Archive for ஜனவரி 8, 2011
சக்கரைப் பொங்கல்
பொங்கல்ப் பண்டிகை அடுத்து வருவதால் பொங்கல் செய்யும்
முறையையும் பார்ப்போமா.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப். பாஸ்மதி
பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு
பாகுவெல்லம்—பொடித்தது—2 கப்
நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்–5 பொடித்துக் கொள்ளவும்
முந்திரி, திராட்சை–விருப்பத்திற்கு
குங்குமப்பூ–சில இதழ்கள்
ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை வாஸனைக்கு
தேன்—2 ஸ்பூன் ருசிக்கு
பால்—-அரைகப்
செய்முறை——.வாணலியைச் சூடாக்கி அரிசி, பருப்பை தனித்தனியே
வாஸனை வரும்படி சற்றுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பை, இரண்டு மூன்று முறை ஜலம் விட்டுக் களைந்து
இறுத்து , இரண்டரைகப் ஜலமும் அரைகப் பாலையும் சேர்த்து
குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
ப்ரஷர் அடங்கியவுடன் குழிவான கரண்டியினால் வெந்தவற்றை
நன்றாக மசித்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பொடி அமிழ ஜலம் சேர்த்துக்-
-கிளறி, கெட்டியான பாகாக் காய்ச்சி மசித்த அரிசி, பருப்பில்
சேர்த்து, நிதான தீயில் ஒன்று சேரக் கிளரவும்.
கலவை ஒன்று சேர்ந்து சற்று இறுகும் பதத்தில் இறக்கவும்.
பாகு காயும் போதே ஏலக்காய், குங்குமப்பூ,ஜாதிக்காய்ப்பொடி
இவைகளைச் சேர்த்து விடலாம்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு தேனையும்,
நெய்யையும் சேர்த்துக் கலக்கவும்.
நெய் வேண்டிய அளவு சேர்க்கலாம். ஜாதிக்காய், தேன் முதலானது
கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஒரு முறை.
அடுத்து வெங்கலப் பானையில் பாலும் ஜலமுமாகக் கொதிக்க
வைத்து வறுத்த அரிசி, பருப்பை சுத்தம் செய்து வேக வைத்து
மசித்து , வெல்லம் சேர்த்துக் கிளறி, மற்ற சாமான்களையும்சேர்த்து
நன்றாக இருகும்வரை கிளறி நெய்விட்டு இறக்குவதும் ஒரு முறைதான்.
கடலைப் பருப்பு சிறிது பருப்பு வறுக்கும் போது சேர்ப்பதும் உண்டு.
பாகு வைத்து சேர்க்கும் பொங்கலில் அடி பிடித்துவிடுமோ என்ற அச்சம்
குறைவு.
அரிசி சாதம் செய்ய வைக்கும் அளவிற்குச் சற்று கூடுதலாகவே
ஜலம் பொங்கலுக்கு வைக்கவும்.
பாஸ்மதி அரிசியைவிட பொன்னி போன்ற அரிசி வகைக்கு ஒரு
பங்கு அரிசிக்கு, மூன்று பங்கு ஜலம் தேவையாக இருக்கிறது.
அரிசி ரகத்தை மனதிற்கொண்டு , ஜலம் சேர்க்கவும்.
இனிப்பும் விருப்பத்திற்கிணங்க கூட்டி, குறைக்கலாம்.
பொங்கல் பானைக்கு அலங்காரம் செய்வதுபோல குக்கருக்கும்
மஞ்சள் கட்டி குங்கும அலங்காரம் செய்து,
ஹாட் ப்ளேட்டானாலும், காஸ் அடுப்பானாலும் அதற்கும்
கோலம் போட்டு பொங்கலைக் கொண்டாடுவதுதான்
இப்பொழுது வழக்கமாக உள்ளது.
எது சௌகரியமோ அதன்படி இனிப்பான பொங்கலைச் செய்வோம்
வெல்லம் நிறத்தின்படிதான் பொங்கலின் கலரும் அமையும்.