எண்ணெயைக் காய வைத்து, அரைத்த வெங்காய இஞ்சி,பூண்டு
விழுதைச் சேர்த்து நிதான தீயில் நன்றாக க் கிளறிக் கொடுத்து
வதக்கவும்.
எண்ணெய் பிறிந்து வருமளவிற்கு வதக்கி எல்லாப் பொடிகளையும்
சேர்த்துக் கிளறி, தக்காளி விழுதைச் சேர்த்துத் திரும்பவும்
வதக்கவும். எண்ணெய் போதாவிட்டால் சிறிது விடவும்.
மஸாலா சேர்ந்து வரும்போது, பிரிஞ்சி இலையைச் சேர்த்து
வெந்த கடலையையும் , ஜலத்துடனேயே சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பு, கடலையை வேக வைக்கும் போதும் சேர்க்கலாம்..
இப்போதும் சேர்க்கலாம். கொதிக்கும் போதே புளி ஜலத்தைச்
சேர்க்கவும்.
நனறாகக் கொதித்து கலவை வேண்டிய அளவிற்கு கூட்டுப்
பதம் வரும் போது இறக்கி கொத்தமல்லியைத் தூவவும்.
நெகிழ வேண்டுமானால் வேண்டிய அளவிற்கு கொதிக்கும் போதே
ஜலத்தைக் கூட்டவும்.
கலவை பிரகு கூட கெட்டியாகும் வாய்ப்பு உள்ளது.
இரண்டு ஸ்பூன் வெந்த கடலையை எடுத்து மசித்தும்
சேர்க்கலாம்.
கரம் மஸாலா பிடிக்காதவர்கள் அதை நீக்கி வெங்காயத்தை
அதிகம் சேர்த்தும் தயாரிக்கலாம்.
ரொட்டி, பூரிவகைகளுடனும், சாதத்துடனும், சமோசாக்களுடனும்
சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.
வழக்கம்போல உப்பு, காரம் உங்கள் கையில்.
பொரி உருண்டை
சுத்தம் செய்த அவல் பொரியோ அல்லது நெல் பொரியோ எது
கிடைக்கிரதோ ஒரு 3 டம்ளர் அளவில் செய்யலாம் வாருங்கள்.
வேண்டிய சாமான்கள்.—–பொடித்த வெல்லம்—1 டம்ளர்
சுக்குப் பொடி—அரை டீஸ்பூன்
மிளகுப் பொடி—கால் டீஸ்பூன்
ஏலப்பொடி—கால் டீஸ்பூன்
சிறிய பல்போல நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்–3டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை, வறுத்த வேர்க் கடலை சிறிது
நெய்—-சிறிது
செய்முறை. —-நெய்யில் தேங்காய்த் துண்டுகளை சிவக்க
வறுத்து வைத்துக் கொள்ளவும்.
சற்று கொள்ளளவு பெரிதாகவுள்ள பாத்திரத்தில் வெல்லப்பொடி
நன்றாக மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நிதான தீயில் வைத்து
பாகாகக் காய்ச்சவும்.
பாகில் பொடிகளைச் சேர்க்கவும். முதிர் பாகாக வரும் போது
பொரியையும், தேங்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எண்ணெய் தடவிய தட்டில் கொட்டிக் கொண்டு கையில்
அரிசி மாவை லேசாக தடவிக்கொண்டு வேண்டிய சைஸில்
உருண்டைகளாக உருட்டவும்.
விருப்பமுள்ளவர்கள், பொட்டுக் கடலையையும், வறுத்த
வேர்க் கடலையையும் பொரியுடன் சேர்க்கலாம்.
பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.
காய்ந்தபாகில் ஒரு துளி, சிறிது ஜலத்தில் விட்டுப் பார்த்தால்
கரையாமல் கெட்டியாக உருட்டி எடுக்கும் பதத்தில் பாகு வரும்.
திருக்கார்த்திகைக்கு விசேஷமான பொரி உருண்டை.
சாதாரணமாக எப்போதும் கிடைக்கும் முட்டைப்பொரி[அதாவது அரிசிப் பொரி]
இதிலும் தயாரிக்கலாம். அளவு எல்லாம் பொரி 3 பங்கு, வெல்லம் 1 பங்கு கணக்குதான்.
பொரி யைக் கடையில் வாங்குவதால் சில சமயம் நமுத்துப் போக
வாய்ப்புள்ளது. அதனால் பொரியை சற்று சூடு படுத்தி உபயோகிப்பது
நல்லது. மைக்ரோவேவில் ஒரு நிமிஷம் வைத்தெடுத்தாலே போதும்.
வாழ்த்துகள்
அன்புள்ள சொல்லுகிறேன் ஆதரவாளர்களுக்கும். எல்லா பதிவர்களுக்கும், என் மனமுவந்த தீபாவளி வாழ்த்துகளை
இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி. ஜெனிவா 4–11–2010
புத்துருக்குநெய் மைசூர் பாகு
வெண்ணெய் புதியதாகக் காய்ச்சி அந்த நெய்யில் மைசூர்பாகு
தயாரித்தால் அந்த ருசியே அலாதிதான்
அம்மாதிரி செய்யும் முறையைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
கால் கிலோ உப்பு சேர்க்காத வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்
ஒரு கப்பிற்கு அதிகமாகவே நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்
நெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் கடலை மாவை முன்னதாகவே ஒரு ஸ்பூன் நெய் கலந்து
மைக்ரோ வேவில் ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு 2, 3, நிமிஷம்
வைத்தெடுக்கவும்.
அல்லது வாணலியிலிட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையைப்
போட்டு சர்க்கரை அமிழ ஜலம் விட்டு நிதான தீயில் நன்றாகக்
கிளறவும்.
கூடவே மற்றொரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கிக்
கொண்டே இருக்கவும்.
சர்க்கரை கரைந்து கொதித்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும் போது
மாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.
நல்ல சூடான நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது அடிபிடிக்காது
கிளறவும்.
நெய் விடவிட கலவை நெய்யுடன் சேர்ந்து கொதித்து இறுகி
பாத்திரத்தை விட்டு விலகி நுறைத்து மேலே வர ஆரம்பிக்கும்
நன்றாகக் கிளறி , தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய
தட்டு அல்லது ட்ரேயில் கலவையைக் கொட்டி , தட்டை
இரண்டு கையினால் பிடித்து சமனாக பரவும்படி அசைக்கவும்.
சற்று ஆறியபின் கத்தியினால் வில்லைகளாகக் கீறி
எடுத்து வைக்கவும்.
கைவிடாது கிளறுவது அவசியம்.
நெய்யை சூடாக சேர்த்து கிளறவும்.
1 பங்கு கடலைமாவு, 2பங்கு சர்க்கரை, 2பங்குநெய்
சாமான்கள் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது.
நல்ல பதமாக செய்தெடுத்தால் வாயில் போட்டால் மணத்துடன்
கரையும்.