Archive for ஜனவரி 27, 2011
அம்ருத்காஸப்ஜி.
அம்ருத்கா ஸப்ஜி ரொட்டியுடன் நன்றாக இருந்தது.
பேரைப் பார்த்து எப்படி செய்வது என்ன ஏது என்று
விசாரித்தேன். போபால் மருமகளின் அம்மா, என்
சம்மந்தி கொடுத்த குறிப்பு இது. கொய்யாப் பழம்
முக்கியமானது. இதை ஸப்ஜி வகையாக அவர்கள்
ரொட்டியுடன் சாப்பிடுவதால் இது அம்ருத்கா ஸப்ஜி.
நமக்கு இனிப்பு கார பச்சடியாகத் தோன்றும்.
வேண்டியவைகளைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—-பழுத்தும், பழுக்காததுமான பெரிய
கொய்யாப் பழங்கள்——2 ஒரேசைஸ் துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
நெய்—-2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—கால் டீஸ்பூன்
கடுகு,சீரகம்,வகைக்கு கால் டீஸ்பூன்
தனியாப்பொடி–ஒரு துளி
ருசிக்கு உப்பு
மஞ்சள்பொடி -ஒருதுளி
சக்கரை—2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை.—–நான்ஸ்டிக் பேனில் நெய்யை நன்குசூடாக்கி
கடுகு, சீரகத்தைத் தாளித்து,சில பழத் துண்டுகளுடன் எல்லா
பொடிகளையும்சேர்த்துப் பிரட்டி மீதிப் பழத்துண்டுகளையும்
சேர்த்து சில நிமிஷங்கள் வதக்கி திட்டமாக,உப்பு
சேர்த்துவேக விடவும்.அரைகப்தண்ணீரும், சக்கரையும்
சேர்த்துக்கொதிக்கவிட்டு சேர்ந்து வரும்போது இரக்கவும்.
அதிகம் வேக வேண்டாம்.
பழத்தின் அளவிற்குத் தகுந்தபடி தண்ணீரைக் குறைவாகச்
சேர்க்கவும். கெட்டியாகவோ, தளர்வாகவோநம்விருப்பத்திற்கு
ஏற்ப செய்யவும். இது ஒரு ஜெயின் சமூகத்தினரின் ஸ்பஷல்.
தளர இருந்தால் பச்சடி. சற்று கெட்டியாக இருந்தால் ஸப்ஜி.
இனிப்பு, உப்பு, காரம், விருப்பப்படி சேர்க்கவும். பழம் சற்று
பழுக்காதிருந்தால் இரண்டு கொதி அதிகம் விட்டால் போதும்.
சுவையான, மணமான, இனிப்பும்காரமுமான ஸப்ஜிதயார்.
ரொட்டிக்கு ,ஏற்ற ஸப்ஜி இது. நாம் தயாரிக்கும்போது இஞ்சி
கூட சேர்க்கலாம். எதுவும் சேர்க்காமல் அசல் கொய்யாப்பழ
சுவையுடன் நன்றாகவே இருக்கிறது. எளிதான குறிப்பு.
இரண்டு துண்டு பழத்தால் அலங்கரிக்கவும்.